சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் "இத்தனை வருடங்கள் அரசியலில் இருந்து இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன சாதித்தன?" என்று கேட்டார். அவர் கேட்ட கேள்வி நிச்சயமாக சிந்தனைக்கு உரியது.

சுதந்திர போராட்ட காலத்திலும், அதற்குப் பிறகும் இடதுசாரிகள் அரசியலில் பெற்று வந்த முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டவில்லை. காரணம் அவர்களது பார்வையில் ஜனநாயகம் அவ்வளவாக இல்லாததுதான். அவர்களது கோட்பாடுகள், சிந்தனைகள், சட்ட திட்டங்கள் அனைத்தும் உலகளாவிய கம்யூனிச சிந்தனையைச் சார்ந்து இருப்பதால் ஜனநாயக கட்டமைப்பில் உள்ள இந்திய மக்கள் இடதுசாரிகளை சற்று வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்.

தொழிலாளர்கள் ஆதரவு என்பதுதான் அவர்களது ஒரே பலமாக‌ உள்ளது. தொழிலாளர்கள் நலத்தில் அதிக அக்கறை கொண்ட கட்சிகளாக இடதுசாரிகள் நம்பப்படுவதால் அரசியல் முக்கியத்துவம் நாடு முழுதும் இருந்தே வருகிறது.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அரசுத் துறைகள் எப்படி செயல்படுகின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு அரசு அலுவலகத்தில் நம் வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொள்ள எவ்வளவு முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழிற்சங்கங்கள் காட்டும் தீவிரம் காரணமாக ஓரளவாவது நம்மால் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்த முடிகிறது.

எந்த அரசும் முதலில் யோசிப்பது கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பைப் பற்றித்தான். இது நம் மக்களுக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தருகிறது என்பதை உணர வேண்டும். நன்றாக ஆய்ந்து பார்த்தால், அரசின் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் பின்னால் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கை சிறிய அளவிலாவது காரணமாக இருந்திருக்கும்.

முஸ்லிம்க‌ளுக்கு ஆதரவளித்து அவர்களது நலனுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்பதை மறுக்க முடியுமா? இன்னும் குறிப்பாக சொல்வதானால், 'பா.ஜ.க.வுடன் கூட்டணி என்றும் நிச்சயமாக வைக்க மாட்டார்கள்' என்று கம்யூனிஸ்டுகளை மட்டுமே கூற இயலும் அல்லவா? அது சரியோ, தவறோ, மதசார்பற்ற அரசியல் என்பது கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை சுத்தமானது என்பதை அங்கீகரித்தே ஆக வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகளின் பிளவு அவர்களை பெரிய சக்தியாக மாறவிடாமல் தடுத்தது.

இந்தியாவைப் பொருத்த வரையில் அரசியல் என்பது பரபரப்புகளை அடிப்படையாகக் கொண்டது; பண வசதியை அடிப்படையாகக் கொண்டது; சாதிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயங்கள் அனைத்திலும் முடிந்தவரையில் விலகியே நிற்கும் இடதுசாரிகள் எப்படி வாக்காளர்களைக் கவர இயலும்?

நம் பார்வையில், இந்தியாவைப் பொருத்தவரை, அரசியல்வாதி என்பவர் சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர், வசதியானவர், காரில் செல்பவர் என்ற ஒரு கருத்தைக் கொண்டுள்ளோம். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து இடதுசாரி அரசியல்வாதிகளும் எளிமையாகத்தான் இருக்கிறார்கள். பஸ்சிலும், ஆட்டோவிலும் செல்லும் இடதுசாரித் தலைவர்கள் மிக மிக ஏராளம். என்ன காரணம்? அவர்களது கட்சிகளில் பணம் சம்பாதிப்பது அடிப்படை நோக்கமாக இல்லாமல் இருப்பதும், அப்படி இல்லாவிட்டால் கட்சியில் வளர முடியாது என்பதும்தான். இன்றும் கூட, இடதுசாரிகள் இந்திய அரசியலில் இருக்க வேண்டிய அவசியத்தை நம்மால் மறுக்க முடியாது.

-‍ தஞ்சை வெங்கட்ராஜ் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It