சின்னதாய் அடிவயிற்றில் வலியெடுப்பதை உணர்ந்து படுக்கையை விட்டு எழுந்தான் முத்தையா. விடிவிளக்கு வெளிச்சத்தில் மனைவியும் குழந்தைகளும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரண்டைத் தாண்டி தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது கடிகார முள். மறுபடியும் சுள்ளென்று வயிறு குத்தெடுத்து இரைச்சலிட்டது. உப்பிய வயிற்றில் தளர்ந்திருந்த லுங்கியை அவிழ்த்து இறுக்கமாய் கட்டிக்கொண்டான். சன்னல் திண்டில் இருந்த தம்பாக்கையும் சுண்ணாம்பையும் எடுத்து சேர்மானம் செய்து உள்ளங்கையில் வைத்து கசக்கி கீழ் உதட்டில் திணித்துக்கொண்டான். பின்பக்கம் மோரிக்குப்போய் சிறுநீர் கழித்து விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தான். சரியாக அமரமுடிய வில்லை. உப்பிய வயிறு மீண்டும் நறுக்கென்று குத்தி வலி எடுத்தது.

காற்றை அரைப்பதுபோல காத்தாடி ஓடிக்கொண்டிருந்தது. வெக்கையை அடித்துத் துரத்தி புதிய காற்றை உள்ளிழுக்க திணறியது காத்தாடி. அறை முழுவதும் புழுக்கத்தின் வாடை சுழன்றது. மீண்டும் இரைச்சலுடன் வலியெடுத்து உள்ளே ஏதோ புரண்டது போல இருந்தது. கழிவறை போகவேண்டுமென நினைத்தான். இரவு ரெண்டு மணிக்குமேல வெளிய போகணும் என்றாலே மனது மல்லு கட்டுகிறது. கதவைத் திறந்தாலே தாரைக் காச்சி ஊத்தி அடைச்ச மாதிரி ஒரே இருட்டா இருக்கும். இந்தக் கொள்ள இருட்டுக்குப் பயந்து வாசல்ல எத்தன பல்பு போட்டாலும் கருதுல்லாக்கள் பல்பை  திருடிட்டு போய்விடு வார்கள். ‘ஹரத்’ என்னும் போதைப்பொருளை பயன் படுத்துவதால் ஹர்துல்லா என்று புகழ்பெற்றவர்கள். ஹர்துல்லாக்களின் முகங்களில் பேச்சு, சிரிப்பு, பார்வை எல்லாமே வரத்துப் போக்கு இல்லாமல் சிலந்தி வலை பின்னியே கிடக்கும்.   இரவு நேரத்தில் குடிசைப்பகுதிகளில் நடமாடும் மனிதம் உறைந்த இயந்திர மனிதர்கள். ஒருவகையில் சொர்க்கத்துக்குப் போகும் வழியைக் கண்டு பிடித்தவர்கள்.

தீக்குச்சியின் நுனியை சவரப்பிளேடால் இலக்கு போல சீவிக் கொண்டு ‘ஹரத்’ எனும் போதைப்பொருளை அந்தத் தீக்குச்சியில் கடுகின் கால் பகுதி எடுத்து சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் சில்வர் கோட்டிங் பேப்பரை விரித்து அதில் வைத்து தீக்குச்சியை உரசி பேப்பரின் கீழ்ப்பகுதியில் வைத்து சூடேற்றுவர்கள். கால் கடுகு கனமுள்ள அந்தப் பொருள் சூட்டில் நெய்ப்போல உருகி கருகும் போது அதிலிருந்து எழும் புகையினை பேப்பர் குழாயினால் மூக்கில் உறிஞ்சி சொர்க்கம் அடைவார்கள். ஒருமுறை மூக்கில் உறிஞ்சினால் பத்துமணி நேரமாவது அவர்கள் திரிலோக வாசிகளாகவே அலைவார்கள். கண்கள் மூடியிருக்கும் வாய் திறந்திருக்கும். அந்த நேரத்தில் அடித்தாலும் உதைத்தாலும் அது அவர்களுக்கு உறைப்பதில்லை. கடுகளவு பருமன் உள்ள அந்த ஹரத் போதைப் பொருளை வாங்க குறைந்தது ஐம்பது ரூபாயில் இருந்து நூறு ரூபாயாவது தேவைப்படும். அதை வாங்குவ தற்காகவே நள்ளிரவில் தெருத் தெருவாய் சுற்றி பொருள் ஈட்டும் பாடு.

