சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை எதிர்த்து... துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை - நவம்பர் 23, 24, 25

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட தேசம். ஏழைகள், நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என்ற மூன்றடுக்குகளைக் கொண்ட சமூக அமைப்பு அதன் வாழ்வியலாகவும்; விவசாயமும், சிறு தொழில்களும் அதன் வேர்களாகவும் இருக்கின்றன. இந்தியாவின் வாழ்வியலையும், வேர்களையும் நாசப்படுத்தும் ஒரு முடிவை 24.09.2012 அன்று மத்திய அரசு எடுத்திருக்கிறது. இந்தியாவின் சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதித்தன் மூலம் நாட்டையே அதிர வைத்திருக்கிறார்கள்.

முன்பு நாட்டை ஆண்ட பாஜக கூட்டணி அரசு 26 சதவீத அந்நிய முதலீடுகளை அனுமதித்தது. இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு அதை 51 சதவீதமாக விரிவுபடுத்தி இருக்கிறது. இருவரின் துரோகமும் அளவில் மட்டுமே வேறுபடுகிறது. இதன்மூலம் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நமது சிறு வியாபாரிகள் நடத்தும் மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், காய்கறிக் கடைகள் எதிர்காலத்தில் மூடப்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ உள்ளிட்ட சர்வதேச பெரும் நிறுவனங்கள் இனி மளிகை, பூ, காய்கறி உள்ளிட்ட சிறு வணிகங்களை பெரும் முதலீட்டில் தொடங்குவார்கள்.

துரோகம்

நமது நாட்டின் இன்றைய சில்லறை வணிகத்தின் மதிப்பு 24 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதாவது சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்! இதை நம்பி 1 கோடியே 20 லட்சம் சிறு வணிக முதலாளிகளும், அதில் வேலை செய்யும் 4 கோடி ஊழியர்களும் இருக்கிறார்கள். அவர்களது எதிர்காலமே ஆட்டம் கண்டிருக்கிறது. இதற்கு சமமான தொகையாக சற்று கூடுதலுடன் 420 பில்லியன் டாலரை 'வால்மார்ட்' எனும் அமெரிக்க சர்வதேச நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. அவர்கள் 21 லட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவார்களாம்!

அதாவது சில கோடி இந்தியர்களை ஓட்டாண்டிகளாக்கிவிட்டு, 21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பாம். இதைவிட ஒரு மோடி வேறு உண்டா? இது நம் மக்களுக்கும், நாட்டுக்கும் செய்யும் துரோகமல்லவா?

வால்மார்ட்

1962ல் தொடங்கப்பட்ட வால்மார்ட் நிறுவனம், 26 நாடுகளில் செயல்படுகிறது. 8500 பெரும் கடைகளை நடத்தி வருகிறது. 20 லட்சம் பேர் இதில் பணிபுரிகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் பிற நிறுவனங்களை விட குறைந்த சம்பளம் தான் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் மீது சம்பளப் புகாரின் அடிப்படையில் பல நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் வால்மாட்ர்டுக்கு எதிராக அமெரிக்கர்களே சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். சொந்த மக்களையே வால்மார்ட் சுரண்டுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க், பாஸ்டன் நகரங்களுக்குள் வால்மார்ட் கடைகளை அந்த நகர மாநகராட்சிகள் நுழைய தடை விதித்துள்ளன.

லஞ்சம்?

மெக்சிகோ நாட்டில் தங்கள் கடைகளைத் திறக்க அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக பல மில்லியன் டாலர்கள் கொடுத்ததை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. இந்தியாவில் தங்களை அனுமதிக்க செய்வதற்காக அரசுடன் வாதாட மட்டும் 52 கோடிகளை வால்மார்ட் செலவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி (அதாவது லஞ்சம்) கொடுப்பதற்காக இவர்கள் தனியொரு நிதிப்பிரிவை வைத்திருக்கிறார்கள்.

