அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்து குடித்தனத்தின் ஹாலில் பால்கனியை ஒட்டி ஈஸிசேரில் நிதானித்திருந்த ராமையா, முற்பகலின் அரவமற்ற அமைதியில் தரித்திருந்த தெருவில் பார்வையை ஓடவிட்டவாறு ஓய்ந்திருந்தார். அவ்வப்பொழுது குரல் கொடுத்துச் செல்லும் தள்ளுவண்டி விற்பனையாளர்கள், வாகனங்கள், குடியிருப்பின் சுற்றுச் சுவரையொட்டி உயர்ந்து வியாபித்திருந்த வேப்ப மரக் கிளைகளில் ஓடிக் குதித்து விட்டு விட்டு குரல் கொடுக்கும் அணில் பிள்ளைகள் ஆகிய இவைகளின் ஓசையை மாத்திரம் துணையாகக் கொண்டு கண்கள் பாதி மூடிய அவருடைய மோனத்தில் அமர்ந்திருந்தார். எப்பொழுதாகிலும் சும்மா இருப்பது சுகமாகலாம்; குறிப்பிட்டுச் செயாலாற்ற எதுவுமின்றி எப்பொழுதும் சும்மாயிருந்தால் அந்த இருத்தலே சுமையாகத்தான் தெரிகின்றது.

இந்த நாட்களோடு வெகுவாய் அலுத்துக் கொள்ளவோ சலித்துக் கொள்ளவோ ராமையாவுக்கு அதிகமாகக் காரணங்களும் கிடையாது; நியாயமும் கிடையாது. ஆனால் இயக்கமற்ற இருத்தலே ஒரு ஊனம் என்பதை ஊரும் ஒவ்வொரு மணித்துளிகளும் ராமையாவிற்கு உணர்த்துகின்றன. மகன் அவருக்காக வாங்கிப்போடும் தினத்தந்தியும் முடித்தாகி விட்டது. பிரியப்பட்ட திரைப் படங்கள், பகல் இரவுச் செய்திகள் தந்த தொலைக்காட்சி தான் ஒரு முட்டாள் பெட்டி என்பதை நிரூபித்துக்கொண்டு அதிகமாய் அந்நியமாய்த்தான் ஆகிவிட்டது. நடுப் பகல் பன்னிரண்டுக்கு முன்னதாக கதவைப் பூட்டி விட்டு ஒரு சிறு நடையாக தெருமுனை டீக்கடையில் ஒரு டீக்குப் பழக, சிறிது நேரம் அந்தக் குறைந்த கலகலப்பில், வீதியின் பரபரப்பில் அமிழ்ந்துவிட்டு திரும்புவதைக் கூட சமீப மாதங்களாக ராமையா குறைத்துக் கொண்டார். இப்படி மகனும் மருமகளும் பேரனும் தங்கள் அன்றாடங்களுக்கு விடை பெற்றுச் சென்ற பின்னர் ராமையாவிற்கு வீடு திறந்தவெளிச் சிறைச்சாலையாகத்தான் படுகிறது.

காலங்கள் மாறும். விடிந்த பொழுதில் கிடைத்த வேலையை செய்து முடித்து உண்டு உறங்கி நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து அமர்ந்த சாதாரணன்தான் ராமையா. மிகப் பெரிய திட்டமிடுதல்கள் எல்லாம் கிடையாது. கையில் தொழில் இருந்தது. இந்தப் பரந்த சென்னையில் இவன் ஊரிலிருந்து வந்து தன்னை நிறுத்திக் கொண்ட நாட்களில் அவனுக்கான களம் விரிந்திருந்தது. விரைவாய் தொழிலில் ஒரு தேடப்படுகிற விளம்பர ஓவியக் கலைஞனாக வளர்ந்து தன்னை நிறுத்திக் கொண்டான் ராமையா. சம்பாதித்து நிதானித்து குடும்பமாகி சந்ததி கிளைத்து ஓய்ந்து கெளரவமான கூரையும், குறையற்ற சோறும், உடுத்தவுமாய் அமர்ந்தாலும் அரவமற்ற நிமிஷங்களில் மனம் உரையாடி உறவாட ஒரு துணை தேடி அரற்றவே செய்கிறது. மாலையில் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே நடைபயிலும் ராமையாவின் வயதிற்கொத்த மூன்று நான்கு இணைகள் உண்டுதான். ஒரு இரண்டு மணி நேரத்தை பேச்சிலும் நடையிலுமாகக் கரைத்துவிட உதவுமே அல்லாமல், அந்தக் கூடுகை ஆத்மார்த்தமாக திருப்தியாவது என்று சொல்லுவதற்கில்லை. அப்படியொரு காலமும் வெளியும் நண்பன் சிவனோடும், வாழ்க்கைத் துணையாக தந்தை சேர்த்து வைத்த சிவகாமியோடும் முடிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ராமையா ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு வழியாக பதினொன்றாம் வகுப்பு வரை நீந்தி நீந்தி வந்தான். படிப்பு மண்டையில் ஏற மறுத்தது. ஆறாம் வகுப்பிலேயே கணக்கு, அறிவியல் குறிப்பேடுகளின் கோடுகள் இல்லாத பக்கங்களில் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் வரைந்து வைப்பான். சரித்திர பாடப் புத்தகங்களிலிருந்து கட்டபொம்மனையும் வீர சிவாஜியையும் அப்படியே வரைவான். தனக்கு மிகவும் நெருக்கமான சகாக்களிடம் மாத்திரம் ஆசிரியர்களிடம் சொல்லக் கூடாது என்கிற நிபந்தனையுடன் காண்பித்து காலரை உயர்த்திக் கொள்வான். இப்படியே அவன் திறமை எட்டாவது வகுப்பு வரும் வரை குடத்திலிட்ட விளக்காகத்தான் இருந்தது.

எட்டாம் வகுப்பு முழு வருடத் தேர்வுக்கு முன்னதாக ஆசிரியர்களை கெளவ்ரவிக்கும் பிரிவுபாசார நிகழ்வில், வகுப்புத் தலைவனும் சகாக்களும் உற்சாகப் படுத்தியதன் பேரில், வகுப்பின் கரும்பலகையில் வண்ணச் சாக்பீஸ்களைக் கொண்டு பாரதியையும் வள்ளுவரையும் இரண்டு பக்கங்களில் வரைந்து மத்தியில் ஒரு குத்துவிளக்குக் கீழ் ”எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி – விடை பெறுகிறோம்” என்று எழுதி தன் திறமையை ஊரறியச் செய்துவிட்டான். “இருக்ற ஒரு புளிய மரம் பாக்கி வைக்காத - நீல்லாம் எங்கடா உருப்படப் போற?” என்று வாரத்துக்கு இரண்டு முறை வசை பாடும் கணக்கு வாத்தியார் கூட கரும்பலகையை பார்த்து விட்டு திகைத்து நின்று விட்டார். “நீயாடா ? அடேங்கப்பா” ரெண்டே வார்த்தைகள்தான். பாராட்டும் அளந்துதான் வரும். தலைமை ஆசிரியர் நெகிழ்ந்து விட்டார். “இந்தத் திறமையை வைத்து இந்த சராசரி மாணவன் என்ன செய்யப் போகிறான்?” என்று தன் சக ஆசிரியர்களிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருக்கே தெரியவும் இல்லை; புரியவும் இல்லை. அந்த நாட்களும், அந்த பெரிய கிராமமும், அந்த எளிய துவக்கப் பள்ளியும் அந்த இளம் வித்தகக் கலைஞனை அங்கீகரித்து ஊக்குவிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. எல்லா மாணவர்களோடும் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு ராமையா உயர்நிலைப் பள்ளி வந்து சேர்ந்தான்.

உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் இருந்தார். வாரம் ஒரு நாள் ஓவிய வகுப்பு. ஒன்பது பத்தாம் வகுப்பு மட்டும்தான் ஓவிய வகுப்புகள் உண்டு. பதினோராம் வகுப்பு முழுதும் அரசுத் தேர்வுக்கு தயாராகும் முஸ்தீபுகள்தான். இரண்டு வருஷத்தில் இப்படியாக மொத்தம் ஒரு தாமரை மலர், இரண்டு கிளிகள், ஒரு மயில், ஒரு கற்பனை இயற்கைக் காட்சி என்று மொத்தம் ஆறு அல்லது ஏழு படங்கள்தான். பென்சிலில் வரைந்து வாட்டர்கலர் செய்ய வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் குறிப்பேடின் இடையில் ஒரு பக்கத்தில் ஆர்வக் கோளாறில் அவனுடைய அபிமானப்பட்ட அபிநய சரஸ்வதி சரோஜாதேவியை வரைந்து விட்டான். ஊரின் ஒரே ஒரு திரையரங்கத்தில் மக்கள் திலகத்தின் “அன்பே வா” அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. வீட்டில் சொல்லி ஒரு முறையும் சொல்லாமல் ஒரு முறையும் பார்த்த துடிப்பில் அம்மையார் அறிவியல் ஏட்டில் படையெடுத்து விட்டார்கள். மக்கள் திலகம் கணித ஏட்டிற்குள் வியாபித்திருந்தார். பரவலாய் மாணவர்களின் குறிப்பேடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவியல் ஆசிரியர் கண்களில் அபிநய சரஸ்வதி மாட்டிக்கொண்டார். “அதாண்டா – ஹைஸ்கூல் வந்துட்டாலே எல்லா வாலும் மொளச்சுறும் - அப்டித்தானல? படிக்ற நோட்ல சினிமாக்காரிய வரஞ்சுக்கிட்டு” என்று முதுகில் ஒரு அப்பு அப்பினார். முழு வகுப்புக்கும் அவன் திறமையைக் காண்பித்து நோட்டைக் கைப்பற்றிக் கொண்டார்.

