1930 மார்ச் 12 அன்று சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டியை  நோக்கி  ஆரம்பித்த நடைபயணம் 384 கி.மீ துரத்தை மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே கடந்தார் இந்த தேசத்தின் மகாத்மா என்றழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அன்று இந்திய தேசம் முழுவதும் பிரிட்டிஷ் அரசின் உப்புவரி சட்டத்தை எதிர்த்து கடும் கொந்தளிப்புக்கிடையே போராடத் தயாராகிக் கொண்டு இருந்த  அந்த ஏழை எளிய மக்களிடையே (அஸ்லலி என்னுமிடத்தில் ) காந்தி உரையாற்றும் போது ..

உங்களுடைய சொந்த கிராமத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். 1700 நபர்கள் கொண்ட மக்கள் தொகைக்கு  850 மணங்கு உப்பு தேவைப்படும். 200 காளை மாடுகளுக்கு  300 மணங்கு உப்பு தேவைப்படும். அதாவது மொத்தத்தில் 1150 மணங்கு உப்பு தேவைப்படும். அரசு ஒரு பக்கா மணங்கு உப்பிற்கு ரூ 1.25 ( பழைய ரூ 14 அணா) வரி விதிக்கிறது. 1150 மணங்கு என்பது 575 மணங்கிற்குச் சமம். எனவே மொத்தவரியாக ரூ 720ஐ நீங்கள் செலுத்துகிறீர்கள். ஒரு காளை மாநாட்டிற்கு 2 மணங்கு உப்பு தரப்பட்ட வேண்டும். மேலும் 800 பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுகுட்டிகள் உங்கள் கிராமத்தில் உள்ளன.

அவைகளுக்கும் நீங்கள் உப்பு அளித்தால் அல்லது தோல் பதனிடுவோர் தோலைப் பதப்படுத்துவதற்கு உப்பைப் பயன்படுத்தினால் அல்லது உப்பை நீங்கள் உரமாகப் பயன்படுத்தினால்  ரூ 720க்கும் அதிகமாக நீங்கள் வரியாக செலுத்த வேண்டி வரும். இவ்வளவு தொகையை நீங்கள் வரியாக ஒவ்வோர் ஆண்டும் உங்கள் கிராமத்தால் செலுத்த முடியுமா? இந்தியாவில் ஒரு தனி நபரின் சராசரி வருமானமே 7 பைசாதான் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிறிதொரு வகையில் கூறுவதென்றால், லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு பைசா கூட வருமானம் இல்லை. ஒன்று அவர்கள் பட்டினி கிடந்து சாகிறார்கள். அல்லது பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இவர்கள் கூட உப்பில்லாமல் வாழ முடியாது. இவர்களுக்கெல்லாம் உப்பே கிடைக்காவிட்டால் அல்லது மிக அதிக விலையில் உப்பு கிடைத்தால் அவர்களின் துயரம் எப்படி இருக்கும்? என மகாத்மா காந்தி உப்பு வரி சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துப் பேசினார்.

மகாத்மா காந்தி உரையாற்றி சரியாக 80 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் 83.77 கோடி பேர் நாளன்றுக்கு ரூ 20 வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 20 சதமான மக்கள் இரவு உண்ணாமல் உறங்கிக் கொண்டு இருக்கின்றனர். பெண்களில் 54 சதமானோருக்கு இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். பிறக்கும் 3 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளில் 80 சதமானோருக்கு இரத்த சோகை நோய் உள்ளதாக இந்தியாவின் சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த பின்னணியில் கடந்த 20092010 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ 9,53,231 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் திட்டம் சார்ந்த செலவினங்களுக்கு  ரூ 2,85,149 கோடியும், திட்டம்சாரா செலவினங்களுக்கு ரூ 6,68,082 கோடியும் ஒதுக்கப்பட்டது. இப்படி முக்கியமான துறைக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் (2005 முதல் 2008 ஆண்டு வரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலே இருக்கிறது)

2011ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அவர்கள் உரையாற்றும் போது இந்தாண்டு 8 சதவீதமும், அடுத்தாண்டு 9 சதவீதமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உணவுப் பொருள் விலைவாசி உயர்வால் ஏழை எளியோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாததே. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்பது ஆறுதல் தரக்கூடியதே..என்றார், ஆனால் இந்திய புள்ளியியல் துறை தரும் தகவல் எதிர்மறையாக உள்ளது.