ஆரம்பமும் முடிவும்

நவீன கட்டிடங்களில், குளுகுளு வசதிகளுடன், வண்ணச் சீருடைகளில் பணியார்களை அமர்த்துவார்கள். 5 ரூபாய் பொருளைக்கூட அழகாக பேக் செய்து தருவார்கள். தள்ளு வண்டியில் பொருள்களை வாங்கும் பரவசத்தில் வாடிக்கையாளர்களாகிய நமது மக்களும் நமது பாரம்பர்ய மளிகை, காய்கறி வியாபாரிகளை மறந்துவிட்டு பன்னாட்டு முதலாளிகளின் கடைகளுக்கு சென்றுவிடுவார்கள்.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு 100 ரூபாய் மதிப்பிலான ஒரு பொருளின் விலையை 98 ரூபாய்க்கு குறைத்து தருவார்கள். இது சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரமாகும்.

இவர்களின் பலமான போட்டியைத் தாக்குபிடிக்க முடியாமல், நமது மளிகை வியாபாரிகளும், காய்கறி வியாபாரிகளும் தங்கள் கடைகளை மூடவேண்டிய நிலை தானாகவே உருவாகிவிடும். அதன்பிறகுதான் 'பன்னாட்டு திருடர்களின்' கோர முகம் வெளிப்படும். உள்ளூர் வணிகர்களை ஒழித்தபிறகு, தாங்கள் வைத்ததே விலை என்ற சர்வாதிகார வணிகத்தை நிலை நிறுத்துவார்கள்.

அப்போது, முன்னர் கடை வைத்திருந்த நமது வியாபாரிகள் காணாமல் போயிருப்பார்கள். பன்னாட்டு முதலாளிகளின் விலையேற்றத்திற்கு மாற்றாக, நமது மக்கள் வாங்குவதற்கு வேறு கடைகள் இருக்காது. இதனால் விலைவாசி ஏற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கேற்ப வாங்கும் சக்தியை இழந்து எளிய, நடுத்த மக்கள் திண்டாடுவார்கள்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்ததன் விளைவாக அடுத்த 10 ஆண்டுகளில் நமது நாடும், மக்களும் சந்திக்கப் போகும் நிலை இதுதான். அதனால்தான் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை அனுமதிக்கவில்லை. ஆனால், இதே உறுதியை அடுத்த சில வருடங்களிலும் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இதற்கு என்ன தீர்வு

சில அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் செய்யும் தவறுகளால் மீண்டும் பன்னாட்டு கம்பெனிகளிடம் நாட்டை அடமானம் வைக்கும் முயற்சிகள் நடக்கிறது.

ஆரம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்யத்தான் இந்தியாவுக்கு வந்தார்கள். பிறகு உள்நாட்டு அரசியலில் தலையிட்டு ஆட்சியாளர்களை அடிமைப்படுத்தி, நாட்டையே இருநூறு ஆண்டுகள் ஆண்டார்கள். நெடிய விடுதலைப் போராட்டங்களுக்குப் பிறகுதான் நாடு சுதந்திரம் பெற்றது.

இப்போது வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ போன்ற புதிய 'கிழக்கிந்திய கம்பெனிகள்' நுழைகின்றன. மக்களைத் திரட்டி வலிமையாகப் போராட வேண்டும். விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் அவர்களை விரட்ட வேண்டும். அன்னிய 'முதலாளி'களுக்கு கட்டுப்படும் அரசியல்வாதிகளை எச்சரிப்போம்!

வாருங்கள்... நாட்டையும் மக்களையும் தட்டி எழுப்புவோம்!

ஐயங்களும் - விளக்கங்களும்

யாருக்கு லாபம்?

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் கடைகளைத் திறந்தால், விவசாயிகளிடம் நேரடியாக, இடைத்தரகர்கள் இல்லாமல் விளைப்பொருட்களை வாங்குவார்கள்; இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்ற வாதம் வைக்கப்படுகிறது.

தங்களுக்குத் தேவையானப் பொருட்களை அவர்கள் இந்தியாவில் தான் கொள்முதல் செய்யவேண்டும் என்ற நிலையை அவர்கள் கடைப்பிடிக்கப் போவதில்லை. உலகில் தங்களுக்கான பொருட்கள் எங்கு மவாகக் கிடைக்கிறதோ அங்கேதான் கொள்முதல் செய்வார்கள். உதாரணத்திற்கு, பாகிஸ்தானில் வெங்காயம் மலிவாகக் கிடைத்தால் பாகிஸ்தானிலும், இலங்கையில் தேயிலை மலிவாகக் கிடைத்தால் இலங்கையிலும், பங்களாதேஷில் ஆரஞ்சு பழம் மலிவாகக் கிடைத்தால் பங்களாதேஷிலும் தான் வாங்குவார்கள். அவர்கள் அதிகம் கொள்முதல் செய்வது சீனாவின் மலிவு விலை பொருட்களைத் தான்.

