ஈரோடு கலைமகள் லாட்ஜில் 58ம் எண் அறையில் தயாரிப்பாளர் தண்டம் கட்டில் மெத்தை மீது பத்மாசன நிலையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். இதுவே தண்டத்திற்கு எல்லா இடங்களிலும் பழக்கமாகி விட்டது.

 தண்டத்தின் சி.ஈ ஆர்ட்ஸ் தயாரிப்பில் இதுவரை ஐந்து படங்கள் வெளிவந்து அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் தான். அவைகள் எல்லாமே ஊரின் பெயர்களை தலைப்பாகக் கொண்டு வெளிவந்த படங்களே! முதல்படம் பெருந்துறை. பின்னர்தான் வெள்ளோடு, கோபி, காங்கேயம், சத்தியமங்கலம் என்று அதையே செண்டிமெண்டாக தொடர்ந்து வைத்துக் கொண்டார். இவை எல்லாமே புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்த குறைந்த பட்ஜெட் படங்கள்.

 முதல் இரண்டு படங்களின் இயக்குனராக சித்தோடு முத்துராமன் பணியாற்றினார். மூன்றாவது படத்துக்கு டைட்டிலாக ஊர் பெயர் வேண்டாம் சார், கட்டிளங்காளை, முத்துவின் சொத்து, சகலகலா சம்மந்தி இப்படி இதுல ஏதாவது ஒன்னு வச்சிக்கலாங்க சார், என்று தயாரிப்பாளர் தண்டத்திடம் சொல்லப்போக அவரோ கொந்தளித்து விட்டார்.

 “நீ வீட்டுக்குப் போய் சீரியல் பார்த்துட்டு இரு. பிடிக்கலையா? நீயாட உன் தலையாட, சொல்வதெல்லாம் மடமை, நீ பெரியாளா? நான் பெரியாளா? பார்த்துட்டு இரு” என்று அனுப்பி விட்டார். தண்டத்தின் வெற்றி கிரிக்கெட்டில் மகேந்திரசிங் டோனி அமைக்கும் வியூகங்களுக்கு ஒப்பானது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்வார்கள். இறுதியில் வெற்றி என்ற குறியுடன் தான் செயல்படுவார்.

 எப்படியேனும் தண்டத்தின் காலில் விழுந்து மாப்பு வாங்கிக் கொண்டு கதை டிஸ்கசனில் கலந்து கொள்ள “கோபிச்செட்டிபாளையம்” என்ற புதிய டைட்டிலோடு கலைமகள் லாட்ஜூக்கு சித்தோடு முத்துராமன் 12பி பேருந்து பிடித்து வந்திருந்தார்.

 தவிர சென்னையிலிருந்து ஆதிநாராயணனும், சங்கரனும், பாலகிருஷ்ணனும் கூட வந்து விட்டார்கள். இவர்களை சினிமா பார்ட்டிகள் என்று தன் மோப்ப சக்தியால் உணர்ந்து கொண்ட லாட்ஜ் பையன் சுந்தரமூர்த்தி தன் சினிமா நுழைவுக் கனவு சீக்கிரமே வெற்றியடைந்து விடுமோ என்ற நினைப்பில் அடிக்கடி இவர்களின் அறைக்குள் நுழைந்து “எதுனா வேணுமா சார்?” என்று பவ்யமாய் கேட்டான்.

 கூடவே தன் தலையில் இருந்த தொப்பியை அடிக்கடி கைகளில் எடுத்து முகம் குனிந்து தண்டத்திற்கு மரியாதை செய்தான் சுந்தரமூர்த்தி.. “ஏசி அறை குளுகுளுப்பினிலே.. பெரியார் மண்ணிலே.. கலைமகளின் மடியினிலே.. ஐய்யா தண்டத்தின் அருகினிலே.. கொங்குத்தமிழ் காற்று வீசுதடி.. அது திக்கெல்லாம் வீசி தமிழ்ப் புகழ் பறப்புமடி!” அவன் மனதில் திரைப்பட பாடலாசிரியர் கனவு வேறு.

