குழந்தையின் சுயசரிதை - 4

22.06.2010
செவ்வாய் கிழமை

நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவர்கள் சில பழக்க வழக்கங்களை பாரம்பரியமாக கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெற்றி பெற வேண்டிய முதல் 3 மாணவர்களை முன்கூட்டியே தீர்மானித்திருப்பார்கள். அந்த 3 பேரில் வாத்தியார் மகன் சுரேசும் ஒருவனாக இருப்பான். ஜீரணிக்கவே முடியாத இந்தக் கயவாளித்தனம் பற்றி நன்கு அறிந்திருந்தும், அதைப்பற்றி வெளியே கூற முடியாமல் அவர்களது சதி வேலையில் ஈடுபட வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு உட்பட்டு அசிங்கமாக தலையை தொங்கவிட்டபடி அந்தக் கட்டுரையை எழுதினேன்.

கட்டுரை :

நான் ஜனாதிபதியானால் ஒரு கட்டுரைப் போட்டியில் ஈடுபட விரும்பாத ஒரு மாணவனை வற்புறுத்தி ஈடுபட வைக்க நினைக்கும் ஒரு ஆசிரியரை 6 மாதம் சம்பளம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்வேன்.

அந்த மாணவன் ஏன் அந்தக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பவில்லை என்பதை ஒரு கேசட்டில் பதிவு செய்து, அதை தினசரி நூறு முறை அந்த ஆசிரியர் கேட்க வேண்டும் என கடுமையாக எழுத்துப்பூர்வ உத்தரவிடுவேன். மேலும்,

மனைவி மட்டுமல்ல மாணவனின் உள்ளக் குமுறல்களுக்கும் மதிப்பளிப்பதைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி வைத்து அதில் கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்வேன் அந்த ஆசிரியரை.

(அந்த கட்டுரை நிச்சயமாக நன்றாக இருக்காது. அதெப்படி தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மையில் நல்ல படைப்பை உருவாக்க முடியும். நிச்சயமாக முடியாது. நன்றாக இல்லாத அந்தக் கட்டுரைக்கு தனி தண்டனை உண்டு)

மேலும், பள்ளிகளில் பரிசு கொடுத்து தரம் பிரிக்கும் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு (ஆசிரியர்களுக்கு) குற்றப்பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தண்டனை கொடுக்க வழிவகை செய்வேன்.

ஏனெனில் பரிசு கொடுப்பதால் பெறக்கூடிய உத்வேகம் வெறும் 3 பேருக்குத்தான். ஆனால் பரிசு கிடைக்காததால் பெறக்கூடிய தாழ்வுமனப்பான்மை ஏராளமானோரை பாதிக்கக் கூடியது. மகாத்மா காந்தி ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால், ஆயிரம் மாணவர்களுக்கு உத்வேகம் கிடைக்காமல் போகலாம். ஆனால் ஒரு மாணவன் கூட தாழ்வு மனப்பான்மை அடைந்து விடக்கூடாது.

மேலும்,...............

சீருடை அணிய மறந்துவிட்டால் இந்த கேள்வியை மட்டும் கண்டிப்பாக கேட்கக் கூடாது.

‘காலைல சோறு திங்கறதுக்கு மறந்தியா”

ஒரு ஆங்கில பேய் படத்தில் பார்த்திருக்கிறேன். அந்தப் பேயின் வாய் தைக்கப்பட்டிருக்கும், அந்தப் பேயை போல் தங்கள் நாட்டு ஜனாதிபதி தங்களை நடத்திவிடக் கூடாது என்று நிஜமாக நினைக்கும் பட்சத்தில், அந்த வார்த்தையை கூறுவதற்கு முன் ஒரு ஆசிரியர் நூறுமுறை யோசிக்க வேண்டும்.

கடைசியாக.................

