காலச்சுவடு பதிப்பகம் பல இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிட்டு வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் திரு. தேவமுகுந்தன் அவர்களின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற தொகுதி 10 சிறுகதைகளை உள்ளடக்கி 102 பக்கங்களில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

devamukundan_400இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்திட்ட அதிகாரியாய் கடமையாற்றி, தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் தேவமுகுந்தன் அவர்கள் தன்னைப் பாதித்த விடயங்களையே நிர்மலன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளாக எழுதியிருப்பதாக தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

போர்க்கால நெருக்கடிக்குள் சிக்கியவர்களைத் தவிர, தலைநகர் உட்பட பல இடங்களிலும் தங்கியிருந்த பலரும் பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை சதாவும் தம்முடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயநிலை அன்று காணப்பட்டது. அவ்வாறாக மக்களுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்கள் இக்கதையினூடு அழகாக சித்தரித்து காட்டப்பட்டு இருக்கின்றது. அது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் பின்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

1980 களுக்குப் பிந்திய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பெருள் இன முரண்பாடும் யுத்த அவலமும்தான். இன முரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்தச் சூழல் தனி மனிதர்களின் வாழ்வு, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கிறது என்பதைத்தான் கடந்த முப்பது ஆண்டு காலப்பகுதியில் எழுந்த பெரும்பாலான படைப்புக்கள் பேசுகின்றன என்கிறார்|.

கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற சிறுகதையானது இலங்கையின் போர்க்கால கட்டத்தில் எங்கும் மரணங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை பறைசாற்றுகிறது. தமிழராயிருந்தாலென்ன, சிங்களவராயிருந்தாலென்ன யுத்தத்தில் தனது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் பயணிக்கும் பாதையாக கண்ணீர்ப் பாதையே எஞ்சிவிடுகிறது. தனது சகோதரனின் மரணம் நிகழ்திருக்கும்போது எதிர்வீட்டு சிங்கள இராணுவ சகோதரர்கள் இறந்த விடயத்தையும் மையப்படுத்தி இந்தக் கதை நகர்கிறது.

வழிகாட்டிகள் என்ற சிறுகதை அதிகாரிகளின் அசமந்தப் போக்கை படம்பிடித்துக் காட்டுகின்றது. நிர்வாகம் ஒழுங்குசெய்யும் கூட்டங்களில் கலந்துகொண்டு தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் பொடுபோக்காக நடப்பவர்களின் சாயம் வெளுக்கப்படுகின்றது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் புறூப் பார்த்து முடிக்காத இந்திரனும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றான். மதிய இடைவேளையின் போது குறிப்பிட்ட அதிகாரி இது சம்மந்தமாகக் கேட்க இன்னும் வேலையிருப்பதாய் கூறுகிறான் இந்திரன். அதற்கு அந்த அதிகாரி கூறும் பதில் இது.

'அது அவசரமில்லை தம்பி ஆறதலாய்ச் செய்யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான். நீர் புறூவ் பார்த்த பேப்பர்களை தந்தீரென்டா நான் அதை புத்தகமாய் கட்டிப்போட்டு அவனுக்கு படிப்பிச்சுப் போடுவன்'.

இடைவெளி என்ற சிறுகதை இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அன்பின் இடைவெளி என்றும் கூறலாம். கொழும்பில் அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் தமிழ் உத்தியோகத்தரின் அவலநிலை இதில் உணர்த்தப்படுகின்றது. எதேச்சையாக அவர் விடுமுறை எடுக்கும் சந்தர்ப்பங்கள் அவரை இனவாதியாக மற்றவர்களை எண்ண வைக்கின்றன. காரணம் கொழும்பில் குண்டு வெடிப்பு நடக்கும் சம்பவங்கள் சொல்லி வைத்தாற்போல அவர் விடுமுறை எடுக்கும் நாட்களில் துரதிஷ்டமாய் நிகழ, அலுவலகத்தில் வேலை செய்யும் ஏனைய சிங்கள நண்பர்களின் பார்வையும், பேச்சும் அவருக்கெதிராக அமைவதை இக்கதை இயம்புகிறது.

சின்ன மாமா என்ற கதை ஏனைய கதையம்சங்களில் இருந்து மாறுபடுகிறது. சொந்த தகப்பனின், சகோதரியின், சகோதரனின் இறந்தவீட்டுக்கு கூட வராமல் தானும், தனது குடும்பமும், வேலையும் என்றாகிவிட்ட சின்ன மாமா பற்றியது. ஒரு எழுத்தாளராக வாழ்ந்து இறந்தபின் அவரது குணநலன்களைப் பாராட்டி அவருக்கு கௌரவ விழாவில் புகழ்ந்து கூறப்படும் விடயத்தை சொல்லி நிற்கிறது.

இவன் என்ற கதை படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கும் ஒரு இளைஞனின் அன்றாட வாழ்க்கை எப்படி கழிகிறது? அவனது மனது புண்படும் சந்தர்ப்பங்கள், அவனது திண்டாட்டம் போன்றவற்றை மிகச் சிறப்பாக கூறுகின்றது. மொத்தத்தில் இத்தொகுதி மனதில் நிலைத்துவிடுகிறது. தேவமுகுந்தனுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கண்ணீரினூடே தெரியும் வீதி (சிறுகதை)
நூலாசிரியர் - தேவமுகுந்தன்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - இந்திய விலை 75 ரூபாய்

Pin It