பூமி தோன்றியது முதல் மெல்ல மெல்ல உருவானவை கிராமங்களே. இயற்கைத் தன்மை மாறாமல், கெடாமல் இருப்பவையும் இருந்தவையும் கிராமங்களே. கிராமங்களே நகரமாய் மாற்றமடைந்து உள்ளன. கிராமங்கள் அருகுவதும் நகரங்கள் பெருவதும் தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாதது. நகரத்தில் வாழ்பவனும் மாநகரத்தில் வசிப்பவனும் கிராமத்தில் இருந்து வந்தவனாகவே இருப்பான். கிராம வாசம் இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. மாநகரில் முன்ண்னியில் இருக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் கிராம நினைவுகள் அழியாமல் அலை பாய்ந்த படியே இருக்கும். கவிஞர் நா. முத்துக்குமாரிடமும் கிராமம் பசுமையாகவே உள்ளது என்பதன் அடையாளமே ‘கிராமம் நகரம் மாநகரம்’.

‘‘கிராமம், பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது’’ என்று தொடங்குகிறது ‘நினைவில் காடுள்ள மிருகம்’. தொடர்ந்து அம்மாவின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள சில்லறைகள், அப்பாவின் சட்டைப் பையிலுள்ள பணம் ஆகியவை குறித்தும் அதன் மொழியிலேயே பேசியுள்ளார். ஒவ்வொன்றையும் ஒவ்வோர் உலகமாகக் காட்டியுள்ளார். சில்லறையை முன் வைந்தாலும் கிராமத்தையே முன்னிறுத்துகிறார். கிராம நினைவுகள் என்றும் அழியாது என்கிறார். எல்லா மனிதர்களையும் ‘ நினைவில் காடுள்ள மிருகம்’ என்கிறார.  தன்னையும் அவ்வாறே அடையாளப் படுத்திக் கொள்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ‘பால்யம்’ பொதுவானது.  கிராமத்தையும் நகரத்தையும் பொருத்து வேறுபடுகிறது. எந்தளவில் வேறுபடுகிறது என்று ‘உறைந்து போன நதி’ யில் தெளிவு படுத்தியுள்ளார். பால்யங்களின் நதியையே உறைந்து போன நதி என்கிறார். கிராமத்து விளையாட்டுகளையும் அதன் விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளார். நகரத்தில் பால்யம் சிறைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காதல் குறித்து பேசுகிறது ‘விண்மீன்களின் ரகசியம்’. கிராமத்தில் காதல் அரும்புமிடங்களை வரிசைப் படுத்தியுள்ளார்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்தது இவ்விடமே என்கிறார். நகரத்துக் காதல் தட்டச்சு நிலையங்களில் தோன்றுகிறது என்பது ஏற்கக்கூடியதே. மாநகரத்தில் கடல் கரை என்கிறார். மாநகரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? வாய்ப்புகளை அதிகமாயிற்றே. ’’எங்கு தோன்றியாலும் உண்மைக் காதலின் ஜூவாலை இதயங்களின் அடிவரரத்தில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்’’ என்று காதலின் மகத்துவத்தைக் கவித்துமாகக் கூறியுள்ளார்.

ஒரு தொலைக் காட்சிப் பெட்டியின் வருகை கிராமத்திற்குள் எவ்வாறு நிகழ்நத்து என்று ஒரு சிறுவனின் மனப்பான்மையுடன் எழுதியுள்ள கட்டுரை ‘ஞாயிற்றுக் கிழமை வெள்ளிக்கிழமை’. இன்று தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பையும் அதன் தீமைகளையும் விவரித்துள்ளார். கதை சொல்லும் பாட்டிகளை திண்ணைக்கு அனுப்பியதையும் புத்தக வாசிப்பு அற்றுப் போனதையும் வருத்தமுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

‘நெடுநாள் வாடை’ வித்தியாசமானது. கிராமத்தில் இருந்து மாநகரம் வந்து சினிமா கனவில் சிக்கி முன்னேற முடியாமல் தவிக்கும் ஒருவனின் மனக்குமுறலை எடுத்துரைத்திருந்தது. ’’மாநகரம் வெற்றிகளின் பாதையில் உறவுகளை பலி கொடுத்த படி விரைந்து கொண்டிருந்தது’’ என்பது எடுத்துக் காட்டத்தக்கது. ஏராமானவை எடுத்துக் காட்டுக்குரியனவாக தொகுப்பெங்கும் விரவியுள்ளன. ’மைதானத்தில் விளையாடுபவன்’ பகுதியிலும் சினிமா ஆசையில் காத்து கருகும் ஒருவனைப் பற்றியே உள்ளது.

