நவீன பெண்ணியக் கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாதவராகக் காட்டியிருக்கும் கவிதைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது ‘மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்’ (2016). டிஸ்கவரி புக்பேலஸ் வெளியீடாக வந்திருக்கிறது. இத்தொகுப்பைப் பொறுத்தமட்டில் சொற்களின் செறிவை ஆழ்மனதில் இருந்தி வெளிப்படுத்திய பிரஞ்ஞையை வாசகனுக்குள் ஏற்படுத்தும் லாவகம் சக்தி ஜோதிக்குக் கைகூடியிருக்கிறது. வாசிக்கும் ஒவ்வொரு வாசிப்பிலும் அழகிய, அடர்த்தி சூழ்ந்த பச்சை பிரதேச வனாந்தரத்திற்குள் அழைத்துச்செல்லும் கவிதைகள் நான்கு பக்கங்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் வந்து புதுவித உற்சாகத்தைத் தருகிறது
ஒட்டுமொத்த கவிதைகளின் இயங்க தளத்தை அவதானிக்கும் போது ஐம்பூதம் - உடல் - பெண், ஐம்பூதம் - உடல் - ஆண், பெண் - ஐம்பூதம் - ஆண், ஆண் - ஐம்பூதம் - பெண் என்பதாக விரிந்திருக்கிறது. ஆண், பெண் உறவுநிலைகளின் வகிபாகத்தில் ஐம்பூதத்திற்கு பேரிடம் உண்டு எனவும் ஐம்பூதத்தின் அத்துனை அம்சமும் பெண்ணுக்குள் நிரம்பிக் கிடக்கின்றன எனவும் நம்புகின்ற ஆசிரியரின் படைப்புமனம் எல்லாக் கவிதைகளிலுமே நிரம்பிக்கிடக்கின்றது.
உப்புப்படிந்த இசைக்குறிப்பு கவிதை நுவலும் ‘பக்குவப்படுத்தி பாதுகாத்த பொருளும் பழைய இசையும் துயரத்தை இடம் மாற்றிப் போடும் வல்லமை பெற்றவை’ என்பதான கருத்தியல், வாழ்ந்து அனுபவித்ததின் வெளிப்பாடு என்பதை அழுத்தமாய் உணர்த்தி விடுகிறது. காரணம் வெற்றுக் கற்பனையில் இப்படியான சொற்கட்டு வாய்க்க வாய்ப்பில்லையாதலால் அப்படியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
துயருற்ற மனதின் இயலாமையை
உணர்கையில்
செய்ய வேண்டியது ஒன்றுமில்லை
பழமையான நாட்டுப் பாடலொன்றின்
சொல்லெடுத்துப் பாடலாம்
அல்லது
பண்டைய கடலோடியின்
உப்புப்படிந்த இசைக்குறிப்பொன்றை
வாசிக்கலாம்
அப்போது
முந்தைய காலத்தின் இசை
இடம்பெயர்ந்து
மனதில் படிந்திருக்கும்
என்னும் கவிதை பழைய இசையின் மீதும் இசை என்று நம்பப்படுகின்ற எல்லாவற்றின் மீதும் ஆசையை உருவாக்கி விடுகிறது. கவிதையின் பின்னணியில் கடலோடியும் கடலும் விரிந்து நீர்த்தேசத்தின் பிரதிநிதிகளாய் காட்சியளிக்கிறார்கள். அடுத்த கவிதைகளில் பரவிக்கிடக்கம் அருவி (திமிரும் அருவம்), குமிழ் (உப்பின் ஒளிர்வு), நீர் (அடவு), பனி (நிகழ்தல்) என்னும் சொற்களின் வழி நீரின் இருத்தலை, நீரின் பரிணாமங்களை படிம வார்ப்பாக்கி இருக்கும் திறம் சிறப்பானது.
‘பறவையின் குரலைத் தேடி’ என்னும் கவிதையில் காதல் என்பது எதிர்பாலினத்தின் குரலைச் சுதந்திரவெளியில் கொண்டுபோய் நிறுத்தி இனிமையாக்கி விடுகிறது என்பதாக வெளிப்பட்டிருக்கும் நுவல்வடிவம் முதிர்ச்சியான கவிமனத்தின் சாயலாகும். இதே கவிதையில் வரும் தலைவி, உதிர்ந்த சருகுகளின் அடர்வுக்குள் நடந்து கவிதையை முடித்து வைக்கிறாள். அந்தப்புள்ளியில் இருந்துதான் கவிதையும் பறவையின் குரலும் ஒலிக்கத் தொடங்குகிறது.
‘தீயின் நாவு’ என்னும் கவிதையில் நெருப்பைப் பற்றிச் சொல்லும் கவிஞர், நெருப்பை உணரும் போதெல்லாம் அது உடலில் பற்றிவிடுகிறது என்கிறார்.
