நேற்றிரவு தான் அந்த மருவைப் பற்றி கனாக் கண்டேன். நான் அந்த வார்த்தையை மட்டும் சொன்னால் போதும், நீ புரிந்து கொள்வாய். அந்த மரு - எத்தனை முறை அதனால் நான் உன்னிடம் ஏச்சு வாங்கி கட்டியிருக்கிறேன்.

என் வலது தோளில், அல்லது சரியாய் சொல்வதானால், என் முதுகின் மேல் அது உள்ளது.

“ஏற்கனவே அது ஒரு அவரை விதையளவு பெரிதாகி விட்டது. அதைத் தொட்டு விளையாடிக் கொண்டிரு, ஒருநாள் உடம்பெல்லாம் முளைக்கப் போகிறது”.

நீ அதைச் சொல்லி என்னை வழக்கமாய் கேலி செய்வாய். ஆனால் நீ சொன்னது போல், அது ஒரு மருவை விட பெரிது பெரிதாய், ஆச்சரியப்படும் படியாய், வீங்கிப் போய் உருண்டையாய் ஆகிவிட்டது. குழந்தையாய் இருக்கையில், படுக்கையில் படுத்துக் கொண்டே நான் அதைத் தொட்டு விளையாடுவேன். நீ முதன் முதலில் அதை கவனித்தபோது எவ்வளவு அவமானமடைந்தேன் தெரியுமா!

நான் அழுதுகூட விட்டேன்; உன் ஆச்சரியம் நினைவிருக்கிறது.

“நிறுத்து சயோக்கோ.. நீ தொடத் தொட அது மேலும் பெரிதாகும்”. அம்மாவும் என்னை கண்டித்தாள். நான் அப்போது சிறு குழந்தை, 13-ன்று கூட ஆயிருக்காது; பிற்பாடு நான் இந்தப் பழக்கத்தை தக்க வைத்துக் கொண்டேன்.

அதைத் தவிர எல்லாவற்றையும் நான் மறந்து போயிருந்தேன்; அது மட்டும்தான் தொடர்ந்தது.

நீ முதன் முதலில் அதை கவனித்தபோது, நானொரு மனைவி என்பதை விட குழந்தையாய் இருந்தேன் என்பதே பொருத்தம். ஒரு ஆணாகிய உன்னால் என் அவமானத்தை புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் வெறும் இழிவு என்று சொன்னால் அர்த்தமாகாது. ‘இது பயங்கரமானது’, நான் நினைத்தேன். திருமணம் அக்கணம் ஓர் அச்சமூட்டும் விஷயமாக தோன்றியது.

என் எல்லா ரகசியங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாய் உணர்ந்தேன் - நான் கூட அறிந்திராத ரகசியங்களை ஒவ்வொன்றாய் நீ நிர்வாணப்படுத்தி விட்டது போல் - எனக்கு எந்த புகலிடமும் இல்லாதது போல் நீ ஆனந்தமாய் தூங்கிப் போனாய்; சிறிது நேரம் நான் சற்று ஆசுவாசம் அடைந்தேன், கொஞ்சம் தனியாய் உணர்ந்தேன். சில நேரம் என் கை பழையபடி அந்த மருவை நோக்கிப் போனதாய் திடுக்கிட்டு எழுந்தேன்.
“என் மருவைக் கூட என்னால் இனிமேல் தொட முடியாது”. அம்மாவுக்கு கடிதம் எழுத நினைத்தேன். ஆனால் அப்படி நினைத்த கணமே முகம் கன்றி சிவப்பதை உணர்ந்தேன்.

“ஒரு மருவைப் பற்றி கவலைப் படுவது வீண் முட்டாள்தனம்”, என்று நீ ஒருமுறை சொன்னாய். நான் சந்தோஷமாக தலையாட்டினேன். ஆனால் திரும்ப யோசிக்காமல், என்னுடை அந்த நாசமாய் போன பழக்கத்தை நீ இன்னும் கொஞ்சம் நேசித்திருக்கலாகாதா என்று தோன்றுகிறது.

