சமூகப் பின்புலம்

 தமிழ்ச் சமூகம் அடிப்படையில் சாதிப் பிரிவுகளால் கட்டமைக்கப்பட்டடது; கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் கூட. இந்தச் சாதியக் கட்டமைப்பு மேல், கீழ் என்கின்ற படிநிலைகளைக் கொண்டது. இந்தப் படிநிலையில் கடைகோடியில் இருப்பவர்கள் தலித்துகள் ஆவர். வரலாறு முழுக்க பெண்களைப் போலவே அடையாளம் இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் மேல் ஏவப்பட்ட மிகக் கொடூரமான ஒடுக்குமுறையின் வடிவமான “தீண்டாமை” தமிழ்ச் சமூகத்தில் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் பக்தி இலக்கிய காலகட்டத்திலேயே அமுல்படுத்தப்பட்டுவிட்டது என்பதை நாயன்மார், ஆழ்வார் சரித்திரத்தின் மூலம் அறிய முடிகிறது.

முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஓர் ஊர்ப்பகுதியைச் சுட்டுகிறது என்றும் புதுச்சேரிக்கு அருகில் உள்ள பாகூரில் அமைந்துள்ள திருமூலநாதர் திருக்கோயில் கல்வெட்டு (கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகிறது என்றும் கல்வெட்டு அறிஞர் பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் விளக்கியுள்ளார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் ‘தீண்டத்தகாதவர் சேரிகள்’, அரசாணையின் படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச்சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத் தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றெல்லாம் ஆணை போட்டுத் தான் அமுல்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆணைகளில் வெளிப்படுவது அடக்குமுறையின் கொடுமை மட்டுமல்ல் எந்த அளவிற்குக் கலகம் செய்பவர்களாக இருந்திருந்தால் இத்தகைய ஒடுக்குமுறை, அதிகார மூளையில் உதித்திருக்கும் என்கின்ற புரிதலும்தான்.

மேலும் எப்பொழுதெல்லாம் அதிகார, உடைமை வர்க்கத்திற்கு இடையே முரண்பாடுகள் முற்றி ஆள்பலத்தைத் திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் இந்த இல்லாதவர்களை நோக்கி அதிகார அரசியல் இறங்கி வருவதை எல்லா நாட்டு வரலாறும் பதிவு செய்கின்றன. பக்தி இலக்கிய காலகட்டத்திலும் சமண, பௌத்த மதங்களைப் புறச்சமயமெனப் புறந்தள்ளுவதற்கு வைதீக மதங்களுக்கு இல்லாதவர்களின் ஆள்பலம் தேவைப்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்பருக்கு “ஆ உரித்துத் தின்று உழலும் புலையராக இருந்தாலும், அவர் நெற்றியில் திருநீறு இருக்குமானால், அவர்தான் நாம் வணங்கும் கடவுள்” எனப் பாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நந்தனாரையும் கண்ணப்பனையும் நாயன்மார்களாகச் சேர்ந்திருக்கிறார்கள். திருப்பாணாழ்வாரும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக எண்ணப்பட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகத்தான் 12-ஆம் நூற்றாண்டில் சைவ-வைணவ முரண்பாடு முற்றிய சூழலில் இராமானுசர் ‘திருக்குலத்தார்’ என இவர்களுக்குப் பூணூல் அணிவித்து வைணவர்களாக மாற்றியிருக்கிறார். இங்கே குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய மற்றொன்று, இவ்வாறு செய்வதன் மூலம் தனக்கான ஆள்பலத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்பதோடு அதற்கும் மேல் அதிகமான பயனாகத் தங்களின் உரிமைக்காக ஒன்று திரளும் அடிநிலை மக்களின் எழுச்சியைச் சிதைத்துத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிற நுண் அரசியலும் அரங்கேறிவிடுகிறது.