‘‘தலை குளித்த ஓர் இளம் பெண்ணின் கூந்தல் வகிட்டைப் போல் கிராமங்களிருந்து ஒற்றையடிப் பாதைகள் பிரிகின்றன. ’’ என்று வருணித்து அதன் அழகியலைக் கூறியவர் நகரம், மாநகரம் கூட்டிச் செல்லும் ‘தார்ச் சாலைகள்’ஐ கறுப்புக் கொடி என்கிறார். சாலைகளை வைத்து கிராமம், நகரம், மாநகரம் ஆகியவற்றுக்கான முரண்பாட்டை விளக்கியுள்ளார். தார்ச்சாலைகள் மீது நெற்பயிர்களை அடிப்பதை விவசாயிகளின் உக்கிரம் என்பதும் நெற்கதிர்களின் மீது வாகனம் ஏற்றிச் செல்வதை மாநகரத்தின் வன்மம் என்பதும் நல்ல உதாரணம். சாலைகள் பற்றி நீளும் இப்பகுதியின் தலைப்பு ‘காட்டுமிராண்டியின் கால்தடம்’.

‘தேள் விழும் தாழ்வரம்’ பகுதியில் கிராமத்திலும் ‘மாநகரத்திலும் வீடு கட்டும் முறையை அனுபவத்துடன் கூறியுள்ளார்’. கிராமத்தில் கட்டப்படும் போது எல்லோருக்கும் தெரிவதாகவும் மாநகரத்தில் கட்டப்பட்ட பின்பே தெரிகிறது என்றும் இருவேறு நிலைகளையும் கூறியுள்ளார். ’’என தந்தை தமிழாசிரியர் நாற்பதாயிரம் புத்தகங்கள் எங்கள் வீட்டில் இருந்தன. எங்கள் வீடு முழுக்க புத்தகங்கள். புத்தக மூட்டைகளுக்கு நடுவில்தான் தூங்குவேன். காற்றடிக்கும் மாதங்களும் மழையடிக்கும் வேளைகளும் பாதுகாப்பதே எங்கள் கவலையாக இருந்த காலம் அது’’ என புத்தகத்துக்கும் அவருக்குமா தொடர்பை விவரித்துளார். புத்தகத்ரின் மீதான பிரியமும் வெளிப்பட்டுள்ளது.

கிராமத்தில் இருந்த ‘ரூரிங் டாக்கீஸ்’ மாநகரத்தில் உள்ள சினிமா தியேட்டர் ஆகிய இரண்டையும் ‘படம்’ பிடித்துக் காட்டியுள்ளார். இரண்டிலும் காதல்கள் எவ்வாறு பரிமாறப்படுகின்றன எனவும் அறியச் செய்துள்ளார்.

கிராமத்தில் பலருக்கு கதைநாயகியாக, கனவுக் கன்னியாக, பேரழகியாக தெரிந்த ‘காயத்ரி’ மாநகரத்தில் ‘ஒரு லட்சத்து பதின் மூன்றாயிரத்து நாற்பதாவது காயத்ரி’ யான சோகக் கதையைச் சொல்கிறது ‘ரசம் உதிரும் கண்ணாடிகள்’. கிராம உடையான ‘தாவனி புறக்கணிக்கப்பட்டு மிடி, சுடிதார், ஜூன்ஸ என ரசனை மாறியதைக் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய காலம் முதல் மாநகரத்தில் ஓட்டத் தொடங்கிய காலம் வரை ‘சைக்கிளாற்றுப் படை’யில் ‘‘ஓட்டிக்’ காட்டியுள்ளார். இரண்டு இடங்களிலும் சைக்கிள் ஓட்டுவதற்கு அதிகம் வேறுபாடில்லை எனினும் ‘சைக்கிளால் அடையாளப்படும் மனிதர்கள் நம் வாழ்வில் நிறைய உண்டு’ என்பது முக்கியமானது.

கிராமம் என்றால் பசுமையாக இருக்கும.  செடி, கொடிகள் படந்திருக்கும.  மரங்கள் அடர்த்தியாக உயர்ந்து விண்ணைத் தொட முயன்று நிற்கும். மரமேறாத கிராமத்து சிறுவர் இருக்க முடியாது. நா. முத்துகுமாரும் அதிலொருவர். ’’கிராமத்தில் மண்ணின் மீது இருந்த நேரமே அதிகம்’’ என்பதன் மூலம் அவரின் இளம்பிராயத்தை அறிய நேரிடுகிறது. உயரங்கள் மீதான அவரின் காதலின் அடையாளமாக ‘உயரங்களுடன் சூதாட்டம்’ என்னும் இப்பகுதி அமைந்துள்ளது.

