ஒரு அழகான ஏப்ரல் மாத காலையில் டோக்யோவின் நவீன மோஸ்தர் மிக்க ஹருஜிக்கோ சுற்றுவட்டாரத்தில் ஒரு குறுகலான தெருவில் 100 சதவீதம் கச்சிதமான பெண்ணை கடந்து நடந்து சென்றேன்.

நிஜத்தை சொல்வதென்றால் அப்பெண் அவ்வளவாய் அழகொன்றும் இல்லை. ஒரு கூட்டத்தில் பார்த்தால் எந்தவிதத்திலும் தனிப்பட்டு தெரிபவள் ஒன்றும் அல்ல. அவளது ஆடைகளும் ஒன்றும் தனிச்சிறப்பானவை அல்ல. தூக்க சடைவில் அவளது கூந்தலின் நுனி இன்னமும் நெளிந்து தெரிந்தது. அவள் ஒன்றும் இளமையானவளும் அல்லத்தான் முப்பதை நெருங்கிக் கொண்டிருப்பாள், ஒரு “பெண்'' என்பதற்கு நெருங்கிக் கூட வர மாட்டாள், ஒழுங்காக சொல்வதானால். ஆனால் இருந்தும் ஐம்பது கெஜங்கள் தொலைவில் இருந்தே எனக்கு தெரிந்து விட்டது: எனக்கான 100% கச்சிதமான பெண் அவள் தான். அவளை பார்த்த நொடி, என் நெஞ்சில் ஒரு முழக்க அதிர்வு, ஒரு பாலையை போல் வாய் வறண்டு போய் விட்டது.

உங்களுக்கு பிடித்தமான வகையில் ஒரு குறிப்பிட்ட பெண் இருக்கக் கூடும் சொல்வதானால், மெலிந்த கெண்டைக்காலுடன், அல்லது பெரிய கண்களுடன், அல்லது நளினமான விரல்களுடன் அல்லது நீங்கள் பொறுமையாக உணவருந்தும் ஒரு பெண்களை நோக்கிக் கூட வேறெந்த உருப்படியான காரணமும் இன்றி ஈர்க்கப்படலாம். ஆம், எனக்கு எனதான விருப்பங்கள் உண்டு. சிலவேளை உணவகத்தில் எனக்கு எதிர்மேஜை பெண்ணை பிரக்ஞயின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன், அவளது மூக்கின் வடிவம் பிடிக்கும் என்பதால்.

ஆனால் இந்த 100% கச்சிதமான பெண் எந்த முன்தீர்மானிக்கப்பட்ட மாதிரியையும் சேர்ந்தவள் அல்ல என்பதை யாரும் மறுக்க முடியாது. எனக்கு மூக்குகளை எந்தளவுக்கு பிடிக்குமோ, அவளது மூக்கின் வடிவை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை அவளுக்கு அப்படியான ஒரு வடிவம் இருந்திருந்தாலும் கூட. என்னால் நினைவு கொள்ள முடிந்ததெல்லாம் அவள் ஒன்றும் பேரழகி அல்ல என்பதே. இது விசித்திரமானது.

“நேற்று தெருவில் நான் ஒரு 100% அழகான பெண்ணை கடந்து சென்றேன்'', என்று நான் யாரிடமாவது சொல்லலாம்.

“அப்படியா!'', அவர் சொல்வார், “அழகானவளா?''

 “அப்படி ஒன்றுமில்லை''

 “அப்படியெனில், உங்களுக்கு பிடித்த வகையாக இருக்கும்?''

 “தெரியவில்லை. அவளைப் பற்றி ஒன்றும் நினைவில் இல்லை அவள் கண்களின் வடிவமோ அவளது முலைகளின் அளவோ''

“விநோதம்''

“ஆம், விநோதம் தான்''

 “சரி எப்படியும் ஆகட்டும்'', அவர் சொல்கிறார், ஏற்கனவே சலிப்புற்று, “நீ என்ன பண்ணினாய்? அவளிடம் பேசினாயா? பின்னாடி சென்றாயா?''

 “இல்ல. வெறுமனே அவளை தெருவில் கடந்து போனேன்''

அவள் கிழக்கு மேற்காக நடக்கிறாள், நான் மேற்கு கிழக்காக. அது நிஜமாகவே ஒரு அழகான ஏப்ரல் மாத காலைவேளை.