ராமையாவின் அபிநயசரஸ்வதி அநேகமாக எல்லா ஆசிரியர்களின் பார்வைக்குப் போய் பள்ளி மாணவர்களின் பேசு பொருளாகிவிட்டது. மாணவர்களின் கேலியும் கிண்டலும் ஒரு புறமிருக்க, பருவமெய்திய பாவாடை தாவணி மாணவிகளின் நமுட்டுச் சிரிப்புதான் இவனைப் பிடுங்கி எடுத்து விட்டது. ஓவிய ஆசிரியர் “ஏன்ல – கிறுக்குப் பயல வரயறதுண்ணா ட்ராயிங்க் நோட்ல எங்கனயாச்சும் வரய வேண்டியதுதானல; அறிவு கெட்டவனே” என்று வாழ்த்தினார். ஒரு பதின்வயது சிறுவனிடம் ஒளிந்து ஒளிரும் அசாதாரணமான திறமையைப் பார்த்து பிரமித்து உற்சாகப் படுத்தும் நிலவரத்திலெல்லாம் அந்தப் பெரிய கிராமத்தின் அரசுப் பள்ளியோ, ஆசிரியர்களோ, அவனைப் பெற்றவர்களோ, சக மாணவர்களோ எவரும் அந்த நாட்களில் பக்குவப் பட்டிருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். மிகப் பெரிய கிரிமினல் குற்றவாளியைப் போல தனிமைப் படுத்தப்பட்டு அந்த பள்ளியின் சூழலில் அந்நியமாகி கூனிக் குறுகிப் போயிருந்தான் ராமையா. அறிவியல் ஏடும் அபிநய சரஸ்வதியும் இன்னும் கைக்குத் திரும்பியிருக்கவில்லை. ஒரு வழியாய் வழக்கு அறிவியல் ஆசிரியர் துப்பு துலக்கிய அடுத்த நாளுக்கு அடுத்த நாள் உச்ச நீதிமன்றம் – தலைமை ஆசிரியரிடம் வந்து சேர்ந்தது.

அந்த நாட்களில் அந்த உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் முதல் வில்லன் தலைமை ஆசிரியர்தான். விளையாட்டு மைதானத்தையடுத்த விழாக்கள், நிகழ்வுகளுக்கான அந்த திறந்த மேடையில் வெள்ளைவெளேர் பேண்ட் சட்டையுடன், இழுத்து வாரிய கருத்த முடியும், வழித்த முகத்தின் நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டுடன் – என்ன வாசானாதி திரவியம் என்று சொல்ல முடியாது – அருகில் சென்றால் அப்படி கமகமக்கும், சராசரிக்கும் சற்று அதிகமான உயரத்தில் அந்த கம்பீரமான உருவத்தைப் பார்த்த உடனேயே பையன்களுக்கு சர்வநாடியும் அடங்கிவிடும். பாரபட்சம் என்பதே அவரது அகராதியில் கிடையாது. படித்தாலும், மண்டுவானாலும், வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்தாலும், ஏழையானாலும், சாதி இனம் எதுவானாலும் அவருடைய முதல் தேவை ஒழுக்கம்தான். மூன்று மாணவர்களாய்ப் போனாலும் வரிசையாகத்தான் போக வேண்டும். காலை எட்டேமுக்கால் மணியடித்த பிறகு ஒரு சிடுகுஞ்சு விளையாட்டு மைதானத்துக்குள் நிற்கக் கூடாது. வகுப்புக்குள் வந்து புத்தகத்தை எடுத்துவிட வேண்டும். பக்கத்தில் பேசினதாக வகுப்புத் தலைவன் பிராதோ, பள்ளி மாணவர் தலைவன், உதவி தலைவன் பிராதோ போய்விட்டால் கை பழுத்து விடும். என்ன பிரம்பப்பா அது? ராமைய்யா இப்பொழுது நினைத்தாலும் கையை தடவி விட்டுக் கொள்கிறார். அவர் வந்து பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் தொடை நடுங்கிகள் என்று ஊருக்குள் பேச்சு அடிபடும் அளவிற்கு தலைமை ஆசிரியர் தன் ஆளுமையை நங்கூரமிட்டு விட்டார்.

எஸ்.எஸ்.எல்.சி – பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் தனியாகத்தான் தெரிவார்கள். பள்ளி வருஷத்தின் முதல் நாளிலேயே இரண்டு கணிதம், ஆங்கிலம், அறிவியல், தமிழாசிரியர்கள் என எல்லோரையும் வைத்துக் கொண்டு ஊக்கப்படுத்தும் பேச்சாக ஒன்றரை மணி நேரம் கண்டிப்புடன் உற்சாகப் படுத்தி புரட்டி எடுத்து விடுவார். மொத்த பதினோறாவது வகுப்பு மாணவர்களையும் படிப்பில் அவர்களுடைய நிலவரத்தின் படி பத்து குழுக்களாய் பிரித்து மாலை பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு ஆசிரியரைப் பொறுப்பாக்கி எல்லா பாடங்களிலும் ஊக்குவிக்கும் பயிற்சிகள். மாதத் தேர்வுகள் போக ப்ரத்யேகத் தேர்வுகள் என்று முதுகலைப் படிப்பு தோற்றுப் போகும் அளவிற்கு முயற்சிகளை முன்னிறுத்துவார்.

இப்படியான தலைமை ஆசிரியர் முன் நின்றான் ராமையா. எப்படியும் கை பழுக்கும். அவர் அறைக்குள் நுழையும் முன்பே இரண்டு கைகளையும் தலையில் அழுத்தி எண்ணையை தேய்த்துக் கொண்டான். அப்பாவைக் கூட்டி வரச் சொல்லலாம்; அது இன்னும் கொடுமை. சிறிது நேரம் அவன் வரைந்த அபிநய சரஸ்வதியை பார்த்தார். கனத்த மெளனம். ஒரு மெல்லிய நகையுடன் அவனை ஏறிட்டு பார்த்து “இத நீயாட வரஞ்ச?” . தொண்டையிலிருந்து புறப்பட்ட சிரமப்பட்ட வார்த்தைகளுடன் “ஆமா ஸார்” என்றான். மறுபடியும் அவன் படைப்பை ஆய்ந்து பார்த்தார். நோட்டை மேஜையில் வைத்தார். “சுப்பயா” என்று கடைநிலை ஊழியரை அழைத்தார். “அவன்ட்ட அன்ரூல்ட் டபிள் ஷீட் ஒன்னு கொடு”.

ராமையாவுக்கு ஒன்றும் பிடி படவில்லை. அவருடைய மேஜையிலிருந்த அலங்கார மூங்கில் பெட்டகத்திலிருந்து தேடி எடுத்து ஒரு பென்சில், ரப்பர், கட்டர் எல்லாவற்றையும் அவன் கையில் கொடுத்து “இப்ப வரடா. இங்க உக்காந்து வரை”. நடுங்கிய கரங்களுடன் வாங்கியவன் கொஞ்சம் தயங்கி “என்ன வரயணும் ஸர்?” “என்ன நெனக்கியோ யாரத் தோணுதோ? வரை” என்றவர் மேஜையில் அடுக்கியிருந்த வருகைப் பதிவேடுகளில் மூன்றை எடுத்து அவன் கையில் கொடுத்து “ கீழ வச்சுக்கோ” என்றவர் எழுந்து ஏதோ வேலையாக வெளியே போய் விட்டார். அவர் நாற்காலியின் பின்னால் ஒதுக்கமான இடத்தில் அமர்ந்து யோசித்தான் ராமையா. அவனுக்கு இப்பொழுதும் எதுவும் புரியவில்லை. என்ன வரயறது? பேப்பரை அவர் தந்த பேரேடுகள் மேல் வைத்து யோசித்தவன் கண்களில் அந்த அறையை ஆக்ரமித்திருந்த பெரிய மேஜையும் கம்பீர நாற்காலியும் கண்களில் பட்டன. ராமையா குனிந்து தீவிரமானான்.