ஒரு தெருவில் குறிப்பிட்ட பொருளைத் திருடத் திட்டமிட்டால் வீட்டுக்கு வெளியே இருக்கும் திண்ணை அல்லது திண்டுகளில் நாயோடு நாயாக படுத்துக்கிடந்து கொண்டு போய் விடுவார்கள். எதுவும் கிடைக்காத போது தண்ணீர் நிறைத்து வைத்திருக்கும் பீப்பாவை சரித்து தண்ணீரை கொட்டி விட்டு கொண்டு போய் விடுவார்கள். ஒன்றுக்குமே வழியில்லை என்றால் மீட்டர் அறையை திறந்து அதில்  எந்த தெருவிற்கு போகும் வயருக்கு பீஸ் கட்டை இல்லாமல் நேரடியாக சொருவி இருக்குமோ அதை உருவி போட்டு விட்டு பக்கத்து தெருவில் படுத்துக்கொள்வார்கள். மின்சாரம் இழந்தவர்கள்  வெளியே வந்து கூடியதும் “என்ன அண்ணாச்சி கரண்டு போயிடிச்சா? எலித்தொல்ல தாங்கல. எலி அங்கேயும் இங்கேயும் ஓடும் போது உருவி விழுந்திருக்கும்” தானாகவே அவர்களுடம் டார்ச் லைட்டை வாங்கி சரி செய்து விட்டு “ எதாவது கொடுங்க” என்று பணமும் வாங்கிக்கொள்வார்கள். இப்படி சில்லறைத்தனமாக நடந்து கொள்ளும் இவர்களை ஆறுமாதம் மகள் வீட்டில் தங்கிவிட்டு போன ஆறுமுகப்பாட்டி “இவனுவ தூமத்துணியக் கூட களவாண்டுட்டு போயிருவானு வம்மா” என்று சொன்னது பொருத்தமாக இருக்கும்..

மோரியில்  தொங்க விட்டிருந்த செண்டாஸ் (கழிவறை) வாளியை எடுத்து தண்ணீர் நிறைத்துக் கொண்டு முன் அறைக்கு வந்தான். வாசலில் வாளியை வைத்து விட்டு மனைவியை எழுப்பினான். இரண்டு மூன்று முறை  கூப்பிட்டும் அவள் விழிப்பதாய் இல்லை. குனிந்து தோளை தட்டி மெல்லிய குரலில் “புனிதா.. புனிதா..” கூப்பிட்டான். அவள் தூக்கக் கலக்கத்தில் “சும்மா இருக்க முடியலியோ புள்ள பக்கத்துலதான் படுத்திருக்கா” என்று புரண்டு படுத்தாள். அவன் வேகமாய் அவள் குறுக்கில் அடித்து “மூத்தவள பாத்ரூம் போவணும், எந்திரிச்சி கதவ பூட்டிக்க” சொல்லி குனிந்து உலுக்கினான்.

தூக்கக் கலக்கத்தில் அவள் எழும்பினாள். அதற்குள் அவன் கதவைத் திறந்து வெளியே போய் “புனிதா கதவ தாப்பாப் போட்டுக்க” சொல்லியபடியே படிகளில் இறங்கி நடக்கத் தொடங்கினான். கதவு அடைக்கும் சத்தம் கேட்டதும் கால்களை எட்டிப்போட்டு நடந்தான்.

தண்ணீரை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தால் தெருவில் படிக்கல்லு மாதிரி நாய் படுத்திருக்கும். தட்டுப்பட்டதும் ‘’ளொள்” என்று பெரும் குரலெழுப்பி ஓடிபோய் எட்டி நின்று வாலாட்டி குரைக்கும். கேட்ட உடம் பெங்கும் பயமேறி வேர்த்து படப்படக்கும். இந்தக் கலக்கத்தில் வயிறு இன்னும் கலக்கம் கொண்டு உள்ள இருக்கிறது வெளியேற தீவிரம் கொண்டு திரளும்.

