ஹாலில் உட்கார்ந்து அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தேன். அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். வயதானதால் அவளுடைய மூட்டுவலியும் முதிர்ச்சி அடைந்திருந்தது. அடிக்கடி இப்போதெல்லாம் படுத்துக் கொள்கிறாள். அம்மா தனக்கு வேண்டியது, வேண்டாதது எதையும் வெளிப்படையாக என்னைப் போல அப்போதைக்கப்போதே சொல்லிவிடும் சுபாவமில்லை. அதனால் அவளது மூட்டுவலியையும் கூட புரிந்து கொள்ள முடியாத காலகட்டத்தில் அடிக்கடி கோபப்பட்டிருக்கிறேன். பிறகு என் கோபம் நாளாக நாளாகத் தணிந்து போனது.

காலை பதினோரு மணிக்கு மேல் தேநீரோ, காபியோ குடித்துவிட்டால் தான் வரிசையாக அன்றைய வேலைகள் நடந்தது போலிருக்கும். அம்மாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். தங்கையின் புதிய வேலையைப் பற்றி. கேட்ட இடத்தில் கிடைக்க வேண்டிய கடன் பற்றி. அப்படியே நம்பிக்கையான இன்னும் சில விஷயங்களைப் பற்றி. நான் தேநீர்க் கோப்பையை கையில் வைத்திருந்தேன். அம்மா தேநீரைக் குடித்துவிட்டு மீண்டும் படுத்திருந்தாள். படுத்திருந்தபடியே என்னோடு நான் பேசுவதைக் கேட்டபடி பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவளது பதில்கள் தணிவாக இருந்தது. அப்பாவிற்கு இன்று வேலை இல்லை. அவரது அறை திறந்திருந்தது. அம்மா ஹாலில் தான் படுத்துக் கொள்வாள். அவளது கட்டிலில் படுத்துக் கொண்டே பார்த்தால் அப்பாவின் திறந்த அறை நேரடியாகத் தெரியும்.

எனக்கு உரக்கப் பேசியே பழக்கம். ஆனாலும் தாழ்ந்த குரலில் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் தேநீர்க் கோப்பையில் பாதிக்கும் மேல் தேநீர் இருந்தது. தேநீரோ காபியோ அவ்வளவாக அவற்றில் நான் ஆவி பறக்க வேண்டுமென்று விரும்புவதில்லை. பொதுவான சூட்டில் இருந்தால் போதும். அதோடு மடமடவெனக் குடித்தும் பழக்கமில்லை. அம்மாவிற்கு காபியோ தேநீரோ சூடாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கையில் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் குடித்து முடித்துவிட்டு க்ளாசை தரையில் வைக்கின்ற சத்தம் "நங்க்" என்று கேட்கும்.

என்ன... அதுக்குள்ளயும் குடிச்சிட்ட..

அவ்ளோதாண்டி....

இப்டியெல்லாம் சூடா குடிக்கவே கூடாது என்பேன். இதற்கு மேல் அவளிடமிருந்து வேறு மறுப்புகளை இதுவரை நான் கேட்டதில்லை. வழக்கம் போல படுத்துக் கொள்வாள்.

எக்கா..... குரல் அழுத்தமாக உயர்ந்தது.

யாரு....

அம்மா படுக்கையிலிருந்து சோம்பலாக எழுந்து உடையைச் சரிசெய்தபடி வாசலுக்குப் போனாள். நான் தேநீர்க் கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு அமைதியானேன். அவர்கள் பேசிக் கொள்கிறார்கள் வாசலில். அவர் யார்... என்ன பேசுகிறார்... எதற்கு வந்திருக்கிறார்... எனக்குத் தெரிய வேண்டும்.

எக்கா... வீடு ஒத்திக்கி பார்க்க வந்துருக்காங்க... வீட்டப் பார்க்கனுமா...

யாரு... யார் நீங்க... அம்மா தடுமாறுகிறாள்.