அவளிடம் பேசினால் நன்றாக இருக்கும். அரைமணிநேரமே தாராளம் தான்: அவளைப் பற்றி விசாரிக்கலாம், என்னைப் பற்றி சொல்லலாம், மேலும் நான் நிஜமாகவே செய்ய விரும்புவது போல் 1981இல் ஒரு அழகான ஏப்ரல் மாத காலை வேளையில் ஹராஜுக்கோவில் உள்ள ஒரு குறுக்குசந்தில் எங்களை பக்கம் பக்கமாய் கடந்து செல்ல செய்த விதியின் சிக்கல்களை அவளிடம் விளக்கலாம். இது நிச்சயம் வெம்மையான ரகசியங்களால் நிரம்பப்பட்டதாக இருக்க வேண்டும், உலகில் அமைதி ஆட்சி செய்த காலத்தில் செய்யப்பட்ட ஒரு புராதன கடிகாரத்தை போல.

பேசிய பின், நாங்கள் எங்காவது மதிய உணவு அருந்துவோம், ஒருவேளை ஒரு வுட்டி ஆலன் படம் பார்க்க செல்வோம், வரும் வழியில் ஒரு உணவக பாருக்கு சென்று காக்டெயில் அருந்துவோம். அதிர்ஷ்டம் இருந்தால் புணர்ச்சியும் நிகழும்.

எதிர்கால சாத்தியம் என் இதயக்கதவை தட்டுகிறது.

இப்போது எங்களிடையேயான தொலைவு பதினைந்து கெஜங்களாக குறைந்து விட்டது.

 அவளை எப்படி அணுக? அவளிடம் என்ன சொல்ல?

 “வணக்கங்க, என்னுடன் சும்மா பேசி இருக்க ஒரு அரைமணி ஒதுக்க முடியுமா?''

கேவலம். நான் ஒரு காப்பீட்டு திட்ட விற்பனையாளனை போல் தோன்றுவேன்.

 “மன்னித்துக் கொள்ளுங்கள், இரவிலும் சலவை செய்யும் கடை ஏதாவது உங்களுக்கு இங்கே தெரியுமா?''

இல்லை. இதுவும் அதைப் போலவே தமாஷாக இருக்கும். குறிப்பாக, என் கைவசம் தற்போது சலவைக்கான துணி இல்லை. இப்படியான ஒரு சொற்றொடரை யார் நம்பப் போகிறார்கள்?

ஒருவேளை எளிமையான உண்மை இதைவிட ஏற்றதாக இருக்கும். “குட்மார்னிங், நீங்கள் தான் எனக்கான 100% கச்சிதமான பெண்''

இல்லை, அவள் அதை நம்ப மாட்டாள். ஒருவேளை அவள் அப்படி நம்பினாலும், என்னிடம் பேச விரும்ப மாட்டாள். மன்னியுங்கள், அவள் சொல்லக் கூடும், நான் உங்களது 100% கச்சிதமான பெண்ணாக இருக்கக் கூடும், ஆனால் நீங்கள் எனக்கான 100% கச்சிதமான ஆண் அல்ல. இப்படியும் நடக்கலாம். அப்படி நான் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டால், கட்டுப்பாட்டை இழந்து விடுவேன். அந்த அதிர்ச்சியில் இருந்து ஒரு போதும் நான் மீள் மாட்டேன். எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறது; வயதாகிக் கொண்டு செல்வதன் விளைவு என்றால் அதுதான்.

நாங்கள் ஒரு பூக்கடையின் அருகே ஒருவரை ஒருவர் கடக்கிறோம். என் தோலை ஒரு சின்ன வெதுவெதுப்பான காற்றுத்திரட்சி தொடுகிறது. நடைபாதை கீல் ஈரமாக உள்ளது; ரோஜா வாசனை என்னை வந்தடைகிறது. எனக்கு அவளிடம் பேச தைரியம் வரவில்லை. அவள் ஒரு வெள்ளை கம்பளி சட்டை அணிந்திருக்கிறாள்; அவளது வலது கையில் ஸ்டாம்பு மட்டும் இல்லாத ஒரு விறைப்பான வெள்ளை தபால் உறை உள்ளது. ஆக அவள் யாருக்கோ ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள், ஒருவேளை இரவு முழுக்க அமர்ந்து எழுதியிருக்கலாம், அவளது கண்களில் உள்ள தூக்கக் களையை வைத்து அப்படி சொல்லலாம். அவளிடம் உள்ள அத்தனை ரகசியங்களும் அந்த உறைக்குள் இருக்கும்.

மேலும் சில அடிகள் வைத்து திரும்புகிறேன். கூட்டத்தில் தொலைந்து போகிறேன்.

