தமிழிலக்கிய நெடும்பரப்பு, பெரிதும் செய்யுள் மற்றும் கவிதை இலக்கியங்களால் நிரம்பிக் கிடப்பதுவே என்றாலும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள உரைநடை இலக்கியங்களின் வேகமான வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாய் உள்ளது. ஐரோப்பியர் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சியந்திர வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் புத்திலக்கிய வகைகளின் எழுச்சியும் பெருக்கமும் பழைய மரபிலக்கிய வகைகளை வீழ்த்தி விட்டனவோ? என்று எண்ணத் தோன்றும். கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிக அளவில் சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.
பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களினால் பாட்டுடைத் தலைவர்கள் பலகிப் பெருகினர். தமிழகத்தில் புதிதாக நுழைந்த ஐரோப்பியக் கிறித்துவப் பாதிரிமார்களும் மதம் மாறிய தமிழ்க் கிறித்துவப் புலவர்களும் தம் மதத்தைப் பரப்பும் நோக்கில் அச்சியந்திரங்களின் துணைகொண்டு பல புதிய கிறித்துவச் சிற்றிலக்கியங்களைப் பாடினார்கள். இதன் உடன் விளைவாக இந்து மதக் கடவுளர்களைப் போற்றும்(?) சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன. இஸ்லாமியர்களும் பல மரபான, புதிய சிற்றிலக்கியங்களை உருவாக்கினார்கள். ஆக இருபதாம் நூற்றாண்டில் இந்து, இசுலாம், கிறித்துவச் சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின.
இவ்வகை சமயஞ்சார்ந்த சிற்றிலக்கியங்களுக்கு இணையாக அல்லது மிகையாக சமயம்சாராச் சிற்றிலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் மிகுதியும் பாடப்பட்டன. இந்நூற்றாண்டில் தோன்றிய அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகளை ஒட்டி நிறையப் பாட்டுடைத் தலைவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்குத் தேசிய இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. இவ்வகையில் நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சான்றாக, காந்தி பிள்ளைத் தமிழ், காமராசர் உலா, நவபாரதக் குறவஞ்சி.. (தேசிய இயக்கம் சார்ந்தவை), கலைஞர் காவடிச் சிந்து, எம்.ஜி.ஆர். உலா, புரட்சித் தலைவி அம்மானை.. (திராவிட இயக்கம் சார்ந்தவை) முதலானவற்றைக் குறிப்பிடலாம். தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த சிற்றிலக்கியங்கள் பெரிதும் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, பாரதி பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ், கம்பன் திருப்புகழ் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
இம்மரபின் தொடர்ச்சியாக, தமிழறிஞர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களைப் பாராட்டி, புகழ்ந்து எழுதப்படும் தனிக்கவிதைகளின் வரிசையில் அதே மனநிலையில் எழுதப்படும் தொடர் கவிதைகளால் அமைந்த சிற்றிலக்கிய நூல்கள் வெளிவரத் தொடங்கின. அச்சு இயந்திரத்தின் வருகையால் இலக்கிய வடிவங்கள் ஜனநாயகப் படுத்தப்பட்டது போல் இன்றைய நவீன கணினி சார்ந்த D.T.P. தொழில்நுட்பம், நூலாக்கம் மற்றும் பதிப்புச் செயற்பாடுகளை எளிமைப்படுத்தியது. ஒருவகையில் சங்க இலக்கியப் பாடாண் பாட்டுகள் காலந்தோறும் புத்தாக்கம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. புதுவை யுகபாரதியின் சிலம்பார் 60 என்ற இந்நூலும் ஒருவகைப் பாடாண் பாட்டே. சிற்றிலக்கிய வகைகளில் இந்நூலை வகைப்படுத்த வேண்டுமெனில் ‘மாலை’ என்ற சிற்றிலக்கிய வகையாக வகைப்படுத்தலாம். ஒருபொருள் குறித்த பல பாடல்களின் தொடுப்பு, மாலை என்ற இலக்கியமாகும் என்ற மரபின்படி சிலம்பார் 60 ஒரு ‘மாலை’ சிற்றிலக்கியம்.
இந்நூலாசிரியர் புதுவை யுகபாரதி புதுச்சேரியின் சிறந்த இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஆய்வு முதலான பல துறைகளிலும் தம் முத்திரையைப் பதித்து வருபவர்,‘நண்பர்கள் தோட்டம்’ என்ற இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர், தமிழ் மொழி, இன உணர்வாளர், தொடர்ந்து செயலூக்கத்தோடு சமூகநலச் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டி வருபவர் என சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான அன்பும் தோழமையும் கொண்டு உறவையும் நட்பையும் பேணி வருபவர். அவரின் தொடர்ச்சியான இலக்கியச் செயற்பாடுகளின் ஓர் அங்கமே இந்த இலக்கியப் படைப்பு.
