காலச்சுவடின் போலிக்கருத்தரங்கம் தனது வியாபாரத்தை தக்க வைக்கும் ஒரு மார்க்கெட்டிங் கூட்டம்
தோழர்களே, கிட்டதட்ட ராசபக்சேவைத் தவிர அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக அறிக்கையும், கருத்தரங்குகளையும் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். எதிரிகளும், துரோகிகளும் நமது கோரிக்கையின் நியாயத்தை பேச ஆரம்பிக்கும்போது தான் நமக்கான அபாயம் அதிகரிக்கிறது. நம்மைப்போலவே நடித்து இரண்டகம் செய்யும் வாய்ப்பு இந்த சமயங்களில் தான் அதிகமாகிறது. இதற்கான உதாரணங்களை நாம் நமது வரலாறு நெடுக பார்க்க முடியும். பெரியார் பெயரைச் சொல்லி முற்போக்கு முகமூடி போட்டு, இன்னும் முகமூடியை கழட்டாமல் இருக்கும் கமலகாசனும், ஞாநியும், தமிழீழ மக்களுக்கு இன்று வரை மிக உறுதியாக துரோகம் செய்யும் 'இந்து' பத்திரிக்கையின் என்.ராமையும் நாம் எளிதில் மறந்து விடுவதால் நமக்கு நாமே பின்னடைவை ஏற்படுத்திக்கொள்கிறோம்.
நம்முடைய தளத்தில் யார் இயங்குகிறார்கள், நாம் யாரை நமது தளத்தில் இயங்க அனுமதிக்கிறோம் என்கிற கட்டுப்பாடே நமது பயணத்தை நேர்கோட்டில் நடத்த உதவும். இன்று தமிழர்கள் இந்தியாவின் ஒரு மிகப்பெரிய சந்தை, மிக முக்கியமாக கருத்து சந்தை. இந்த வியாபாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நமது எதிரிகளின் வாழ்வியல் பிரச்சனை என்பது மட்டுமல்ல அவர்களது எதிர்காலமும் இதைச் சார்ந்தே உள்ளது. அவர்கள் எப்பொழுதும் ஒரு வழிப்பாதையாக மட்டுமே தமது கருத்துத் தளங்களை மாற்றி வைத்து இருக்கிறார்கள். ஆனால் வழியானது தமது கட்டுப்பட்டில் இருப்பதும், தமது காவலரண்கள் கண்விழித்து இருக்கும்படியாகவும் இருக்கிறார்கள். நாம் ஒருபோதும் ஒரு நேர்மையான விளக்கை எடுத்துகொண்டு இருள் அடைந்த நமது காட்டிற்கு இந்த வழியாக சென்றுவிட முடியாது.
இது நமது அரசியல் ஆசான்களுக்கும் பொருந்தும்படியாக பார்த்துக் கொள்கிறார்கள். நமது ஆசான்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இவர்களின் பாதையை பயன்படுத்திக் கொள்ளமுடியும் ஆனால் கையில் விளக்கு மட்டும் இருக்கக்கூடாது. நம் சிந்தனை சந்தையை ஆள்வதற்கு அவ்வப்போது நமது ஆசன்களை அழைத்து அரங்கேற்றம் செய்யச் சொல்வார்கள், கூத்தை பார்க்க நமக்கும் அழைப்பும் வந்து சேரும். மலங்க மலங்க நாம் விழித்து பார்த்து க்கொண்டு இருக்கும்போதே, நமது சிந்தனையும், சந்தையும் படையெடுக்கப்படுவதற்கான ரெக்கியும் நடைபெற்று முடிந்து விடும். நமது கருத்துகளை அவர்கள் கவனத்திற்கு கொண்டு சேர்த்துவிட்டோம் என்று கைதட்டி, புளகாங்கிதத்துடன் நாமும் அரங்கை விட்டு வெளியேறுவோம். நம்மைப்போலவே நமது ஆசான்களும் அப்பாவிகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பதால் வரலாற்று நெருக்கடிகளின்போது நம்மால் ஆசான்களையும், வேட்டைக்காரர்களையும் பிரித்தறிய முடியாது போகிறது.