பத்து நிமிஷங்களில் திரும்பி வந்தவர் பேப்பரும் பென்சிலுமாய் மும்முரமாயிருந்தவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு நாற்காலியில் அமர்ந்து விட்டார். அடுத்த பதினைந்து நிமிஷங்களில் ராமையா தன் ஓவியத்தை முடித்து விட்டான். ஒரு வருகைப் பதிவேட்டையே பயன்படுத்தி பார்டர் போட்டான். எழுந்து அவர் பக்கவாட்டில் வந்து நின்றான். “கொண்டா” என்று வாங்கி பார்த்தவர் “அடேய் – ஹூம் - வெரி குட்” என்று சத்தமாய் தன் வியப்பைப் பதிவிட்டார். சத்தம் கேட்டு சுப்பையா எட்டிப் பார்த்தார். “ட்ராயிங்க் மாஸ்டரக் கூப்பிடு” என்றவர் இவனிடம் “எப்பேர்ந்துடா வரய்ற நீனு?”. “நாலாம் கிளாசுலேர்ந்து” என்றான். திரும்பவும் “குட், குட்” என்றார். கொஞ்சம் தைரியமாகி வருகை பதிவேடுகளை அதன் இடத்திலேயும், பென்சில் ரப்பரையும் மேஜையில் வைத்தான்.

ஓவிய ஆசிரியர் வந்தார்; ராமயாவைப் பார்த்தர். மாட்டிக்கிட்டானா என்று மனதுக்குள் நினைத்தபடி வந்தவரிடம் “ஸார் பாருங்க; நம்மட்ட இவ்ளவு பெரிய டேலன்ட் ஒன்னு வெளிய தெரியாம இருந்துருக்கு. கவனிக்கலயா?” என்று கேட்டுவிட்டு ராமையாவின் படைப்பை அவரிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்தவர் “இல்ல ஸர்; மொதல் படத்லயே பய ஒரு பிறவிக் கலைஞன்னு தெரிஞ்சிருச்சு ஸார். ரொம்பத் தத்ரூபமா ஒங்கள அப்படியே பேப்பர்ல வரிச்சு வச்சுட்டான் ஸார்” என்று சூழ்நிலையை புரிந்து கொண்டவராய் பாராட்டினார். தலைமை ஆசிரியர் சிரித்துக் கொண்டே அவனிடம் “ இதே மாதிரி படிக்கவும் செய்யணும்டா. எத்னாவது ரேங்க்டா?” சொன்னான். முப்பது பேர் வகுப்புல பதினெட்டாவது ரேங்க். “அடுத்த தடவ பாப்பேன். மன்த்லி டெஸ்ட்ல பத்தாவது வரணும்; என்ன?. க்ளாஸ் டீச்சர் ஹரிஹரனா?” என்று கேட்டு விட்டு “சரி போ” என்று அனுப்பி விட்டார். நடந்ததெல்லாம் கனவா நினைவா என்ற திகைப்புடனும் கை தப்பிய அதிர்ஷ்ட்டத்துடனும் வகுப்புக்கு திரும்பினான். கண் கலங்கி அழுது வீங்கிய முகத்துடன் திரும்ப வருவான் என்று காத்திருந்த வகுப்புக்கு பெருத்த ஏமாற்றம். அந்த பீரியட் முடிந்தவுடன் அவனைச் சுற்றிக் கொண்ட சக மாணவர்களுடன் பெருமையாய் நடந்ததைச் சொன்னான்.

மறுநாள் காலைக்குள்ளாக ராமையாவின் புகழ் பள்ளிக்கூடம் முழுதும் பரவி விட்டது. தலைமை ஆசிரியர் இவனுடைய படைப்பை அவர் இருக்கையையும் மற்ற அலுவலக ஊழியர்களையும் பிரிக்கும் இரண்டு பீரோக்களுக்கு மத்தியிலிருக்கும் மரத்தடுப்பில் பிரதானமாக ஒட்டச் செய்து, படத்தின் கீழே ராமையா, IX th ‘B’ என்று அவனுக்குரிய இடத்தையும் அளித்து அங்கீகரித்து விட்டார். பின்னாட்களில் தொழிலில் காலூன்றிய பின் தலைமை ஆசிரியர் அவனுள்ளே அன்று விதைத்த நம்பிக்கையின் நினைவு வரும் போது ராமையாவின் நெஞ்சு படரும் ஈரமாய் நன்றியும் பிரமிப்பும் ஊற்றெடுக்கும். அந்த நாட்களில் அரசுப் பள்ளிகளில் அப்படி கண்டிப்பு, கல்வி, ஒழுக்கம், அரவணைப்பு, மாணவர்களின் மற்ற திறமைகளை அங்கீகரிப்பது, அவர்களின் எதிர்காலம் குறித்த கரிசனம், ஈடுபாட்டுடன் கூடிய கடமையுணர்வு என இவ்வாறான பண்புகளுடனும் ஆளுமைகளுடனும் ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பது மகன் சென்னையில் தனியார் பள்ளியில் படிக்கும் போது அவன் நினைவில் உரைத்தது. கல்வி பற்றிய விழிப்புணர்வை மாத்திரம் விசிறி விட்டு அதை கடைச் சரக்காக்கிவிட்டு அரசாங்கங்கள் கைவிரித்து கள்ள மெளனத்தில் உறைந்திருக்கிற இன்று, அன்றைய அரசுப் பள்ளிகளும் ஆசிரியர்களும் தனக்கு வாய்த்த எவ்வளவு பெரிய பொக்கிஷங்கள் என்று உணர்கிற போது ராமையாவின் கண்களில் மெல்லிதாய் நீர் பனிக்கிறது. தக்கிமுக்கி எஸ்.எஸ்.எல்.சி முடித்த ராமையாவை ஓவிய ஆசிரியர் உதவியுடன் அரசின் முறையான ஓவிய ஆசிரியர்கள் தேர்விற்கு தயாராகும்படி ஆலோசனை கூறினார்.

ராமையாவின் தகப்பன் ஒரு துண்டு நிலத்தை அவருடைய தாத்தா விட்டுப் போன போக்ய வாரிசுரிமையில் விவசாயம் செய்கிற ஒரு குறு விவசாயி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத அதற்கே உரித்தான எல்லா ஜபர்தஸ்துகளிலும் ஒரு எள்ளுமணி கூட குறையாமல் இருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில், அறுவடை காலங்களில் பிள்ளைகள் இருவரும் கூலி வேலைக்குப் போய் குடும்ப வருமானத்தைக் கூட்ட வேண்டும் என்பது எழுதப் படாத விதி. முக்கி முக்கி கீறல் எழுத்துகளில் தன்னைப் போல் கையெழுத்து என்றில்லாமல் தெளிவாய் நாலு எழுத்து எழுதவும் பேசவுமாய் விவரமானால் போதும். அதற்கு மேல் தன் தலைமுறை படித்து உயர்ந்து சம்பாத்தியம் என்கிற நம்பிக்கை, ஆசைகளெல்லாம் இல்லாத அந்த நாட்களின் சராசரி மனிதர். உயர்நிலைப் பள்ளி முடிந்து வீட்டில் எதிர் கொள்ள வேண்டிய தகப்பனின் கெடுபிடிகள், கூலி உடலுழைப்பு இவைகளெல்லாம் ராமையாவின் முன்னே கேள்விக் கணைகளாக எழும்பிக் கொண்டே இருந்தன. இத்தனை நாள் பள்ளிக்கூடமும் படிப்பும் பாதுகாத்துக் கொடுத்த கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் பறிபோகும் நிலவரத்தில் ராமையாவுக்கு எதிர் வரும் நாட்கள் பூதகரமாய்த் தோன்றின. ராமையாவின் அம்மாவுக்கு மகன் பெரிய பத்து முடித்ததே மிகப் பெரிய பெருமையாய் இருந்தது. தூக்குச் சட்டியில் பழங்கஞ்சியும் எள்ளுத் துவையலும் எடுத்து தலையில் வைத்துக் கொண்டு வெற்றிலையை அரக்கிக் கொண்டே காலையில் வேலைக்கு வயல்வெளிக்குக் கிளம்பும் சக பெண்களுடன் மூன்று நாட்களாக தம்பட்டமடித்தாள் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த அந்த கிராமத்து தாய்.

விடுமுறை நாட்களில் ஊரின் ஒரு பெரிய ஜவுளிக் கடையின் புதிய கட்டிடத்தின் பெரிய இரும்புக் கதவுகளில் வண்ணமடித்து பெயரெழுத ஓவிய ஆசிரியருக்குக் கிடைத்த வேலையில் ராமையாவை உதவிக்கு வைத்துக் கொண்டார். வேலை முடிந்து அவன் பங்குக்குக் கிடைத்த தொகையை அப்படியே அம்மாவிடம் கொடுத்தான். அதன் பிறகு இரண்டு சிறிய வண்ண விளம்பரப் பலகைகள். ஒத்துக் கொண்ட தொகையை முட்டி மோதி வாங்குவதற்குள் அந்த சிறிய ஊரின் சிறிய முதலாளிகளின் வணிக சூத்திரம் ராமையாவிற்கு எரிச்சலூட்டும் பாடமாகத்தான் இருந்தது. இடைப்பட்ட நாட்களில் விவசாய கூலி வேலைக்குப் போனான். கையிலிருக்கும் தொழில் திறமைக்கு ஊரில் பிரம்மாத வாய்ப்புகள் கிடையாது என்பது மூன்றே மாதங்களில் ராமையாவுக்கு புலப்பட்டு விட்டது.