நான் அந்த மருவைப் பற்றி ரொம்பவே எல்லாம் வருத்தப்படவில்லை. யாரும் பெண்களின் கழுத்துக்குக் கீழே உற்றுப் பார்த்துத் திரிவதில்லை. “பூட்டப்பட்ட அறையைப் போல் தூய்மையானவள்” என்ற பிரயோகம் சிலநேரம் ஒரு விகாரமான பெண்ணை வர்ணிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு மருவை, அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், கோரம் என்றெல்லாம் ஒரு போதும் சொல்ல முடியாது.

அந்த மருவை தொட்டு விளையாடும் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டதென்று ஏன் கற்பித்துக் கொள்கிறாய்? அந்த பழக்கம் ஏன் இப்படி உன்னை எரிச்சலடைய செய்கிறது?

“அதை நிறுத்து”, நீ சொல்வாய். “அதை நிறுத்து”. எத்தனை நூறு முறைகள் நீயென்னை கண்டித்துள்ளாய் என்பதை அறியேன்.

“உன் இடது கையைத்தான் பயன்படுத்தி ஆக வேண்டுமா?”, கடும் எரிச்சலில் நீ ஒருமுறை கேட்டாய்.

“என் இடது கையையா?”, அந்த கேள்வி என்னை திடுக்கிடச் செய்தது.

அது நிஜம்தான். நான் முதலில் கவனித்திருக்கவில்லை, நான் எப்போதும் இடது கையைத் தான் பயன்படுத்தி உள்ளேன்.

“அது உன் வலது தோள் மேல் உள்ளது. வலது கை இன்னும் சௌகரியமாயிருக்கும்”

“ஓ”, நான் என் வலது கையை உயர்த்தினேன். “ஆனால் இது அபத்தமாய் உள்ளது”

“அதில் கொஞ்சம் கூட அபத்தமில்லை”

“ஆனால் இடது கைதான் இயல்பாக வருகிறது”

“வலது கைதானே பக்கமாய் உள்ளது”

“வலது கையென்றால் அதை நான் பின்புறமாய் அல்லவா கொண்டு செல்ல வேண்டும்”

“பின்புறமாகவா?”

“ஆமாம், கழுத்துக்கு முன்னால் கையை கொண்டு வருவதா அல்லது முதுகுபுறமாய் இப்படி வளைத்துக் கொண்டு வருவதா என்பதுதான் கேள்வி”

அதற்கு மேல், நீ சொன்னதற்கு எல்லாம் அப்பிரணியாய் தலையாட்ட நான் ஆளில்லை. உனக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்குத் தேன்றியது: நான் முன் பக்கமாய் இடது கையை வளைப்பது உன்னிடமிருந்து என்னை பாதுகாப்பது போல், என்னை நானே அணைப்பது போல் உள்ளது. “அவரிடம் நான் அநியாயமாய் நடந்து கொண்டுள் ளேன்” என்று எனக்கு தோன்றியது.

நான் மெல்லக் கேட்டேன், “இடது கையை பயன்படுத்துவதில் என்னதான் தவறு?”

“இடக்கையோ வலக்கையோ, அதுவொரு கெட்டப் பழக்கம்”

“எனக்குத் தெரியும்”

“ஒரு மருத்துவரிடம் சென்று அதனை அகற்றிவிட்டு வா என்று நான் திரும்பத் திரும்ப கூறவில்லையா?”

“ஆனால் அது என்னால் முடியவில்லை. இழிவாக உள்ளது”

“அது மிக சுலபமான காரியம்”

“மருவை அகற்றுவதற்காக யாராவது மருத்துவரிடம் செல்வார்களா?”

