எழுத்து எழுத்தாளனை பல வழிகளில் தன்னை எழுதிப் பார்க்கச் சொல்லி அழைப்பு விடுத்துக் கொண்டேயிருக்கிறது. காண்பவர்களை கண்ணீர் விடச்செய்ய தொலைக்காட்சி நாடகங்களே போதுமானதாய் இருக்கிறது. காண்பவர்களை அட! என்று மூக்கின் மீது விரல் வைத்துப் பார்க்க மொழிமாற்றுப் படங்கள் போதுமானதாய் இருக்கிறது. தமிழில் திரைப்படங்களிலும் சரி, கதை வடிவங்களிலும் சரி ஒரு போதாமை இருந்து கொண்டே இருப்பது தான் கண்கூடு. அந்தப் போதாமை தான் எழுத்தாளர்களை இயங்கச் செய்யும் ஊக்கியாயாக கால காலமாக நகர்த்திக் கொண்டே வருகிறது.

madhavan 400மாதவன் கதைகளில் எனக்கு பிடித்த விசயம் அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கதைத் தன்மைகள் மற்றும் கதைக் களன்கள். அவைகள் என்றுமே எழுத்தாளனுக்கு சவாலான விசயங்கள். முன்பாக சுஜாதா ஒருவர் மட்டுமே இப்படி சோதனை முயற்சிகளாக பல களன்களில் எழுதிப்பார்த்து வெற்றி பெற்றிருக்கிறார். மாதவன் தன் முதல் தொகுப்பிலேயே முயற்சி எடுத்திருக்கிறார்.

யாதார்த்தக் கதைகளை தொடர்ந்து எழுதும் ஒரு எழுத்தாளன் இலக்கிய உலகில் பாராட்டைப் பெற்றுக் கொண்டே இருப்பான். இலக்கியக் கதைகள் ஒரு வட்டத்தோடு முடிவுக்கு வந்து விடுவதை இன்று அனேக எழுத்தாளர்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள். அந்த வட்டம் ஒரு போதாமையை இன்றைய புதிய எழுத்தாளர்களுக்கு கொடுத்து விடுகிறது கூடிய சீக்கிரமே! தன்னைப் பாராட்ட வேறு யாரேனும் பாக்கி இருக்கிறார்களா? என்ற தேடலில் எழுத்தாளன் நுழைந்து விடுகிறான். இது நல்ல விசயமும் கூட! ஒரே ஒரு கிணற்றில் கிடந்து கத்திக் கொண்டிருப்பதை தவளைகள் வேண்டுமானால் வழக்கமாக்கி வைத்திருக்கலாம்.

சுஜாதாவின் இடத்தை இன்று நிரப்ப தமிழில் ஒரு எழுத்தாளன் இல்லை.

மாதவனின் பல கதைகள் எனக்கு சுஜாதாவை மறு வாசிப்பு செய்கிறோமோ? என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது உண்மைதான். ஆனாலும் வேறு சில கதைகளில் அவரது உண்மையான எழுத்து தலை தூக்கி விடுகிறது. அவைகள் தான் என்னை ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. உணமையாக தனக்கு இப்போதைக்கு என்ன எழுத வருகிறது? என்பதை சுலபமாக கண்டு கொள்ளும் எழுத்தாளனே தமிழில் நிலைபெற்று விடுகிறான். அந்த உண்மை ஒருபுறமிருக்க தன்னால் முடியாதது எதுவும் இருக்க கூடாது என்று தன் இரு கால்களை அகல வைக்கும் எழுத்தாளராக மாதவன் இருக்கிறார்.

மாதவன் வாசகனுக்கு புதியதாக கண்டு பிடித்து புதிய விசயங்கள் எதையும் சொல்லி விடவேயில்லை. எல்லாமும் ஏற்கனவே சொல்லப்பட்டவைகள் தான். சொல்லும் முறைமையில் அவர் நிதானத்தை கடைப்பிடிக்கிறார். எழுதும் வரிகளில் புதிய விசயங்கள் தட்டுப்படுவது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. முகநூலில் உள்பெட்டி விவகாரங்களை காதலாய்ச் சொல்லும் அடுத்த கணமே அவரால் வந்தியத்தேவனைப் பற்றியும், பேய்களைப் பற்றியும், அமானுஷ்ய சம்பவங்களைப் பற்றியும் பேச முடிகிறது. எழுத்தின் மீதான காதல் அவரை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்! அவரால் அவரே ஆச்சரியப்படும் கதைகளை பின் நாட்களில் கொடுக்க இயலும். எழுத்து ஒரு எழுத்தாளனை இயங்க வைத்துக் கொண்டே தான் இருக்கும். கோபித்துக் கொண்டு சென்றாலும் காதலி காதலி தான். காதலியை அவ்வப்போது வெறுத்தாலும் காதல் சாவதே இல்லை மனித மனங்களில்!