‘சக்கரம் கட்டிய வண்ணத்துப் பூச்சி’ யாய் ரயிலைக் காட்டியுள்ளார். கிராமத்தில் ரயிலுக்குக் கை ஆட்டுவதையும் மாநகரத்தில் சிறுவர்களுக்கு அம் மன நிலை இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதையும் கூறியுள்ளார். இடையில் ரயில் நிலையங்களில் உள்ள ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ குறித்து பல்வேறு விதமாய்க் காட்சிப் படுத்தியுள்ளார்.

கிராமத்திலிருந்து மாநகரம் வந்து புகழ் பெற்ற ஒரு கவிஞராக விளங்குபவர் நா. முத்துக்குமார். அவர் வீட்டுக் கதவைத் தட்டும் கவிஞர்களைக் குறித்தது ‘மழைக்கு ஒதுங்கும் மாடார்’. இரு மாடுகளை விற்று கவிதைத் தொகுப்பையும் இரு மாடுகளை விற்று வெளியீட்டு விழா நிகழ்த்தியதையும் வாசிக்கும் போது கவிஞர்களின் நிலையை உணர்ச் செய்துள்ளார். உள்ளத்தை உரசியது. இந்நிகழ்வு ‘பட்டாம் பூச்சி விற்பவன்’ தொகுபபில் கவிஞர் நா. முத்துக் குமார் எழுதிய ‘என்மானார் புலவர்’ கவிதையில் உள்ள

பொண்டாட்டி தாலியை

அடகு வைச்சு

புஸ்தகம் போட்டேன்

தாயோளி... .

விசிட்டிங் கார்டு மாதிரி

ஓசியில் தர வேண்டியிருக்கு என்னும் வரிகளையே நினைவூட்டியது. கவிதை உலகில் கவிதையுடன் பிரவேசிப்பவர்களை வரவேற்கும் கட்டுரையாளர் கவிதை என்னும் பெயரில் கிறுக்குபவர்களையும் சாட தவறவில்லை. ’சண்முக சுந்தரத்தின் கதுரக் காதல்’இல் இவ்விமரிசனத்தைக் காண நேரிடுகிறது. சண்முக சுந்தரத்தை ஒரு பெண் பிரியராக சித்தரித்துள்ளார். மாநகர பெண்களை விரும்பிய இக்கிராமத்தானுக்கு ஒரு கிராம பெண்ணே மனைவியாக வர நேர்ந்தையும் கூறியுள்ளார்.

‘டீ சாப்பிடுங்க தோழர்’இல் ‘தோழர் லெனின் சுப்பையா’ என்னும் ஒரு பொதுவுடைமை வாதியைச் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அவர் இறந்து எரிக்கப்பட்ட போதும் எழுந்த தீயும் ‘செந்தீ’யாக இருததாக உணர்த்துகிறார்.

‘குறிஞ்சிப்பாட்டு’ல் பூக்களைப் பற்றி பேசி கிராம மணம் வீசச் செய்துள்ளார். கிராமம் பூக்களால் நிறைந்துள்ளதை அழகாகக் கூறியுள்ளார். ’மாநகரத்தில் மனிதர்களை வளர்ப்பதற்கே சிரமமாக இருக்கும் போது பூக்களை வளர்க்க இடமில்லை’’ என்று மாநகரத்தின் நெருக்கடியை விளக்கியுள்ளார்.