ராமையாவுக்கு வயதில் மூத்த மேலத் தெரு நடராஜன் அவர் தங்கையின் திருமணத்திற்காக சென்னையிலிருந்து ஊர் வந்திருந்தார். ஓவிய ஆசிரியர், சென்னையில் நடராஜன் விளம்பர ஓவியத் தொழிலில் காலூன்றியிருப்பதையும், ராமையாவின் திறமைக்கு சென்னை போன்ற பெரு நகரங்கள்தான் களம் என்பதையும் சொல்லி நடராஜன் ஊருக்கு வரும்போது நான் சொன்னதாக அவரிடம் பேசு; நானும் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தார். ராமையாவின் கைவண்ணத்தைப் பார்த்த நடராஜன் வசதியான உதவியாளன் ஊரிலிருந்தே கிடைத்த திருப்தியுடன் வாய் மொழி வேலை உத்தரவை வழங்கி விட்டார். ராமையா அம்மாவிடம் பேசினான். “அம்புட்டுத் தூரமாவாடா? நெறய காரும் பஸ்ஸும் சைக்கிளுமா ஒரே நெரிசலா? அவ்ளவு பெரிய ஊருக்கா?”

மகனுக்கு ஒரு நல்ல விடிவு வேளையும் புரிகிறது; பக்கத்து டவுனைத் தாண்டி எதுவும் தெரியாத பிரிய மகனை ஏதோ காட்டுக்குள் அனுப்புவது போலவும் அந்தக் கிராமத்து பேதை தாய்மை துடித்தது. நடராஜன் ஊரில் பரம்பரையாக வைத்தியம் பார்த்து அதிலிருந்து அப்படியே ஆங்கில மருத்துவமும் பார்க்கும் பேர் பெற்ற கைராசியான செல்லப்பா டாக்டரின் உறவு முறைப் பையன். ராமையாவின் குடும்ப மருத்துவர் அவர்தான். ராமையாவின் அம்மா அவரிடம் போய்விட்டாள். வேலையை மட்டும் நம்பி மகனை எப்படி அனுப்புவது? நமக்கு ஒரு பிடிதாரம் வேண்டாமா என்ற எண்ணத்துடன் அது கிடைத்துவிட்ட திருப்தியுடன் அலை பாய்ந்து கொண்டிருந்தாள் ராமையாவின் அம்மா. இதற்கிடையில் ராமையா மனதளவில் சென்னை வாசத்துக்கு தயாராகி விட்டான்.

புறப்படுவதற்கு முந்திய நாள்தான் தகப்பனிடம் சொன்னபோது வீட்டில் இரவு முழுவதும் புயல் மையம் கொண்டது. “கையில இருக்ற வெண்ணய விட்டுட்டு ஊர்ல இருக்ற நெய்க்கு அலயற மாதிரி அம்மாவுக்கும் மகனுக்கும் ஏன் புத்தி இப்டி பேதலிச்சிரிச்சு? கண் முன்ன இருக்றப்பவே ஓன் புத்ர பாக்யங்கள் ரொம்ப ஒழுங்கு. என்னன்னும் போங்க. நாளக்கு அறுத்து வர்ரப்ப சாக்கு கொறயுது ஒழக்கு கொறயுதுன்னு ராகம் பிடிச்சா மகளே ஓன் கொதவளய அறுத்துப் போடுவேன்னு” கத்திவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார். கூலியே கொடுக்க வேண்டாத ஒரு கை தட்டி விட்டுப் போகிறதே என்கிற ஆதங்கம் அவருக்கு; தன்னைக் கேக்காமலேயே தாரம் முடிவெடுக்கத் துணியும் அளவுக்குத் தன் கை விட்டுப்போன அதிகாரம் இழந்த கோபம் எல்லாமும் அந்த சம்சாரி குடும்பத் தலைவனுக்கு.

இப்படிக் களேபரங்களுடன் கையிலிருந்த கொஞ்சம், அம்மா தந்த மிச்சம் என்ற சிறு தொகையுடன் ராமையா பட்டிணப் பிரவேசத்திற்கு இரயில் ஏறிவிட்டான். ராயபுரத்தில் தன் சிறிய அறையை நடராஜன் ராமையாவிற்கு பங்கு போட்டுக் கொடுத்தார். விளம்பரப் பலகைகள் பாதி முடிந்ததும் முடியாததுமாய், வண்ண டப்பாக்கள், தூரிகைகள், ஒழுங்கற்ற சிதறிய வண்ணக் கோலங்களால் ஆக்ரமிக்கப் பட்டிருந்த சிமிண்ட் தளம், இரண்டு தலையணை பாய்களுடன் மெல்லிய டர்பண்டைன், மண்ணெண்ணெய் வாசனையுடன் அந்த சிறிய கலைக் கூடம், கூடவே ராமையா எனும் இளம் கலைஞனையும் சுவீகரித்துக் கொண்டது.

ஆறே மாதங்களில் சிறிய சிறிய வேலைகளை தனியாகச் செய்யுமளவிற்கு ராமையா முன்னேறினான். கையில் தொழிலுடன் உத்தரவாதமான பணப் புழக்கத்துடன், மணமாகமல் வாலிபம் கடந்திருந்த நடராஜனின் சென்னை வாழ்க்கை அதற்கேயுரிய ராகங்களைக் கொண்டிருந்ததை ராமையா கவனித்தான். நடராஜனுடைய ஏழு வருட சென்னை சம்பாத்தியம்தான் அவருடைய இரண்டு தங்கைகளை ஓரளவு கெளவ்ரவமாகக் கரையேற்றியிருந்தது. அந்த அண்ணனின் பொறுப்புணர்வின் முன்னே அவருடைய நகர வாழ்க்கையின் பலஹீனங்களெல்லாம் பெரிய மீறல்களாக ராமையாவிற்குப் படவில்லை.

ஞாயிற்றுக் கிழமைகளைக் கொண்டாடித் தீர்த்து விடுவார் நடராஜன். நிதானமாய் விழித்து எழுந்து குளித்து மதியம் சாப்பிட்டு மறுபடியும் உறங்கி மாலை ஐந்து மணிக்கு மேல் அறையை விட்டால் இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல்தான் கரைந்த பணமும் உடலுமாக சாராயம் மணக்க தொப்பென்று வந்து படுக்கையில் விழுவார். தனக்கென்று எதுவுமில்லாமல் உழைத்துக் களைத்தவனின் வாரம் ஒரு முறைக் கொண்டாட்டத்தில் கேள்விக்கு இடமிருப்பதாகவே ராமையாவிற்கு தெரியவில்லை. நடராஜனை நினைக்கும்போது அவர் மேல் அவனுக்கு இரக்க உணர்வே மிஞ்சும். அதிகம் பேச மாட்டார். மிக மிக அரிதாக தன் பாரங்களை ஒர் சுய நைய்யாண்டியுடன் பகிர்ந்து கொள்வார். “என்னோட நெலம வேற. ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ கழிச்சி ஊருக்கு திரும்பப் போறப்போ நீ என்ன விட கம்பீரமாய்ப் போகணும். தொழில்ல நான் ஒனக்கு பெரிய ரோல் மாடல்லாம் இல்ல. இந்த ஊர்ல நீ எவ்ளவோ சாதிக்க முடியும்; மனச அல பாய விடாம இருந்தன்னா - அது முக்கியம். இல்லேன்னா கைக்கு வந்த காச பத்தே நிமிஷத்ல கரைக்ற மாதிரில்லாம் நட்பு வட்டாரம் வந்துரும். ஜாக்ரதயா இருக்கணும். சம்பாதிக்றது பெரிசில்ல; பத்து காசுன்னாலும் அத பாது காக்றது முக்யம்.”

மிகக் கறாராக அவன் வந்த மூன்றாம் மாதமே அவனுக்கு கோடு காட்டியிருந்தார் நடராஜன். அவரிடம் இருந்த மிகப் பெரிய கெட்ட பழக்கம் என்று அவன் கணித்திருந்தது ஏற்கும் வேலைகளில் அவர் தவறவிடும் காலக் கெடுகளையும், பொதுவான அவருடைய நேர ஆளுமையும். வேலை கொடுத்தவன் எப்படியும் குறைந்தது அவரிடம் இரண்டு முறையாவது அலைய வேண்டும். அதை ஒரு தொழில் உத்தியாகவே அவர் பின்பற்றுவதாகவே அவனுக்குத் தோன்றியது.

நடராஜனின் தவறுகள், பலஹீனங்கள் தன்னை அண்டி விடாமல் இருப்பதில் ராமையா உறுதியாயிருந்தான். குறிப்பாக சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பது, அதற்கேற்றபடி திட்டமிடுவது, முன்பணம் வாங்காமல் எந்த வேலையையும் துவங்காமலிருப்பது - இப்படி சில நடைமுறைகளை உறுதியாக்கிக் கொணடான். ராமையாவின் ஞாயிற்றுக் கிழமைகளும் கொண்டாட்டம்தான். ஆனால் மதியம் உணவிற்குப் பின் அரை நாள்தான். சென்னை வந்து ஆங்கிலப் படங்கள் அவனை ஒட்டிக் கொண்டன. நகரின், அந்த தொழிலில் ஒரு பிரபலமான பெரிய விளம்பர நிறுவனத்தின் பிரதான, ஆஸ்தான ஓவியராக நடராஜன் நங்கூரமிட்டிருந்தார். அதுதான் முக்கியமான பிரதான வருமானம். மற்றபடி அவர் தனியாகச் செய்வது கூடுதல் வரவு.