“நிறைய பேர் போகிறார்கள்”

“முகத்தின் மத்தியிலுள்ள மருவிற்காக இருக்கலாம், கழுத்திலுள்ள மருவை நீக்குவதற்காக யாரேனும் போவார்களா என்ன? மருத்துவர் கேலியாக சிரிப்பார். கணவனுக்கு பிடிக்காததால் தான் நான் அதை நீக்க அங்கு வந்திருக்கிறேன் என்பது அவருக்குப் புரிந்து விடும்”

“அதைத் தொட்டு விளையாடும் பழக்கம் உனக்கு இருப்பதால் தான் நீ வந்திருப்பதாய் சொல்லலாம்...”

“அப்படியா... அதுவும் யாரும் கவனிக்காத இடத்திலுள்ள ஒரு சாதாரண மருவுக்காக. அந்த அளவிற்கே நீ என்னை பொறுத்துக் கொள்ளலாம் அல்லவா”

“நீ அந்த மருவை சீண்டாமல் இருந்தால் நான் எதற்கு கவலைப்படுகிறேன்”

“நான் வேண்டுமென்றே செய்ய வில்லை”

“நீ ஒரு பிடிவாதக்காரி. போதும். நான் என்ன சொன்னாலும் நீ திருந்தப் போவது இல்லை”

“நான் நிஜமாகவே முயற்சிக்கிறேன். நான் அதைத் தொடாமல் இருப்பதற்காக, உயர்ந்த கழுத்துப் பட்டி உள்ள இரவு அங்கியைக் கூட அணிந்து பார்த்தேன்”

“எத்தனை நாட்கள்?”

“அதை நான் தொடுவது தவறா என்ன?”

நான் எதிர்த்துப் பேசுவதாய் அப்போது உனக்குத் தோன்றியிருக்கும்.

“அதைத் தவறென்று எல்லாம் சொல்ல முடியாது. எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் தான் நிறுத்தச் சொன்னேன்”

“ஆனால் ஏன் இதை இப்படி வெறுக்கிறாய்?”

“காரணமெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீ அந்த மருவைத் தொட்டு விளையாடக் கூடாது. மேலும் அதுவொரு கெட்டப் பழக்கம். நீ அதை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்”

“நான் நிறுத்த மாட்டேன் என்று ஒருபோதும் சொல்லவில்லையே”

“மேலும் நீ அதைத் தொடும் போது எப்போதும் அந்த விபரீதமான தன்னிலை மறந்த பாவம் உன் முகத்தில் தோன்றுகிறது. அதை நான் நிஜமாகவே வெறுக்கிறேன்”

நீ சொன்னது ஒருவேளை சரியாக இருக்கலாம் - ஏனோ அந்த கருத்து என் இதயத்தில் ஆழமாய் சென்று பதிந்தது; ‘ஆமாம்’ என்று தலையாட்ட விரும்பினேன்.

“அடுத்த முறை நான் அப்படி செய்வதை பார்த்தால் என் கையில் சுளீரென்று அடித்து விடு. என் கன்னத்தில் கூட அறைந்து கொள்”.

“இரண்டு மூன்று வருடங்களாய் முயற்சித்த பின்னரும் இது போன்றதொரு அற்பப் பழக்கத்தை விட்டு விட முடியாததை நினைத்து உனக்கே கஷ்டமாய் இல்லையா?”

நான் பதில் அளிக்கவில்லை. நான் உனது இந்த சொற்களையே அசை போட்டுக் கொண்டிருந்தேன்; “நான் அதைத்தான் நிஜமாகவே வெறுக்கிறேன்”

இடது கையை கழுத்திற்கு இறுக்கமாய் இட்டு நிற்கும் எனது பாணி தனித்து கைவிடப்பட்டதான, பிடிப்பற்ற ஒரு தோற்றத்தை உனக்கு அளித்திருக்க வேண்டும். “தனிமை” என்றொரு பிரம்மாண்டமான சொல்லை இங்கு பயன்படுத்தத் தயங்குகிறேன். அதைவிட, அலங்கோலம் எனவும் கீழ்த்தரம் எனவும் கூறலாம். தனது சிறிய சுயத்தை காப்பாற்ற மட்டுமே விரும்பும் ஒரு பெண்ணின் பாணி அது. நீ வர்ணித்தது போலவே என் முகத்தின் வெளிப்பாடு இருந்திருக்க பேண்டும், “விபரீதமாய், தன்னிலை மறந்த முகபாவம்?”

