குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

ரேஞ்சர் மரிய பூதம் விசாரணைக் கமிஷன் முன்பாக உறுதியாகச் சொன்னார்.

டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைப் புலி தின்றது உண்மைதான். ஆனால் அதற்கு நான் காரணம் இல்லை.

சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் இல்லையா? ஒரு நபர் விசாரணைக் கமிஷன் கேட்டது.

ஆமாம்.

உங்களுடைய கையில் துப்பாக்கி இருந்தது இல்லையா?

இருந்தது.

துப்பாக்கியில் குண்டுகள் இருந்தன..... இல்லையா?

நிறைய இருந்தது.

அப்புறம் ஏன் சுடவில்லை?

டி.எ•ப்.ஓ. ஒரு மனிதர். அவரைச் சுட்டால் என்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர் என்னுடைய மேலதிகாரி.

கமிஷன் ஒரு நிமிடம் மெளனமானது. மெளனத்தைக் கலைக்கும் வகையில் கமிஷன் பேசியது.

எனக்குத் தெரியவேண்டியது அது அல்ல. டி.எப்.ஓ.தாமோதரன் நாயரை புலி தாக்கியபோது நீங்கள் ஏன் புலியைச் சுட்டுக் கொல்லவில்லை? உங்களுடைய மேலதிகாரியின் உயிரை நீங்கள் ஏன் காப்பாற்றவில்லை? என்பதுதான் கேள்வி.

சார்... சம்பவத்தை நான் நேரில் பார்த்தவன். நீங்கள் சொல்வதுபோல் புலி டி.எப்.ஓ.வை தாக்கவில்லை. காட்டில் தன்வழியே போய்க்கொண்டிருந்த புலியைத் தாக்கியது டி.எப்.ஓ.தான். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த ஒரு உயிரும் செய்யக்கூடியதைத் தான் புலி செய்தது. நியாயம் புலியின் பக்கத்தில் இருந்தது. அதனால்தான் புலியை சுடுவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை.

உங்களுக்கும் டி.எப்.ஓ.விற்கும் ஏதாவது கருத்து வேற்றுமை இருந்ததா?

இல்லை.

மரிய பூதம் மறுத்தார்.

ஒரு மேலதிகாரி என்ற முறையில் அவர் கெட்டிக்காரராக இருந்தார். தனக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடுத்தார். அவரைப் பற்றி எல்லா ரேஞ்சர்களுக்கும் நல்ல மரியாதை உண்டு. மனிதர்கள் மீது இரக்கம் காட்டக் கூடியவர்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாக நினைவு உண்டா?

நிச்சயமாக இல்லை.

அப்படியிருக்கும்போது அவரை புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டியது உங்களுடைய கடமையில்லையா?

அவருடைய பக்கமிருந்து யோசித்துப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான்.... புலியின் பக்கமிருந்தும் யோசித்துப் பாருங்கள்..... புலிக்கு நாடு என்பது காடுதான். மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் அங்கே வாழ்ந்து கொண்டிருந்த புலியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயர் சுட்டார். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கிக் குண்டு புலியின் காலில் தான் பட்டது. தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக புலி டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயர்மீது பாய்ந்தது. ஒண்டிக்கு ஒண்டி நடந்த சண்டையில் டி.எ•ப்.ஓ.தோற்றார். சண்டையில் தோற்கும் உயிரைத் தின்பது என்பது புலிக்கு வாடிக்கை. அதன்படியே புலி டி.எ•ப்.ஓ.வை தின்றது. அதுமட்டுமல்ல. ரேஞ்சர் என்ற நிலையில் என்னுடைய கடமை காட்டில் உள்ள மிருகங்களையும் மரங்களையும் பாதுகாப்பதாகும். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு புலி ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டுக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அதைக் கொல்ல முடியும்?

அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

சும்மா பார்த்துக்கொண்டு நின்றேன். புலி டி.எப்.ஓ.வின் உடலை இழுத்துக்கொண்டு போனதற்கப்புறம் அவருடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டுபங்களாவிற்கு திரும்பி வந்தேன்.

டி.எ•ப்.ஓ.புலியைத் தாக்காமல் புலி டி.எ•ப்.ஓ.வைத் தாக்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?

புலியை சுட்டு இருப்பேன்.

நீங்கள் இதற்கு முன்பு என்றைக்காவது ஏதாவது விலங்கை சுட்டிருக்கிறீர்களா?

ஒரே ஒரு தடவை மட்டும்.... மதம் பிடித்து அலைந்த யானையை கலெக்டருடைய உத்தரவுப்படி சுட்டிருக்கிறேன்.