 இராமானுசருக்குப் பிறகு இடைக்காலத்தில் சித்தர்களின் குரலில் சாதியத்திற்கு எதிரான கருத்துக்களைக் கேட்க முடிகிறது. ‘சாதிப்பிரிவில் தீயிட்டுக் கொளுத்துவோம்’ என்றும் ‘பறச்சியாவது ஏதடா’ என்றும் சமூகத்தில் எழுந்த கலகக் குரலின் அடர்த்தியை அவதானிக்க முடிகிறது. நாயக்கர் காலத்தில் எழுந்த இடங்கையர், வலங்கையர் போராட்டம் என்பது சாதியப் போராட்டமாக இன்று அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தச் சாதியப் போராட்டத்தின் விளைவாகத்தான் இன்றைக்கு வழங்கும் ஆயிரக்கணக்கான உட்சாதிப் பிரிவுகள் பல்கிப் பெருகியுள்ளன. மேலும் எந்நேரமும் இராணுவ நடமாட்டங்கள் நடந்துகொண்டே இருந்ததன் காரணமாகவும், தாசிகளின் வாழ்க்கை முறை பெருகியதன் காரணமாகவும், சாதி அடையாளமற்ற அனாதைக் குழந்தைகள் பிறப்பதும், பிறகு அவைகளுக்கெல்லாம் வேறொரு சாதிப் பெயர் வந்து சேர்வதுமாக இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்ச் சமூகம் உளவியல் ரீதியாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. அரசவையில் இடம் பெற வழியற்றுப் போனத் தமிழ்ப் புலவர்கள் (அரசவையில் தெலுங்கு மொழியினருக்குத்தான் மரியாதை கிடைத்திருக்கிறது) பள்ளுப்பாட்டு என்றும் குறவஞ்சி என்றும் ஓரத்து மக்களின் வாழ்க்கை நிலையைப் பாடி அன்றைய தமிழ்ச் சமூகத்தின் அவல நிலையைப் பதிவு செய்துள்ளனர்.

 தொடர்ந்து ஐரோப்பியர் வரும்போது தமிழ்ச் சமூகம் பெரிதும் மாற்றத்திற்கு ஆட்படுகிறது. ஒவ்வொரு கிராமத்து மனிதனையும் வாழ்நாள் முழுக்க அந்தக் கிராமத்து எல்லையை விட்டு வெளியே நகர வேண்டிய தேவை இல்லாதபடிக்கு, நிலவுடைமைச் சமூகம் சார்ந்த ஒரு கிராமத்திற்கு வேண்டிய குயவனிலிருந்து சக்கிலியன் வரை எல்லோரையும் வரிசைக்கிரமமாகக் குடியிருக்க வைத்து ஒவ்வொரு கிராமத்தையும் மூடுண்ட ஒரு சிறு நிர்வாக அமைப்பாகச் சாதியில் பல்லாண்டு பயிற்சி பெற்ற இந்தச் சாதிய அரசு வடிமைத்திருந்தது.

 1857-சிப்பாய்களின் போராட்டத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கமும் உயர்சாதித் தலைவர்களின் ஆதரவைத் திரட்டித் தக்கவைத்துக் கொள்ளவே முயன்றது. எனவே சாதிய அமைப்பிற்குள் மூக்கை நுழைப்பது தனக்கு வேண்டாத வேலை என்ற முறையிலேயே அதன் அணுகுமுறை இருந்தது. ஆனாலும் பிரிட்டிஷ் அரசின் வரியமைப்பு முறை, கிராம நிர்வாக முறை, காலனித்துவ ஆட்சி முறை ஆகியன இந்தக் கட்டுண்ட அமைப்பை உடைத்தன. தேயிலைத் தோட்டத்திற்கும் இராணுவத்திற்கும் நகரத்துத் தொழிற்சாலைக்குமென இந்தக் கிராமத்து மக்கள் எல்லாச் சாதியிலிருந்தும் வெளியேறினார்கள். சாலைகள் பெருகின. போக்குவரத்து அதிகரித்தது. எல்லோருக்குமான கல்வி வந்தது. மனிதர்கள் எல்லோரும் சமம் எனக் கிறித்துவப் பாதிரிமார்கள் இருண்ட கிராமங்களின் தெருக்களுக்குள் நுழைந்து பிரசங்கம் செய்ததோடு தங்களுக்கிருந்த அதிகாரப் பலத்தின் துணையோடும் தங்களின் மதத்தை வளர்க்கும் பொருட்டும் அதனை ஓரளவு செயலிலும் செய்து காட்டினர். வரலாற்று நெருக்கடியினால் இத்தகைய புதிய மாற்றங்கள் நிகழுகின்ற சூழலைப் பயன்படுத்தித் தங்களை உயர்த்திக் கொள்ளத் தீண்டத்தகாதோரே தங்களுக்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்குவதைச் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் காண முடிகிறது.