நடராஜனின் அனுபவமும் திறமையும் அந்த நிறுவனத்திற்குத் தனியாக வரைகலை திட்ட ஓவியரை நியமிக்க வேண்டிய தேவையை தவிர்த்திருந்தது. விளம்பரத்தின் மைய வாசகங்கள், ஓவியம் பற்றிய அடிப்படை திட்டங்களைச் சொன்னவுடன் ஒரு சிறிய போர்டில் வாட்டர் கலரில் நாற்பது நிமிஷங்களுக்குள்ளாக ஒரு இறுதி ஓவியம் தீர்மானிக்கப் பட்டுவிடும். கேலிச் சித்திரமாகவோ, தத்ரூபமாகவோ, கோட்டு ஓவியங்களாகவோ, இரண்டு அல்லது முப்பரிமாண வடிவமைப்புகளோ எதுவென்றாலும் நடராஜன் மாத்திரம் போதும். அவர்கள் கேட்கிறபடி முடித்துக் கொடுப்பார். நடராஜனின் வெற்றியின் ரகசியம் அவருடைய வண்ணத் தேர்வுகள், வண்ணக் கலவைகள் வழி வெளிக் கொணரும் தனித்துவ முரண்களிலும் இசைவுகளிலும் இருக்கிறது என்பதை ராமையா

உள்வாங்கிக் கொண்டான். எனவே மற்ற ஓவியர்களைப் போல உருவங்கள், ஒளிப் பின்னணி, வண்ணத் தேர்வு, கலவை இவைகளையெல்லாம் சொல்ல வேண்டுமென்கிற அவசியமே இல்லை. அலுவலகத்தில் நிர்வாகிகளால் இறுதியாகத் தீர்மானிக்கப்படுகிற மாதிரி எதுவோ அது அப்படியே பெரிய இரும்புக் கிராதிகள் தாங்கி நிற்கும் அலுமினியப் பகாசுரப் பலகைகளில் வியாபித்து விடும். இடையில் ஒரே ஒரு முறை அலுவலகத் தரப்பில் வேலை ஸ்தலத்துக்கு வந்து பார்த்துப் போய் விடுவார்கள். நடராஜனின் கலை நுட்பமும், திறமையும், ஈடுபாடும், உழைப்பும் அவர்களுக்குள் மிகப் பெரிய நம்பிக்கையை விதைத்திருந்தது.

ராமையா மாதம் ஒரு தொகை அம்மாவிற்கு அனுப்பும் பணவிடை படிவத்தில் மட்டும் ஷேமநலம் விசாரிப்பான். ராமையாவின் தகப்பன் மகனை அர்ச்சிப்பதை நிறுத்தியிருந்தார். யாரைப் பிடித்தோ ஒரு அஞ்சல் அட்டையில் தீபாவாளிக்கு வரச்சொல்லி அம்மா அரற்றியிருந்தாள். அடுத்த வருஷம்தான் அதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியுமென்று அடுத்த பணவிடையில் பதில் கொடுத்தான். ராமையா வந்து ஒரு வருஷம் நெருங்கியிருந்த நிலையில் இன்னொரு விளம்பர நிறுவனத்திடமிருந்து நடராஜனுக்கு அழைப்பு வந்தது. ராமையாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார். அவர்களுடைய வரைகலை ஓவியர் தயாராய் வைத்திருந்த ஒரு மாதிரியை காண்பித்து, வேலை முடிக்க ஆகும் உத்தேச நாட்கள் மற்றும் தொகை எவ்வளவு என்பதை ஒரு முன்திட்ட படிவமாகக் கேட்டார்கள். நடராஜன் சில மாற்றங்களை சொல்ல முற்பட்டார். அவர்கள் சட்டை செய்யவில்லை. மறுநாள் கொட்டேஷன் தருவதாகச் சொல்லி திரும்பி விட்டார்.

இரவில் ராமையா “அவர்கள் கேட்கிற மாதிரி செஞ்சிற வேண்டியதுதானே; நமக்கு வேலை மிச்சம்தானே?” என்றான். நடராஜன் சிரித்துக் கொண்டே “நாளைக்கு தெருவோட போறவன்ல ரெண்டொருத்தனாவது வெவரமானவன் இருப்பான். அவன் இத எந்தக் கிறுக்கன் வரஞ்சான்னு நம்மளத்தான் திட்டுவான். ஓவ்வொரு வேலைலயும், அது சிறுசுன்னாலும் பெருசுன்னாலும் கீழ இருக்ற நம்ம பேரத் தூக்கிப் பிடிக்றதா அது இருக்கணும். இந்தத் தொழில்ல பணம் மட்டும் விஷயமில்ல. பாக்றவனுக்கு லேஅவுட் ஆர்டிஸ்டோ கம்பனில்லாம் தெரியாது. எனக்கு மரியாத இல்லாத இடத்துக்கு நான் போக மாட்டேண்டா” என்று சொல்லி முடித்துக் கொண்டார். “இப்படிச் செஞ்சா என்ன? நம்முடைய யோசனை இப்படின்னு வரஞ்சுட்டுப் போய் காமிக்கலாமே?” என்றான். “செஞ்சு பாறேன்” என்று சொல்லி குறட்டை விட ஆரம்பித்துவிட்டார். நடராஜனின் உத்தேச எண்ணத்தை வாட்டெர் கலரில் உருவாக்கி விட்டு உறங்கியவன் காலையில் அவரிடம் காண்பித்து அவருடைய ஒப்புதலைப் பெற்று விட்டான். காலையில் அந்த நிறுவனத்திற்கு போய்விட்டு வேலைக்குப் போகலாம் என்று அவரை அழைத்தான். “போய் முயற்சி செய்; நான் வர்ல” என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். தன் திறமைக்கு அங்கீகாரம் தராதவர்களை சட்டை செய்யாத ஒரு கலைஞனுக்கே உரிய கம்பீரத்துடன் நடராஜன் அந்த நிறுவனத்தைக் கைகழுவி விட்டார்.

ராமையா பல்வேறு யோசனைகளுடன் என்னதான் ஆகிறது பார்ப்போமே என்று சென்றான். வரைகலை ஓவியர் மிக மும்முரமாய் ஏதோ ஒரு முன் வரைவில் முனைந்திருந்தார். ஏறிட்டுப் பார்த்து “பத்து நிமிஷம் உக்காரு. கொட்டேஷன் ரெடியா?” என்று கேட்டுவிட்டு மறுபடியும் தன் வேலைகளில் மூழ்கினார். முடித்து விட்டு நிமிர்ந்தவரிடம் தன் கையிலிருக்கிற மாதிரியைக் காண்பித்தான். வாங்கி மேலும் கீழுமாய் பார்த்து விட்டு மேஜையில் வைத்தார். “நீ சொல்றதக் கேக்றதுக்கு நான் இங்க உக்காரல; தெரியுதா? சொன்னதச் செய்யணும். இல்லேன்னா போய்க்கிட்டே இருக்கணும்; புரியுதா?” என்று உச்ச ஸ்தாயில் வெடித்தார்.

அவருடைய போதாத நேரமோ? ராமையாவின் நல்ல நேரமோ? இவர்களை விட்டு சற்று தள்ளி கம்பீரமான டைய்யுடன் மிடுக்கான உடையில் இருந்த ஒரு மத்தி வயது நிர்வாகி சத்தம் கேட்டு தான் உரையாடிக் கொண்டிருந்தவருடன் பாதியில் நிறுத்தி விட்டு இவர்களிடம் வந்தார். “வாட் நாய்ஸ் யூ மேக்?” என்று தன் ஊழியரிடத்தில் முறைத்துவிட்டு திரும்பி இவனிடம் “என்னப்பா?” என்றார். ராமையா நடந்ததைச் சொன்னான். “ஷோ மீ” என்று கேட்கவும் லேஅவுட் ஆர்டிஸ்ட் ராமையாவின் வரைவை அவரிடம் கொடுத்தார். வாங்கி சிறிது நேரம் பார்த்தவர் , “வேர் ஸ் அவர்ஸ்? - (நம்முடையது எங்கே)” என்றவர் இரண்டையும் எடுத்து அருகில் இருந்த மரத் தாங்கியில் சிறிது இடைவெளி விட்டு அருகருகே பின்களால் பதித்தார். இதற்குள்ளாக இவர்களைச் சுற்றி ஒரு சிறிய நிர்வாகிகள் கூட்டம் கூடி விட்டது. சிறிது நேரம் பார்த்து விட்டு பின்னால் திரும்பி மற்றவர்களிடம் என்ன நினைக்கிறீர்கள் என்பதை “வாட் டூ யூ திங்க்?” என்று ஆங்கிலத்தில் கேட்டு விட்டு தன் சட்டையில் பேனாவைத் தேடியவரிடம் பின்னாலிருந்தவர் ஒரு பேனாவைக் கொடுத்தார். ராமையாவின் மாதிரி வரைவில் “அப்ரூவ்ட்” என்று எழுதிக் கைய்யெழுத்து போட்டுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார். சிவந்து வெளிறியிருந்த முகத்துடன் தன் வாயால் கெட்ட லேஅவுட் ஆர்டிஸ்ட் கொட்டேஷனை கொடுத்துவிட்டு போகச் சொன்னார்.