நான் என்னை உன்னிடம் முழுமையாக ஒப்படைக்காததன், அல்லது நமக்குள் இடைவெளி ஒன்று உருவாகி உள்ளதன் அறிகுறியாய் அது உனக்கு தோன்றியதா? குழந்தைப் பருவத்தில் செய்தது போல் அந்த மருவைத் தொட்டவாறு பகற்கனவில் நான் ஆழ்ந்து விட்டபோது, என் உண்மையான எண்ணங்களை முக பாவமே வெளிப்படுத்தியதா?

ஆனால் ஏற்கனவே நீ என்னிடம் அதிருப்தி உற்றிருந்ததால் தான் இத்தகையதொரு அற்ப விஷயத்தை ஊதிப் பெரிதுபடுத்தினாய். நீ என்னிடம் மனநிறைவு அடைந்திருந்தால், இதைக் கண்டு சிரித்து விட்டு அப்போதே மறந்திருப்பாய்.

எனக்குள் கலவர மூட்டும் எண்ணமே இதுதான். வேறுசில ஆண்களுக்கு இந்த பழக்கம் கவர்ச்சியாய் தோன்றலாம் என்ற எண்ணம் திடீரென்று ஒரு நொடி தோன்றிட நான் நடுங்கிப் போனேன். உன்னுடைய காதல் காரணமாகத்தான் நீ அதை முதலில் கவனித்தாய். இப்போதும் கூட எனக்கதில் ஐயமில்லை. இத்தகைய சிறு எரிச்சல்தான் வளர்ந்து, மாறுதலடைந்து திருமண வாழ்வில் தன் அடிவேரைப் பாய்ச்சும். லட்சிய கணவன் மனைவி இடையே தனிப்பட்ட குணாதிசியங்கள் ஒரு பொருட்டல்ல. அதே நேரத்தில், எல்லாவற்றிலும் முரண்படும் தம்பதிகளும் இருப்பர். ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போகும் தம்பதியர் காதலிக்கின்றனர் என்றோ எப்போதும் சதா முரண்படுபவர்களை ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள் என்றோ சொல்ல முடியாது. ஆனால் நான் நினைப்பதும், நினைத்து மாளாததும் இதுவே; மருவைத் தொட்டு விளையாடும் எனது இந்த பழக்கத்தை நீ கவனிக்காமல் விடக்கூடாதா!

நீ என்னை நிஜமாகவே அடித்து உதைக்க வந்தாய். நீயேன் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளக் கூடாது, ஒரு மருவைத் தொட்டதற்காக நான் ஏனிப்படி அல்லல்பட வேண்டும் என்று நான் அழுதவாறே கேட்டேன். அது உன் கோபத்தின் மேல் மட்டம் மட்டுமே. குரல் நடுங்கிட, “எப்படி நாமிதை குணப்படுத்துவது?” என்று நீ கேட்ட போது, உன் அப்போதைய மனநிலையும், உன் செய்கையை எண்ணி நீ வருந்தவில்லை என்பதும் எனக்கு நன்றாகவே புரிந்தது.

நான் வெளியே யாரிடம் இதைப் பற்றி சொல்லியிருந்தாலும், உன்னை ஒரு முரட்டு, கொடுமைக்கார கணவன் என்று கருதியிருப்பர். சிறு அற்ப விஷயம் கூட நம்மிடையே உள்ள புகைச்சலை பெருந்தீயாக மாற்றிவிடும் புள்ளியை அடைந்து விட்டதனால், நீயென்னைப் போட்டு அடித்தது எல்லா குமுறல்களுக்கும் ஒரு வடிகாலைத் தந்தது.

