சமீப காலத்தில் மனித மனத்தைத் துணுக்குறச் செய்கிற, ஆகச்சிறந்த புனைவு சைலபதியின் ‘பெயல்’. 2017 டிசம்பரில் வெளியாகியிருக்கும் நாவல். 2015 டிசம்பரில், சென்னை கண்ட பெருவெள்ள பரிதவிப்பினூடான அவலக்குரலின் பாரித்தலாக விரிந்து சென்னையின் கோர முகத்தைத் துலக்கமாக்கியிருக்கிறது. மனிதன் வெறி பிடித்தவனாய் அலைந்து திரிந்து கால் வைக்கும் இடம் உருப்படாது. அந்த இடம் அவனையை திருப்பி அடிக்கும் என்பதுதான் கதையின் திரட்சி. நாவலுக்கேயுரிய உள்மடிப்புப் பிரதிகள் மூன்று இதில் இடம் பெற்றிருக்கின்றன.

sailapathy peyalபிரதி 1

இது, நவீன் - லாவண்யா - பிரமோத் என்னும் மூன்று இளைஞர்களைச் சுற்றி அவர்களின் உணர்வுத்தளத்தில் நின்று புனையப்பட்டிருக்கிறது. அதாவது, இப்பகுதி இயற்கையில் நேருகின்ற இடரை உணர்வுத்தளத்தில் இருந்து பார்த்திருக்கிற பார்வையாக அமைந்திருக்கிறது. நவீன் லாவண்யாவை விரும்புகிறான். லாவண்யா பிரமோத்தை விரும்புகிறாள். அவர்கள் மூவருக்குமான புனைவுவெளிகளில் மூவருமே பித்துப்பிடித்த மனநிலையில் இருக்கிறார்கள். தம்மை எப்படியாவது நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்கிற தன்முனைப்பில் இருக்கும் மூவருமே தம்மை மறந்த தேடுதலினூடான வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் அவர்களுக்குள்ளிருந்து படைப்பாளின் குரல் வெளிப்படுகிறது.

காதலர்களுக்கான உரையாடல் வெளியை சமுதாய வலைத்தளங்கள் எவ்வளவு எளிதாக்கிவிட்டிருக்கின்றது என்பதைச் சித்திரிக்கும் இப்பகுதி, வலைத்தளங்களிலாலேயே உருவாக்கப்படுகிற அல்லது வலைத்தளத்தை மட்டுமே சார்ந்திருக்கிற சமுதாயம், வலைத்தளம் செயலிழக்கும் போது என்னவிதமான உளவியல் நெடுக்கடிக்கு உள்ளாகும் என்பதை நுட்பமாகச் சித்திரித்திருக்கிறது இந்தப்பிரதி. பிகாரைச் சார்ந்த இளைஞனான பிரமோத்துக்கு லாவண்யா இணையத்தின் மூலமே அறிமுகம் ஆகிறாள். சில மாதங்கள் வெறும் லைக்குகளோடு மட்டுமே நகரும் நட்பின் புரிதல் பிரமோத்திடம் இருந்து வரும் வீடியோவால் அதிகரிக்கிறது. அந்த வீடியோ பிகாரில் தலித் பெண்ணொருவர் பொதுக்குளத்தில் தண்ணீர் அள்ளிக் குடித்ததற்காக அவளை நிருவாணமாக்கி அவமானப்படுத்தியமை பற்றியது. ஒருகை தண்ணீர் சுதந்திரமாக அள்ளிக்குடிக்க முடியாத தேசத்தில் - சென்னையில் - பெருவெள்ளம் வீணாய்ப் போகிறது என்பதைச் சொல்லி, தண்ணீரின் பொருட்டுச் சாதியைக் காப்பாற்றும் மனிதனை, தண்ணீரே பலிவாங்குவதாய் அமைத்திருக்கும் புனைவு கொண்டாடப்பட வேண்டியது.

