தென்பொதிகைத் தமிழ்ச் சங்கம், தென்காசி

உலகத் தமிழ்க் கழகம், சென்னை

இணைந்து நடத்தும் 

தமிழின் தொன்மையும் தனித்தன்மையும் - கருத்தரங்கம் 

அக்டோபர் 13, 2012,

வி.கே.என். இல்லம், குற்றாலம்  

ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் பா. வேலம்மாள்

முனைவர் மு.இராமகிருஷ்ணன்

 அனைவரும் வருக! 

 

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல்கடல் இவற்றோடும்

பிறந்த தமிழோடும் பிறந்தோம் நாங்கள்.

- பாரதிதாசன்

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய தமிழ்மொழியின் தொன்மை வரலாற்றைக் கட்டமைப்பதற்குக் கிடைக்கும் சான்றுகள் ஏராளம். பழங்குகைக் கல்வெட்டுக்கள், நடுகற்கள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் எழுத்துக்கள், இலக்கியச் சான்றுகள், வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள், பழைய நாணயங்கள், அரசு சாசனங்கள், அரசர்களின் ஆவணங்கள், தொன்மைக் கலைகள், வழக்காற்றுக் கூறுகள், கட்டடக் கலைகள், சிற்பங்கள் என்று அச்சான்றுகளைப் பட்டியலிடலாம். பழனிக்கு அருகே பொருந்தலாற்றங்கரையில் உள்ள பொருந்தல் என்னும் ஊரில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் கம்பம் அருகே புலிமான் கோம்பையில் கிடைத்த நடுகல்லில் இருந்த கல்வெட்டுச் சான்றுகளும் திருநெல்வேலியின் அருகிலிருக்கும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் தமிழ்மொழியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கின்றன.

உலகச் செம்மொழிகள் என்று தமிழ், சமஸ்கிருதம், சீனம், பெர்சியன், கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, அரேபியன் ஆகிய எட்டு மொழிகள் மட்டுமே கருதப்படுகின்றன. இவற்றுள், பேச்சுமொழியும் எழுத்து மொழியும் ஒன்றை ஒன்று சார்ந்தும் தழுவியும் போற்றியும் வருவனது தமிழ், சீன மொழிகள் மட்டுமே. உலகச் செம்மொழிகளில் பல இக்காலத்தில் அவற்றின் தொடர்ச்சியையும் பயன்பாட்டையும் இழந்துவிட்ட நிலையில் இவை மரபு வடிவிலும் இக்கால வடிவிலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

ஒரு சமூகத்தின் அடையாளக் கட்டமைப்பில் மொழியின் பங்கு அளவற்றது. ஒரு மொழியை வீழ்த்துவதன் மூலமாக அச்சமூக அடையாளங்களை நீர்த்துப்போகச் செய்யலாம். தமிழ் மொழியில் இயற்கையாக அமைந்த அதன் உள்கட்டமைப்பு அயல்மொழியின் தாக்குதலையும் பிற பண்பாட்டுக் கூறுகளின் ஆக்கிரமைப்பையும் தடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. காலத்தால் கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கருதப்படும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் இதைக் குறிப்பிடத் தவறவில்லை. பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கும் போது பின்பற்ற வேண்டியவை பற்றித் தொல்காப்பியம் தெளிவான வரையறையை முன்வைக்கிறது. இதன் மூலம் பிற மொழிக் கலப்பிலிருந்து தமிழ் மொழியைக் காக்கும் போராட்டம் தொல்காப்பியர் காலத்திலிருந்தே தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று கூறலாம்.

மொழியின் தன்மை, மொழிப் பயன்பாடு, மொழியின் கருத்துருவாக்கம், மொழிக்கும் அது சார்ந்திருக்கும் சமூக உண்மைகளுக்குமான உறவு ஆகியவற்றை நோக்கும் பொழுது தமிழ் மொழியின் பெருமையும் சிறப்பும் விளங்கும். தமிழ்ப் பண்பாட்டுத் தனிக்கூறுகளைக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் இலக்கியங்களை உணர்ச்சி, நயம், வடிவம், அதன் உயிர்மை குறையாமல் பிற மொழிகளுக்குப் பெயர்த்தெழுதுவது என்பது இயலாத ஒன்று.

மொழியைப்போன்றே தொல்தமிழரின் வாழ்வும் அவர்களின் நாகரிகமும் பண்பட்டவை, சமத்துவம் நிறைந்தவை, எளிமையானவை, இயற்கையைச் சார்ந்தவை. இவர்களின் வணிகத் தொடர்பு யவனம், சீனம், தென்கிழக்கு ஆசியா முதலிய நாடுகளில் பரவியிருந்தது. சங்கம் ஏற்படுத்தி மொழியை வளர்த்தவர்கள் தொல்தமிழரைத் தவிர உலகில் வேறு எவரும் இல்லை.

அகம் புறம் என்ற எதிர்மறைகளால் கட்டமைக்கப்பட்ட தொல்தமிழர் வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளை அக்கால இலக்கியங்கள் பதிவுசெய்யத் தவறியதில்லை.