 1869-இல் தொடங்கி 1945-வரை ஏறத்தாழ 14 பத்திரிக்கைகளைத் தாழ்த்தப்பட்டோர் நடத்தியுள்ளனர். சூர்யோதயம் (1869), பஞ்சமர் (1871), திராவிடப் பாண்டியன் (1885), ஆந்திரோர் மித்ரன் (1886), மகாவிகட தூதன் (1888), பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), ப+லோக வியாசன் (1900), தமிழன் (1907), திராவிட கோகிலம் (1907) தமிழ்ப்பெண் (1916), ஆதிதிராவிடன் (கொழும்பு, 1919), தீனபந்து (1924), தமிழன் (ஜி.அப்பாத்துரை, 1925), ஆதிதிராவிடன் மித்ரன் (1933), சமத்துவம் (1945) முதலிய பத்திரிக்கைகள் நடத்தி அன்றைக்குப் புதிதாக வந்த செய்தித்தாள் ஊடகத்திற்குள் உடனே புகுந்து தங்களுக்கான சொல்லாடலைக் கட்ட முயன்றுள்ள முயற்சி அப்படியொன்றும் எளிதான காரியம் அல்ல. இந்தப் பத்திரிக்கைகளில் எழுதிய அயோத்தியதாஸ் பண்டிதர், பெரியசாமிப் புலவர், இரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரத்தினம், முத்துவீரப் பாவலர், திருமதி.கே.சொப்பனேஸ்வரி அம்மாள் முதலியோர் சாதியத்தையும் பார்ப்பனிய‌த்தையும் மனுதர்மத்தையும் கல்ப சூத்திரத்தையும் மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளனர்.
 
அயோத்திதாஸ் பண்டிதர்(1845-1914) குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி எனப் பல மொழி வல்லுநரான இவர் பௌத்தம், சமணம், இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மதங்களையும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கியுள்ளார். நீலகிரியில் 1870-இல் ‘அத்வைதானந்த சபாவைத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து 1881-இல் ‘திராவிட மகாஜன சங்கத்தையும்’, 1898-இல் ‘சாக்கிய புத்தர்கள் சங்கத்தையும்’ சென்னையில் தொடங்கிச் செயல்பட்டுள்ளார். 1891 டிசம்பர் 1-ஆம் நாளில் ஊட்டியில் ‘திராவிட மகாஜன சங்க மாநாட்டை’ நடத்திக் காட்டியுள்ளார். அம்மாநாட்டில் பல சட்ட உரிமைகள் கோரியும் கல்விச் சலுகை கோரியும், கிராம நிர்வாக அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தலித்துகளுக்கு இடம் ஒதுக்குவதன் மூலம் அவர்களைப் பொருளாதார அடிப்படையில் உயர்த்தக் கோரியும், தலித்துகளுக்குக்கெதிரான சிறைச் சட்டங்களில் உள்ள குறைகளை நீக்கக் கோரியும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். மேலும் 1892-இல் சென்னை மாநிலத்தைச் சார்ந்த தலித் தலைவர்கள் பலரும் ‘ஆதிதிராவிட மகாஜன சபை’ என்ற அமைப்பின் கீழ் ஒன்றுகூடிப் போராடியுள்ளனர்.

இரெட்டைமலை சீனிவாசனும், எம்.சி.இராசாவும் அழுத்தமான விழிப்புணர்வோடு தீவிரமாகச் செயல்பட்டுள்ளனர். அன்றே அரசாங்கமும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இரண்டு அரசாணைகளைப் போட்டுள்ளது.(G.O.Mos 10, 1010 (A), Revenue dated 30th September 1892 and G.O.No.68, Education dated 1st February, 1892). மேலும் 1891-க்கும் 1935-க்கும் இடைப்பட்ட காலங்களில் அன்றைய ஒன்றிணைந்த சென்னை மாகாணங்களின் பல பகுதிகளில் ஏறத்தாழ 40 மாநாடுகளை நடத்திப் பொது மேடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசிப் போராடியுள்ளனர். ஆனால் காந்தியின் இந்தியத் தேசிய இயக்கம், நீதிக்கட்சி (1916), தனித்தமிழ் இயக்கம் (1916), பெரியாரின் சுயமரியாதை இயக்கம்(1926), இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி(1924), திராவிடக் கழகம் (1944), திராவிட முன்னேற்றக் கழகம்(1949), ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சி.யின் தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் கிறித்துவம், இஸ்லாம் மதங்களின் மதம் மாற்றும் முயற்சி முதலியன எல்லாம் சேர்ந்து மேற்கண்டவாறு திரண்ட தாழ்த்தப்பட்டவர்களின் இயக்கத்தைச் சிதைத்துள்ளன. ஏறத்தாழ இந்த இயக்கங்கள் அனைத்திலுமே தாழ்த்தப்பட்டவர்களை மேலேற்றிவிட வேண்டும் என்ற ஆதரவான குரல் ஒலித்துக் கொண்டுதான் இருந்தன என்றாலும் அவர்களின் மேல் திணிக்கப்பட்ட தீண்டாமை போன்ற கொடுமைகளிலிருந்து விடுதலை செய்ய ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எதையும் இந்த இயக்கங்கள் மேற்கொள்ளவில்லை. அப்படியே சிலவற்றை (சமபந்தி, கோயில் நுழைவு) மேற்கொண்டிருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களை, அந்தப் பெருவாரியான மக்கள் தொகையினரை- ஓட்டு வங்கியாய் – தங்கள் இயக்கத்திற்குள் விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறைத் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டது.

