இயற்கை தரும் ஆச்சரியங்கள் எத்தனைக்கு எத்தனை உண்மையானதோ அத்தனை உண்மையானது வாழ்க்கையும். இதை உணரும் உள்ளத்திலிருந்து பிறக்கிற கவிதைகளில் தென்படும் நேர்மை, நித்தம் உதிக்கும் சூரியனுக்கு ஒப்பானது. பிரபஞ்சத்தை இயக்குவது ஒரே சக்தி. செடி, மரம், பறவை, மீன், விலங்கு, மலை, கடல், வனம், அருவி, ஆறு, மனிதன், சூரியன், நிலவு, விண்மீன், கோள் எல்லாவற்றுக்கும் பின்னாலிருக்கும் சக்தி ஒன்றே. நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் இயற்கைக்குப் பின்னாலிருக்கும் விதிகள் யாவும் இந்த ஒரு மகா சக்தியின் பல வடிவங்களே. இந்த உண்மையில் வியந்து தன்னைத் தொலைக்கிற கவிஞன் இன்னும் ஆழமாக இயற்கையை அவதானிக்கவும் நேசிக்கவும் தொடங்குகிறான். அவற்றின் ஒவ்வொரு அசைவையும் தன் எண்ணங்களோடும் வாழ்வோடும் தொடர்புடையதாக்கியும் கொள்கிறான்.

பாலையில் துளிர்க்கும் இலையும், பூவில் உறங்கும் பனித்துளியும் நம்பிக்கையை அவனுள் விதைக்கும் அதே நேரத்தில் வறண்டு வெடிக்கும் நிலமும், வாடி உதிரும் மலரும் அவனைப் பதற வைக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் அளப்பற்றப் பலன்களிலும், நாசம் விளைவிக்கும் பேரழிவுகளிலும் அவன் தன்னையே அடையாளம் காண்கிறான். விளைவாகக் கவிஞனின் மொழி இயற்கையின் வழியாகவே வெளிப்பட ஆரம்பிக்கின்றன. மாறும் பருவங்களைப் போன்றதான வாழ்வின் நியதிகளையும் மனித மனதின் வெவ்வேறு பக்கங்களையும் சில நேரம் கருணையுடன், சில நேரம் சினத்துடன் காட்டித் தருகிறது இயற்கை கவிஞனுக்கு. இங்கே கவிஞர் நிலா ரசிகனுக்கு.

”...

நான் அணில்.
நான் நாய்க்குட்டி.
நானே இய‌ற்கை.”                             (திமிர் நாய்க்குட்டிக‌ள்)

தனிமை என்பது துயரா இனிமையா, வரமா சாபமா, மனிதனுக்கான தேவைகளுள் ஒன்றா, ஆத்மாவின் தேடலா எனும் பல கேள்விகளை அதிர்வுடன் எழுப்பியபடி நகர்ந்த “வெயில் தின்ற மழையில்..”, முந்தைய கவிதைத் தொகுப்பிலும் பல கவிதைகள் இயற்கையுடன் ஒன்றியதானதொரு கனவுலகுக்குள் நம்மை இட்டுச் சென்றன. இயற்கையோடு ஒன்றிய தன் எண்ணங்களால் இயற்கையின் நேசத்துக்குரியவனாகிப் போய்விட்ட கவிஞர் , “மீன்கள் துள்ளும் நிசி”யிலும் அப்படியானதொரு கற்பனை உலகத்தை அற்புதமாகக் காட்டி பிரமிக்க வைக்கிறார். அத்துடன் எவையும் கனவும் கற்பனைகளுமே என்று ஒதுக்கிட முடியாதபடி யதார்த்த வாழ்வோடு இணைத்துக் காட்டியிருப்பதில் பெரும் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

"...
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்."                       (நிழல்களுடன் பேசுபவன்)

‘கதை சொல்லி, சாவுக்குருவி, தனிமொழி, தட்டானும் தவறியளும், இரவின் ரகசியபொழுதுகள், பொம்மையாதல், வனம், நதிக்கரையில் நீந்தும் சிறுமீன், நட்சத்திராவின் வானம்’ குறிப்பிட்டுப் பாராட்ட வைக்கும் கவிதைகள். தக்கன பிழைத்து வாழ்தல் பரிணாம வளர்ச்சியின் விதியாகவே இருப்பினும் உறைய வைக்கிறது ‘அரூப வெளி’.