பிரதி 2

இது, கார்த்திக் - ரேவதி என்றும் தம்பதிகளைச் சுற்றி அமைந்திருக்கிறது. அவர்களுக்கு இடையிலான புரிதல் எப்படிப்பட்டது என்பதை அவர்களின் படுக்கையறை விவரிப்புகள் உணர்த்தி விடுகின்றன. கார்த்திக் மழை விரும்பியாக இருக்கிறான். மழையில் நனைவது அவனுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் மழைநீரில் கரைந்து பித்துப்பிடித்தவனாகவே மாறிவிடுகிறான். மக்களில் அனைத்துத் தரப்பினருக்கும் நேசத்திற்குரியதாக இருக்கும் மழை, மக்களை மூர்க்கத்தனமாகத் தாக்கும் போது மக்கள் எப்படி உளவியல் ரீதியாகச் சிதைகிறார்கள் என்பது ரேவதியின் அவஸ்தைகள் வழி புனைவாகி இருக்கிறது.

மொத்த நாவலைப் பார்க்கிலும் இந்த இரண்டாம் பிரதி தனித்ததொரு அடர்த்தியான சிறுகதைத் தன்மையைப் பெற்றிருக்கிறது. பித்துநிலையில் இருக்கும் கார்த்திக்கை ஜோதிடர்களால், மாந்திரீகர்களால் விடுவிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் வீட்டில் வீட்டுவேலை பார்க்கும் பெண்ணின் சிறுமகன், தனது இயல்பான விளையாட்டின் வழி கார்த்திக்கை பித்துநிலையிலிருந்து வெளியில் எடுக்கிறான். அதுதான் இந்தப் பிரதியின் வீழ்செறி படிமமாகவும் இருக்கிறது.

பிரதி 3

இந்தப்பகுதி பழனி - கோபால் என்னும் பாத்திரங்களுக்கு இடையிலானதாக விரிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் சாமான்யர்களாக இருக்கும் இருவரில், ஆவியாக நின்று பழனியுடன் பேசும் கோபாலின் பேச்சு, கார்ப்பரேட்டுகளின் பொதுப்புத்தியையும், கார்ப்பரேட்டுகளால் சிதைக்கப்பட்டிருக்கிற அல்லது வளர்ச்சி என்று மக்களை நம்ப வைத்திருக்கின்ற நுகர்வுக் கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் முதலியனவற்றையும் கண்மூடித்தனமாகக் கவிழ்த்திப் போட்டிருக்கிறது. கோபால் இறந்த பிறகு அவனது வேலை பழனிக்கு வழங்கப்பட்டிருப்பதான உரையாடல், ஆவியாக இருக்கும் கோபாலுக்கும் பழனிக்கும் இடையை நடக்கும் இடத்து மனிதர்களை இயந்திரமாகப் பார்க்கும் கார்ப்பரேட்டுகளின் வியாபார மனம் துலக்கமாகி நிற்கிறது. பிரதி 2 மற்றும் பிரதி 3இல் விளிம்புநிலை மக்களுக்கு மாந்திரீகம் அல்லது ஜோதிடம் ஒருவிதமான எளிய மருத்துவமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. மனதில் இருக்கும் சிக்கல்கள், குழப்பங்களுக்கான தீர்வு நடவடிக்கைகளாக ஜோதிடத்தை நம்புகிற போக்கு புனைவுக்குள் நின்று அவர்களின் உளவியல் பாதிப்புகளை வெளிப்படுத்துகிறது. கடந்த காலங்களில் ஆளும்வர்க்கத்தாலும் அதிகாரவர்க்கத்தாலும் செய்த ஆக்கிரமிப்புகளை மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டதின் கொடுமையை இப்பொழுது மக்களே அனுபவிக்கிறார்கள் என்பதன் விவரிப்பாகவும் இப்பகுதி அமைந்திருக்கிறது.