யானை மக்களைத் தொந்தரவு செய்கிறதா என்று யோசித்துத்தான் யானையைச் சுட்டீர்களா?

இல்லை. அப்படியெல்லாம் யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. கலெக்டர் உத்தரவு போட்டால் எந்த மிருகத்தையும் கொல்லலாம். ஹைகோர்ட் உத்தரவு போட்டால் எந்த மனிதனையும் கொல்லலாம். அதுவும் தூக்கில் போட்டுத்தான் கொல்ல முடியும். கலெக்டருடைய எழுத்துபூர்வமான உத்தரவு கிடைத்தபொழுதுதான் யானையை சுட்டுக்கொன்றேன்.

உயிருக்காக போராடிக்கொண்டிருந்த டி.எ•ப்.ஓ. புலியை சுட்டுக்கொல்லுமாறு உங்களிடம் சொன்னாரா?

ஆமாம், சொன்னார்....சட்டப்படி கலெக்டருடைய உத்தரவு இல்லாமல் புலியை சுட்டுக்கொல்ல முடியாது நான் சொல்லிவிட்டேன்.

நீங்கள் சட்டவிதிகளை எழுத்துக்கு எழுத்து பின்பற்றியதாக கமிஷன் பதிவுசெய்துகொள்கிறது. டி.எ•ப்.ஓ. தாமோதரன் நாயருடைய உயிருக்கும் ஒரு புலியினுடைய உயிருக்கும் ஒரே விலைதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

காட்டில் புலியின் உயிருக்கும் நாட்டில் மனிதனின் உயிருக்கும் மதிப்புண்டு.

டி.எ•ப்.ஓ. காட்டை ஆளுகின்ற ஒரு மனிதன் என்பதை நினைத்துப்பாருங்கள். நீங்கள் கூட காட்டை ஆளுகின்ற ஒரு மனிதர்தான்.

இல்லை சார்..... நாங்களெல்லாம் நாட்டை ஆளுகிறவர்களுடைய பிரதிநிதிகளாக காட்டிலே வேலை செய்கிறவர்கள் என்பதுதான் சரி...... பழைய காலத்தில் நாட்டை ஆளுகிறவன் ராஜாவாகவும் காட்டை ஆளுகிறவன் சிங்கமாகவும் இருந்தார்கள். காட்டில் வசிக்கும் காட்டுவாசிகள்கூட நாட்டை ஆளும் ராஜாவை ஏற்றுக்கொள்ளாதபோது ஒரு புலி அதை ஏற்றுக்கொண்டு சாவதற்கு தயாராகவேண்டும் என்று சொல்வது சரியில்லை.ஒரு புலி ஊருக்குள் வரும்போது அதைக் கொல்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் டி.எ•ப்.ஓ. தாமோதரன் நாயர் புலியைச் சுட்டது காட்டிற்குள்ளேதான்.

அதாவது புலி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைத் தின்றது என்றும் அதனால் புலி ஒரு தவறும் செய்யவில்லை என்றும் நீங்கள் சொல்கிறீர்கள். அப்படித்தானே?

அது மட்டுமில்லை சார்...... டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைக் காப்பாற்றுவதற்காக நான் புலியை சுட்டிருந்தால் அது மிருகங்களுக்கு நான் செய்யக்கூடிய ஒரு அநீதியாக இருந்திருக்கும். ஓர் உயிர் என்ற உயர்வான சிந்தனையில் இருந்து ஒரு மனிதன் என்ற கீழான இடத்திற்கு என்னுடைய புத்தி போயிருக்கும். இதுபோல கீழான சிந்தனைகளுக்கு நான் அடிமைப்பட்டால் என்னோடு சேர்ந்து வாழும் உயிர்களுக்கு ஆதரவாக, வேறு உயிர்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். இந்தியாக்காரனாக இருக்கும்போது வேறுநாட்டுக்காரனுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். கேரளக்காரனாக இருக்கும்போது வேறு மாநிலக்காரனுக்கெதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். அதற்கப்புறம் திருவாங்கூர்காரனாக இருக்கும்போது கொச்சிக்காரனையும் மலபார்காரனையும் கொல்ல துப்பாக்கியைத் தூக்குவேன்.

ஊர்க்காரனாக இருக்கும்போது அடுத்த ஊர்க்காரனுக்கு அநியாயம் செய்யத் தயங்கமாட்டேன். இப்படி கிராமம், குடும்பம், சொந்தக்காரன் அப்புறன் நான் என்று ஒவ்வொரு நிலையிலும் நீதியை மறந்து ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவேன். மிருகங்களை பிரித்துப் பார்க்காமல் இருந்தால்தான் வேறுயாரையும் பிரித்துப் பார்க்க மனம் வராது.டி.எ•ப்.ஓ.வும் புலியும் ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டபோது இதையெல்லாம் செய்து பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

இவ்வளவும் சிந்திக்கின்ற நீங்கள் டி.எ•ப்.ஓ.வை புலியிடம் போகவேண்டாம் என்று ஏன் தடுக்கவில்லை?

