சென்னை  - செங்குன்றம் பகுதியில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வளர்ச்சியிலும், தமிழர் கண்ணோட்டம் இதழ் வளர்ச்சியிலும் திறம்பட பங்காற்றிய தோழர் ஆ.ந.திருநாவுக்கரசு அவர்களது பணியை சிறப்பிக்கும் விதமாக, எமது இதழான, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2011 சனவரி 16-31 இதழில், அவரை ‘நம்பிக்கை நாயகர்’ என பாராட்டி சிறப்புச் செய்தி வெளியிட்டோம். இப்போது அவர் நம்முடன் இல்லை.

thirunavukarasu_34070 அகவையிலும், இயக்கப் பணியை இன்புற்று மேற்கொண்டு வந்த அவர், உடல் நலக் குறைவுக் காரணமாக அவரது இல்லத்தில் கடந்த 14.01.2013 அன்று காலமானார். அவருக்கு, 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

முதலில், சி.பி.எம். கட்சியில் தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய தோழர் திருநாவுக்கரசு, சி.பி.எம்.மின் தேர்தல் பாதையை வெறுத்து, பின்னர் மா.லெ. இயக்கங்களில் மக்கள் பணியாற்றினார். அதன்பின், இந்தியா முழுமைக்கும் உள்ள உழைக்கும் மக்களைத் திரட்டியெல்லாம் புரட்சி செய்ய முடியாது, ஏனெனில், இந்தியா என்பதே ஒடுக்குமுறை கட்டமைப்புதான் என்று உணர்ந்த தோழர் திருநாவுக்கரசு, தமிழ்த் தேசியப் புரட்சியே தீர்வு என தெளிந்து, த.தே.பொ.க.வில் இணைந்து திறம்பட செயலாற்றினார்.

தமிழர் கண்ணோட்டத்திற்கு புதிய உறுப்பினர் சேர்த்தல் என்றாலும், கட்சி நடத்தும் போராட்டம் என்றாலும், அனைத்திலும் முனைப்போடு பங்கெடுத்து வந்த தோழர் திருநாவுக்கரசு, கடந்த சில ஆண்டுகளாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் 14.01.2013 அன்று காலமானார்.

தோழர் திருநாவுக்கரசு அவர்களின், இறுதி வணக்க நிகழ்வு 14.01.2013 அன்று மாலை செங்குன்றத்தில் நடைபெற்றது. “தமிழ்த் தேசியப் போராளிக்கு வீரவணக்கம்” என முழக்கங்கள் எழுப்பியவாறு, த.தே.பொ.க. - த.இ.மு. தோழர்களும், பல்வேறு அரசியல் கட்சி, இயக்கத் தோழர்களும் அவரது உடலை இடுகாடு நோக்கிப் பேரணியாகக் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அனைத்துக் கட்சி முற்போக்காளர் கூட்டுக் குழு சார்பாக, தோழர் ஆ.ந.திருநாவுக்கரசு அவர்களின் உருவப்படத் திறப்பு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நாளை (06.02.2013) மாலை 5 மணியளவில் செங்குன்றம் பிள்ளையார் கோயில் தெரு - கடைவீதியில் நடைபெறுகின்றது.

கூட்டத்திற்கு, சி.பி.எம்.எல். - மக்கள் விடுதலை மாவட்டக் குழுத் தோழர் க.செங்கொடி அப்பு தலைமையேற்கிறார். தமிழக இளைஞர் முண்ணனி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செங்குன்றம் அமைப்பாளர் தோழர் பி.ஏ.சங்கர்பாபு, தோழர் திலீபன், தோழர் மாஜினி, தோழர் அனுமந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலித் முரசு ஆசிரியர் தோழர் புனிதப்பாண்டியன் தொடக்கவுரை நிகழ்த்த உள்ளார். 

சி.பி.எம்.எல் - மக்கள் விடுதலை தோழர் தங்கத் தமிழ் வேலன், சி.பி.எம்.எல்-விடுதலை தோழர் எஸ்.ஜானகிராமன், திராவிடர் கழகத் தோழர் த.ஆனந்தன், ஆத்தூர் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் திரு ஆர்.முருகன், நாராவாரிக்குப்பம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜி.இராசேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரு ஆர்.அரிகிருஷ்ணன், ம.தி.மு.க. திரு வேல்முருகன், இந்திய பொதுவுடைமைக் கட்சி தோழர் க.அசோகன், தி.மு.க. பி.வி.திருநாவுக்கரசு, தொழிலாளர் சீரமைப்புக் குழு தோழர் எம்.ஆர்.எப்.சேகர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், கவிஞர் மு.சு.பாண்டியன், தோழர் த.கு.இலக்கியன், வழக்கறிஞர் இ.அன்பரசு, வழக்கறிஞர் இ.மோகன், பகுசன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் எ.ஜானகிராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் சு.செந்தில்குமார், வழக்கறிஞர் தோழர் திராவிடமணி ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தவுள்ளனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் தோழர் ஆ.ந.திருநாவுக்கரசு அவர்களின் உருவப்படத்தை திறந்து நிறைவுரையாற்ற உள்ளனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் நன்றியுரையாற்றுகிறார்.

இந்நிகழ்வில், தமிழ் உணர்வாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Pin It