இவ்வாறு தொன்மையையும் தனித்தன்மையையும் பல்வேறு சிறப்புக் கூறுகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் தமிழ் மொழியின் தோற்றம் குறித்தும் அதன் காலம் குறித்தும் அதன் இலக்கியவளம் குறித்தும் எதிர்மறையான கருத்துக்களை அடிப்படைச் சான்றுகள் ஏதுமின்றி அவ்வப்போது சில அறிவுஜீவிகள் முன்வைப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, அண்மையில் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் இரா. நாகசாமியின் தமிழ் சமஸ்கிருதக் கண்ணாடி (விவீக்ஷீக்ஷீஷீக்ஷீ ஷீயீ ஜிணீனீவீறீ ணீஸீபீ ஷிணீஸீsளீக்ஷீவீt) (2012) என்னும் ஆங்கில நூலை இங்குக் குறிப்பிடலாம். இதுபோன்ற புனைவுகளும் கட்டுக்கதைகளும் தந்திரவுத்திகளும் தமிழ்மொழியின் வளர்ச்சியில் எதிர்வினைகளை ஏற்படுத்தா என்பதோடு அவை தடைக்கற்களாகவும் ஆகா என்பது காலத்தால் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. எனினும், அந்நூல் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாகக் கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்றவண்ணம் உள்ளன. குறுகிய கண்ணோட்டத்துடன் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் வரலாற்றுத் திரிபுகளையும் முன்வைக்கும் தனியாட்களுக்கும் அமைப்புக்களுக்கும் உரிய மறுமொழியைக் கொடுக்க வேண்டிய தலையாய கடமையை பல்வேறு தமிழ் அமைப்புகள் செய்துகொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தென்பொதிகைத் தமிழ்ச் சங்கமும் (தென்காசி), உலகத் தமிழ்க் கழகமும் (சென்னை) இணைந்து ஒருநாள் கருத்தரங்கத்தைக் குற்றாலத்தில் 13.10.2012 சனிக்கிழமை நடத்தவுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் தனித்தன்மையையும் அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் இளம் தலைமுறையினருக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துச்செல்லவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்தக் கருத்தரங்கில் நுண்மாண்நுழைபுலம் மிக்க அறிஞர்கள் தொல்லியல், மரபியல், மொழியியல், மாந்தவியல், ஒப்பியல், மெய்யியல் பார்வையில் தமிழின் சிறப்புக்கூறுகளையும் அதன் உலகத்தன்மையையும் குறித்து ஆய்வுரை வழங்க இருக்கிறார்கள்.

தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை அதன் பண்பாட்டுத் தொடர்ச்சி போன்றவற்றை அறிந்துகொள்வதற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். முன்பதிவு செய்பவர்களுக்கு மதிய உணவும் கருத்தரங்கச் சான்றிதழும் வழங்கப்படும். 

பதிவு செய்யத் தொடர்புகொள்க

செயலாளர்

தென்பொதிகைத் தமிழ்ச் சங்கம்

6-ஏ, மனகாவலன் தெரு

தென்காசி - 627811

9629379334

 

முனைவர் பா. வேலம்மாள்

துறைத்தலைவர்

தமிழியல் உயராய்வு மையம்

ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி

குற்றாலம் - 627802

9443554964

 

நிகழ்ச்சி நிரல்

முதல் அமர்வு

காலை 09.45 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை

அக்டோபர் 13, 2012, வி.கே.என். இல்லம், குற்றாலம்

வரவேற்பு:                   திரு. ச. துரைமுருகன்

செயலாளர், தென்பொதிகைத் தமிழ்ச் சங்கம், தென்காசி

தலைமை:                   தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன்

பொருளாளர், உலகத் தமிழ்க் கழகம்

தொல்லியல் நோக்கு:    முனைவர் அரங்க. பூங்குன்றன்

மேனாள் உதவி இயக்குநர், தொல்லியல்துறை

மாந்தவியல் நோக்கு:    புலவர் ந. அரணமுறுவல்

ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், சென்னை

ஒப்பியல் நோக்கு:        பேரா. ப. மருதநாயகம்

ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், சென்னை

***

உணவு இடைவேளை (பிற்பகல் 01.00 மணி முதல் 02.00 மணி வரை)

***

இரண்டாம் அமர்வு

பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

தலைமை:                   முனைவர் பா. வேலம்மாள்

தலைவர், தமிழ்த்துறை, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்

மொழியியல் நோக்கு:    பேரா. க. இராமசாமி

பொறுப்பு அலுவலர் & ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், சென்னை

மரபியல் நோக்கு:        பேரா. கு. சிவமணி

ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், சென்னை

மெய்யியல் நோக்கு: பேரா. க. நெடுஞ்செழியன்

இயக்குநர், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், திருச்சிராப்பள்ளி

நன்றி:           முனைவர் மு. இராமகிருஷ்ணன்

இணை ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், சென்னை

சான்றிதழ் வழங்குதல் - நிகழ்ச்சி நிறைவு

Pin It