 “அதா மூலையில இருக்கிற சில்வர் குண்டானை எடுத்துக்கப்பா.. இந்தா 100 ரூவா, குடுகுடுன்னு ஒடி கீழே பஸ்ஸ்டாண்டு பக்கத்துல தள்ளுவண்டிக் கடையில கம்மங்கூலு வாங்கிக்க. எல்லாருக்கும் மூனு மூனு டம்ளர் வர்ற மாதிரி. மோர் மிளகா வத்தலு, மாங்காத்துண்டு கடிச்சுக்க எடுத்துக்க. என்ன புரிஞ்சுதா! போனமா வந்தமான்னு ஓடிட்டு ஒடியா” என்று தண்டம் சொல்ல சுந்தரமூர்த்தி போசியை தூக்கிக் கொண்டு படியிறங்கி ஓடினான்.

 “கம்மங்கூலு குடிச்சுட்டு கதை டிஸ்கசனா? அதிசயமா இருக்கே! எந்த ஊர்லயும் கண்டதே இல்லைப்பா!” என்றார் பாலகிருஷ்ணன்.

 “ஈரோட்டுல கண்டுக்க தம்பி. இப்படித்தான் குமார்னு ஒரு டைரக்டர் தம்பி சென்னயில பால்குரோம் ஹோட்டல்ல 13ம் நெம்பர் ரூம்ல உட்கார்ந்து தான் கதையை டெவலப் பண்ணனும்னு சொன்னான். அந்த ரூம் தான் ராசியாம். நீயே உட்கார்ந்து பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன்.” என்று தண்டம் சொன்னதும் அனைவருமே கப்சிப் ஆகிவிட்டார்கள்.

 “ஏ செண்டர்ல 30 நாள் ஓடற படத்துக்கு எத்தியோப்பியாவுல உட்கார்ந்து டிஸ்கசன் பண்ண முடியுமா? சரி நாம ஆரம்பிப்போம். நல்ல காதல் சப்ஜக்ட் வச்சிருக்கிறவரு மொதல்ல சொல்லுங்க பார்க்கலாம்.” என்றார் தண்டம். சித்தோடு முத்துராமன் தன் வலது கையை உயர்த்திக் காட்டி விட்டு ஆரம்பித்தார்.

 “ஸ்கிரீன் ஓப்பன் பண்ண உடனேயே நாயகனும் நாயகியும் ரயில்வே ட்ராக்குல ஒருத்தர் கையை ஒருத்தர் இறுக்கிப் பிடிச்சுட்டு பயத்தோட ஓடி வர்றாங்க. அவங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நைட்டோட நைட்டா ஓடி வர்றாங்க. அவங்க பின்னாடி கத்தி கப்படாக்களோட உள்ளூர் ஜனங்க துரத்துறாங்க. ஓடறாங்க.. துரத்துறாங்க! ரசிகர்களை சீட்டு நுனிக்கு வரவைக்கிற மாதிரி படம் போட்ட பத்தாவது நிமிசத்துல தலைகள் மண்ணுல உருளுது. ரத்தம்! ஆமா, காதலர்களை வெட்டிடறாங்க! உள்ளூர்ல அவங்க காதலிச்சப்ப பாடின டூயட் சாங் ஒன்னு திரையில ஒலிக்குது. ரசிகர்கள் உச்சு கொட்டுவாங்க”

 “ரசிகர்கள் உச்சு கொட்டுறது இருக்கட்டும். கதை சுருக்கத்தை சொல்லு மேன்”

 “சாரி சார். அதுக்குத்தான் வர்றேன், அவுங்க ரெண்டுபேரும் பேய்களா மாறி ஊர் மக்களை பழி வாங்குறாங்க! ஊரே சாவுது!”

 “ஏம்பா காதல் கதை சொல்றேனுட்டு பேய்க்கதை சொல்றே?”

 “அப்போ அது வேண்டாம் சார். வேற சொல்றேன். ஒன்பது பாட்டு முதல்ல ரெடி பண்றோம். அதுல ரெண்டுபாட்டு மூனுதடவை படத்துல வர்ற மாதிரி பண்ணிடறோம். மொத்தம் 13 பாட்டு கணக்காயிடும். கதாநாயகி பின்னாடி நாய் போல இண்ட்ரவெல் வரைக்கும் நாயகன் சுத்துறான். நாயகி ஐ லவ் யூ சொல்றப்ப இடைவேளை. பிறகு நாயகியை ஏக்ஸிடெண்டுல கொன்னுடறோம். நாயகன் தாடியை நீவிட்டு நாலு பாட்டு பாடட்டும். கடைசில நாயகியின் கல்லறை மேல நாயகன் படுத்துக் கிடக்கான். தூங்கிட்டானா? போயிட்டானா? கண்டுபிடிக்கறவ‌ங்களுக்கு தங்கத் தாலி பரிசுன்னு பப்ளிசிட்டி பண்றோம். இது போக துப்பறியும் கதை ஒன்னுகூட இருக்குங்க சார்”