“நான் ஒருபோதும் அதை விடப்போவதில்லை, ஒருபோதும்! என் கைகளை கட்டி விடுங்கள்” என்னை என் முழுமையை உன்னிடம் ஒப்படைப்பது போல், கைகளை இணைத்து உன் நெஞ்சிற்கு நேராக நீட்டினேன்.
நீ குழப்பம் அடைந்தாய் கோபத்தின் முடிவில் உணர்ச்சிகளெல்லாம் வடிந்து போக, பலவீனமாய் தோன்றினாய். என் முந்தானையை கிழித்து கயிறாக்கி கைகளைக் கட்டினாய்.

கட்டப்பட்ட கைகளால் நான் கூந்தலை நீவும் போது, உன் கண்களில் மிளிர்ந்த அந்த பார்வையை நான் ரசித்தேன். எனக்குத் தோன்றியது, “இம்முறை இந்த நெடுநாள் பழக்கத்தை மறந்து விடலாம்”. அப்போதும் கூட, யாரேனும் மருவை உரசி விட்டால் ஆபத்தே.

பிற்பாடு அந்த பழக்கம் திரும்பி வந்ததால் தான் உன் மிச்சமுள்ள அன்பும் ஒரேயடியாய் வற்றிப் போனதா? நான் உன்னை கைவிட்டு விட்டேன், என்ன வேண்டும் எனிலும் செய்து கொள் என்று சொல்ல நினைத்தாயா? நான் அந்த மருவைத் தொட்டு மீண்டும் விளையாடிய போது, நீ பார்க்காதது போல் நடித்தாய், எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்தாய்.

பிறகு அந்த விசித்திரமான சம்பவம் நடந்தது. அடி உதையால், கண்டிப்பால் மறையாத அந்த பழக்கம், ஒருநாள் காணாமல் போனது. எந்த தீவிரமான சிகிச்சை முறையும் பயன் அளிக்கவில்லை. அதுவாகவே மாயமாய் மறைந்து விட்டது.

“உனக்கென்ன தெரியும் - நான் இப்போதெல்லாம் மருவைத் தொட்டு விளையாடுவது இல்லை”, அந்த நொடி தான் கவனித்தது போல் நான் உன்னிடம் சொன்னேன்.

நீ முணுமுணுத்து விட்டு, “எனக்கென்ன அக்கறை” என்பது போல பார்த்தாய்.

நான் கேட்க நினைத்தேன், “உனக்கு அது முக்கியமே அல்லவென்றால் ஏன் என்னை அப்படி வைதாய்”.

நீ உன் பாட்டுக்கு, “இந்த பழக்கம் இவ்வளவு எளிதில் குணமடையக் கூடியது என்றால், என்னால் ஏன் அதை செய்ய முடியவில்லை” என்று கேட்க நினைத்திருப்பாய். ஆனால் நீ என்னிடம் பேசக்கூட மாட்டாய்.

உன் முகபாவம் இதைத்தான் சொல்வதாய் தோன்றியது; “மருந்துமல்ல, விஷமுமல்ல. எதற்கும் உதவாத ஒரு பழக்கம் - போ! போய் நாள் பூராவும் அதிலேயே முழ்கியிரு”.

நான் மிகுந்த சோர்வும், ஏமாற்றமும் அடைந்தேன். உன்னை சீண்டுவதற்காகவே உனக்கு முன்னால் மீண்டும் அந்த மருவைத் தொடும் எண்ணம் தோன்றியது. உன்னை கோபப்படுத்துவதற்காகவே உன் முன்னால் அந்த மருவைத் தொட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் விசித்திரமாய் என் கைகள் அசைய மறுத்தன.
நான் தனியாய் உணர்ந்தேன். ஆத்திரம் வந்தது. நீ அருகாமையில் இல்லாதபோது கூட அதைத்தொட நினைத்தேன். ஆனால் ஏனோ, அது ஒரு வெட்கக்கேடாய், அருவருப்பானதாய் தோன்றியது; என் கரங்கள் மீண்டும் அசைய மறுத்தன.