****
இருபத்தைந்து ஆண்டுகளாக நமது மீனவர்களை வேட்டையாடிய இலங்கை கடற்படையின் படுகொலைகளை மறைக்கும்விதமாக எந்த ஒரு நேர்மையும் இன்றி இலங்கை மற்றும் இந்திய அரசினால் புதிதாய் இட்டுகட்டப்பட்ட கதைகளை வெளியிட்ட ஒரு பத்திரிக்கை காலச்சுவடு. இரு பத்தாண்டுகளாக தமிழரிடத்தில் கலை, இலக்கிய வியாபாரத்தை நடத்திவரும் காலச்சுவடு, தமிழீழப்படுகொலைகள், அரசியல் கோரிக்கையின் அவசியங்கள், இலங்கை அரசு நடத்தி வரும் பண்பாட்டு அடையாள இனப்படுகொலைகளைப் பற்றி ஒருபோதும் நேர்மையாக நடந்து கொண்டது கிடையாது. இந்திய அரசின் கைக்கூலிகளாக நடந்து வரும் இந்த வியபாரிகள், இந்திய அரசின் ஏகாதிபத்திய, தமிழர் எதிர்ப்பு நிலையை இவர்களின் பத்திரிக்கையில் விஷமாக வெளிப்படுத்தி கொண்டே இருப்பவர்கள். கருத்து விவாதமோ, நேர்மையான சனநாயகமான வெளியோ ஒருபோதும் கருத்தின் முக்கியத்துவத்தை பொருத்து நடத்தியது கிடையாது.
இவர்களின் கவனமெல்லாம் பெயர் பெற்றவர்களை பேசவைப்பது அல்லது போலி சனநாயகத்தை கடைபிடிக்க வசதியாக இருக்கும் அறிவுசீவிகளை அழைப்பது மூலம் தமது ‘காலச்சுவடு’ பிராண்டு மீதான நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வது மட்டுமே. இந்த ‘பிராண்டை’ (சந்தை பொருளை) தக்க வைப்பதற்காக தம் மீது மலத்தை தேய்த்துக்கொள்ளவும் தயாரக இருக்கும் உயர்சாதி வியாபாரிக் கும்பல். மருந்து தயாரிக்கும் வியாபார நிறுவனங்களை நாம் எவ்வாறு விஞ்ஞானிகளாக பார்ப்பது இல்லையோ, மரியாதை கொடுப்பது இல்லையோ, அதே போலதான் இந்த இலக்கிய அறிவுசீவி வியபாரிகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
காலச்சுவடின் சனநாயக விரோத பத்திரிக்கை தர்மம்
கடந்த மார்ச் மாத இதழில் காலச்சுவடு “பாக் நீரிணையைச் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதக் கூடாது” டாக்டர் வி. சூரியநாராயண் என்கிற நேர்காணலை வெளியிட்டு இருந்தது. இந்த நேர்காணல் நடைபெற்றுவரும் மீனவர் படுகொலைக்கான அடிப்படைகளை திரிப்பதாகவும், மீனவர்களை மேலும் படுகுழிக்குள் தள்ளக்கூடிய அபாயமும் நிறைந்து இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் சார்பாக ஒரு கட்டுரையும், கருத்தரங்கையும் நடத்தி இருந்தோம். இதற்கான விளக்கத்தையும், உண்மை நிலையை வாசகர்களுக்கு விளக்கும்படியும் காலச்சுவடு இதழை கோரி இருந்தோம். ஆனால் எந்த ஒரு பதிலும் யாருக்கும் கொடுக்கப்படாமல் கள்ளத்தனமான மெளனம் இன்று வரை காக்கிறது காலச்சுவடு. தமிழக மீனவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தமிழரைக் காக்க வராத, அப்பாவி மக்களின், பாட்டாளி பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை காக்க வராத காலச்சுவடு, இவர்களின் துயரின் வழி லாபமடைய இந்திய அரசு மற்றும் இலங்கை அரசின் கட்டுக்கதையை தமிழர்களின் கலை, இலக்கியவாதிகளிடம் விற்றது.