 “அதையும் சொல்லி முடிச்சுடு.. அது மட்டும் ஏன் பாக்கி”

 “படம் போட்டதுமே ரெண்டு கொலை விழுது சார்”

 “அட நிறுத்துப்பா உன் கதையை..”

 “அப்ப கொலை விழலை மிரட்டல் போன் மட்டும் வருதுங்”

 “உன் வாயை ஊசிநூல் போட்டு தச்சுடணும். இதென்ன தம்பி கம்மங்கூலோட வந்துடுச்சு. தம்பி எல்லாருக்கும் ஊத்திக் கொடுப்பா. வயித்துக்கு துளி ஆகாரம் போனாத்தான் மூளை சரியா இயங்கும்” என்றார் தண்டம்.

 டைரக்டர் பாலகிருஷ்ணன் தொண்டையை செருமிக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து தண்டத்தின் முகம் பார்த்து வசியம் செய்பவரைப் போல தன் கதையை ஆரம்பித்தார்.

 “முதல் ஷாட்ல சேரப் பேரரசின் அரண்மனையை லாங்சாட்டுல இருந்து காட்டீட்டே வர்றோம். அப்படியே உள்ளார போனோம்னா இளவரசன் ராஜேந்திர சேரன் தன்னோட சயன அறையில இருக்கார். கையில் வேலேந்திய வீரன் ஒருவன் ஓலையை எடுத்துட்டு ஓடிவந்து, “அரசே! பாண்டிய நாட்டிலிருந்து ஓலை” என்று கொடுக்கிறான். இளவரசன் அதை வாசித்துவிட்டு புன்னகைக்கிறார்.

 “பேஷ் பேஷ்.. பாண்டியவேந்தன் வரும் பெளர்ணமி அன்று நம் நாட்டின்மீது போர் தொடுக்கிறானாம். நம் சேரப் பேரரசின் போர்த் தந்திரங்கள் அறியாத் சிறுபயல்”

 “என்ன பாலகிருஷ்ணன் தம்பி.. கர்ணன், அரசகட்டளை, அரசிளங்குமரி ரேஞ்சுக்கு ராசாராணி கதை சொல்றீங்க. நம்முளுது லோ பட்ஜட் படம்ப்பா! என்னாச்சு எல்லோருக்கும்? ஆதிநாராயணன் சார் நீங்களாச்சும் உருப்படியா ஒன்னு சொல்லுங்க பார்க்கலாம்.” என்றார் தண்டம்.

 “கீச்சுக் கீச்சுன்னு குருவிகள் சப்தத்தோட ஒரு அழகான கிராமம். உள்ளூர் கோவில் கோபுரத்தைக் காட்டி அப்படியே கேமராவோட ட்ராவல் பண்ணி ஊர் குளத்தைக் காட்டுறோம். என்ன காட்டுறோம்? ஊர் குளத்தைக் காட்டுறோம். அங்கதான் நம் நாயகி தோழிகளோட குளிச்சுட்டு இருக்கா! என்ன பண்ணுறா? குளிச்சுட்டு இருக்கா! இப்ப கேமரா ஊருக்கு வர்ற மினிபஸ்சை காட்டுது. அதுல இருந்து பொட்டி பேக்கோட நம்ம நாயகன் இறங்குறார். யார் இறங்குறா? நம்ம நாயகன். ஆடு மேச்சுட்டு இருக்கிற ரெண்டு பசங்க ஓடிவந்து, யார் நீங்க?ன்னு கேட்கிறாங்க”

 “மிச்சம் நான் சொல்றேன். நாந்தான் ஊருக்கு வந்த புது வாத்தியாருன்னு சொல்றாரு. அப்படியே நடந்து வந்து குளத்துல குளிக்கிற நாயகியைப் பாக்குறாரு”

 “எப்படி சார் என் கதையை வரி விடாம சொல்றீங்க.. நேத்து நைட் தான் சார் கதையை டெவலப் செஞ்சேன்” என்றார் ஆதிநாராயணன்.