தலித் - எனும் சொல்லாட்சி

 மேற்கண்ட இந்த நிலைமை 1991-இல் அம்பேத்காரின் நூற்றாண்டு விழாவினை இந்திய அரசாங்கமே முன்னெடுத்துக் கொண்டாடிய போது மாறத் தொடங்கியது. அம்பேத்காரின் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எழுதிய எழுத்துக்களையெல்லாம் தொகுத்து அந்தந்த மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. கூடவே விடுதலைக்குப் பின்பு அம்பேத்கரின் போராட்டத்தினால் கிடைத்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை மூலம் கல்விகற்ற தலித்துகள் உருவான சூழல் தலித்துகளுக்கு உரிமை கோரும் சொல்லாடல்களைத் தலித்துகளே தீவிரமாகக் கட்டமைக்கின்ற ஒரு போக்கினை ஏற்படுத்தியது. இத்தகைய அரசியல் விளைவுகளில் ஒரு பகுதியாகத்தான் தலித் இலக்கியம் என்கின்ற ஒன்றும் தமிழ்ச் சூழலில் தோன்றத் தொடங்கியது.

வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தார், ஆதிதிராவிடர், பழந்தமிழர், ஹரிஜன், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர், பறையர், பஞ்சமர், அட்டவனை இனத்தினர், சண்டாளர், புலையர், அவர்ணத்தார் என ஆதிக்க சாதியினர் பல பெயரிட்டு தங்களின் நலத்திற்கேற்ப அழைத்து வந்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில்தான் இவர்கள் தங்களுக்குத் தாங்களே ‘தலித்’ என்று பெயரிட்டுக் கொண்டு திரளத் தொடங்கியுள்ளனர். தலித் என்ற பெயர் மராட்டிய மொழிச் சொல்லிலிருந்து தமிழுக்கு வந்துள்ளது.(இச்சொல் ஹீப்ரு மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்கு வந்து அங்கிருந்து மராட்டிய மொழிக்கு வந்ததாகக் கருதப்படுகிறது) ஒடுக்கப்பட்டவர், நொறுக்கப்பட்டவர், பள்ளத்தில் வாழ விதிக்கப்பட்டவர் என்றெல்லாம் பொருள் தரும் இந்தச் சொல் இன்று தலித்துகளினுடைய வேதனையின் குரலாகவும், எதிர்ப்பின் குறியீடாகவும் விளங்குகிறது. இன்று தில்லி தலைமைச் செயலகத்தில் ஒருவன் தன்னைத் தமிழன் என்று சொல்வதைவிடத் தலித் என்று சொன்னால் உடனே மொழி, இன, மாநிலம் கடந்து அணுக்கமாகிற மனிதர்களின் தொகை கூடியிருக்கிறது.(இந்தியாவில் பிராமணர் என்று சொன்னால் நிகழ்வதைப் போல) ‘பெயரிடுதலின் அரசியல்’ எவ்வளவு வலுவானது என்பதை இந்தத் தலித் என்ற சொல் இன்று காட்டி நிற்கிறது.

தலித் கவிதைகளின் தன்மைகள்

இத்தகைய புதிய தலித் அரசியலின் தன்மைக்கேற்பத் தலித் கவிதைகள் சில குறிப்பிட்ட பண்பினைத் தனக்குள் ஒழுங்குப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அவற்றைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்திக் கொள்ளலாம்:-

1. அம்பேத்கரியத்தைத் தனது தத்துவத் தளமாகக் கொள்வது

2. இதுவரை புனிதமெனக் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்திலும் உடைப்புக்களை ஏற்படுத்துவது.

3. அதிர்ச்சிகளை உற்பத்திச் செய்வதன் மூலம் ஆதிக்கக் கருத்தாடல்களைச் சிதைப்பது.

4. கலகக்குரலை அழகியலாக்குவது.

5. மீறலை முன்னிறுத்துவது.

6. பின் நவீனத்துவம் சொல்வதைப் போல மகா எடுத்துரைப்புக்களைத் தவிர்ப்பது.