மணி ரெண்டுக்குமேல் ஆகி விட்டதே எல்லா இடமும் அடைச்சிருக்குமே எங்கு போவ. இந்த எழவ இறக்கி வைக்க மனது அங்கும் இங்கும் ஓடி கணக்குப் போட்டது. தொண்ணூறு அடிச்சாலையை ஒட்டிய ஜும்மா மஜித் கிட்ட இருக்கும் கழிவறையில்தான் 24மணி நேரமும் திறந்திருக்கும்படியான நான்கு ரூம்கள் உண்டு. அங்கு பகலிலேயே பார்த்துதான் கால் வைக்க முடியும். இல்லன்னா கொண்டு போற தண்ணி செருப்புல ஒட்டுற பீய கழுவவே காணாது. அப்புறம் குண்டிய எங்கிருந்து கழுவறது? இந்த ரூம் ரெண்டு ரூவா கொடுத்து போக யோசிப்பவர்களுக்கு, அல்லது ரெண்டு ரூவா கொடுத்து போக முடியா தவங்களுக்கு, பொழுதெல்லாம் புத்திய பித்தேற வைத்திருக்கும் கஞ்சா, அபின் இவர்களோடு இணைந்த உயர்தர குடிகாரர்களுக்கு ஒதுக்கப் பட்டது போல் தோன்றும். இந்த கழிவறைகளை எப்பமாவது யாராவது பாவம் பார்த்து கழுவி பிளிச்சிங் பவுடர் போட்டாதான் உண்டு. இல்லா விட்டால் எப்பொழுதும் பீ நிறைந்து பெருநாற்றம் வீச எந்நேரம் கொசுக்களின் கச்சேரிதான் நடந்து கொண்டே இருக்கும். இதை எல்லாம் பொருள் படுத்தாமல் ஆத்திர அவசரத்துக்கு ராத்திரி நேரம்  அடிச்சிப் புடிச்சி ஓடி வந்தா வாசலில் அகில உலக ரவுடி மாதிரியும், விரைப்பா காக்கிச் சட்டைப் போட்ட இரவு நேர போலிஸ் மாதிரியும் நாய்கள் உறுமிய வாறு இடத்தை செறுத்துக்கொண்டு படுத்துக் கிடக்கும். இதையும் மீறி உள்ளே போய் உட்கார்ந்து மூக்கைப் பொத்திக்கொண்டு எரியும் கண்ணை இமையால் இடுக்கியபடி பார்த்தால் மங்கலான வெளிச்சத்தில் பெண்குறியையும் ஆண் குறியையும் சேர்த்து புணர்ச்சி நிலை படம், ‘ஆயிரம் யோனி பார்த்தவன் ஞானிக்கு சமம்’  ‘கிள்ளளவு பெண்குறியேனும் அதன் கொள்ளளவு குமரிக்கடல்’. என்று திருவாசகங்கள் சுவரில் நிறைம்பி வழியும்.

இதெல்லாம் வீட்டுக்குள் கழிவறை இல்லாதவர்களுக்கும் காசு கொடுத்து போக முடியாதர்களுக்கும்தான். இப்பொழுது தாராவியில் அரசாங்கம் மாளிகை மாதிரி டைல்சும் மார்பலும் போட்டு கட்டி வசூல் வேட்டைக்கு கோயிலுக்கு நிகராக கட்டண கழிப்பிடங்களை கொண்டு வந்து விட்டது. அதிகாலை நான்கு மணிக்கு திறந்து இரவு ஒரு மணிக்கெல்லாம் அடைத்து விடுவார்கள். திறக்கும் முன்னாலே ஆட்கள் வந்து தட்டி திறக்கச் சொல்வார்கள். நான்கு மணியிலிருந்து ஒவ்வொருவராக வருபவகள் ஏழு ஏழரைக்கெல்லம் நிறைய ஆரம்பித்து விடுவார்கள். கழிவறைக்குள் இருப்பவர்கள் கொஞ்சம் தாமதித்தால் கூட “உள்ள யாரப்பா. கொடல பீச்சி சுத்தம் பண்ணிக்கிட்டு கெடக்கானா? சீக்கிரம் வரச்சொல்லுங்கப்பா, வேலைக்கி போணும்.”  இன்னொருவன் “போயி ரெம்பா நேரமாச்சி தூங்கிட்டானா. தட்டி எழுப்புங்க.” உள்ள இருந்து வந்தவன் “என்ன பாய் தலவாணியோடயா உள்ள போனேன்? இல்லை பார்சல் கொண்டு வந்தனா டக்குனு போட்டு வெளிய வர” இப்படி பத்து மணி வரை வாயால தள்ளு முள்ளாகத்தான் தொடரும்.