 “ஸ்டேசனுக்கு போனீங்கன்னா அரைமணி நேரத்துல சென்னைக்கு இண்டர்சிட்டி மெய்ல் இருக்கும். எல்லா செண்டர்லயும் தியேட்டர்களை இடிச்சுட்டு காம்ப்ளெக்ஸ் கட்டீட்டு இருக்காங்க. இருக்கிற ஒரு செண்டர் ஏ செண்டர் மட்டும் தான். நாலுகாசு நான் சாவுறதுக்குள்ள பார்க்கணும்”

 “சரிங்க சார், அப்ப நம்ம படத்துல நாயகிக்கு அம்மை போட்டுடுது. அவளோட வளர்ப்பு நாய் பூச்சட்டி தூக்கி தீ மிதிக்குது”

 “சார் வேண்டாங்க! சங்கரன் சார் நீங்க பலமான யோசனையில இருக்கீங்க போல! நச்சுன்னு ஒரு கதை சொல்லுங்க பார்க்கலாம்”

 “என்னோட கதை பூமியிலயே நடக்கலை சார். வெளிகிரகத்துல வச்சிருக்கேன். எல்லாமே மிசினுக தான். இதுக்காக வெளிநாட்டுல இருந்து 400 டெக்னீசியன்கள இறக்குறோம்”

 “சார் என்னை குழியில இறக்குறதுன்னே முடிவு பண்ணீட்டீங்ளா? தம்பி சுந்தரமூர்த்தி, நீ என்னமோ அப்பலையா புடிச்சு சொல்றதுக்கு தவிச்சுட்டே இருக்கியே! நீயுந்தான் ஒன்னு சொல்லேன். டம்ளர்களையெல்லாம் கழுவி வச்சுட்டியா”

 “நான் சொல்றது இங்கிலீசுப் படம் கணக்கா இருக்குமுங்க. செலவுங்கறதே கெடயாதுங் ஐயா! பெருந்துறையில இருந்து ஈமுகோழி ஒன்னு தப்பிச்சு சென்னிமலை கா‌ட்டுக்குள்ள ஓடிப் போயிருதுங்க. அங்கங்க ஓரம்பாரத்துல ரெண்டுமூனு லேடீஸ்களை மண்டைக் கொத்தா கொத்தி கொன்னுடுதுங்க. ஒரு துப்பாக்கி டீமை அரசாங்கம் காட்டுக்குள்ளார அனுப்புதுங்க. மியூசிக் டைரக்டருக்கு ஏக வேலை இருக்குதுங்க இந்தப் படத்துல. இருந்தும் அதை கொல்ல முடியறதில்ல! ஆனா டீம்ல ஒவ்வொரு ஆளா காலி பண்ணிட்டே இருக்குது!”

 “கடைசியா பாம் வச்சு கொன்னுபோடலாங்கிறியா தம்பி?”

 “அதுக்கெதுக்குங்க பாமு வெட்டிச் செலவு. நம்ம சரத்குமாரையோ, பாக்கியராஜையோ காட்டுக்கு அனுப்பி ஈமு ஈமுன்னு கூப்பிடச் சொன்னம்னா பொட்டாட்ட அவங்க பின்னாடி கோழி வந்துடும் சார்”

 “நீ மூளைக்காரனப்பா! நல்லா வருவே! ஆனா தமிழ்ல சோதனை முயற்சியெல்லாம் பண்ண முடியாது. எனக்கு வேற நேரமே செரியில்ல” என்ற தண்டம் காலை நீட்டி படுக்கையில் சாய்ந்தார்.

 வாசக உள்ளங்களே! உங்களிடம் நல்ல காதல் கதை இருந்தால் எடுத்துக் கொண்டு உடனே ஈரோடு கலைமகள் லாட்ஜ் செல்லுங்கள். அறை எண் 58ல் நுழைந்ததும்… “வாங்க சொப்ன ஸ்கலிதமா? வீக்கமா? ஆண்மை குறைவா? என்று ஏதேனும் மருத்துவர் உங்களை வரவேற்றால் அதற்கு என்னை குற்றம் சொல்லாதீர்கள்!

- வா.மு.கோமு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It