7. விளிம்புநிலை மரபான நாட்டுப்புற மரபை முன்னெடுப்பது.

8. கொச்சை மொழி என்று ஆதிக்க அமைப்புக்களால் கேவலப்படுத்தப்படும் தலித் மொழியை, பேச்சு மொழியை முன்னிறுத்துவது.

9. சுயவரலாற்றுக் குணம் கொண்டிருப்பது.

10. தலித் கவிதைகளைத் தலித்துகளே எழுதுவது என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துவது.

11. பெண்ணியத்திற்குள்ளும் தலித் பெண்ணியம் எனத் தனியாக வகுத்து இலக்கியம் படைப்பது.

12. தலித் வாழ்வியல் நிலம் சார்ந்தது என்பதனால் பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் நிலம் சார்ந்த அரசியலை வளர்த்தெடுப்பது.

 இவ்வாறு தலித் கவிதைகள் பல பொதுக் குணங்களைக் கொண்டிருக்கின்றன. அம்பேத்கார் கீழ்க்கண்டவாறு சொன்னார்:-

அடிமையிடம் சொல்லுங்கள், அவன் அடிமை என்று; அவனை அந்தக் கணமே கலக்காரனாகக் காண்பீர்கள்.

இன்றைக்குத் தலித் கவிதையில் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடிமை, தன்னை அடிமை என்று உணரும் தறுவாயில் தன் வாழ்வு பற்றிய அருவருப்பும் அவமானமும் வேதனையும் இவற்றிற்கெல்லாம் காரணமானவர்கள் மேல் ஏற்படும் கோபத்தீயும் நிலைநிறுத்தப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராகக் கலகம் செய்வதைத் தவிர வேறு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்ற விழிப்புணர்வும் தலித் கவிதையின் நோக்கங்களாக வெளிப்படுகின்றன. தலித் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவராக அறியப்படும் என்.டி.ராஜ்குமார் இந்தக் கலகக் குரலைக் கீழ்க்கண்டவாறு வடிவமைக்கிறார்:-

 செத்தமாட்டின் தோலை உரித்ததற்காய்
 உயிரோடு எங்களை அடித்து கல்லெறிந்து
 கொன்றீர்கள்

 சாகாமல் செத்த நானிந்த நாடு முழுவதும்
 ஒரு கலவரத்துடன்
 உருவெடுத்தது அலறி மிதப்பேன்
 நாடுமுழுவதும் தேசம்முழுவதுமொரு
 கொலையுண்ட தெய்வங்களாய் எழுந்து நிற்பேன்

 ஆவேசத்தோடந்த கதைப்பாடல்களை
 முடுக்கிவிடவிட
 கொண்டாட்டத்துடன் எழுந்தாடித்துள்ளி
 பசுக்களையும் ஆடுமாடுகளையும்
 தாராளமாகக் காவுகொள்வேன்
 எனதுகம்பந்தடிஉறுமிச்சுழன்றுச்
 சல்லடம்தெறிக்க
 மகுடத்தால் பறையால் செண்டை
 கம்பெடுத்தடிப்பேன்

 குத்துச்சிலுவைக்குள்ளிருந்தும்
 மீசான் பலகைகளுக்குள்ளிருந்தும்
 திமிர்பிடித்தஆவிகளாய் கோபம் கொண்டெழுந்து
 கலைந்து கட்டறுந்தோடும் மிருகங்களாய் மாறி
 அவர்களைக் குத்திக்கொல்லும்வரை
 விதவிதமாய் வடிவமெடுப்பேன். (என்.டி.ராஜ்குமார், காட்டாளன், ப.38)

இதேபோல் பெரிதும் பேசப்பட்ட ‘நெரிந்து’ என்ற கவிதைத் தொகுப்பை வழங்கிய ம.மதிவண்ணன் புதிதாய் விழிப்புணர்வு பெற்ற தலித்துகளின் பிரக்ஞையைக் கீழ்க்கண்டவாறு கவிதையாக்கியுள்ளார். இக்கவிதையில் தலித் பெண்ணியமும், தலித்தியமும் ஒன்றிணைந்து கிடக்கின்றன.

 ஊருக்கொரு வைப்பாட்டியுடன்
 பொறுப்பற்றுத் திரிந்த தாத்தாவிடம்
 குடும்பம் தனியாய்ச் சுமந்த பாட்டிக்கும்…

 ஊர்ப்பட்ட விறகு பிளந்து
 ஒரு வண்டி எச்சிலையை அள்ளி முடித்ததற்குச்
 சம்பளமாய் ஒரேயொரு முட்டைகோசை
 கொடுத்தவனிடம் தாத்தாவுக்கும்…

 கேள்விகளிருக்கவில்லை
 கேட்பதற்கு.