முடுக்கைக் கடந்து  தெருவுக்கு வந்தான். நள்ளிரவில் தாராவி நவீன மிருகங்கள் பதுங்கியிருந்து உறுமிக்கொண்டிருக்கும் காடாய் அவனுக்கு தோற்றம் அளித்தது. பகலில் பார்க்கும் தாராவியை இரவில் பார்ப்பதற்கு நிறைய வித்தியாசம் தெரிந்தது. திறந்திருக்கும் கடைகள் வேறாய் இருந்தன.. நடமாடும் மனிதர்கள் வேறாய் இருந்தார்கள். 

இதற்குள் கை காலெல்லாம் புல்லரித்து நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. கால்களை எட்டு வைத்து நடையை கூட்டினான். இருட்டில் கால்களில் மோதி விலகியோடும் பெருச்சாளிகளை சட்டை செய்யாமல் விரைந்து நடந்தான். இங்கிருந்து பார்க்கும்போதே கழிவரையில் வெளிச்சம் தெரிந்தது. மனதுக்குள் ஆறுதல். வேர்த்த உடம்பில் காற்று பட்டு சில்லிட்டது. ஆனாலும் உள்ளுக்குள் உடம்பு கதகதப்பை உணர்த்தியது. தொப்புளுக்கு கீழே முள்ளாய் குத்தியது. கழிவறையை நெருங்கினான். அங்கே கொத்தனார்கள் நின்று கழிவறையை பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“அய்யோ அண்ணாச்சி இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இந்த செண்டாசு பந்து. கொஞ்சம் முன்னால வந்திருக்கக் கூடாது. பக்கத்து செண்டாசு காரன் இப்பந்தான் பூட்டினான். அந்தா எதுத்தாக்கல பான் கடையிலதான் நிக்கான். வேணும்னா கேட்டுப்பாருங்க. தொரந்து தருவான்.” என்றார் கொத்தனார் கையாளாக வேலை செய்யும் ஒருவர்.

“அண்ணாச்சி நீங்க வேற எங்கேயும் போங்க. அவன நம்பாதிங்க. சாமயத்துல அவனுக்கு ஜோடியா வேற பார்ட்டி வரும். அதுக்குதான் அவன் தொறந்து கொடுப்பான். பாலாஜி கோயில ஒட்டி ஒரு மச்சி மார்கெட்டு இருக்கில்ல அது பக்கத்துல இப்படி ஒரு பாத்ரூம் இருக்கு அதுக்கு போங்க தெறந்திருக்கும்” என்றான் இன்னொருவன்.

தாண்ணீர் வாளியை கீழே வைத்து விட்டு லுங்கியை அவிழ்த்து இறுக்கமாய் இல்லாமல் வயிற்றில் ஏத்தி கட்டிக்கொண்டான். மும்பைக் குடிசைப் பகுதிகளில் வாழ்பவனுக்கு வயிற்றை நிறைப்பது மட்டும் சிரமமில்லை. கழிப்பதும்  சிரமம்தான். இரண்டுக்கும் துடியாய்த் துடிக்க வேண்டியது இருக்கிறது.