செயற்கை விலையேற்றம்?

விவசாய உற்பத்திப் பொருட்களை அழுகாமல் பாதுகாக்க குடோன்களை அமைக்க அந்நிய முதலீடு உதவும் என்றும் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆனால் குடோன்களில் பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதில்லை. மாறாக தங்களது பெரிய கடைகளுக்குத் தேவையான பொருட்களைப் பதுக்கி வைக்க குடோன்களைக் கட்டுவார்கள். இதில் பொருள்களைப் பதுக்கி வைத்து, செயற்கையான விலையேற்றத்தையும் ஏற்படுத்துவார்கள். உலகமெங்கும் அடிக்கடி அரிசி வணிகத்தில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையேற்றத்தை செய்தில் இவர்களுக்குப் பங்குண்டு.

வறுமை ஒழியுமா?

வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் போன்ற பெரிய நிறுவனங்களால் நேரடி கொள்முதல் வியாபாரம் நடப்பதால் விவசாயிகளின் வறுமை ஒழியும் என்கிறார்கள்.

அமெரிக்க மக்கள் தொகையில் விவசாயிகள் 2 சதவீதமாகும். அங்கே விவசாயிகளுக்கு வருடந்தோறும் 1 லட்சம் கோடி ரூபாயை அரசுதான் மானியமாக வழங்குகிறது. ஐரோப்பாவின் மக்கள் தொகையில் விவசாயிகள் 5 சதவீதமாகும். அங்குள்ள அரசுகள் விவசாயிகளுக்கு வருடந்தோறும் 35 லட்சம் கோடிகளை மானியமாக வழங்குகின்றன. அங்கெல்லாம் இவர்களது சாம்ராஜ்யங்கள் உண்டு.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலேயே விவசாயிகளின் வறுமையை ஒழிக்க முடியாத பன்னாட்டு 'முதலை' நிறுவனங்கள் இந்தியாவில் வறுமையை ஒழிக்கப் போகிறார்களாம். சாத்தான் வேதம் ஓதுமா?

வயிற்றில் அடிக்கலாமா?

இடைத்தரகர்களைத் தவிர்த்து விவசாயிகளிடமே நேரடியாகப் பொருட்களை பெற்றுக் கொள்வோம் என்கிறார்கள். 60 சதவீத விவசாய விளைப் பொருட்கள் இடைத்தரகர்கள், உள்ளூர் பயனாளிகள் உள்ளிட்ட பெரும்பகுதி மக்களின் தேவைகளையும், வாழ்வையும் பூர்த்தி செய்கிறது.

நேரடி கொள்முதல் என்ற பெயரில் இவர்களது வயிற்றில் அடிக்கலாமா? இதனால் வேலை இல்லா திண்டாட்டம், பசி, வறுமை போன்ற சமூக குழப்பங்கள் உருவாகாதா?

இவர்கள் பல மாதங்களுக்கு முன்பு வாங்கியவற்றை 'குடோன்'களில் குளிரூட்டி வைத்திருப்பார்கள். காய்கறிகளை, பழங்களைப் பறித்து இரண்டு நாட்களுக்குள் சந்தையில் விற்று 'ஃப்ரெஷ்' ஆக சாப்பிடும் நிலை மாறி, பல மாதங்களுக்குப் பிறகு சாப்பிட வழிவகுக்கும் இச்செயல் ஆரோக்கியத்தைக் கொடுக்குமா? உள்ளூர் தரகர்களுக்கு பதிலாக அதே வேலையை வால்மார்ட் மேனஜர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

அடுத்த குறி

நம்நாட்டில் 6 கோடி விவசாயிகள் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ளனர். இவர்களது குடும்பத்தினரின் எண்ணிக்கை 32 கோடி. நாட்டில் சிறு விவசாயிகள் தான் அதிகம். நாட்டில் 34 சதவீத நிலத்தில் பயிரிட்டு 41 சதவீத உணவுப் பொருட்களை விளைவிக்கிறார்கள். சில்லறை வணிகத்தைத் தொடர்ந்து பன்னாட்டு முதலை நிறுவனங்களின் அடுத்த குறி உணவு வர்த்தகம் தான். பாவம் நமது விவசாயிகள்.

- தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி

Pin It