இந்நூலின் பாட்டுடைத் தலைவரான சிலம்பு நா. செல்வராசு தமிழ் ஆய்வுலகில் ஓர் அரிய குறிஞ்சி மலர். விளம்பரங்களை விரும்பாத வித்தகர். எப்பொழுதும் நண்பர்களின், மாணவர்களின் நலன் நாடும் நற்பண்பாளர். ஆய்வுச் செயற்பாடுகளில் கறாரானவர் மாந்தச் செயற்பாடுகளில் நேர்எதிரான நெகிழ்ச்சியாளர். சங்க இலக்கிய ஆய்வுகளிலும், சிலப்பதிகார ஆய்வுகளிலும் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய ஆய்வுச் செம்மல். மரபான இலக்கண இலக்கியப் பயிற்சியும் நவீன இலக்கியக் கோட்பாட்டு அணுகுமுறையும் கொண்ட சிலம்பு நா.செல்வராசு போன்ற ஆய்வாளர்களைக் காண்பது தமிழாய்வுலகில் அரிதினும் அரிது. தொடர்ச்சியாகப் பல தேசியக் கருத்தரங்குகளை நடத்திய அனுபவமும் பல ஆய்வுக் கோவைகளைப் பதிப்பித்த பயிற்சியும் ஒருங்கே கொண்டவர். தமிழகப் பல்கலைக் கழகங்கள் தகும் சிறப்பளித்துக் கொண்டாடியிருக்க வேண்டிய தகுதிப்பாடுடைய இப்பேராசிரியர் கல்விப் புலத்திலும்... புரையோடிப் போய்விட்ட அரசியல் சதுரங்கத்தால் உரிய கவனம் பெறாமல் போனார். இதனால் பல்கலைக் கழகங்களுக்கான இழப்பே மிகுதி என நான் துணிந்து சொல்வேன். இத்தகு தகுதிப்பாடுடைய ஒரு தமிழறிஞரைப் போற்றிப் புகழும் இந்நூல் உண்மையில் ஓர் அரிய முயற்சி, ஆக்கபூர்வமான முயற்சி. இந்த காரணங்களுக்காகவே நூலாசிரியர் புதுவை யுகபாரதி பாராட்டப்பட வேண்டியவர், இந்நூல் வரவேற்கப்பட வேண்டியது.
சிலம்பார் 60 என்ற இப்பாடாண் பாட்டு நூல் 101 அறுசீர் விருத்தங்களால் ஆனது. ஆத்திசூடி அமைப்பில் ஒவ்வொரு பாடலும் தமிழ் நெடுங்கணக்கு வரிசை எழுத்துக்களை முதலெழுத்தாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. புதிதாகவும் புதுமை யானதாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த வரிசைமுறை இந்த நூலுக்கு மேலும் சிறப்பினைச் சேர்க்கின்றது.தமிழ், கதிரவன், நிலவு, காவிரி, காற்று, பூக்கள், மழை முதலான இயற்கைப் பொருட்களே! எம் பாட்டுடைத் தலைவராகிய சிலம்பாரை வாழ்த்துங்கள்! என்று நூலாசிரியர் வேண்டுவதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. பாட்டுடைத் தலைவரின் முன்னோர் வாழ்க்கைத் தொடங்கி சிலம்பாரின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, ஆய்வு மற்றும் நூலாக்கப் பணிகள் என பாட்டுடைத் தலைவரின் வாழ்க்கைச் சுவடுகள் அனைத்தையும் இந்நூலில் பதிவு செய்துள்ள நூலாசிரியர் புதுவை யுகபாரதியின் திறம் பாராட்டத் தக்கது.
சிலம்பார் 60 நூலில் இயல்பான ஓட்டமும் தளர்நடைப் பயில்வுமாகக் கவிதைகள் அடுக்கப்பட்டுள்ள அழகு கற்போர் நெஞ்சைக் கவரும் என்பதில் ஐயமில்லை. சான்றாகப் பின்வரும் பாடலைக் காண்போம்,
குற்றம் கடிதல் குறையில்லை
குற்றம் காணல் குறையென்பார்
முற்றும் துறத்தல் முறையில்லை
முழுதாய் வாழ்தல் முறையென்பார்
அற்றம் காக்கும் அறிவென்பார்
அழிவைத் தடுக்கும் அறிவென்பார்
முற்றும் பிறர்க்காய் முகிழ்க்கின்ற
முல்லைச் சிரிப்புச் சிலம்பாரே!
கவிதைகளின் இனிமை, எளிமை, பொருட்செறிவுக்குக் கட்டியம் கூறும் மேற்காட்டிய பாடலைப் போன்ற பல பாடல்களை இந்நூலினுள் யாத்துத் தந்துள்ளார் புதுவை யுகபாரதி. இன்னும் பாரீர்,
தைபோல் நல்ல தைக்கொடுக்கும்
தாமிர பரணித் தமிழாறே
வைகை, பெண்ணை, பாலாறே
வற்றாப் பொன்னி வளஆறே
தைத்தை என்றா டிவந்திடுவீர்
தளரா துழைக்கும் சிலம்பாரை
ஐபோல் வெல்வெல் என்றூக்கி
ஆர்ப்ப ரித்து வாழ்த்திடுவீர்!
இப்பாடலில் தமிழகத்து வற்றாத ஜீவநதிகளெல்லாம் பாட்டுடைத் தலைவராம் சிலம்பாரை வாழ்த்த வேண்டும் என்ற வேணவாவை வெளிப்படுத்தும் நூலாசிரியர் நதிகளின் ஆர்ப்பரித்து ஓடும் ஓட்டத்தையும் துள்ளலையும் தம் கவிதை நடையில் கொண்டுவந்து படிக்கும் நம்மையும் இப்பொருளின் பால் ஈர்க்கின்றார். ‘தைத்தை என்றா டிவந்திடுவீர்’ என்ற அடியில் நதிகளை அழைக்கும் கவிஞரின் அழைப்போடு நம்மையும் ஈர்க்கும் சந்தநயம் அமைந்து சிறப்பது இக்கவிதைக்குத் தனியழகு. இப்படி நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றின் சிறப்பையும் சொல்லிக் கொண்டே போகலாம், அது விரிப்பின் பெருகும். விருந்துக்கு முன்னால் நின்று விருந்தின் சிறப்பை விரிவுரையாற்றிக் கொண்டிருந்தால் வயிறு நிiறுயுமா? நூலின் உள்ளே நுழைந்து மனதார உண்ணுங்கள். பாட்டுடைத் தலைவருக்கும் நூலாசிரியருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க! வளர்க!!
- முனைவர் நா.இளங்கோ