வேளாண்துறை வளர்ச்சி வீதம் மைனஸ் 0.2 சதவீதமாக உள்ளது.  இது சார்ந்துள்ள சுமார் 70 சதம் கிராமப்புற மக்களை பாதிக்கும் விசயமாகும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதம் பேருக்கு வேளாண்துறைகளின் மூலமே வேலைவாய்ப்பு கிடைத்து வந்த சூழலில் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் வேளாண்துறையின் பங்கு 17 சதம் மட்டுமே. இந்தியாவின் தேசிய வருவாய்  ரூ 51.18 லட்சம் கோடி. இதன் படி 117 கோடி மக்களின் தனி நபர் வருவாய் மாதத்திற்கு ரூ 3,646 ஆகும். இதில் 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அம்பானி குடும்ப வருமானமும் தேசிய வருவாயில் வந்துவிடும் உண்மையில் சுமார் 84 கோடி பேரின் மாத வருமானம் சராசரியாக ரூ 600 தான் கிடைக்கும் நிலையில் எங்கே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் ஏற்றுமதிக்கான சலுகைகள், தொழில் துறையினருக்கான ஊக்க சலுகைகள், பங்கு வர்த்தகம், அந்நிய முதலீடு, எரிபொருள் துறை, வேளாண்துறை, மானியத்தை குறைப்பது. என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா 9 சதம் வளர்ச்சியை அடைய வேண்டுமானால் 500பில்லியன் டாலர் பணத்தை 2011ம் ஆண்டு வரை தொழிற்துறைக்கான உள்கட்டுமானத்திற்கு செலவிட வேண்டும் என்கிறார். உரமானியம், விவசாயத்திற்கு கடனுதவி, மானியங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார்.

ஹிரித் பரித் கமிட்டி சமீபத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ 3.5 லட்சம் கோடியை தொட்டுவிட்டது. எனவே எரி பொருள்களின் விலைகளை உயர்த்த அனுமதிக்க வேண்டும். சர்வதேச சந்தை விலையை ஒட்டி 15 நாட்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். மானியங்களை சிறுக சிறுக குறைத்துவிட வேண்டும் என அருளாசி வழங்கியுள்ளார். விவசாயத்துறைக்கு மானியம் கொடுப்பது வீண் விரையம், பொது விநியோகத்திற்கு மானியம் கொடுப்பது விரையம் என்றெல்லாம் இந்திய தொழில் கூட்டமைப்பினர் கூக்குரலை எழுப்புகின்றனர். ஆனால் அரசு வழங்கும் மானியங்கள் சாதாரண விவசாயிகளுக்கு செல்வதற்கு பதில் பெரும் உர, விதை மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு செல்கிறது என்பதே உண்மை.

