இந்த புத்தகத்தை வாங்கியபின் சுமார் ஒரு மாத காலம் எடுத்து பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தேன். அந்த மொழிநடைக்கு பழக அங்கங்கே படித்து பார்த்தேன். ஒன்றும் ஓடவில்லை. படிக்காமல் விட்டுவிடலாம் என்றாலோ, புத்தகம் ஒரு சவாலாக ஈர்த்துக்கொண்டு இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் வசீகரித்துக்கொண்டும்.

இதன் ஆசிரியருக்கு, "உங்கள் புத்தகத்தை பார்த்தேன், படிக்க முடிந்தால் தொடர்பு கொள்கிறேன்" என்று மின்னஞ்சல் இட்டேன். அதற்கு அவர், "தாண்டவராயன் எளிமையானவன், கொடுப்பதற்கு மனமும், கொஞ்சம் நேரமும் மட்டுமே அவன் கேட்பான்", என்று பதில் சொன்னார். ஆசிரியர் பா.வெங்கடேசனின் இந்த எளிமையான பதில் அந்த புத்தகத்தின் முடிச்சுகளை அவிழ்த்தது. படிக்க முடிந்தது.

தாண்டவராயன் கதை படித்ததை ஒரு ஆத்ம அனுபவமாக உணர்கிறேன். அறிவின் எல்லையில் நின்று இதைப் பற்றி பேச முடியாது. என் வியப்பையும், பிரமிப்பையும் பதிவு செய்ய விரும்புகிறேன். பத்து பக்கங்கள் படித்தால் நிறுத்திப் படிக்க சொல்லும்; மனம் நழுவிவிடும். அப்படிப்பட்ட மொழி நடை. தொடர்ச்சியாக படிக்க முடியாததால் ஒன்ற முடியாத உணர்வு. நம்மை இழந்து கதைக்குள் போகமுடியாதவாறு விழிப்புடன் அணுக வேண்டி இருந்தது.

பத்து நாவல்களை அடக்கிய ஒரே நாவல். முற்றுப்புள்ளி வருமா என நீண்ட தேடலை கொடுக்கும் வரிகள், இடைவெளி அற்ற பத்திகள். ஒவ்வொரு பக்கமும் ஆழமான பல செய்திகளை கொண்டது. சின்ன சின்ன வெளிப்படலாய், நம்மை திகைக்க வைத்து, பெரிய பெரிய விஷயங்களை கதை நெடுகிலும் அள்ளி குவித்திருக்கிறார் ஆசிரியர்.

அவர் தேர்ந்தெடுக்கும் இடத்திற்கு ஏற்ப கடுமையான உழைப்பின் மூலம் கதை களனை, பாத்திர வார்ப்பினை மொழிநடையின் மூலம் வேறுபடுத்தி சிறப்பாய் சொல்லி செல்கிறார். காட்டாற்று பெருவெள்ளம் எனவோ தவழும் நதி எனவோ, தடையற்ற ஓட்டம் எனவோ வார்த்தைகளுக்குள் அடைத்துவிட முடியா நடை அழகு.

ஆசிரியர் அவருடைய நேர்மை, ஈடுபாடு, உழைப்பு மூலம் இதை சாத்தியமாக்கி உள்ளார் எனினும் மனித எத்தனத்தின் எல்லையற்ற சாதனைக்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.

புத்தகத்தை ஒருமுறை படித்து முடித்தபின் படிக்க ஆரம்பிப்பதே ஆரம்பமாக இருக்கும். எத்தனை முறை படித்தாலும் மறுபடி படிக்கும்போது பெற்று கொள்ள வேண்டிய  ஏராளமான விஷயங்கள். நாம் வாழ்ந்து அனுபவித்த வாழ்வின் அனுபவங்களை, துயரங்களை, சுகங்களை, நம் இருப்பை, நம் இருப்பிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஏதோ ஒரு விதத்தில் தொட்டு செல்லும் அற்புத கலவை.

ஒவ்வொரு பக்கத்திலும், ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை நம் ஈடுபாட்டை சோதனை செய்யும் நடை. ஒரு குறிப்பிட்ட அளவை  கடந்தபின் தானே நம்மை நகர்த்திசெல்லும், அதே சமயம் நம்மை வேறுபக்கம் திரும்ப விடா வசீகரம். உரையாடல்கள் உரைநடையாகவே எழுதப்பட்டிருக்கும் உத்தி எண்ணற்ற கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட நேர்த்தி.

ஒரு ஆரம்பம் மெதுமெதுவாய் விரிந்து அதன் எல்லையை அடையும்போது திகைப்பை ஏற்படுத்தும் அற்புதமான எழுத்து. அந்த திகைப்பு அடங்கி அடுத்த ஒன்று ஆரம்பித்து விரியும். இந்த பகுதிதான் இந்த நாவலின் சிறப்பு என்று பிரமிக்கும்போது அதை தாண்டி விரியும் மற்றொரு இடம். இப்படிப்பட்ட இடங்கள் அநேகம். மனவெளியின் மாயக்குகையை திறந்து எல்லைகளற்ற வெளியில் நம்மை நிற்க செய்யும் அற்புதம்.

ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்கிறார், "வியாசம் முழுவதுமே ஒரு மாயக்குரல். உள்ளே பயணிப்பவன் காணும், அல்லது அவன் காண வேண்டிய, காட்சிகளை பற்றிய வர்ணனைகளை அவனுக்கு பதிலாக அதை வாசிப்பவனுக்கு தெரியப்படுத்திகொண்டே இருக்கிறது", அதுவேதான் தாண்டவராயன் கதையும்.

இலக்கிய ஆர்வலர்கள் இதை வாசிக்க வேண்டும். வாசித்தபின் இதற்கான அமர்வு ஒன்றை  நடத்த வேண்டும். இதன் ஆசிரியரிடம் இந்த நாவல் குறித்தான விரிவான உரையாடல் அரங்காக அது அமைய வேண்டும் என்பது என் ஆவல்.

Pin It