அடுப்பங்கரை வேலையை நிறுத்தி நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்!

எந்தச் சேனல் மாற்றினாலும் என்ஜாய் பண்ணுங்க... என்கிறார்கள். நம்மால் முடிகிறதா? சின்னச்சின்ன ஆசைகள் நமக்கும் இல்லையா? ஒரு நாளாவது ஒழியாதா? யாராவது டீ போட்டு எழுப்ப மாட்டார்களா? இது எவ்வளவு பெரிய கனவு நமக்கு? முதலாளியிடம் வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் வார விடுமுறையில் வீட்டில் இருப்பார்கள். 58 அல்லது 60 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள்.

நம் வீட்டில் மட்டும் வேலை செய்யும் நமக்கு, விடுமுறை நாள், ஓய்வு வயது ஏதாவது இருக்கிறதா? காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை, இந்தப் பெண்கள் இப்படி ஓய்வே இல்லாமல் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு அந்த வீட்டு வேலைகளில் இருந்து ஒரு நாளாவது விடுமுறை கொடுப்போம் என்று யாராவது நினைத்திருக்கிறார்களா? இந்த வேலைகளுக்கு மதிப்பு ஏதாவது தரப்படுகிறதா? எத்தனை கேள்விகள் நம் மனங்களில்?

உங்கள் குடும்பத்துக்குத்தானே செய்கிறீர்கள் என்று சொல்லிச் சொல்லியே எல்லா வேலைகளையும் நம் தலையில் கட்டியுள்ளது இந்த ஆணாதிக்கச் சமூகம். அத்துடன் விலை உயர்வு, தனியார் கல்வி, தனியார் மருத்துவம், தனியார் தண்ணீர் என்று மேலும் சுமைகளை இந்த ஆட்சியாளர்கள் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

சாமான்ய பெண்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, நமது ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நம் எதிர்ப்பை தெரிவிக்க 2 நாட்கள் கிச்சன் பந்த் செய்வோம். அந்த இரண்டு நாட்கள் சமையலோ, வேறு வீட்டு வேலையோ செய்யப் போவதில்லை என்று முடிவெடுப்போம்.

நாங்கள் என்ன சாப்பிடுவது என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். உங்கள் வாழ்க்கையை நாசப்படுத்துகிற மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் போராட்டம், நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுவோம். நம் பிரச்சனைகள் பக்கம், உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் பக்கம் ஆட்சியாளர்கள் கவனத்தைத் திருப்புவோம்.

உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் வேண்டும். பிப்ரவரி 2 - 12 மாநிலம் தழுவிய பிரச்சாரப் பயணம்.

பொதுக் கூட்டம் :பிப்ரவரி 12 தானா தெரு, புரசைவாக்கம்.அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில், (AICCTU)

தொடர்புக்கு : 15, நடேசன் தெரு, வரதராஜபுரம், அம்பத்தூர், சென்னை - 53. 2635 9984, 97107 54980

Pin It