 இன்று புதிதாய்ப் பிறந்திருக்குமிந்தக் கேள்விக்குறி
 எல்லாவற்றையும் அர்த்தமற்றதாக்கிவிட்டு
 அர்த்தத்துடன் சுழல்கிறது தான்மட்டும்.

 (ம.மதிவண்ணன், நெரிந்து,ப.25)

 தலித் கவிதைகள் நாட்டுப்புறக் கதைகளையும், பழமொழிகளையும், தொன்மங்களையும் தனது கவிதையாக்கத்திற்கான கச்சாப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. என்.டி.ராஜ்குமாரின் கவிதை ஒன்று துரோணரை விழித்துப் பேசுகிறது. ஆயுதத்தோடும் போர்களோடும் பிறந்தவர்கள் நாங்கள். ஆயுதம் பிடிக்கத் தெரியாத நீயா எங்களுக்குக் கற்றுத் தருவது என்று கேள்வியை மாற்றிப் போட்டுத் தொன்மங்களுக்குள் இருந்து அதிர்ச்சியை உற்பத்தி செய்கிறது.

 தெரச்சிமீன் வாலெடுத்துச்சுழற்றும்அப்பன்
 மான்கொம்பெடுத்து அப்பனுக்கஅப்பன் வீசிய
 அடவு முறையைச் சொல்லித்தருவான்
 அப்பனுக்க அப்பனுக்க அப்பன்
 ஆடுகளத்தில் மல்லுபிடிப்பான்
 முன்னங்காலைத்தூக்கிமுட்டவரும்
 வெள்ளைக்கிடாவின்
 கழுத்தைக் கடித்தெடுத்துவீசிய கடுவாப்புலி
 கம்புகளால்அம்புகள்செய்து
 படைநடத்தியகதைகளைச்சொல்லுவான்
 இன்னமும் மிஞ்சியிருக்கிறதிந்த
 போர்க் குணமும் மானமும்
 எங்களுக்குச்சொல்லித்தர அடவும்
 தகுதியும் இல்லாத
 துரோணா
 மீள்முள் வாளெடுத்து
 ஆமைத்தோடுகேடயம்செய்து
 செறுத்தடிக்கும்
 ஆயுதம்பிடிக்கத்தெரியாதவன் நீ.(என்.டி.ராஜ்குமார், காட்டாளன், ப.26)

 எப்பொழுதுமே தனக்கான மொழியை உருவாக்காமல் தனக்கான அழகியலை வடிவமைக்க முடியாது. தலித் கவிதைகள் உயிரோட்டமுள்ள பேச்சு மொழியை அதனுடைய எல்லாவிதமான கூறுகளுடனும் பயன்படுத்த முயலுகிறது. பேச்சு மொழிதான் உண்மையான தாய் மொழி. எழுத்து மொழி, உருவாக்கப்பட்ட மொழி. அதிகாரம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மொழி. எனவே தலித் கவிதைகள் அதிகாரம், புனிதம் போன்றவைகளை உடைக்கும் தன்னுடைய நோக்கத்திற்கேற்பத் தடுக்கப்பட்ட வார்த்தையாடல்களை, உச்சரிக்கக் கூசுகின்ற உயிர்ச் சொற்களையெல்லாம் கவிதைக்குள் கொண்டு வந்து இறக்குகின்றது. இதன் மூலம் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு மூடுண்ட தமிழ் வார்த்தையுலகம் வாசகனுக்குள் விரித்துப் போடப்படுகிறது.

 எவரேனும் குண்டி துடைத்துப் போட்டவற்றுள்
 ஒன்றாகக்கூட இருக்கலாம் அது.
 தன் மௌன இருப்பின் மூலம்
 எங்கள் பங்கைப் பெறுவதற்கான
 உரிமையை வழங்கும் வலுவுண்டதற்கு.