எப்ஐசிசிஐ அமைப்பு மத்திய அரசு தொழிற்துறைக்கு தற்போது வழங்கி வரும் ஊக்க சலுகைகளை தொடர்ந்து வழங்கி வர வேண்டும். உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்திய அரசு 3.60 லட்சம் கோடியை தொழிற்துறைக்காக அளித்தது. இதனால் 2 சதவீதத்திற்கு குறைந்த ஜி.டி.பி தற்போது 7.5 சதம் வரை அதிகரித்துள்ளது. எக்சைஸ் டியூட்டியை 12 சதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்தார்கள். ஏற்றுமதியாகும் ஜவுளி உற்பத்திக்கு வங்கி வட்டி 3.5 சதத்தில் இருந்து 2 சதமாக குறைத்துவிட்டார்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாயை அம்பானி, மிட்டல், டாடா போன்ற ஏழைகளுக்கு கொடுத்து பாதுகாத்த இந்திய அரசு தனது வர்க்கப் பாசத்தை தெளிவாக காட்டியுள்ளது. இவையெல்லாம் பட்ஜெட்டிற்கு முந்தைய சலுகைகள். அதனால் 68 சதம் மக்கள் நேரடியாக சம்மந்தபட்டுள்ள விவசாயத்துறைக்கு பட்ஜெட்டிற்கு முன்பே தனி அறிவிப்பாக விலை உயர்வுகளை அறிவித்து விடுகின்றனர். தற்போது ஒரு டன் யூரியா விலையை ரூ 480 வரை உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே 12 சதம் நெல் சாகுபடி குறையும், உணவு தானிய உற்பத்தியும் 7.5 சதம் குறையும் என வேளாண் நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் உரத்தின் விலையை ஏற்றியுள்ளது, மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவோம் என்ற அறிவிப்புகளெல்லாம் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியதை போன்றதாகும்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 100 நாட்கள், 100 ரூபாய் கூலி என கடந்த 4 ஆண்டுகளில் ரூ 39100 கோடி நிதி ஒதுக்கீட்டில் சுமார் 4 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உணவு தானிய உற்பத்தி குறைவும், வேலையின்மை அதிகரிப்பும் உள்ள சூழலில்  இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதே சரியான செயலாக இருக்க முடியும். ஆனால் இப்போதே  இந்த திட்டத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்க வேண்டுமா ? என கோடீஸ்வர ஏழைகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

கடந்தாண்டு பட்ஜெட்டில் மானியத்திற்கு 1.09 லட்சம் கோடி, தொழில்துறைக்கு ஊக்கத்தொகை 4.25 லட்சம் கோடி, மருத்துவம், சுகாதாரம், குடும்ப நலத்திற்கு ரூ 17994 கோடி என ஒதுக்கியதில் இருந்தே இவர்கள் யாருக்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த பட்ஜெட்டின் வெள்ளோட்டமாக வந்துள்ள ரயில்வே பட்ஜெட் தனியார்மயத்திற்கான வாயிற் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை தனியார்துறை பார்ட்னர்ஷிப்பில் 1000 கிலோமீட்டர் புதிய இருப்புப்பாதை அமைப்பது என்ற அறிவிப்பு முழுக்க தனியார்மய நடவடிக்கையாகவே அமையும். ஆதாயம் தரும் திட்டங்களை எல்லாம் தனியாரிடம் விடுவது என்ற அறிவிப்பு. இந்த பட்ஜெட்டில் சிக்னல் முறைகளை நவீனப்படுத்துவது, ரயில் பெட்டி பராமரிப்பு, பயணிகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு, ரயில்களை தாமதமில்லாமல் இயக்குவது, ரயில்வேயில் உள்ள 1.7 லட்சம் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. இதில் 90000 பணியிடங்கள் ரயில்வே பாதுகாப்போடு தொடர்புடையது.  புதிய வேலைவாய்ப்புக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

கடந்த பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 450 உள்கட்டமைப்பு திட்டங்கள் ரூ 2.24 லட்சம் கோடி மதிப்பில் பொதுத்துறை தனியார்துறை பார்ட்னர்ஷிப்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்த பட்ஜெட்டிலும் தொடரும் என அறிவித்துள்ளார்.

2010க்கான பட்ஜெட் என்பது கடுமையான பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், உணவு தானிய உற்பத்தி பாதிப்பு, பொதுவிநியோக முறை சீரழிவு இவைகளுக்கு இடையில்  இந்திய தொழில் வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, கிராமப்புற வேலைவாய்ப்பு, நகர, கிராமப்புற சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பது இவைகளுக்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டிலும் எதிர் பார்க்க முடியாது. உப்பில்லா பண்டம் குப்பையில்லே என்ற தமிழ் பழமொழிக்கேற்ப தேசத்தின் அடிநாதமாக உள்ள உழைப்பு சக்தியை புறக்கணித்துவிட்டு சுரண்டி பிழைக்கும் ஒரு கூட்டத்திற்கான பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட் உள்ளது.

-அரவிந்தன்

Pin It