நெருப்பை
அசைந்தியங்கும் தழல் எனவும்
இயக்கத்தின் காரணி எனவும்
உணர்ந்த பின்
நினைவில் படர்ந்து
உடலிலும் பற்றியெழும்புகிறது.
இக்கவிதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணி ‘நெருப்பு’ என உணரும் மனநிலை, கவிதையின் வெளியை சித்துநிலைக்கு அப்பால் கொண்டு நிறுத்திவிடுகிறது.
சொல்லின் வாழ்வு சொல்லில் இல்லை. சொல்பவரைப் பொறுத்தே அமைகிறது என்பதை,
ஒரு சொல்லைச் சொல்பவர் யார்
அதைப் பொறுத்து
அந்தச் சொல் உயிர்க்கிறது
அல்லது உதிர்கிறது.
என மொழிப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.
கவிதை ஒவ்வொன்றிலும் சிதறிக்கிடந்த சிந்தனை யாவும் திரண்டு நிற்கும் தன்மையில் அமைந்திருக்கும் கவிதை ‘எல்லாவற்றுக்கும் பதிலியாக’. இதில் மலை, மலை முகடு, மழை, பச்சைத் தாவரம், சமவெளி, பீடபூமி, கனி, கடல், மீன், நெருப்பு என எல்லாமும் என்னிடம் இருக்கின்றன. நான் உன்னிடம் கேட்டுப்பெற வேண்டியது எவுதுமில்லை எனக் கவிதைத் தலைவி கூறுமிடத்து இயற்கை நான், நானேதான் இயற்கை என்னும் திடமான மொழிதலைக் காணமுடிகிறது.
‘சரிபாதி காதல்’ கவிதைகளும் சிலாகிக்க வைக்கின்றன. ‘முழுமை’ என்னும் கவிதை காதலின் உள்மன உணர்வலையை மிகக் கச்சிதமாகச் சித்திரிக்கிறது.
அறிவாயா
நீயும்
நானும்
நம்மிலிருந்து நீலமலைகளை எழுப்புகிறோம்
அதன் பள்ளத்தாக்கில்
லில்லிமலர்களைப் பூக்கச் செய்கிறோம்
வெண்மையாக பூத்திருக்கும்
அந்தப் பூக்களில் கசிந்திருக்கும் அன்பை
சுவைக்கிறோம்
அப்போது பொலிவுறுகிற
நம் முகங்களில்
நான் உன்னையும்
நீ என்னையும் அடைந்திருப்பதையும்
அப்போது நாம் இல்லாமல் இருப்பதையும்
அறிந்திருக்கிறாயா
ஒருவேளை
உன்னுடைய அறியாமையே
என்னைவிடவும்
உன்னை முழுமையாக்குகிறதோ
இதில் பெண்ணின் ஆசை, சுகிப்பு, சுகிப்பின் வழி உள்ளொடுங்கும் சந்தோஷத் துளிர்ப்பு ஆகியன கவிதைக்குள் கிடந்து இலக்கிய முலாம் பூசுகின்றன. என்னை விடவும் உன்னுடைய அறியாமை தான் உன்னை முழுமையாக்குகிறதோ என்னும் கேள்வி வெறுமனையானதாக அல்லாமல் உன்மத்த மயக்கத்தின் மிச்ச வடிவமாக இருப்பது கவிதையை மேலும் அழகாக்குகிறது.
‘அவிழும் வாசனை’ என்னும் தலைப்பிலான
நிலா நாளின்
ஒளிர்வில் அமிழ்கிறவளை
பின்கட்டு சாளரத்தின் அரைநிலா
தன் அடுத்த பாதியில்
அவளை உயிர்ப்பிக்கிறது
அவள் கூந்தல் அவிழும் வாசனையை
மீதி நாட்களுக்குள்
அவனுக்கு அறிவித்துவிடும்
இக்கவிதையில் பெண்ணுடல் ஆணுக்கான அன்பின் தன்வயத்தாக இருப்பதை வெளிப்படையாய்ச் சொல்லாமல் மறைத்து சொல்லும் விதத்தில் அமிழ்ந்திருக்கும் முருகியல், சொல் ஒவ்வொன்றுக்கும் அரிதாரமாகி இருக்கிறது.
ஒரேமாதிரியான கவிதைகள் இடம் பெறுவதையும், ஒரே நுவல்பொருள் வேறுவேறு விதங்களில் சொல்லப்பட்டிருப்பதையும், சற்றே மிகுதியான உரைநடைத் தன்மையையும் தவிர்த்திருக்கலாம். மற்றபடி சக்திஜோதி இந்த தொகுப்பிலும் தன்னை நிருபித்திருக்கிறார்.
- ஞா.குருசாமி