தரையை நோக்கியவாறு உதட்டைக் கடித்தேன். “என் மருவுக்கு என்னவாயிற்று” என்று நீ கேட்பாய் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நம் உரையாடலிலிருந்து “மரு” எனும் சொல் நழுவி விட்டிருந்தது. ஒருவேளை மேலும் பல விஷயங்களும் அதனோடு மறைந்து விட்டனவோ?

உன்னால் கண்டிக்கப்படும் நாட்களில் என்னால் ஏதும் செய்ய முடியாதது ஏன்? என்னவொரு உதவாக்கரை பெண் நான். அம்மா வீட்டில் அவளோடு குளித்தேன்.

“நீ முன்பு போல் அழகாய் இல்லை, சயோக்கோ” நீ மேலும் கூறினாய், “வயதாவதை யாரால் தவிர்க்க முடியும், இல்லையா”

நான் திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன். அவள் எப்போதும் போல் பளபளப்பாக, கொழுக்மொழுக்கென்று இருந்தாள்.

“மேலும் அந்த மரு உன்னை ரொம்ப கவர்ச்சியாய் காட்டியது”

அந்த மருவால் எவ்வளவு துயருற்றிருக்கிறேன் - ஆனால் அம்மாவிடம் அதையெல்லாம் சொல்ல முடியவில்லை. நான் சொன்னது என்னவெனில்:

“அந்த மருவை ஒரு மருத்துவரால் எளிதில் அகற்றிவிட முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்”

“ஓ மருத்துவரிடமா... அதனால் தழும்பு உருவாகுமே”. அம்மாவால் எவ்வளவு அமைதியாகவும், சகஜகமாகவும் இருக்க முடிகிறது.

“நாங்கள் அதைப் பற்றி கூடிப்பேசி சிரிப்போம். சாயக்கோ கல்யாணத்திற்கு பின்னர் இப்போதும் கூட ஒருவேளை அந்த மருவைத் தொட்டு விளையாடிக் கொண்டிருப்பாள் என்று சொல்லிக் கொண்டோம்”

“நான் அதைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருந்தேன்”

“அப்படித்தான் செய்வாய் என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம்”

“அது ஒரு கெட்டப்பழக்கம். நான் அதை எப்போதிலிருந்து ஆரம்பித்தேன்?”

“குழந்தைகளுக்கு எப்போது மரு உருவாகும் என்று தெரியவில்லை. வியப்பாக உள்ளது”

“என் குழந்தைகளுக்கு மருவே இல்லை”

“ஓ! அவை வளர ஆம்பித்தவுடன் மருக்களும் தோன்றிவிடும். ஆனால் இந்த அளவிற்கு பெரிதாக ஒன்றைக் காண்பது அரிது. உன் சின்னஞ்சிறு பிராயத்தில் அது தோன்றியிருக்க வேண்டும்”.

அம்மா என் தோளை பார்த்து சிரித்தாள். நான் சின்னஞ்சிறு குழந்தையாய் இருக்கும் போது அம்மாவும், சகோதரி களும் மருவைக் குத்திப் பார்த்தது நினைவுக்கு வருகிறது; அப்போது அதுவொரு அழகுப் புள்ளியாய் இருந்தது, அதனால் அல்லவா அதைத் தொட்டு விளையாடும் பழக்கம் என்னையும் பற்றிக் கொண்டது?

படுக்கையில் படுத்து மருவை விரலால் தடவியவாறே குழந்தைப் பருவத்தின் போதும், பருவ வயதிலும் அது எப்படியிருந்தது என்பதை ஞாபகப்படுத்த முயன்று கொண்டு இருந்தேன். அதைத் தொட்டு விளையாடி நீண்ட காலம் ஆகி விட்டது. எத்தனை வருடங்களோ!, நான் வியந்தேன். நீயில்லாத என் பிறந்த வீட்டில் இப்போது நான் விரும்பிய போதெல்லாம் அதைத் தொட்டு விளையாடலாம் யாரும் என்னை தடுக்க மாட்டார்கள்.
ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

