மகாபாரதம் என்ற கதையைக் கேட்பதும், படிப்பதும் என்றென்றும் சுவாரஸ்யமானவை. நிறைய கிளைக்கதைகளை கொண்டவை. மகாபாரதம் நடந்ததாக சொல்லப்படும் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று நடந்ததை புனைவாக விவரிக்கிறது இந்த நாவல். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் சகோதரர்களின் பிள்ளைகளிடையே நடக்கும் போர் தான் இதன் மையம். வழக்கறிஞர்களைக் கேட்டால் மகாபாரதம் ஒரு சிவில் கேஸ் என்று முடித்துக் கொள்வார்கள்.

upa pandavamபஞ்சபாண்டவர்கள் என்பவர்கள் பஞ்சத்துலே அடிபட்டு காடு மேடு எல்லாம் சுத்தி, கடைசியில் ஜெயித்தார்களாம். பஞ்சத்துலே அடிபட்டதனால பஞ்சபாண்டவர்கள் என்றும் நினைத்ததுண்டது.

பாஞ்சாலியின் மனதில் கர்ணன் இருந்தான் என்பதும், கிருஷ்ணன் மனதில் அர்ஜுனனை விட சகுனியே அதிகம் இருந்தான் என்பதும் வியப்பிற்குரியது.

நல்லவர்களாக பாண்டவர்கள், த்ரௌபதி, கிருஷ்ணன், பீஷ்மர், துரோணாச்சாரியார், கர்ணன், விதுரன், தீயவர்களாக துரியோதனன், துச்சாதனன், சகுனி என்றும் சொல்லப்பட்டு வந்தது. அறவே வெறுக்கும் அளவிற்கு இல்லை என்பதும் நாவலை வாசிக்கும் போது தெரிகிறது.

தர்மனுக்கு 16 வயது இருக்கும்போது தாய் குந்தியுடன் அஸ்தினாபுரத்திற்கு வருகிறார்கள். குருகுலம் 13 ஆண்டுகள். அரக்கு மாளிகையில் 1 வருடம். அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்து 6 மாதம் காட்டில் வாழ்கிறார்கள். பாஞ்சால தேசத்தில் 1 வருடம். அஸ்தினாபுரத்தில் 5 வருடம். இந்திரப்பிரசத்தில் 23 ஆண்டுகள். வனவாசம் 12 ஆண்டுகள். விராட நகரில் 1 வருடம். குருசேத்திர போருக்குப்பின் 36 ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்கள்.

போர் நடக்கும் போது ஏற்படும் உயிர்ப் பலிகளை விவரிக்கும் ஆசிரியர் போரை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அப்பொழுது எனக்கு போபாலனின் கவிதை ஞாபகம் வந்தது.

மகாபாரதம் இதிகாசமானது
பகவத் கீதை வேதமானது
கர்ணன் அர்ஜுனன் அனைவரும் கடவுள் ஆனார்கள்.
எல்லாம் சரி.
கூட்டம் கூட்டமாக வெட்டிக்கொண்டும்
குத்திக் கொண்டும் செத்துப்போன
சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?

மகாபாரதம் என்ற கதையை சுருக்கமாகவேனும் தெரிந்து கொண்டு உபபாண்டவத்தைப் படிக்கிறவர்களுக்கு ஓரளவு சுலபமாக இருக்கும். மகாபாரத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை என்றோ, அல்லது முற்றிலும் பொய் என்றோ சொல்ல முடியாது என்றே நினைக்கிறன்.

கதை ஒரே கோட்டில் நகராமல், முன் பின்னாவும், பின் முன்னாகவும் நகர்கிறது. திடீரென்று எதோடு எதைத் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்வதென்று புரியவில்லை.

சில நேரங்களில் சற்றே தலை சுற்றினாலும், எஸ்.ராமகிருஷ்ணனின் முக்கியமான நாவல்களில் இதுவும் ஒன்று. மகாபாரதத்தின் மீதான புனைவு என்பதால் மறு வாசிப்புக்கும், பரிசீலனைக்கும் உள்ளாக வேண்டிய நாவல் உப பாண்டவம்.

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It