‘சே.. தப்புப் பண்ணிட்டமோ? மோரிக்குள்ளே பேப்பர விரிச்சி இருந்து விடிஞ்சதும் வெளிய கொண்டு போட்டிருக்கலாமோ? தொண்ணூறு அடிச்சாலைக்கு அந்தப் பக்கம் வீனஸ் ஓட்டலுக்கு பின்னால கல்யாணம் முடிஞ்சி வந்த புதுசுல ரெண்டடி அகலம் கூட இல்லாத திலகர் சாலில் 6 x 8 அடி குடிசை. நான்கு பக்கமும் தகரத்தால் அமைந்தது. சத்தம் இல்லாமல் முத்தம் கொடுத்து முனங்கல் இல்லாமல் கடித்து விளையாடி ஊமை உடலுறவில் உச்சத்தை எட்ட வேண்டும். பாராட்டியோ ஓசையெழ சிரித்து விட்டலோ அன்றைக்கு பக்கத்து வீட்டுக் காரங்களுக்கு தூக்கம் கெட்டுப்போயிடும். தகரச் சுவருக்கு முத்தத்தின் சத்தத்தையும் முனகலையும் தடுக்கும் உரம் ஏது!

புனிதா ஆறு மாத சூலி. “வயிறு வலிக்குது பாத் ரூம் போகணும்”  என்றாள் . அவன் சட்டையைப் போட்டுக் கொண்டு தயாரானான். அவள் பசையடித்தாள். வாளியில் தண்ணியை நிறைத்துக் கொண்டு கதவைத் திறந்தான். “இப்படி வாயிம் வயிறுமா இருக்கச்சில ராவு இருட்டு வெளிய போவக்கூடாதுன்னு அம்மா எல்லா லட்டரிலேயும் எழுதியிருக்கா. போனா கொழந்தைக்கு எதுவும் ஆயிரும்னு பயமா இருக்கு “ என்றாள்.

கையைப் பிடித்து இழுத்து “வா, நா கூட வாரெல்லா ஒண்ணும் ஆவாது.” தைரியம் ஊட்டி அழைத்தான்.

“இல்லங்க நமக்கு எதும் ஆனாக்கூட பரவாயில்லங்க. வயித்துல இருக்கிற நம்ம புள்ளைக்கி எதுவும் ஆனா… அதுவும் தலைச்சம் புள்ள.” தயக்கம் காட்டி மறுத்தாள்.

சாமிப்படத்துக்கு முன்னால் இருக்கும் திருநீறை எடுத்து அவள் நெற்றியில் பூசி “இது நம்ம சொடல சாமி கோயில் திருநாறு பாத்துக்க, வா போவம்.” என்றான். அவள் வேண்டாங்க அடக்கிக்கிட்டு இருந்திருதென். விடிய காலையிலேயே போவோம்.” என்றாள். விளக்கை அணைக்காமல் பாயில் படுத்தார்கள். அவனுக்கு கண்ணில் தூக்கம் சொக்கவும் அவள் மறுபடியும் அவனை எழுப்பினாள். “ரொம்பா வயிறு வலிக்குங்க போவமா?” என்றாள் அடிவயிற்றை இரண்டு கையாலும் தாங்கியவாறு. அவன் சட்டையைப் போட்டுக்கொண்டு ஆணியில் தொங்கும் டார்ஜ் லைட்டை எடுத்தான். அதற்குள் “என்னால அவ்வளவு தூரமெல்லாம் வர முடியாதுங்க. இங்கேயே இருக்கணும் போல இருக்குங்க” என்றாள். மோரியில் பேப்பரை விரித்து அதில் அவளை இருக்கச் சொன்னான். இருந்து முடிந்ததும் அதை எடுத்து மடக்கி சோறு பொங்கும் திண்டில் ஏறி விட்டத்தின் வழியாக பின் பக்க சாக்கடையில் வீசினான். இறங்கியதும் அவள் திரும்பி நின்று கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

மீன் மார்க்கெட் கழிவறையை நோக்கி தொக்கோட்டமாய் ஓடினான். உயர்ந்த நடைமேடை திண்டில்  உட்கார்ந்து வம்பளக்கும் காவாலிக்கூட்டம் இவனைப்பார்த்து சிரித்தது. ‘மும்பைக்கு வந்து நற்பது வருசம் தாண்டப்போவுது. இன்னும் கழிவறையோடு கூடிய வீடு வாங்க முடியலியே’ என்ற கவலை இப்பொழுது அவனை பீயாய்த் துரத்தியது. வழியில் எங்கும் போய் விடுமோ என்ற அச்ச உணர்வு உடலெங்கும் பரவ வயிற்றை எக்கி எச்சரிக்கையாக நடந்தான்.

