2005 களில் எழுத்தாளர் சுஜாதாவை மயிலாப்பூர் சரவண பவனில் சில முறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை.  என் குடும்பத்தில் எவரும் புத்தக விரும்பிகள் இல்லை. பாடப் புத்தகங்கள் தவிர்த்து, எங்கள் புத்தக அலமாரியில் இடம்பெற்ற ஒரே புத்தகம் டெலிபோன் டைரக்டரி தான். (அப்போது எங்கள் வீட்டில் லேன்ட்லைன் இருந்தது)

2009 ல் நான் கவிதைகள் எழுதத் துவங்கியபோது, சொல்லித்தர எவரும் இருக்கவில்லை. நானாக விரும்பி சென்று கேட்ட இடங்களில் உதாசீனம், ஏளனம், அலட்சியம் போன்ற வார்த்தைகளின் முழு அர்த்தங்களை உணர வைத்தார்கள்.

எனது முதல் கதையை கீற்று தான் வெளியிட்டது.  'தண்ணீரை' மையமாக வைத்து தண்ணீர்க் காட்டில் என்றொரு தொடர் கவிதை கூட கீற்றில் வெளியானது. சிறுகதை எழுதத் துவங்கியபோது, கீற்றும் அதன் வாசகர்களும் தந்த பேராதரவு, மென்மேலும் சிறுகதைகள் எழுதத்தூண்டியது. அந்த உந்துதல் இப்போது நாவல் எழுதுவது வரை தொடர்ந்திருக்கிறதுறது.

ஓர் ஏகலைவனாக உங்கள் எல்லோரின் எழுத்துக்களையும் வாசித்து வாசித்தே பாதியும், இயற்கையாக எனக்கு சொல்லித் தந்தது பாதியுமாக என் எழுத்து வளர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

2012 அக்டோபரில் 'ஒப்பனைகள் கலைவதற்கே' நாவலை எழுதி முடித்திருந்தேன். இது கூட ஒரு ஏகலைவனாகவே நடந்தது.

இப்போது இந்த நாவல், 'முடிச்சு' என்ற எனது இன்னுமொரு நாவலுடன் இணைந்து தொகுப்பாக 'காவ்யா பதிப்பகம்' மூலம் வெளியாகியிருக்கிறது.  உங்கள் எல்லோரிடமும் கற்ற வித்தையால் எழுதியிருக்கிறேன். அதை உங்களிடமே விடுகிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தக் கோணத்தில் ஆராய்ந்து எழுதப்பட்டு வெளியாகியிருக்கும் முதல் நாவல் 'ஒப்பனைகள் கலைவதற்கே' மட்டும் தான் என்றே நினைக்கிறேன்.

2000 வது ஆண்டுவரைஅடிமைத்தளையிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற முடியாமல் உழன்ற பெண்கள் சமூகத்தை கருத்தில் கொண்டால் , தொழில் நுட்ப உலகமாகிவிட்ட கடந்த பத்து வருடங்களில் பெண் சமூகம் பெற்ற சுதந்திரம் கிட்ட அபரிமிதம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அப்படி அபரிமிதமாக கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள், அப்படி பயன்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள், சாதக பாதகங்கள் என்னென்ன, அப்படி பயன்படுத்தியதில் நிகழ்ந்த பிறழ்வுகள் என்னென்ன, அவ்வகையான பிறழ்வுகளுக்கான மூல காரணங்கள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் இந்த நாவலில் அலசி ஆராய்ந்து பதிந்துள்ளேன்.

எனது நாவலை வாசித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்தால், அது எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருக்கும். அந்தப் பதிவுகள் எனது எழுத்தை மென்மேலும் செம்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

ஆதலால் எனது நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுமாறு உங்கள் எல்லோரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது இவ்விரண்டு நாவல்களும் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற  நாவல் தொகுதியென சென்னை YMCA மைதானத்தில் நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிட‌ம்

காவ்யா பதிப்பகம் - ஸ்டால் 491 & 492

டிஸ்கவரி புக் பேலஸ் - ஸ்டால் 334

நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் (ஸ்டால் எண் நினைவில் இல்லை)

நட்புடன்,

ராம்ப்ரசாத்

Pin It