ஒரு ஆசிரியருக்கு எந்த மாணவன் முதலாவதாக வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூட அறவே இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட மாணவனை வெற்றி பெற வைப்பதற்காக தனது திறமையை பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் வெறும் நீரைப் போல. அவர்கள் எந்தப் பாத்திரத்தில் ஊற்றப்படுகிறார்களோ, அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை பெறுகிறார்கள் என்பது நிச்சயமான உண்மை. அதனால் பாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு கடுமையாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இன்றோடு உங்களுக்கு ரத்தாகிறது. இச்சட்டத்தை மீறி வெற்றிபெறுபவர்களையும், தோல்வியடைபவர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆசிரியர்கள் மீது போலி கஞ்சா கேஸ் போடப்பட்டு உள்ளே தள்ளப்படுவார்கள்.

இப்படிக்கு
உங்கள் அனுபுள்ள மற்றும் மதிப்பு மிக்க
ஜனாதிபதி

ஆனால் குள்ளநரிகள் தோற்றுப் போயின. அவற்றிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார்கள் இந்த ஆசிரியர்கள். இந்த முறை சுரேசுக்கு இரண்டாம் பரிசு. முதல் பரிசுக்கு தகுதியானவன் நான்தானாம். அவர்கள் ஒரு ஜனாதிபதிக்கே பரிசு (லஞ்சம்) கொடுத்து அமைதி படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் சிறுவனிடம் பணிந்து போகவில்லை. ஒரு சிறுவனின் உண்மையான, கோபமான கேள்விகளுக்கு பணிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களால் அவர்களது மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியவில்லை. நிலைமையை சரி செய்ய பரிசுக்குரியவனாக, பரிசை எதிர்ப்பவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த கேள்விகள் ஒரு அம்பை போல் அவர்களை நோக்கி நிற்கிறது. அந்த அம்பை அவர்கள் சமாதானப்படுத்தியாக வேண்டும். அல்லது ஒடித்துப் போட வேண்டும். நான் எதிர்பார்த்தது ஒடித்துப் போடுவார்கள் என்பது. ஆனால் அவர்கள் புத்திசாலிகள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.

நான் என்ன சும்மாவா? இந்தியன் படத்தை தியேட்டரிலேயே 3 முறை பார்த்தவன். விஷச் செடி தன் மகனானாலும் சரி அல்லது ஒரு ஆசிரியரானாலும் சரி, கத்தியால் குத்தி அந்த இடத்தில் மாவு கிண்டுவது போல் கிண்ட வேண்டும். இதுதான் சங்கர் அங்கிள் சொல்லிக் கொடுத்த பாடம்.

ஆனால் பரிசாகக் கொடுக்கப்பட்ட அந்த ஜாமிட்ரி பாக்சை நினைத்துப் பார்க்கும் பொழுது..............

நேற்று மல்லிகா அழுத அழுகைதான் நியாபகத்திற்கு வருகிறது. அவள் தனது ஜாமிட்ரி பாக்சை தொலைத்துவிட்டு கடந்த இரு நாட்களாக தனது அம்மாவிடம் மறைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஜீனியஸ் வள்ளுவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொய்மையும், வாய்மையிடத்து என்று அவர் கூறியிருக்கிறாராமே?

நல்லவேளை அவசரத்துக்கு அவராவது உதவிக்கு வருகிறாரே. வள்ளுவரா? இந்தியன் தாத்தாவா? என எடைபோட்டுப் பார்த்ததில் வள்ளுவர் தான் வெற்றி பெற்றார். பின் மல்லிகாவின் கண்ணீர் துடைக்கப்பட்டது.

பின் குறிப்பு :

சுரேஷ் தனக்கு கிடைத்த இரண்டாம் பரிசை மல்லிகாவிடம் கொடுக்க முயற்சித்திருக்கிறான். தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், நிராகரிக்கப்பட்ட துக்கத்தில் அவன் அழுது வழிந்ததுதான். மல்லிகா புத்திசாலிப் பெண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- சூர்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It