இப்போது, நிச்சயமாய், அவளிடம் என்ன மிகச்சரியாய் சொல்லியிருக்க வேண்டும் என்பது எனக்கு தெரிகிறது. அது ஒரு நீண்ட உரையாக இருந்திருக்கும், என்னால் ஒழுங்காக சொல்ல முடியாதபடிக்கு மிக நீளமாக இருந்திருக்கும். எனக்கு வருகிற யோசனைகள் எப்போதுமே நடைமுறைக்கு ஒவ்வாதவையாக இருக்கும்.

ஓ சரி, “முன்னொரு காலத்தில்'' என்று ஆரம்பித்து “ரொம்ப சோகம் இல்லையா?'' என்று முடிந்திருக்கும்.

முன்னொரு காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு இளம்பெண்ணும் வாழ்ந்தார்கள். சிறுவனுக்கு பதினெட்டும் இளம்பெண்ணுக்கு பதினாறும் வயது. அவன் பார்க்க குறிப்பிடும்படியான அழகொன்றும் இல்லை, அவளும் சொல்லிக் கொள்ளும்படியான அழகில்லை. அவர்கள், எல்லாரையும் போல, ஒரு சராசரி தனியான பையனும் ஒரு சராசரி தனியான பெண்ணும். ஆனால் அவர்கள் உலகின் மூலையில் எங்கோ தமக்கான 100% கச்சிதமான பெண்ணும் ஆணும் வாழ்ந்ததாய் இதயத்தின் அடியாழத்தில் இருந்து நம்பினார்கள். ஆம் அவர்கள் ஒரு அற்புதத்தில் நம்பிக்கை வைத்தார்கள். மேலும், அந்த அற்புதம் நிஜமாகவே நடக்கவும் செய்தது.

ஒருநாள் ஒரு தெருஓரமாய் இருவரும் சந்தித்து கொண்டார்கள்.

“என்ன ஆச்சரியம்'', அவன் சொன்னான், “வாழ்நாளெல்லாம் நான் உன்னைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். நீ ஒருவேளை இதை நம்ப மாட்டாய், ஆனால் நீ தான் எனக்கான 100% கச்சிதமான பெண்''

“அதோடு நீயும் தான்'', அவள் அவனிடம் சொன்னாள், “எனக்கான 100% கச்சிதமான ஆண், நான் கற்பனை செய்தது போலவே ஒவ்வொரு நுணுக்கமும் உள்ளது. இது ஒரு கனவு போல தோன்றுகிறது''

அவர்கள் ஒரு பூங்கா இருக்கையில் அமர்ந்து கைகளை பற்றிக் கொண்டனர்; மணிக்கணக்காய் தத்தமது கதைகளை சொல்லிக் கொண்டனர். அவர்கள் அதற்கு மேல் தனிமையாக இல்லை. அவர்கள் தமது 100% கச்சித துணையை கண்டுகொண்டனர், துணையால் கண்டுகொள்ளப்பட்டனர். அது ஒரு அற்புதம், ஒரு பிரபஞ்ச அற்புதம்.

ஆனால் அவர்கள் அமர்ந்து பேசிய போது ஒரு மிக மிக சின்ன சந்தேகம் அவர்களின் இதயத்தில் வேர்கொண்டது: ஒருவரது கனவுகள் இவ்வளவு எளிதாக நிறைவேறுவது என்பது நிஜமாகவே சரிதானா?

ஆக அதனால் அவர்களது உரையாடலில் தற்காலிகமாக சற்று தொய்வு ஏற்பட்ட போது அவ்விளைஞன் அப்பெண்ணிடம் சொன்னான் “நாம் நம்மையே சோதித்து பார்ப்போம் ஒரே ஒருமுறை மட்டும். நாம் ஒருவர் மற்றொருவரின் 100% கச்சிதமான காதலர் என்றால், மற்றொரு சமயத்தில், மற்றொரு இடத்தில் நிச்சயமாக மீண்டும் சந்திப்போம். அப்படி நடக்கும் போது, நாமே 100% கச்சிதமான காதலர்கள் என அறியும் போது, நாம் அங்கேயே அப்போதே கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். என்ன சொல்கிறாய்?''

 “ஆம்'', அவள் சொன்னாள், “நாம் மிகச்சரியாக அதைத் தான் செய்ய வேண்டும்''

ஆக அவர்கள் பிரிந்தார்கள், அவள் கிழக்கே நோக்கியும் அவன் மேற்கு நோக்கியும் சென்றனர்.