‘சித்தார்த்தன் பித்தனான இரவு’ ல் ‘வாழ்க்கை’யின் ஆகச் சிறந்த சுவாரஸயம் எதில் இருக்கிறது?’’ எனத் தொடங்கி கட்டுரை பல்வேறு வினாக்களை எழுப்பி ‘அப்படி இன்னும் நிறையக் கேள்விகள் கிராம்,நகரம்,மாநகரமென எங்கு வாழ்ந்தாலும் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகள் தான் தினசரி வாழ்க்கையின் மீது முப்பரிமாண வண்ணங்களை ஊற்றுகின்றன’ என்று வாழ்வதற்கான அர்ததத்தை, காரணத்தை எடுத்துக் காட்டுகிறார். ’’நாம் களிமண்ணாக இருக்கிறேhம். கேள்விகளே நம்மை வணைகின்றன’’ என சிந்திக்கவும் தூண்டுகிறார். ’பென்சில்கள் கூர் தீட்டபடுகின்றன’ என்பதிலும் ஒரு குழந்தையை ‘‘இரண்டாயிரம் வருக்ஷமா நீ கேட்க வேண்டிய கேள்விங்க நிறைய இருக்கு கேள்’’ என தூண்டுகிறார். வினாக்களே அறிவையும் பெருக்கும். ஆற்றலையும் வளர்க்கும். இக் கட்டுரை கிராமம்,நகரம்,மாநகரம்,கணினி,வீடு என ஜந்து பகுதிகளாக விரிந்துள்ளது. இவ்வாறு கட்டுரைகளில் சிலவற்றில் வித்தியாசத்தைக் காட்டியவர் இறுதிக் கட்டுரையான ‘ரயிலின் கடைசிப் பெட்டியும் ஜன்ஸ்டீனின் பியானோவும்’ கட்டுரையை கடித வடிவில் எழுதியுள்ளார். கிராமம் மாநகரத்திற்கு எழுதுவதாகவும் கிராமத்திற்கு மாநகரம் எழுதுவதாகவும் இரண்டு கடிதங்கள். ஒன்றையொன்று குற்றம் சொல்கிறது. குறை கூறுகிறது. முடிவில் கிராமம ‘‘தாழ்வு மனப்பான்மையையும் அன்பையும்’’ கொண்டுள்ளதாகவும் மாநகரம் ‘‘தன்னம்பிக்கையும் தேடல்களின் பதற்த்தையும்’’ கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டும் பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து மாநகரத்தில் வசித்து வரும் ஒரு மனிதனின் மனவோட்டங்களை கட்டுரை நெடுக வெளிப்படுத்தியுள்ளார். கிராமம், நகரம், மாநகரம் என மூன்றையும் கட்டுரை வாயிலாக காட்டியிருந்தாலும் கிராமத்தையே முன்னிறுத்துகிறார். முதன்மைப் படுத்துகிறார். கிராமத்தையே சிறந்தது என்கிறார். ஏன் என்பதற்கு காரணத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார். கிராம நன்மைகளையும் மாநகர தீமைகளையும் பட்டியலிட்டுள்ளார். தற்போது மாநகரத்தில் வாழும் நா. முத்துகுமாரின் மனத்தில் கிராமமே வாழ்கிறது என ஒவ்வொரு கட்டுரையிலும் உறுதிப்படுத்தியுள்ளார். கிராமம், நகரம், மாநகரம் ஆகியவற்றில் இடைப்பட்டதான நகரம் பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. கிராமம், நகரம், மாநகரம் குறித்ததானாலும் மனிதர்கள் சிலரையும் அறிமுகம் செய்கிறார். ஓவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமாய் நெஞ்சில் நிழலாடுகின்றனர். கவிதை மொழிக்கும் கட்டுரை மொழிக்கும் இடைப்பட்டதாக உள்ளது மொழி நடை. வசீகரமான சொற்கள் வாசிப்பை விறுவிறுப்பாக்குகின்றன. கட்டுரை ஒவ்வொன்றிலும் ஒரு மேற்கோள் காட்டியுள்ளார். பெரும்பாலானவை கவிதைளே.

அத்தனைக்குப் பிறகும்

அழாமல இருந்தோம்

அழுகை வராமலில்லை

ஒரு வைராக்கியம்

உங்கள் முன்னால் அழக்கூடாது (மனுக்ஷயபுத்திரன)  என்பது ஓர் எடுத்துக்காட்டு. கட்டுரையினூடாக குழந்தைத் தனமான கோட்டோவியங்கள் தொகுப்பை அலங்கரிக்கின்றன. வரைந்தவரும் நா.முத்துகுமார் என்று அறியும் போது பாராட்டவே செய்கிறது மனம். ஒரு கவிஞராக அறியப்பட்டவர் ஒரு கட்டுரையாளராக பரிணாமம் பெற்று பல்விதமான பரிமானங்களை இத்தொகுப்பில் அளித்துள்ளார். கிராமங்களை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் நா. முத்துகுமார் முயன்றுள்ளார். பாராட்டுக்கள்.

 வெளியீடு

 பட்டாம்பூச்சி பதிப்பகம்

 60 விவேகா அபார்ட்மென்ட்ஸ விவேகானந்தர் சாலை சாலி கிராமம் சென்னை 600093.  

- பொன்.குமார்

Pin It