என் விரல் அந்த மருவைத் தொட்டதுமே, குளிர்ந்த கண்ணீர்த் துளிகள் பெருகின. என் குழந்தைப் பருவத்தை நினைவில் மீட்கவே அதைத் தொட்டேன், ஆனால் நெஞ்செல்லாம் நிறைந்ததோ நீ மட்டும் தான்.
நான் ஒரு மோசமான மனைவி என்று சபிக்கப்பட்டு விட்டேன். ஒரு வேளை என்னை நீ விவகாரத்தும் செய்து விடுவாய்; ஆனால் இங்கே என் வீட்டில் படுக்கையில் கிடந்தும் கூட அவனைப் பற்றியே எண்ணுவேன் என்று எதிர்பார்க்வில்லை.

என் ஈரத் தலையணையைத் திருப்பிப் போட்டேன் அந்த மருவைப் பற்றி கனாக் கூட கண்டேன். அது எந்த அறை என்று விழித்த பிறகு சொல்ல முடியவில்லை. ஆனால் நீ அங்கிருந்தாய்; வேறு ஒரு பெண்ணும் நம்முடன் இருந்தாளென்று நினைக்கிறேன். நான் மது அருந்திக் கொண்டிருந்தேன். நிஜமாகவே, நான் போதையில் இருந்தேன். நான் எதற்காகவோ உன்னிடம் தொடர்ந்து கெஞ்சினேன்.

என் கெட்டப்பழக்கம் திரும்பி வந்தது. எப்போதும் போல் இடது கையை மார்புக்குக் குறுக்கே இட்டு மருவைத் தொட விழைந்தேன். ஆனால் அந்த மரு - என விரல்களிடையே அது பிய்ந்து வந்து விடவில்லையா? உலகிலேயே மிக இயல்பான செயல் என்பது போல் வலியில்லாமல் அது விரலோடு வந்து விட்டது. என் விரல்களிடையே வறுத்த அவரை விதையின் உலர்ந்த தோலைப் போன்று உதை உணர்ந்தேன்.

செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட குழந்தையைப் போல் நான் உன் மூக்கின் பக்கமுள்ள அந்த மருவின் பள்ளத்தில் என் மருவை வைக்கும்படி உன்னைக் கேட்டேன். என் மருவை உன்னிடம் நீட்டினேன். அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன்; உன் சட்டை கைப் பட்டையை பற்றிக் கொண்டு, உன் நெஞ்சில் தொங்கினேன்.
விழித்தபோது, என் தலையணை அப்போதும் ஈரமாய் இருந்தது. அப்போதும் நான் அழுதவாறிருந்தேன். முழுக்க முழுக்க சோர்வடைந்து விட்டேன். அதே நேரத்தில் பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல் லேசாக உணர்ந்தேன்.

சிறிது நேரம் புன்னகைத்தவாறே படுத்துக் கிடந்தேன். அந்த மரு நிஜமாகவே மறைந்து விட்டதா என்று வியந்தேன். மிக சிரமப்பட்டு அதை மீண்டும் தொட்டேன். என் மருவின் கதை இவ்வளவு தான். என் விரல்களிடையே ஒரு கரிய அவரை விதையாய் இப்போதும் என்னால் அதை உணர முடிகிறது.

உன் மூக்கின் பக்கத்திலுள்ள அந்த சிறிய மருவைப் பற்றி நான் யோசிக்கவோ உன்னிடம் பேசவோ இல்லாமலிருந்த போதும், எனக்குள் எப்போதும் அது இருந்திருக்க வேண்டும். என் மருவை உன் மருவின் மேல் வைத்து அது பெரிதாய் வீங்கி இருந்தால், ஒரு அற்புதமான தேவதைக் கதைக்கு அது வித்திட்டு இருந்திருக்கும்.
என் பங்கிற்கு நீயும் என் மருவைப் பற்றி கனவு கண்டிருப்பாய் என்ற எண்ணம் எனக்கு எவ்வளவு சந்தோஷம் அளித்திருக்கும்.