அவர்கள் ஏற்றுக் கொண்ட அந்த தேர்வு எப்படியும் வீணானது. அவர்கள் அதை ஒருக்காலும் முயன்றிருக்க கூடாது, ஏனென்றால் அவர்கள் நிஜமாகவே உண்மையாகவே தத்தமது 100% கச்சிதமான காதலர்கள் தாம்; அவர்கள் சந்தித்துக் கொண்டதும் ஒரு அற்புதம் தான். ஆனால் அந்த சின்ன வயதில் அவர்கள் அதை அறிந்திருப்பதும் சாத்தியமில்லை. விதியின் குரூரமான அக்கறையற்ற அலைகள் அவர்களை கருணையின்றி சுழற்றி அடிக்க முற்பட்டன.

ஒரு மழைக்காலத்தில் அப்பையனும் பெண்ணும் அப்பருவத்தின் கொடுமையான இன்பிளுவன்சா ஜுரத்தால் பீடிக்கப்பட்டார்கள்; வாரக்கணக்கில் மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையே ஊசலாடியதில் அவர்கள் தம் முந்தைய வருடங்களின் நினைவுகளை முழுக்க இழந்தனர். அவர்கள் விழித்த போது அவர்களின் தலைகள் குட்டி டி.ஹெச் லாரன்ஸின் பன்றி வடிவிலான உண்டியலைப் போல் காலியாக இருந்தன.

இருப்பினும், அவர்கள் இருவரும் புத்திசாலித்தனமும் மனவுறுதியும் மிக்க இளைஞர்கள் என்பதால் தமது விடாப்படியான முயற்சிகள் மூலம் தமது அறிவையும் உணர்ச்சிகளையும் மீளப்பெற்று மீண்டும் முழுமையான சமூக உறுப்பினர்களாகும் தகுதி அடைந்தனர். கடவுள் புண்ணியத்தால் அவர்கள் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து மற்றொன்றுக்கு கடக்க அறிந்த, ஒரு சிறப்பு விநியோக கடிதத்தை தபால் நிலையத்துக்கு சேர்ப்பிக்கும் முழுத்திறமை கொண்டவர்களாகவும் ஆகி உண்மையில் மதிக்கத்தக்க குடிமக்கள் ஆகினர் சொல்வதானால் அவர்கள் மீண்டும் காதலை உணரவும் செய்தனர், சிலவேளைகளில் 75%இல் இருந்து 85% காதல் வரை கூட.

அதிர்ச்சியூட்டும் வேகத்தில் காலம் விரைந்து கொண்டிருந்தது; விரைவில் அவ்விளைஞன் முப்பித்திரண்டும் அப்பெண் முப்பதும் வயதை அடைந்தனர்.

ஒரு அழகான ஏப்ரல் மாத காலையில் குடிக்க ஒரு கோப்பை காபியை தேடிய படி அவ்விளைஞன் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நடந்து கொண்டிருந்த போது அப்பெண் ஒரு சிறப்பு விநியோக கடிதத்தை அனுப்ப உத்தேசித்து மேற்கில் இருந்து கிழக்காக, ஆனால் டோக்யோவின் ஹருஜிக்கோ சுற்றுப்புறத்தில் உள்ள அதே குறுகின சந்தில், நடந்து கொண்டிருந்தாள். இழந்த நினைவுகளின் ஆக சன்னமான வெளிச்சம் ஆக குறைவான நொடிகளுக்கு அவர்களின் இதயத்தில் பளிச்சிட்டன. இருவரும் தம் நெஞ்சில் ஒரு முழக்க அதிர்வை உணர்ந்தனர். அப்போது அவர்களுக்கு தெரிய வந்தது:

இவள் தான் எனக்கான 100% கச்சிதமான பெண்.

இவன் தான் எனக்கான 100% கச்சிதமான ஆண்.   

ஆனால் நினைவுகளின் மிளிர்வு மிக மங்கலாக இருந்தது; பதினான்கு வருடங்களுக்கு முந்தைய தெளிவு அவர்களின் எண்ணங்களிலும் இருக்கவில்லை. ஒரு சொல் கூட பேசாமல், அவர்கள் ஒருவரை ஒருவர் கடந்து கூட்டத்தில் கலந்தனர். எப்போதைக்குமாய்.

ஆம், அதுதான், நான் அவளிடம் சொல்லியிருக்க வேண்டியது அதுதான்.

தமிழில்: ஆர்.அபிலாஷ்

Pin It