அறிவுசீவிகள் என்று சொல்லப்படுபவர்களும் பெரும்பான்மையாக இந்த பச்சைப்பொய்யை கண்டுகொள்ளாமல் மெளனம் காத்து வருகிறார்கள். இந் நிலையில் மே பதினேழு இயக்கமும், அறிஞர்களும், மீனவர் தலைவர்களும் இணைந்து காலச்சுவடின் கள்ளத்தனத்தை அம்பலப்படுத்தும் விதமாக சென்னையில், செ.தெ. நாயகம் பள்ளியில் கருத்தரங்கை நடத்தியது. விளக்க அறிக்கையை காலச்சுவடுக்கும் சென்று சேர்த்தது. இதுவரை இதற்கு எந்த வகையிலும் பதில் அளிக்காமல், தமது பிராண்டுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்கும் வகையில் என்றும் இல்லாத ஆர்வத்துடன் இன்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை பற்றிய கூட்டத்தை தமிழீழ ஆதரவுப் போராளிகளை பேச்சாளர்களாகவும், இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைக்கு எதிராக மிகச்சிறப்பாக பல ஆண்டுகளாக செயல்படும் பேரா. திரு. சூரியநாரயண் அவர்களையும் இணைத்து தமக்கே உரிய சாணக்கிய பாரம்பரியத்தை காக்கும் வகையில் நடத்த இருக்கிறது. நேர்மையான இதர பேச்சாளர்களின் தகுதியின் வழியே தமது பிரீமியம்-பிராண்டு காலச்சுவடின் நன்மதிப்பை தக்க வைத்து கொள்ள நடக்கும் நாடகமே இந்த கருத்தரங்கம். இதன் மூலம் தம் மீது சுமத்தப்படும் ‘தமிழின’ எதிர்ப்பு முத்திரையை இந்த அப்பாவி நேர்மையாளர்-போராளிகளை பலி கொடுத்து காப்பாற்றிக்கொள்ளுவதே இதன் உள்ளடக்கம்.
சாதி ஆதிக்கம் நீடித்து நிலைக்கும்படியாக இந்தியாவை உருவாக்கும்போது தமது சனநாயக முகத்தைக் காக்க உயர்திரு அய்யா.அம்பேத்கர் அவர்களைப் பயன்படுத்திய ஆதிக்க சாதி இந்துக்களின் வழி வந்தவர்கள் தானே இவர்கள்.
இந்த கருத்தரங்கிற்குப் பிறகு தமது புலம்பெயர் மார்க்கெட்டை (சந்தையை) காலச்சுவடு காத்து கொள்ளும். சந்தை சிதறிப்போகாது சாமர்த்தியமாக ஒருங்கிணைக்கும் முயற்சி மட்டுமல்ல இதன் மூலம் போலி ஆராய்ச்சியாளர் திரு. சூரியநாராயன், ஒன்றும் அறியா அப்பாவி தமிழின ஆதரவாளர்களுக்கு ஒரு அறிவுசீவியாய் அறிமுகம் ஆவார். இதன் பிறகு இவர்களின் விஷம் கொஞ்சம் கொஞ்சமாய் நமது தலையில் ஏற்றப்படும். இந்த மாபெரும் திட்டங்களின் துவக்க புள்ளியா இது அல்லது தொடர்ச்சியா?.
எங்கள் கேள்வி காலச்சுவடினை நோக்கியே...