மூன்று பிரதிக்குள்ளும் அடங்காத சில பக்கங்களும் நாவலில் உள்ளன. அதில் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பற்றிய சித்திரமும் யூனஸ் என்ற சமுதாய அக்கறையாளனைப் பற்றிய சித்திரமும் இடம் பெற்றிருக்கின்றன. வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தும் தற்போதைய முடிவுகளை முந்தைய முடிவுகளோடு ஒப்பிட்டும் இறுதியும் உறுதியும் செய்யப்பட்ட அறிக்கையைத் தான் ஊடகங்களுக்குத் தருகிறார்கள். என்றபோதும் ஆராய்ந்து தரப்படும் அந்த முடிவு பகடிக்கு உள்ளாக்கப்படுகிறது. வானிலை அறிவிப்பாளர் ஏறக்குறைய நகைச்சுவை நடிகரைப் பார்க்கும் தன்மையில் வைத்தே பார்க்கப்படுகிறார். அதேசமயம் ஜோதிடரின் ஆரூடம் தப்பிதமாகும் போதும் அரசியல்வாதியின் வாக்குறுதி தப்பாகவே இருந்தாலும் அது குறித்து மக்கள் பகடி செய்யாமையை கனமான கேள்வியாக நாவல் முன்வைத்திருக்கிறது. நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பார்த்து மக்கள் சந்தேகிக்காத வரை, அதை பகடிக்கு உள்ளாக்காத வரை சமுதாயச் சிக்கலிலிருந்து மக்கள் விடுபடவே முடியாது என்பதைச் சொல்லும் பகுதியும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

யூனஸ் பாத்திரம் அதீத சமுதாய அக்கறையாளனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய அந்த ஒற்றைப் பாத்திரம் மட்டுமே இராணுவம் செய்யக்கூடிய அமானுஷ்யமான வினைகளை ஆற்றுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. சாமானியர் ஒருவர் தனது தந்தை இறந்துபோன போது அடக்கம் செய்யமுடியாமல் தவிக்கிறார். உடல் உப்பி துர்வாடை ஆரம்பிக்கிறது. அப்போது, அடக்கம் செய்ய வழியே இல்லாத சூழல் நிலவியபோதும் அவருக்கு உதவ முன்வருகிறார் யூனஸ். படகியில் பிணத்தை ஏற்றிச் செல்கிறார்கள். இறந்து போனவருக்கு உறவினராக அவரது மகன் மட்டுமே உடன் செல்கிறார். அடக்கம் நடக்கும் இடத்தில் இறந்தபோனவரின் மகன் தன்னையறியாமலும் தகுந்த முறையில் சடங்கு செய்யமுடியாத விரக்தியிலும் ‘கோயிந்தா… கோயிந்தா…’ எனக் கத்துகிறார். அதைப் பார்க்கச் சகிக்காமல் அவரது துக்கத்தில் பங்கெடுக்கும் விதமாக, யூனுஸ் தம்முடைய சமயம்சார் நம்பிக்கையை விட்டுவிட்டு அவரும் ‘கோயிந்தா… கோயிந்தா…’ எனக் கத்துகிறார். இவ்விடத்தில் சக மனிதனின் உணர்வலைகளை இன்னொரு மனிதனுக்குக் கடத்திவிடும் நுட்பம் சார்ந்தும் அதைச் சித்திரித்த விதம் சார்ந்தும் பிரதி அழகியல் தன்மையை எய்தியிருக்கிறது

கதையின் நுவல்பொருள் ஈரம் உலராப் புதியது என்றாலும், நடை 1980களின் வாரிப்பாக அமைந்திருக்கிறது. நாவலில் பரவலாக விரவிக்கிடக்கும் வெற்றுச் சொற்களைத் தவிர்த்திருந்தால் கதைக்கு இன்னும் கூடுதல் செறிவு கிட்டியிருக்கும். சென்னையின் முக்கிய இடங்கள், ஏரிகளின் பெயர்கள், நீர் கடந்து போகும் வழிகள் ஆகியன நிறையச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் புரிந்துகொள்வது சென்னைவாசிகளுக்கு அல்லது சென்னையைப் பற்றி அதிகமாகத் தெரிந்தவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் சென்னையின் சிறு, பெரு ஏரியாக்கள் பற்றிய அறிதல் இல்லாதோருக்கு அது சிரமம். ஆக, சென்னையைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் கதை நிகழும் இடத்தைப் புரிந்துகொள்ளும் விதமாக உடைந்த ஏரிகளின் வெள்ளம், சென்னைக்குள் அடங்கிக் கிடக்கும் சிறுநகரங்களை, வசிப்பிடங்களைச் சுற்றி வழிந்து ஓடிய வழித்தடம் குறித்த வரைபடம் இணைக்கப்பட்டிருந்தால் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.

- ஞா.குருசாமி

Pin It