ஒரு விஷயத்தை நான் மறந்து விட்டேன்.

“அதைத்தான் நான் வெறுக்கிறேன்”, என்று நீ சொன்னாய்; உன்னுடைய இந்த கருத்தைக் கூட என் மேலான நேசத்தின் குறிப்பாய் எடுத்துக் கொள்ளும் அளவு நான் அதைத் தவறாய் புரிந்து கொண்டிருந்தேன். அந்த மருவை விரலால் நெருடும் போது எனது அனைத்து கீழ்மை குணங்களும் வெளிப்படுவதாய் நினைத்தேன்.
நான் அம்மாவிடம் கேட்டேன், “பல வருடங்களுக்கு முன் நான் அந்த மருவைத் தொட்டு விளையாடும் போது நீ என்னை கண்டித்தாய் அல்லவா?”

“ஆமாம் கண்டித்தேன், ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பெல்லாம் இல்லை.

“ஏன் அந்த மருவைத் தொட்டு விளையாடுவதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?”

“எப்படியெனில்...” அம்மா தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டாள். “அது நன்றாயில்லை”

“அது நிஜம்தான். ஆனால் அது எப்படித் தோன்றியது? எனக்காக வருந்தினாயா? அல்லது அது அசிங்கமாக, வெறுப்பூட்டும்படி இருந்ததா?”

“நான் ரொம்பவெல்லாம் யோசிக்கவில்லை. உன் முகத்தில் தோன்றும் அந்த தூக்க பாவனையையும் சேர்த்து, நீ அதை விட்டுத் தொலைக்கலாம் என்று நினைத்தேன்”.

“எரிச்சலாக இருந்ததா?”

“கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது”

“நீயும் மற்றவர்களும் என்னை சீண்டி கேலி செய்வதற்காகவே அந்த மருவை குத்திப் பார்த்தீர்களா?”

“அப்படித்தான் என்று நினைக்கிறேன்”

அது உண்மையெனில், சிறு குழந்தையாக இருக்கையில் என்னிடம் அம்மாவும், சகோதரிகளும் கொண்டிருந்த பிரியத்தை நினைவில் கொண்டு வருவதற்காக அல்லவா நான் அந்த மருவை சுயஉணர்வற்று விரல்களால் வருடியது?

நான் நேசிப்பவர்களை பற்றி நினைப்பதற்காக அல்லவா நான் அப்படிச் செய்தேன்? இதைத்தான் நான் உன்னிடம் சொல்லியாக வேண்டும். ஆரம்பம் முதல் கடைசி வரை நீ தவறாக அல்லவா புரிந்து கொண்டு விட்டாய்? உன்னுடன் இருக்கையில் உன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியேனும் எண்ணுவேனா? நீ இவ்வளவு வெறுக்கும் அந்த சைகை வார்த்தைகளால் விளக்க முடியாத என் காதலின் வெளிப்பாடு தானோ என்று மீண்டும் மீண்டும் மலைக்கிறேன்.

அந்த மருவைத் தொட்டு விளையாடும் என் பழக்கம் அற்பமானதே; அதற்கு சமாதானங்கள் சொல்வது என் நோக்கம் அல்ல. என்னை ஒரு மோசமான மனைவியாக மாற்றிய மேலும் பல விஷயங்களும் இதே போன்றே ஆரம்பித்திருக்கக் கூடாதா? அவையும் என் காதலின் வெளிப்பாடுகளாய் ஆரம்பித்து, நீ சரியாய் கண்டுணர மறுத்ததால் மோசமான மனைவியின் குணநலன்களாய் மாறி விட்டனவோ?

நான் இதை எழுதும் போதே தவறிழைக்கப்பட்டதான தோற்றத்தை ஏற்படுத்த ஒரு மோசமான மனைவி செய்யும் முயற்சியாக இது தோன்றுமோ என்று வியக்கிறேன். உன்னிடம் சொல்வதற்கு இன்னும் நியை விஷயங்கள் உள்ளன.

Pin It