`மீண்டும் கடவுள் அவதாரம் எடுத்துள்ளார். அவர் மோடி என்ற பெயரில் இந்தியாவைக் காப்பாற்றப் போகிறார்.` என்கிறார்கள் மோடியின் பக்தர்கள். `ஆமாம்....ஆமாம்` என்று ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள். `ஹர...ஹர` என்று மோடி பக்தர்கள் பஜனை பாடுகிறார்கள்.

kathiravan book 300`சிவ பகவானை அவமதிக்கும் இந்த ஹர ஹர கோஷங்களை உடனே கைவிட வேண்டும்` என்று துவாரகா பீட சங்கராச்சாரி ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் புகார் கூறுகிறார். ஆக மோடியை இயக்கும் விசை ஆர்.எஸ்.எஸ் தான் என்பது சங்கராச்சாரிக்கு நன்றாகவே தெரியும். ஆனால், மோடியை பல்லக்கில் கொண்டு தமிழ்நாட்டில் தொகுதி தொகுதியாக வலம் வருவதற்கு முடிவெடுத்துவிட்டார்கள் நமது தமிழக கூட்டணிக் கட்சியினர்ககள். `இதோ வளர்ச்சிக்கான தலைவர் வருகிறார், இந்தியாவை வல்லரசாக்கப் போகிறார்.` என்று கட்டியம் கூறுகிறார்கள்.

மத நம்பிக்கை என்ற எல்லையைத் தாண்டி மதவெறியூட்டப்படாத மண், தமிழ்நாடு. மதங்களைக் கடந்த சகோதரத்துவம் அரசியல் சமூக உறவுகளால் பேணிக் காக்கப்படும் மண் தமிழ்நாடு. வடமாநிலங்களைப் போல் அல்லாமல் இந்த மண்ணில் மனிதத்தை விதைப்பதற்கு நடத்தப்பட்ட சமூக அரசியல் போராட்டக் களங்கள் அநேகம். சுருக்கமாக இது `பெரியார் மண்`.

பாபர் மசூதியை பா.ஜ.கவினரும் ஆர்.எஸ்.எஸ்காரர்களும் நயவஞ்சகமாக இடித்துத் தள்ளிவிட்டு பல்வேறு மாநிலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக கலவரங்களையும் நடத்தியபோது, தமிழ்நாடு மட்டும் அமைதியைக் காத்தி நின்றது ஏன் தெரியுமா?

பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் பரிந்துரை அமுலானவுடன் அதை எதிர்த்து கலவரங்களும் வன்முறைகளும் தீக்குளித்து ஆடியபோது இந்தத் தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு மாறாக மண்டல் பரிந்துரைக்கு ஆதரவான இயக்கங்கள் நடந்ததே அது ஏன்?

வடமாநிலங்களில் ஏதோ ஒரு ஊரில் கொளுத்திப் போடும் கலவரம் பெருந்தீயாகி ஊர்தோறும் பரவும்போது, தமிழ்நாட்டில் மட்டும் அப்படி நிகழாமல் அந்தப் பகுதியோடு அடங்கிப் போய்விடுகிறதே ஏன்?

மதவெறியை புறந்தள்ளிவிட்டு தீண்டாமைக்கும், சுற்றுச்சூழல் கேடுகளுக்கும், மனித உரிமைகளுக்கும், பெண்கள் உரிமைக்கும், சமூக நீதிக்கும், இன விடுதலைக்கும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் எதிர்ப்பு இயக்கங்கள், பல்வேறு குழுக்கள் இயங்கும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறதே அது ஏன்?

இதுபோல் இன்னும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடைதேடினால் அப்போது தெரியும் இந்தத் தமிழ் மண்ணின் தனித்துவம். இவை எப்படி சாத்தியமாயின? பார்ப்பனியத்திற்கு எதிராக நடந்த இயக்கங்கள், போராட்டங்கள், விழிப்புணர்வுகள்தான் இதற்கு அடித்தளம்.

பார்ப்பனியம் தனது உருவத்தை அவ்வப்போது மாற்றி வருகிறது. அப்படித்தான் இந்துத்துவம் என்று பெயர் சூட்டினார்கள். அதற்கான அர்த்தம் கலாச்சாரம் என்றல்ல தேசியம் என்று பேசிப் பார்த்தார்கள். அது விலைபோகவில்லை. இப்போது மற்றொரு சரக்கு சந்தைக்கு வந்திருக்கிறது. பார்ப்பனியம் இந்துத்துவமாகி இப்போது மோடித்துவமாக வந்து நிற்கிறது. மோடித்துவம் கவர்ச்சிகரமான பெட்டிக்குள் வளர்ச்சி என்ற முத்திரையோடு கூவிக் கூவி விற்கப்படுகிறது. சரக்கை சந்தைக்கு கொண்டு வந்து போனியாக்க முடியாத பழைய பார்ப்பன முகங்கள் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பதுங்கிக் கொண்டுவிட்டன. சுப்பிரமணிய சாமி, துக்ளக் சோ, காஞ்சிபுரம் சங்கரன், எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி, ராமகோபாலன், `பிராமண சங்க` நாராயணன் இத்தியாதி இத்தியாதி எல்லாம் ஒதுங்கிக் கொண்டு தமிழருவி, விஜயகாந்த், அன்புமணி, வை.கோ. உள்ளிட்டவர்களிடம் சந்தை விற்பனையை ஒப்படைத்து விட்டார்கள். இந்தப் பார்ப்பனிய மதவெறி சக்திகள் சொல்வது வேறு, செய்வது வேறு என்பதை வரலாறு நிரூபிக்கிறது. `கரசேவைக்குத்தான் போகிறோம், இது சத்தியம்` என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டு, மசூதியையே இடித்தவர்கள் அல்லவா? மசூதியை இடித்தவுடன் மக்கள் எதிர்ப்பிலிருந்து தப்பிக்க, இடித்தது தவறுதான் என்று சமாதானம் கூறிவிட்டு, பிறகு நியாயப்படுத்தியது இவர்கள்தானே?

குஜராத்தில் 2000 இசுலாமியர்களை படுகொலை செய்த மோடி ஆட்சியை முதலில் கண்டித்துவிட்டு, பிறகு மவுனம் சாதித்து இப்போது குஜராத் வளர்ச்சிப் பெருமை பேசுவதும் இவர்கள்தானே?

தமிழகத்தின் மதச்சார்பற்ற சமூக நீதி நீரோட்டத்தை குலைத்துவிடும் ஆபத்துகள் சூழ்ந்து நிற்கின்றன. இந்தச் சூழலில் மோடியின் முகமூடியைக் கிழித்துக் காட்டும், இந்த வெளியீட்டைக் கொண்டுவந்துள்ளது `சேவ் தமிழ்ஸ்` இயக்கம். மோடித்துவத்தை நிலைநாட்ட கட்டமைக்கப்படும் பொய்மைகளை ஏராளமான தகவல்களுடன் எளிமையாக விளக்கிடும் இந்த சிறப்பான வெளியீடு மக்களிடம் செல்லப்பட வேண்டியது அவசியமாகும். `சேவ் தமிழ்ஸ்` இயக்கம், சரியான பார்வையில் சமூகக் கவலையோடு, மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It