 இந்த இடத்தை அடைந்தது முதல் அது
 எங்களுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.
 எங்கள் உரிமையை முன்னிறுத்தி
 குழாயடி வரிசையில்
அம்மா நியமித்துப் போட்டகல் அது. (ம.மதிவண்ணன், நெரிந்து,ப.31

என்று மதிவண்ணனும்

 பேச்சுல கத்திவைக்கிறசவங்க
 அஞ்சுகாயிக்கு பீடிவாங்க வழியில்லாம
 தெண்டித்திரிஞ்சாலும்
 சாதிக்கொணம் போவுதாபாரு
 ரத்தத்திலேயேஊறிப்போனது அகம்பாவம்
 தாழவிழுந்தாலும்
 மீசையில மண்ணு ஒட்டல்ல என்பானுவ
 கோளாறுபிடிச்சுட்டுதோ தலையிலஇடித்தீவிழ
 இவனுகளுக்குஎதுக்குலேய் சலுகமயிரு
 வர்ணம்கட்டப்பாக்குது
 வஞ்சகக்கலி. (என்.டி.ராஜ்குமார், காட்டாளன், ப.21)

என்று ராஜ்குமாரும் கவிதை வடிக்கும் போது தலித் மக்களின் வாழ்வும் வலியும் பேச்சு மொழியில் இலக்கியமாவதைப் பார்க்க முடிகிறது.

 தலித் கவிதைகள் பெரும்பாலும் சுயவரலாற்றுத் தன்மை கொண்டு விளங்குகின்றன. மராட்டியத்திலும் கன்னடத்திலும் இப்படித்தான் வெளிப்பட்டுள்ளன. மறக்கடிக்கப்பட்ட நினைவுகளை, இறந்த காலங்களை நுணுக்கமாகத் தோண்டி வெளியே கொணர்வதன் மூலம் ஆதிக்க சக்திகளின் அசிங்கமான முகத்தை, மனிதாபிமானமற்ற முரட்டு இதயத்தைத் தோலுரித்துக் காட்டிவிட முடிகிறது. வாசகர்களின் மன உலகத்திற்குள்ளும் சரசரவென்று எளிதாகப் பாய்;ந்து பரவிவிட முடிகிறது. ராஜ முருகுபாண்டியனின் ‘சில தலித் கவிதைகளும்’ என்ற தொகுப்பில் இப்படியொரு கவிதை:-

 முதலாளியம்மாவின்
 பழம் புடவை
 அம்மாவிற்குப் புதுப்புடவை

 அம்மாவின்
பழம்புடவை
அக்காவிற்குப் புதுப்பாவாடை

அக்காவின்
கிழிந்த பாவாடை
தங்கைக்குப் புதுத்தாவணி

தங்கையின்
கிழிந்த தாவணி
தம்பிக்குப் புதுக்கோவணம்.

 (ராஜ முருகுபாண்டியன், சில தலித் கவிதைகளும், ப.72)

இதுபோலவே கவிதைக்கான பாடுபொருளை இந்தச் சாதியச் சமூகத்தின் கேவலமான ஒடுக்குமுறையிலிருந்து பெற்ற வலிதரும் அனுபவங்களையே அன்பாதவன், உஞ்சை ராஜன், ப்ரதிபா ஜெயசந்திரன், இந்திரன், மதியழகன், விழி.பா.இதயவேந்தன், கே.ஏ.குணசேகரன், அரங்க மல்லிகா, சுகிர்தராணி, பாரதி வசந்தன், தலித் தமிழ் மணி, இளந்துறவி, கந்தசாமி, தலையாரி, தணிகைச்செல்வன், சுப்பையா, ரவிக்குமார் முதலிய பலரும் கவிதைகளாகப் படைத்துள்ளனர். ரவிக்குமார் கவிதைப் படைப்புகளோடு உலக இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பான கவிதைகளை எல்லாம் மொழிபெயர்த்து வழங்குவதோடு நிறப்பிரிகை தொடங்கி இன்றைய மணற்கேணி வரை பல்வேறு பத்திரிக்கைகள் மூலமாகவும் தலித் கவிதையாக்கத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறார். ஒன்று சேர், கலகம் செய், பணிய மறு, திமிறி எழு போன்ற அம்பேத்காரின் முழக்கங்களுக்கு ஏற்பவும் பல கவிதைகள் பிறந்த வண்ணம் இருக்கின்றன. விழி.பா.இதயவேந்தனின் கவிதை ஒன்று இப்படித் தலித் என்னும் அடையாளத்தைக் கொண்டாடுகிறது.
 
 எரிந்த பிணத்தில்
 இருக்கிற சாம்பல் வாடையில்
 உதிர்;ந்த குருதியில்
 வீசும் கவுட்சி நாற்றத்தில்
 புதைந்த உடலின்
 மண் மேட்டிலிருந்து
 பீறிட்டு எழும்
 எம் உணர்வுகளில்
 சாதீய சனாதனங்கள்
 தரை மட்டமாய் நொறுங்கும்
 தளர்ந்து விடாதே!
 முதலும் வட்டியுமாய்
 சேர்ந்தே தர
 திமிறி எழுகிறது
 ‘தலித்’ எனும் அடையாளம். (புதிய கோடாங்கி, நவம்பர். 2000;;:65)