ஓரிடத்திலிருந்து ஓரிடத்துக்கு அடுத்தடுத்து நகர்ந்து நம்பிக்கையை விதைத்துத் துளிர்க்கிற எதிர்பார்ப்பற்ற அன்பு கவருகிறது முதல் துளியாக:
 
“சைக்கிளின் முன் இருக்கையிலிருந்து
கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
வருகிறாள் சிறுமி.
மரங்களின் மொழியை அவளுடன்
பயணிக்கும் தட்டான்களுக்கு கற்றுத்தருகிறாள்.
அவளிடம் கற்ற மொழியுடன்
மரத்தின் இலையில் அமர்கின்ற
தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
நகரும் வெயில் மரமொழியை
கற்றுக்கொண்டு மறைந்து போகிறது.
கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
முளைக்கும் மரக்கன்று
சிறுமியின் மொழியில் தலையசைத்து
தலையசைத்து பேசத் துவங்குகிறது
பாலையின் முதல் துளியிடம்.”         (முதல் துளி)

“அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்”                           (மலைவழிப்பயணம்)

அன்பைத் தேடும் பயணமாய் ஆரம்பமாகும் இத்தொகுப்பின் பல கவிதைகளில் மீன்கள் ஒரு குறியீடாக இடம் பெற்றிருக்கின்றன.

“வெற்றிடங்களால் நிரம்பியிருக்கும்
அறையை தன் சிறு கண்களால்
பார்க்கிறது கண்ணாடிக்குடுவை மீன்.
நிசப்த அறைக்குள் நீண்டதொரு
கடற்கரையை காண்கிறது.
அக்கரையில் ஈரம் படர
அதன் வாலசைவில் பேரலையொன்றை
உருவாக்குகிறது.
அலை வழியே கரையடைந்து
யாருமற்ற கரையில்
நீந்தியும் நடந்தும் விளையாடுகிறது
கடலை படைத்த குடுவைமீன்.
கடலிருக்கும் அறைக்கதவு
தட்டப்படும் வரை.”                            (வாலசை ஆகாயம்)

வாலசைவில் எழுந்த பேரலையில் நாமும் நனைகின்ற உணர்வு. தான் வளர்த்த மீனான வந்தியத் தேவன் மறைந்த நாளில் எழுதியதாகக் கவிஞர் தன் வலைப்பூவில் குறிப்பிட்டிருத்த நினைவு.

இயற்கையையும் அதனூடாக வாழ்வையும் கற்பனை கலந்து சொல்லி மனிதரை இரசிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் நூற்றாண்டுகளாகவே கவிஞர்களின் பங்கு அதிகம். ‘நிஜமான தேரைகள் வாழும் கற்பனைத் தோட்டமே’ கவிதைகள் என்கிறார் அமெரிக்கக் கவிஞர் மரியன் மூர். உரைநடையாய் சொல்லப்படுபவற்றை விட, கற்பனை கலந்த கவிதைகளே உணர்வுகளைத் தூண்டி உள்ளத்தில் இடம் பிடிக்கின்றன. தொகுப்பின் பல கவிதைகளின் கற்பனைகளில் நாம் கரைவதும், கரைந்து காணாது போன நம்மை மீண்டும் சில கவிதைகளில் உயிர்ப்பித்துக் கொள்ள இயலுவதுமாய் ஒரு நிறைவான வாசிப்பனுபவத்தைத் தரத் தவறவில்லை “மீன்கள் துள்ளும் நிசி”.

*

மீன்கள் துள்ளும் நிசி
பக்கங்கள்: 61; விலை: ரூ. 60;
வெளியீடு: புது எழுத்து;
தபாலில் வாங்கிட: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It