காலச்சுவடு தமிழீழ விடுதலையின்பால் கருத்தரங்குகள் நடத்துவதில் நமக்கு எதிர்ப்பு கிடையாது, ஆனால் அது விடுதலை மற்றும் உரிமையின் மேல் இருக்கும் விருப்பால் என்பதைக்காட்டிலும் தமது வியாபாரத்தினை தக்க வைத்துக்கொள்வதே என்னும்போது அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. மேலும், மீனவர் பிரச்சனைக்கான நமது எதிர்வினைக்கு நேர்மையான பதிலை அளிக்காமல் தமிழர் மீது அக்கறை செலுத்துவதாக காட்டிக்கொள்ளும் காலச்சுவடின் கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது. எதிர்கருத்துகளுக்கும், மறுப்புகளுக்கும் பதில் அளிக்காமல் அதை புறக்கணிப்பது என்பது சனநாயகக் கடமையைக் கொச்சைப்படுத்துவதாகும். இதுவரை இந்த விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்காத காலச்சுவடு இந்த கருத்தரங்கை நடத்துவதன் நோக்கம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
திரு. சூரியநாராயண் விடும் கட்டுக்கதைகளை எம்மால் எதிர்கொள்ளமுடியும், அதை தகர்க்கவும் முடியும். ஆனால் இம்மாதிரியான போலி ஆசாமிகளையும், பாசிச ஆராய்ச்சியாளர்களும் காலச்சுவடு போன்ற பத்திரிக்கைகளால்தான் மக்களிடம் சென்று சேர்கிறார்கள். எமது போராட்டம் காலச்சுவடின் கயமைத்தனத்தை நோக்கியே. ஒரே சமயத்தில் இந்திய-இலங்கை கூட்டு சதித்திட்டம் இந்தியாவின் அறிவுசீவி பத்திரிக்கைகளான எகனாமிகல்-பொலிடிகல் வீக்லி, தெகல்கா மற்றும் தமிழ்நாட்டின் ‘அறிவுசீவி’ காலச்சுவடு பத்திரிக்கைகளில் - சனவரி மாதம் 23ம் தேதி அன்று தமிழக மீனவர் செயக்குமார் படுகொலைக்குப் பிறகு - பிப்ரவரி, மார்ச் மாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இவ்வாறு அரசுகளின் அயோக்கியத்தனத்திற்கு துணைபோகும் ஒரு பத்திரிக்கை எவ்வாறு நேர்மையானதாய் செயல்பட முடியும். களைகள் மட்டுமே வயல்வெளியாய் தமிழக கருத்துக்களம் மாறிக்கிடக்க, இந்த இனப்படுகொலைக்கு பிறகாவது இதை நாம் தடுப்பது நமது வரலாற்றுக்கடமை அல்லவா. கருணையில்லாமல் செயல்படும் இந்த நிறுவனங்களை அதே அளவிலான வேகத்தோடும், உறுதியோடும் நாம் வெளியேற்றவேண்டும்.
இலங்கை-இந்திய அரசு நடத்தும் மீனவர் படுகொலை மேலும் நான்கு அப்பாவிகளை கடந்த ஏப்ரல் 10ம் தேதி காவு வாங்கியுள்ள நிலையில், தனது அயோக்கியத்தனமான கருத்து பரப்பலுக்கு பதில் சொல்லாமல் காலச்சுவடு இந்தமாதிரியான போலிக் கருத்தரங்குகள் நடத்த அனுமதிக்கப்படக் கூடாது. இதை எதிர்கொள்வோம். போலிகளை, துரோகிகளை வெல்வோம். எதிரிகளை எதிர்கொள்ள நமது களத்தை நாமே காப்போம்.
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்.
காலச்சுவடின் கயமைக் கட்டுரை: http://www.kalachuvadu.com/issue-135/page20.asp
காலச்சுவடிற்கன மே பதினேழு இயக்கத்தின் பதில்: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13754&Itemid=263