 தலித் கவிதையாக்கத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு போக்கு இசைப் பாடல்களாகத் தொகுத்துத் தலித்தியச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் தன்மையாகும். கே.ஏ.குணசேகரன் தொகுத்த ‘அக்னிஸ்வரங்கள்’, தலித் சுப்பையாவின் ‘இசைப் போர்’ ஆகிய தொகுப்புக்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாகும். தலித் சுப்பையாவின் ஒரு கவிதை தலித்துகளின் சிக்கல்கள், மதமாற்றம் என்னும் நடவடிக்கைகளினாலும் தீர்ந்துவிட வில்லை என்பதை இசையாக இவ்வாறு வடிக்கிறது.

 மனம் மாறினோம்
 மதம் மாறினோம்
 ரணம் ஆறலே – சாதி
 வடு மாறலே

 சாதி சொன்ன இந்து மதத்தை தூக்கி எறிந்தோம் - இறை
 நம்பிக்கையில் விவிலியத்தை நெஞ்சில் சுமந்தோம்
 கல்லறையும் ஆலயமும் எல்லை போட்டதே- எங்க
 கண்ணீரில் நம்பிக்கைகள் கரைந்து போகுதே.

    (தலித் சுப்பையா, இசைப் போர், ப.68)

 இவ்வாறு 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்க் கவிதைப் பரப்பில் தலித்துகளின் கவிதையாக்கம் பெரும் கவனத்திற்குரிய ஒன்றாக விளங்குகிறது. தலித் இயக்கம் அரசியல் இயக்கமாகத் தலித்துகளின் தலைமையின்கீழ் தீவிரப்பட்டு இருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் தலித் கவிதைகளும் பெரிதும் அரசியல் கவிதைகளாக வெளிப்படுகின்றன. மொழியாடுவதற்கு வாய்ப்பளிக்காமல் நூற்றாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டிருந்த தலித் மக்களிடம் இன்றைக்கு மொழியானது பொங்கிப் புறப்பட்டு வெளிவருகின்றது. அமுக்கப்பட்ட நீர்நிலை கசிவதற்குச் சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திப் பொங்கிப் பிரவாகமாக வெளிப்படுவதைப் போலத் தலித் கவிதைகள் இன்றைக்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்பப் புதிய கோடாங்கி, தாய்மண், தலித் முரசு, மணற்கேணி முதலிய பத்திரிக்கை ஊடகங்களும் தலித் கவிதைகளை வளர்த்தெடுக்கத் துணை நிற்கின்றன. பெரிதும் அரசியல் கவிதைகளாகவும், தன்னுணர்ச்சிக் கவிதைகளாவும் வெளிப்படும் தலித் கவிதைகள் வாழ்க்கையின் மர்ம முடிச்சுகளை நோக்கித் தத்துவார்த்தத் தளங்களில் இயங்க முயலும் போது அடுத்த கட்டத்திற்குத் தலித் கவிதைகள் வளர்ச்சியடையும் என நம்பலாம்.

பயன்பட்ட நூல்கள்

1. அன்பாதவன், தலித் கவிதைகள்- நெருப்பில் காய்ச்சிய பறை, காவ்யா, சென்னை, 2003.

2. அன்பாதவன், செம்பழுப்பாய் சூரியன், காவ்யா, சென்னை, 2000.

3. இதயவேந்தன் விழி.பா., தலித் கலை இலக்கியம், வள்ளிசுந்தர் பதிப்பகம், சென்னை, 2003.

4. காவ்யா சண்முகசுந்தரம் (தொ), தலித்தியம், காவ்யா, சென்னை, 1996.

5. குணசேகரன்.கே.ஏ (தொ), அக்னிஸ்வரங்கள், தன்னானே வெளியீடு, புதுச்சேரி, 1983.

6. தலித் சுப்பையா, இசைப் போர், தலித் ஆதார மையம், மதுரை, 2005.

7 பஞ்சாங்கம்.க, பஞ்சாங்கம் கட்டுரைகள் - நவீன இலக்கியக் கோட்பாடுகள், காவ்யா, சென்னை, 2008.

8 மதிவண்ணன்.ம, நெரிந்து…, வேறுவேறு வெளியீடு, ஆத்தூர். 2000.

9.ராஜ்குமார் என்.டி, காட்டாளன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருவண்ணாமலை, ஆண்டு இல்லை.

10. ராஜ முருகுபாண்டியன், சில தலித் கவிதைகளும்…, அன்னம், சிவகங்களை, 1994.

- பேரா.க.பஞ்சாங்கம், புதுச்சேரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It