நடராஜனிடம் நடந்ததைச் சொன்னபோது “மயிரக் கட்டி மலய இழுத்துட்ட. சரி - செய். இந்த வேலய நீயே செய். ஒரு பத்து பெர்செண்ட் மட்டும் குரு தட்சிணயாக் கொடு” என்று சொல்லிவிட்டார். ராமையா இதை எதிர்பார்க்கவே இல்லை. ஒரு கலைஞனுக்கேயுரிய விருப்பு, வெறுப்பு, கோப, தாப, கெளவ்ரவ ஈகோவுடன் நடராஜன் நின்று விட்டார். கொட்டேஷனில் ராமையாவின் இருபத்தைந்து நாள் காலக் கெடுவை பதினைந்து நாட்களாகக் குறைக்க வேண்டும் என்றதும் நிறுவனத்தின் நிபந்தனைக்கு ராமையா பணிவுடன் “அது விஷயமே இல்லை ஸார். கூட துணைக்கு இன்னும் ஒரு ஆர்டிஸ்ட் – அந்த சம்பளம் அவ்வளவுதான் “ என்றான்.

அவன் கேட்ட தொகையில் பத்து சதம் குறைத்து வேலை ராமையாவுக்குக் கிடைத்தது. தனியாக முதல் வேலை; உடலும் மனமும் பரபரத்தது. வேலைக்குப் புறப்படும் போது இது வரை சட்டையே செய்யாத தெரு முனைப் பிள்ளையாரிடம் ரெண்டு நிமிஷம் நின்றான். அவனும் ஒரு உதவியாளனையும் கூட்டிக் கொண்டு சாரம் கட்டுபவர்களை உற்சாகப் படுத்தி முதல் நாள் இரவு எட்டு மணிக்குள்ளாக சாரத்தைக் கட்டி முடித்தான். சாரம் கட்டிக் கொண்டிருக்கும் போதே காவல் துறையினர் வந்தார்கள். மாநகராட்சி அனுமதி, நிறுவன ஒப்பந்தம் எல்லாம் காண்பித்தும் நின்றவர்களிடம் “இன்னும் ரெண்டு வாரம் இங்கதான் ஸார்; ஒங்களுக்கு என்ன செய்யணுமோ செய்வேன் ஸார்” என்று உறுதியளித்தான்.

மறுநாள் வந்தவர்களில் ஒருவர் நடராஜனை விசாரித்தார். “அவரோட வேலைதான் “ என்று சொல்லி அனுப்பினான். தலையாட்டி விட்டு சென்று விட்டார். மறுநாள் காலை நடராஜன் வந்து சாரத்தில் கையெட்டும் தூரத்தில் ஒரு மாலையை மாட்டி விட்டு கீழே வர்ண டப்பாக்கள் தூரிகைகளின் முன்னால் வெற்றிலை பாக்கு வைத்து ஒரு தேங்காயில் சூடனைக் கொளுத்தி அவருக்குத் தெரிந்த பூஜை செய்து தேங்காயை விடலையிட்டார். “நல்லா வருவப்பா” என்று வாய் நிறைய வாழ்த்தி விட்டு “சாய்ந்திரம் வாறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். உதவியாளர்கள், வர்ண டப்பாக்கள், தூரிகைகள் சகிதம் பிள்ளையாரையும் அம்மாவையும் மனதில் நிறுத்திக் கொண்டு சாரத்தில் ஏறியவன்தான் - ராமையா அடுத்த பன்னிரெண்டு வருஷங்களுக்கு தொழிலில் கீழே இறங்கவேயில்லை.

நாலாவது வருஷத்திலேயே ராமையா முன்னணி விளம்பரக் கலைஞனாக கையில் ஐந்து உதவியாளர்களுடன் இரண்டு பெரிய நிறுவனங்களின் நிரந்தர ஓவியனாகக் காலூன்றிவிட்டான். ஐந்தாம் வருஷத்தில் சிறிய அளவில் ஒரு அலுவலகத்துடன் “லேஅவுட்” மட்டும் தனியாகக் கேட்கிறவர்களுக்கு செய்து கொடுக்கிற வேலைகளையும் ஆரம்பித்தான். தமிழ், ஆங்கில வார்த்தைப் ப்ரயோகங்கள் மற்றும் அலுவலக நிர்வாகத்திற்காக தேடித் தேடி இதில் ஆர்வமுள்ள ஒரு பட்டதாரி பெண்ணை நியமித்தான். ராமையா வேலை முடிக்கும் காலத் திட்டத்தில் உறுதியாக இருந்து தொழிலில் அதில் தனிப் பெயர் சம்பாதித்துக் கொண்டான்.

ஆறாவது வருஷத்தில் ராமையா ஓவியர்கள் உட்பட மொத்தம் பத்து பேர்களுக்கு படியளக்கும் சிறு தொழில் முனைவனாக தன் எல்லையை விரித்துக் கொண்டான். ஆரம்பித்த முதல் இரண்டு வருஷம் நடராஜனைச் சார்ந்ததாய் அவருக்கு உதவுகிற முறையிலும் அவருடைய பத்து சதக் கமிஷனைத் தந்தான். மூன்றாம் வருஷம் சிறு நோய்வாய்ப்பட்ட நடராஜன் ஊருக்குப் போய் சற்று ஓய்வெடுத்து வருகிறேன் என்று போனவர் ஊரிலேயே தங்கிவிட்டார். அவர் வாழ்வின் நரகமாக மாறத் துவங்கியிருந்த அவரே வருவித்துக் கொண்ட சங்கிலிகளைக் களைய விரும்பி நகரத்திற்கு விடை கொடுத்து விட்டார். தீபாவளிக்கு ஊர் போகும் நாட்களில் ராமையா அவரை செழுமையாகக் கவனித்து தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டான். தாயையும் தகப்பனையும் ஒரு முறை சென்னை கூட்டி வந்து காண்பித்தான். மகனின் நிலவரத்தை வந்து பார்த்த தகப்பன் மறு மாத இறுதிக்குள்ளாக சிவகாமியை தேடிப் பிடித்து அவன் கை பிடிக்கச் செய்து ராமையாவை குடும்பி ஆக்கிவிட்ட திருப்தியுடன் தன் கடமையை முடித்துக் கொண்டார். கல்லூரி புகுமுக வகுப்பு முடித்திருந்த சிவகாமியும் ராமையாவின் நிறுவனத்தில் இணைந்து கொண்டாள். அஞ்சல் வழிக் கல்வி மூலம் சிவகாமி ஆங்கில இலக்கிய பட்டப் படிப்பை முடித்து விளம்பர வாசகங்கள் தொகுப்பது மற்றும் வணிக விருத்தி வேலைகள் என்று ராமையாவுடன் மும்முரமானாள்.

இன்னுமொரு ஐந்தாண்டுக் காலத்தில் தொழிலை விருத்தியாக்கி மகனைத் தயார் செய்து அவனிடத்தில் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்கலாம் என்ற கனவுகளோடும் திட்டங்களோடும் கால் பதித்திருந்த ராமையாவுக்கு அவன் தொழிலில் காட்சிகள் சடுதியாய்த் திசை மாறி திகைப்பைத் தரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் குப்புறக் கவிழ்த்துப் போடும் அளவுக்கு சூறாவளியாய் சம்பவங்களும் நிகழ்வுகளும் அரங்கேறும் என்று அவன் நினைத்துக் கூடப் பார்த்திருந்ததில்லை. ஒரு தொழில் வளருகிற போது வணிக விஸ்தரிப்பின் சூத்திரமாய் அது பல உட் கிளைகளாய்த் தழைப்பது இயற்கை.

ராமையா சென்னை வந்து தூரிகையை கையிலெடுத்த காலத்தில் ஒரு விளம்பர நிறுவனம் ஓவியக் கலைஞர்கள் என இரண்டே பிரிவுகள்தான். நாட்டின் வணிகப் பெருக்கம், விரைவான முன்னேற்றம் அதில் விளம்பரங்களின் தவிர்க்க முடியாத பங்களிப்பு என்று இப்படி சங்கிலித் தொடராகத் தொழில் விருத்தியடைய ஆரம்பித்த போது, ராட்சத விளம்பரப் பலகைகளை நிர்மாணிப்பது, பராமரிப்பது, அதை மொத்தமாய் ஒரு தொகைக்கு எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட கால வாடகைக்கு விடுவது என்று தொழிலின் உட் பிரிவுகளும் முனைபவர்களுமாய் அது வளர்ந்து பெருகுவதும் விரிந்து கொண்டே போனது. எதுவானாலும் ஓவியர்கள் இல்லாமல் முற்றுப் பெறாத இந்தத் தொழிலில் ராமையா வற்றாத நதியாகத்தான் பயணித்துக் கொண்டிருந்தான்.