நான் சொன்னேன் சார்........ டி.எ•ப்.ஓ.தான் கேட்கவில்லை.

அவர் என்ன சொன்னார்?

புலி மற்ற மிருகங்களை கொன்று தின்பதாகவும், புலியைக் கொல்வது மற்ற மிருகங்களைப் பாதுகாப்பதற்காகவே என்றும், அத்துடன் காட்டுக்கு ராஜா சிங்கமில்லையென்றும், வனத்துறை அமைச்சர்தான் காட்டுக்கு ராஜா என்றும் சொன்னார்.

அவர் சொன்னதும் ஒருவகையில் சரிதானே? கமிஷன் திருப்பிக்கேட்டது.

இல்லை..... காடு மிருகங்களுக்கானது. காட்டில் வாழும் மனிதர்கள் ரொம்பவும் கொஞ்சம். அதாவது வேடர்கள். காட்டிற்கு உள்ளேபோய் யார் மிருகங்களைக் கொன்றாலும் அவர்களைக் கொல்லக்கூடிய அதிகாரம் மிருகங்களுக்கு உள்ளது. அதேபோல நாட்டிற்குள் வந்து மனிதர்களைக் கொன்று தின்னும் விலங்குகளைக் கொல்ல மனிதர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு சரியான உவமை சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்தில் கோலோனியன் செகரட்டரி எப்படியோ அப்படித்தான் நம்முடைய வனத்துறை அமைச்சர். அவருடைய அதிகாரம் மனிதரால் கொடுக்கப்பட்டதுதான்.

மிருகங்களுக்கு சுய ஆட்சி வேண்டுமென்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்?

சார்....... எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் வரலாறும் அரசியலும் படிக்கிறவன், எனக்குத் தெரிந்தவரையில் சுய ஆட்சி என்பது தனக்கு விருப்பமான இயல்பான ஆட்சிமுறையாகும். அதாவது சிங்கத்தை ராஜாவாக ஏற்றுக்கொண்ட வழக்கமான ஆட்சிமுறை. ஜனநாயகமில்லை. உதாரணமாக ஆப்பிரிக்காவில் சுய ஆட்சி கிடைத்தபோது மக்கள் அவர்களுக்கு மிகவும் இயல்பான இடி அமீனை ஆதரித்தார்கள். மிருகங்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆனால் மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் வனத்துறை அமைச்சரை அவை ஏற்றுக்கொள்வதில்லை. மனிதர்களுடைய சட்டதிட்டங்களும் கூட இப்படியேதான்.

வனத்துறையின் சட்டதிட்டங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு ஒத்துப்போகவில்லை என்ற முடிவிற்கு கமிஷன் வரலாமா?

அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அப்படி நீங்கள் எடுக்கிற முடிவு என்னை வேலையைவிட்டு நீக்குவதற்கு காரணமாகும்.இல்லையா?

ஆகலாம்..... ஆகாமலும் இருக்கலாம்...... அதுபோகட்டும்....... இந்த விசாரணை முடிவதற்கு முன்பாக உங்களுக்கு ஆதரவாக சாட்சிசொல்லுவதற்கு யாராவது இருக்கிறார்களா?..... அவர்களை விசாரிக்கவேண்டுமா?....

ஒரே ஒரு சாட்சி இருக்கிறது.

இப்போதே வரச்சொன்னால் விசாரணையை இன்றைக்கே முடித்துவிடலாம். பக்கத்தில்தானே இருக்கிறார்?

வெளியில் மரத்தடியில் இருக்கிறார். கூப்பிட்டால் வந்துவிடுவார்.

சரி...... யார் அவர்?

இதுவரை நடந்த சம்பவத்தில் அவர்தான் சார் பிரதான குற்றவாளி. அவர்தான் டி.எப்.ஒ. தாமோதரன் நாயரைத் தின்ற புலி. கூப்பிடலாம்.

- மு.குருமூர்த்தி, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)';document.getElementById('cloaka2894209fcc2f4ce410fe0acda5bb977').innerHTML += ''+addy_texta2894209fcc2f4ce410fe0acda5bb977+'<\/a>';
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்,
101, காவேரிநகர் மேற்கு, தஞ்சாவூர் - 613005

Pin It