சரி இப்படியான கதைகள் யாரால் வாசிக்கப்படுகின்றன?

வாசிப்பு பழக்கம் உள்ளோர் அனைவராலும் வாசிக்க இயலுமாறு எழுதப்படும் கதைகளே அனைவராலும் சில காலமேனும் பேசப்படுகின்றன. முன்பாக வாசகனை கதைக்குள் கூட்டி வரும் யுக்தி மாதவனிடம் இருக்கிறது. இது முதல் சிறுகதை தொகுதியாக இருக்கலாம். எழுதப்பட்ட கதைகள் அனைத்தும் இணைய இதழ்களில் எழுதப்பட்டவையாக இருக்கலாம். அதுவெல்லாம் ஒரு பிரச்ச்னைகளே அல்ல! புத்தகம் என்கிற வடிவத்தில் ஒரு எழுத்தாளன் வெளிப்படுகையில் தான் அவனுக்கான இடம் ஒன்று தமிழில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

சற்று யோசித்துப் பாருங்கள்! தமிழில் ஒரே ஒரு புத்தகம் போட்டு விட்டு காணாமல் போன எழுத்தாளனைப் பற்றி காலம் முழுக்க.. இனி என் பையன் எழுத வந்தால் கூட அவனுக்கும் அந்த ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்லிச் சொல்லி திணிக்கும் அறிவாளிகள் நிரம்பிய இலக்கிய உலகம் இது! அது உண்மைதான்.

முன்பாகவே சொல்லி விடுகிறேன். மாதவன் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியமல்ல! கமர்சியல் எழுத்துக்கு கிட்டே வரும் எழுத்துக்கள் என்றே கூறுகிறேன். அவரது ஆர்வம் எனக்கு பிரமிக்கச் செய்கிறது. இந்த ஆர்வம் அவரை சிறுகதை வடிவத்தில் பலதையும் செய்து பார்க்க தூண்டிக் கொண்டே இருக்கும். வாசிப்பு அவருக்கு இனி மேல் தான் தேவை! தமிழில் வாசிக்க பலதும் உள்ளன. நாம் எதை தேர்ந்தெடுத்து எதுவழியாகப் பயணிக்கிறோம் என்பதில் இருக்கிறது எழுத்தாளனின் சாமார்த்தியம்!

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமேதான். அதில் பிரிவினைகளை உருவாக்கியது என் முந்தைய விமர்சகர்கள் தான். அவர்கள் கூறும் கருத்துகள் அவ்வப்போதைய மனநிலைக்கு தக்கனவைகள் தான்.

வாழ்க்கை மனிதர்களை பல விதங்களில் வாழ்ந்து பார்க்க அழைத்துக் கொண்டே தான் இருக்கும்! வாழ்க்கைக்கான பணி அது தான்! நீ என்ன செய்யப்போகிறாய்? என்பதாய் இருக்கிறது எழுத்தாளனுக்கான கேள்வி. மாதவன் கதைகள் பரந்து பட்ட வாசிப்பாளனுக்குண்டான கதைகள்!

இந்தக் கதைகளில் என்ன இருக்கிறது? என்று கேள்விகளை வேண்டுமானால் சும்மாவுக்காக வைத்துக் கொண்டே பலரும் செல்லலாம்! ஆனால் இந்தக் கதைகளில் வாசிப்புத்தன்மை மட்டும் இருக்கிறது. அது போதும் ஒரு வாசிப்பாளனுக்கு!

- வா.மு.கோமு

***

சிமோனிலா கிரஸ்த்ரா

மாதவன் ஶ்ரீரங்கம்

விலை 120

வெளியீடு: பார்வதி படைப்பகம்

Pin It