கடைசியாக நகரின் கேந்திரமான இடத்தில் ஒரு பலகையை ராமையாவும் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு வாங்கி வாடகைக்கு விடும் முயற்சிகளில் முன்னேறியிருந்தான். தொழில் வளரும் போது கூடவே போட்டி, பொறாமை, பூசல்கள் அதையொட்டி எழும் அரசியல்கள் எல்லாம் வருகின்றன. முதலில் தனக்குக் கிடைக்காத இடத்தில் அடுத்தவனைத் தடுக்கும் முயற்சிகளாய் மாறிய அச்சுறுத்தல்கள், அரசியல் செல்வாக்கு, காவல் துறை தலையீடு, நீதிமன்ற வழக்குகள் என்று சிக்கல்களாய் முளைத்தன. நாட்டின் நெடுஞ்சாலைகளில் நிறுத்தப் பட்டிருந்த ராட்சத பலகைகளில் ஒன்றிரண்டு காற்றில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்துகளில் காப்பீட்டு நிறுவனங்கள் வழக்கை விளம்பர நிறுவனங்கள் பால் திருப்பியதில் இரண்டு வழக்குகளில் நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விளம்பரப் பலகைகளை வைப்பதற்கு நிரந்தரத் தடை விதித்ததில் தொழில் நாற்பது சதத்துக்கு மேல் முடமாகி விட்டது.

நகரங்களுக்குள் நடந்த போட்டா போட்டி வழக்குகளுக்குள் நகர அழகு, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சமயம் பார்த்து தங்களையும் இணைத்துக் கொண்டு, விளம்பரப் பலகை நிறுவனங்கள் தங்கு தடையின்றி அராஜகத்தை அரங்கேற்றி நகரங்களின் அழகையும், பொலிவையும் மறைத்து வெறும் விளம்பர மாயையில் வியாபாரமாக்குகின்றன என்ற வாதம் நீதி மன்றத்தில் வலுவாக அரங்கேறியது. நகருக்குள்ளும் விளம்பரப் பலகைகளின் சரிவினால் ஏற்பட்ட சாலை விபத்துகளும் அவர்களின் வாதத்திற்கு வலுவூட்டின. காற்றில் புயலில் பலகைகளின் சரிவு இப்படி தொழிலின் சரிவாய், வீழ்ச்சியாய் பரிணாமம் எடுத்தது. இறுதியாய் நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்புகள் நீதிதான். ஆனால் அது விளம்பரப் பலகைகளின் , நிறுவனங்கள், ஓவியக் கலைஞர்கள், பலகைகளை மொத்த ஒப்பந்தத்திற்கு எடுத்தவர்கள் என்ற ஒரு பெரிய பரந்த தொழில் சாம்ராஜ்யத்தின் மரண சாஸனமாக முடிந்து விட்டது.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அனைத்து விளம்பரப் பலகைகளையும் அகற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு நீதி மன்றம் இட்ட உத்தரவில், அவைகள் இறந்த யானையாக மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், பழைய இரும்பு வியாபாரிகளுக்கு அவர்கள் எதிர்பாராத லாட்ரி வரவாகின. வீழ்ந்த பலகைகளின் பின்னாலிருந்த கட்டிடங்களும், கவின் மிகு காட்சிகளும் இயற்கை ஓவியங்களாய் பளிச்சிட்டன. மீண்டும் உயிர் பெற்றன. நாட்டின் அரசியலில் ராமையாவுக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. தொழிலில் மிகப் பெரிய அரசியல் திமிங்கிலங்களும் முறுக்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு எளிதாக இந்தத் தொழிலை நசுக்கி விட முடியாது என்று உறுதியாய் நம்பியிருந்த ராமையாவுக்கு இது பேரிடியாக விழுந்தது.

முதல் இரண்டு நாட்கள் நம்பவே முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. தீர்ப்புக்கு முந்திய தினம்தான் அண்ணா நகர் வளைவுக்குச் சற்று முன்னதாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உருவாகிக் கொண்டிருந்த ஒரு ஊக்க பானத்தின் விளம்பரத்தில் ஒரு கொழு கொழு சிறுமி தகப்பனிடத்தில் ஓரு பந்தை “CATCH IT DADDY” (அப்பா பிடிங்க) என்ற வாசகத்துடனான ஓவிய வேலையிலிருந்த தன் சகாக்களை மேற்பார்வையிட்டு வந்திருந்தான் ராமையா. இல்லை – தொழில் மாத்திரமில்லை – ராமையாவின் கணக்கு மாத்திரமல்ல - நாடெங்கிலும் இந்தத் தொழிலில் இருந்த பல்லாயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையும் கைநழுவிப் போய்விட்டது. அவர்களைப் பொறுத்த மட்டும் நீதி மன்ற தீர்ப்பு புயலாய், பூகம்பமாய், பேரிடியாய்த்தான். ராமையாவின் கீழிருந்த முடக்கப் பட்ட தூரிகைகளின் சொந்தக் காரர்கள் – ஓவியர்கள் பாதிக்கும் மேல் மறுபடியும் சொந்த ஊரை நோக்கி பஞ்சம் பிழைக்கப் போகிற விவசாயத் தொழிலாளர்கள் போல் புலம் பெயர்ந்தனர்.

பிரளயமான அந்த வேகமும், வீரியமும், வீழ்ச்சியும் ராமையா மாத்திரமல்ல, அந்தத் தொழிலில் இருந்த ஒருவரும் எதிர் பார்த்திராதது. சிவகாமியின் கிராமத்து நிதி மேலாண்மை, நடராஜனின் கரிசனம் மிகுந்த எச்சரிப்பு, தொழில் விருத்திக்கென்று ராமையாவின் கொஞ்ச சேமிப்பு ராமயாவையும் குடும்பத்தையும் உடனடியாக பொருளாதார வீழ்ச்சிக்குள்ளாக்கவில்லை. மகன் பொறியியல் பட்டம் பெற்று கல்லூரி வளாக வேலை வாய்ப்புத் தேர்வில் வெற்றி பெற்று உத்தரவுகளுக்காகக் காத்திருந்த நேரம்தான் இத்தனை களேபரங்களும். பெற்றோரின் மனப் போராட்டங்களைப் புரிந்து கொண்ட மகன் சொன்னான் “ரெஸ்ட் எடுங்கப்பா; நீங்க உழச்சது போதும்”. மகன் வேலைக்குள் நுழையும் முன்னரே தன் மீது திணிக்கப்பட்ட கட்டாய ஓய்வை நினைத்த வண்ணம் ராமையா மெலிதாகச் சிரித்தான். கட்டிலில் சாய்ந்து கைகளை மேலுயர்த்தி சோம்பல் முறித்தவன் “ஓய்வு எனக்கில்லப்பா; என் ப்ரஷ்ஷுக்கு, என் கற்பனைக்கு, ஒரு ஆர்டிஸ்டின் மன எழுச்சிகளுக்கு”, என்று கனத்த குரலில் தன் தழுதழுப்பை அடக்கிக் கொண்ட தகப்பனின் தவிப்பை மெலிதான நீரிட்ட விழிகளுடன் மகன் கவனித்தான். “அங்க என்ன? அப்பாவும் பிள்ளயும் கப்பல் கவுந்த மாதிரி. சாப்ட வாங்க; நேரம் போதாதா?” என்ற சிவகாமியின் கறார் குரல் இருவரின் பாரமான மெளனத்தைக் கலைத்தது.

விளம்பரப் பலகைகள் காணாமல் போய் வீறிட்ட வெற்றிடங்களில் சின்ன சின்ன அளவுகளில் வண்ண வண்ணமாய் அலங்கார வடிவமைப்புகளில் மினுமினுக்கும் மின்னணு டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் ராமையாவைப் பார்த்து மந்தகாசமாய் ஏளனமாய் சிரிப்பது போல் இருந்தது. ராமையாவின் பெரிய பெரிய பலகைகள் இருக்கும் போதே அவைகளுக்கு மத்தியில் வீட்டுக்கு புதிதாய் வந்த விருந்தாளியைப் போல ஓரத்தில் இருந்த மின்னணு விளம்பரங்கள் இப்பொழுது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தின் சாட்சிகளாய் பளிச்சிடுகின்றன. கம்ப்யூட்டர்கள் காதலிப்பது தவிர மற்ற அனைத்தையும் சாத்தியமாக்கிவிட்டன. அடுக்களையிலிருந்து

விண்வெளிப் பயணம் வரை விஞ்ஞானம், அது வளர்ந்த வேகத்தில் பல தொழில்கள், கைத் திறன்கள், திறமைகளைக் கபளீகரம் செய்து காணாமல் செய்துவிட்டன. அச்சுக் கோர்த்தவன் எங்கே? அலுமினிய அச்சு எழுத்துகள் எங்கே? சிறிய பெரிய காகித துணி விளம்பரப் பலகைகளில் தங்கள் கைவண்ணம் காட்டிய ஓவியர்கள் எங்கே? ஒரு சீஃப் ஆர்டிஸ்ட் கூட ரெண்டு அஸிஸ்டெண்ட் சேர்த்து ஆறு நாட்களில் உருவாக்கும் ஒரு பெரிய ஓவிய விளம்பரத்தை ஒரு கம்ப்யூட்டெர் துணையுடன் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் டிசைன் பண்ணி நவீன ப்ரின்டெர்கள் ஃப்ளெக்ஸ் போர்டுகளாக ஒரு மணி நேரத்தில் வாந்தி எடுக்கின்றன. பிரம்மாண்டமான திரையரங்கங்கள் எல்லாம் மூடப்பட்டு திருமண மண்டபங்களாக, வணிக மால்களாக மாறும் வேகம்; பிரமிக்க வைக்கும் வளர்ச்சிதான். எத்தனை தொழில்களை, திறமைகளை விற்பன்னர்களை அதம் செய்து அவர்களை நம்பியிருந்த வாய்களையும் வயிறுகளையும் அடித்து விட்டு - ராமையாவால் ஜீரணிக்க முடியவில்லை.