ராத்திரி வேலைக்குச் சென்று திரும்பும் ஒரு சிலர் தென்படாவிட்டால் கூட தெருவோர இருட்ல எங்கேயும் இருந்து தொலைச்சிட்டு போயிறலாம். ஒருசில முகம் தெரிந்தவர்களும் பார்த்து விட்டு கடக்கிறார்கள். காலை அகட்டி நடந்ததில் கால் வாளியில் தட்டி கைப்பிடி கழன்று கீழே விழுந்து தண்ணீர் கொட்டியது. வாளியைக் கூட  எடுக்க விருப்பமின்றி விறுவிறுவென்று நடந்தான்.  

உடல் நடுங்கி தளர்வுற்றது. மயிர்க்கால்கள் குத்திட்டன. ஆசன வாயில் முட்டி இப்பொழுதே வழியில் போய் அவமானப் பட்டு விடுமோ என்று எண்ணி அருகில் இருக்கும் தண்டவாளத்தை நோக்கி ஓட்டம் எடுத்தான். எதிரில் வந்தவர்கள் ஒருசிலர் நின்று பார்த்து “என்னப்பா இந்த சாமத்துல தண்டவாளத்த நோக்கி ஓடுதான். வீட்ல பொண்டாட்டிக் கூட சண்ட கிண்ட போட்ருப்பானோ?” பேசியபடி கடந்து போனார்கள்.

விரைந்து ஓடியவன் டோபிகாட்டை தாண்டி தண்டவாளத்தை நெருங்கி விட்டான். எமனின் குரல்போல அலறியபடி ஒண்ணாவது தண்டவாளத்தில் தரை குலுங்க தடதடவென்று ஓடியது இரயில். அது வெளியூர் செல்லும் இரயில். நிறைய பெட்டிகளை இழுத்துக்கொண்டு ஓடியது. அந்த இரயில் கடந்து போகும்போதே அதன் வெளிச்சம் ஏற்படுத்திய கூச்சத்தில் எதையுமே சரிவர பார்க்க முடிய வில்லை. தண்டவாள ஓரத்திலாவது இருக்கலாமென்றால் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோயிலில் நான்கைந்து திருநங்கைகள் அமர்ந்து இருப்பது தெளிவற்று தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளிப்போவோமென காத்து நின்றான். எதிர் திசையிலிருந்து மூணாவது தண்டவாளத்தில் சீறிப்பாய்ந்து சென்றது ஒரு விரைவு வண்டி. அதைப்பார்த்தபடி கவனமாய் கால்களை தூக்கி வைத்து தண்டவாளத்தை கடக்க முயன்றான். அதற்குள் கொஞ்சமாய் அவன் லுங்கியும் ஆசனவாய் பகுதிகளும் ஈரமாகி விட்டன. எக்கி அதை வெளியேற விடாமல் உள்ளிழுத்தான். குடல் அறுந்து போனதுபோல் வலி. உடல் நடுங்கியது.  சிறிது மயக்கம்போல தோன்றியது. இரண்டாவது தண்டவாளத்தில் கால் எடுத்து வைத்ததும் ‘போம்’ என்ற இரைச்சலுடன், கூட்ஸ் இரயில் விருட்டென பாய்ந்து அவனுக்கு மிக அருகில் தடதடவென்று தரை குலுங்க ஓடிய அதிர்ச்சியில் வெளியுலக கட்டுமானங்களை உடைத்து இருகால்களிலும் வழிந்தோடியது.

- இறை.ச.இராசேந்திரன்

Pin It