தனி மனித வாழ்வின் ஏற்ற இரக்கங்களை ஒரு சாதாரணனால் புரிந்து கொள்ள முடியும். வீழ்ச்சிகள் வரும்போது அதை ஜீரணிக்க முடியும். அதே போல் ஸ்தாபனங்களுக்கு – அது பிஸினஸ்ன்னாலும், அரசியலானாலும், மதங்களானாலும், சில சமூகங்களுக்கு, சில சித்தாந்தங்களுக்கு, பெரிய பெரிய சாம்ராஜ்யங்களுக்கும் கூட அவைகளின் தோற்றமும், வாழ்வும், வசந்தமும், எழுச்சியும், மெத்தனமும், வறட்சியும், வீழ்ச்சியும் புரிந்து கொள்ளக் கூடியது. மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மாறாதது எதுவும் இல்லை என்கிற கோட்பாடுகளெல்லாம் ராமையா அறியாதது என்றாலும் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு என்பதை வாழ்வில் கற்றுக் கொண்ட சாதாரணன்தான் ராமையா. ஆனாலும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் விஞ்ஞான வேகம், அது வரையிலும் அடிப்படையாக இருந்த தொழில்களையே புரட்டிப் போட்டு விடும் என்று அவன் கனவிலும் நினைத்திருந்ததில்லை.

நகரத்தில் சுவர் விளம்பரங்களுக்கு , குறிப்பாக அரசியல் இயக்கங்களின் சுவர் விளம்பரங்களுக்கு வாய்ப்பிருந்தன. தேர்தல்களையொட்டி சற்று அதிகமாய் தாரளமாய் வேலைகள் கிடைக்கும். புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த ஒரு வளாகத்தின் சுற்றுச் சுவரில் ஒரு அரசியல் தலைவருக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தபோது கவனித்தான். நெடுஞ்சாலையின் மறு புறத்தில் இருந்த பெரிய ராட்சஸ விளம்பரப் பலகையை ஒரு கிரேனின் உதவியுடன் அகற்றிக் கொண்டிருந்தார்கள். எந்த உயரத்திலிருந்து எங்கே வந்தோம் என்பதை நினைத்து ராமையா மனம் கசந்து நெகிழ்ந்து சிரித்துக் கொண்டான்.

மருமகள் வந்து மடி விளையாட பேரனும் வந்து சீராட்டி வளர்த்து பேரன் உயர் நிலைப் பள்ளி போகிற பூரிப்பில், விதி விளையாடிய மூன்றே நாள் மூளைக் காய்ச்சலில் சிவகாமி விடைபெற்று விட்டாள். தொழிலும் இல்லாமல் துணையும் இல்லாமல் ராமையா தனி மரமானார். வருஷங்கள் ஓடி விட்டன. பேரன் தாத்தாவின் வாரிசாய் காட்சித் தொடர்பு பட்டப் படிப்பில் காலூன்றியிருந்தான். மகன் அப்பாவுக்காக வாங்கிக் கொடுத்திருந்த அவர் ஏறிட்டும் பார்க்காத ஓவிய மரத்தாங்கியை அவ்வப்பொழுது பேரன் உபயோகிக்கிறான். கேலிச் சித்திரங்களில் கவனம் செலுத்துகிறான். ராமையா மெளனமாய் பேரனின் கம்ப்யூட்டர் முயற்சிகளை அவ்வப்பொழுது கவனிப்பதுண்டு. தூரிகைகளின் இடத்தை கணனியின் சுட்டிவிசை களவாடியிருக்கிறது; ராமையாவின் ஓவியத் தொழிலை களவாடிய காலத்தின் அடையாளமாய். கடந்த மூன்று நாட்களாய் ஏதோ ஒரு வேலைத் திட்டத்தில் பேரன் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தார் ராமையா.

ஒரு ஓவியப் பதாகை (BANER) தயாரிப்பில், வரைவில் பேரன் கோட்டுஓவிய அடிப்படையில், முயற்சித்துக் கொண்டிருந்தான். பெரிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள், மத்தியில் பெரிய நெடுஞ்சாலை, தூரத்தில் தொழிற் சாலைகளின் உயர்ந்த புகைபோக்கிகள், கீழே ஒரு கம்ப்யூட்டர் திரையும் கீ போர்டும், சற்று தள்ளி தொழிலின் அடையாளக் குறியீடாக மூன்று நான்கு

பற்சக்கரங்கள்; வரைவின் வடிவமைப்பு, துல்லியம் எல்லாம் சரியாக வந்திருந்தன. இரவு உறங்கச் செல்லும் முன் பேரன் ராமையாவிடம் காண்பித்தான். “மனித முயற்சிகளின் வெற்றியையும் முன்னேற்றத்தையும் இந்த ஓர்க்ல சொல்லியிருக்கேன் தாத்தா. சாலையின் மத்தியிலோ அல்லது இரு புறமுமோ மரங்களோ மலர்களோ கொண்டு இயற்கையை இதில் இணைக்கலாம். ஆனா இன்னும் சிம்பாலிக்கா , ரொம்ப ஷார்ப்பாயும் ஸ்பஷ்டமாவும் இயற்கையின் அழகைச் சேர்க்கணும். ரெண்டு நாளா முட்றேன்; ஒண்ணும் எஃபெக்ட்டிவா வர மாட்டக்கு. புரியுதா தாத்தா? ஏதாவது ஒரு ஐடியா சொல்லுங்களேன்” என்று சொல்லி விட்டு படுக்கச் சென்று விட்டான். எப்பொழுதாகிலும் பேரன் இப்படி ராமையாவின் தூரிகை எழுச்சிகளைக் கிளறுவதுண்டு.

ராமையா ஓய்ந்த பிறகு மகன் “வரயணும்னு தோனுச்சுன்னா இதுல வரைங்கப்பா. விளம்பரம் என்பதிலிருந்து பெரிய ஆர்டிஸ்டா மாறுங்கப்பா” என்று உற்சாகமாக்கி வாங்கித் தந்திருந்த ஓவிய மரத் தாங்கியை இது வரை ராமையா சட்டை செய்யவில்லை; பேரனுக்கு ஓரிரு முறை சில அடிப்படை வடிவமைப்பு விதிகளின் சூட்சுமங்களை சொல்லித் தந்த போது பயன் படுத்தியது தவிர. ராமையாவுக்கு அதில் அதிக நாட்டமிருக்கவில்லை. பேரனின் முயற்சியை சிறிது நேரம் கண்களை மூடி உள்வாங்கினார். தன் தூரிகைகள் சிறிய வர்ண ட்யூப்கள் கொண்டு பேரனின் படைப்பை அப்படியே பிரதியெடுத்தார்.

காலை எட்டு மணி தாண்டியும் தகப்பன் அறையிலிருந்து வெளி வராததால் மகன் அப்பா என்று குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான். பதிலில்லை. கட்டிலில் மிகுந்த அமைதியில், மெளனத்தில், முகத்தில் மெலிதான முறுவலுடன் – “அப்பா” என்று தோள்களைத் தட்டினான். அசைவில்லை. கைகளைப் பிடிக்கும் போதுதான் மகன் உணர்ந்தான். தூரிகை பிடித்த அந்தக் கைகள் சில்லிட்டிருந்தன. திரும்பவும் உலுப்பினான். “அப்பா” என்ற மகனின் பெருங்கலவரக் குரல் முழு வீட்டையும் தளத்தில் இருந்த மற்ற குடித்தனக்காரர்களையும் உலுக்கின. சத்தம் கேட்டு பேரனும் மனைவியும் ஓடி வந்தனர்.

படுக்கையை ஒட்டியிருந்த ஓவிய மரத் தாங்கியில் பிரதியெடுக்கப்பட்ட தன்னுடைய ஓவியம் – அந்த போர்டில் ராமையாவின் முதலும் இறுதியுமான படைப்பாய் - பேரன் கேட்டிருந்த இயற்கையின் அடையாளமாய் கணனியின் கீ போர்டின் மேலே அற்புதமான வண்ணக் கலவைகளில் ஒரு வண்ணத்துப் பூச்சி சிறகடித்துக் கொண்டிருந்தது. பேரன் இயற்கையான அந்த வண்ணத்துப் பூச்சியையும் அதோடு தன்னை இணைத்துக் கொண்டு விடை பெற்றுக் கொண்ட தாத்தாவையும் பார்த்துக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

- வல்லபாய்

Pin It