வீட்டுக்காரரு தான் அனுப்ச்சுவிட்டாரு... இந்த அவங்க தான் வீட்டப் பார்க்கனுமா...

இந்த வீடு ஏற்கனவே ஒத்தில தான இருக்கு... அவர்ட்ட தான் வாடக குடுக்றோம்... அவரெங்க.... அம்மாவின் குரலில் சந்தேகமாயிருந்தது.

அவரக் காணம்க்கா... இருங்க வீட்டு ஓனருக்கு கால் பன்றேன்....

சில நிமிடங்களில் வந்தவரின் போன் ரிங் ஆவது கேட்டது. லவ்ட் ஸ்பீக்கரில் வைத்திருப்பாரென்று நினைக்கிறேன். அழைப்பை நிறுத்தி எதிர்முனையில் எடுத்துப் பேசியவரின் குரல் முதலில் அருகில் கேட்டது. பிறகு வந்தவர் வாசல் படிகளை விட்டு இறங்கிப் போவது தெரிகிறது. பேசியவர் அப்படியே கிளம்பிவிட்டார் போல. வேறெந்த சத்தங்களும் இல்லை.

அம்மா வந்தாள் ஹாலில் போடப்பட்டிருக்கும் அவளுடைய இரும்புக் கட்டிலுக்கு.

என்ன... யாரு...

அம்மா சொன்னாள் விவரங்களை. நானும் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்.

ஏற்கனவே ஒத்தி இருக்குற வீட்ட இன்னொருத்தர் எப்படி வந்து கேட்பாங்க... என் தேநீர்க் கோப்பையில் பாதியளவு தேநீரை உணர்ந்ததும், ஆறிப் போயிருக்குமோ என்று அவசரமாகக் குடித்தேன்.

தெரியல... வீட்டுக்காரனுக்கும் அவனுக்கும் என்ன ப்ரச்சனையோ.. காசக் குடுத்துட்டு புது ஒத்திக்கி விடலாம்னு நெனப்பான் போல்ருக்கு...

அப்டினாலும் எப்டி...

எனக்கு சின்ன யோசனை . யோசனை யோசனையாகத் தானிருந்து கொண்டிருந்தது. தேநீரைப் பருகிக் கொண்டேயிருந்தேன்.

இந்த... அந்த வீட்ட வாடகைக்கு விடமாட்டாங்களா...

எங்கள் வீட்டு வாசலுக்கு வலது மூலையில் விலைக்கு வைக்கப்பட்டிருக்கும் வீட்டைச் சுட்டிக் கேட்டேன்.

அந்த வீட்டின் மீது வந்ததிலிருந்து ஒரு கண். அந்த வீட்டு மாடி பால்கனி வடக்கு பார்த்திருக்கும். எங்கள் குடியிருப்புப் பகுதி ஊருக்குக் கடைசியென்பதால், வடக்கு பார்த்த வீட்டின் பால்கனியில் நின்று பார்த்தால் ஊரின் எல்லா மூலைகளையும் பார்த்துவிடலாம். ஆளில்லாமல் நிற்பதிலேயே பெரிய வீடது. வீட்டின் முகப்பில் தேவதை போல ஒரு பெண் ஓவியத்தை வரைந்திருப்பார்கள். தேவதை புல்வெளியில் உட்கார்ந்தபடி, புல்வெளியை வெறுமையோடு பார்ப்பது போலிருக்கும். அந்த ஓவியமும் கூட என்னவோ செய்வது போலிருக்கும். அவளது முதுகில் இருப்பது சிறகுகளா... மூங்கில் கூடையா... என்று கூடத் தெரியாது இங்கு வீட்டிலிருந்து பார்க்கு போது. அந்த வீட்டை விலைக்கு வைத்திருப்பதாக ஒரு அட்டையைத் தொங்க விட்டிருந்தார்கள் ஒரு மாதமாக. இப்போதில்லை. அட்டையைக் காணவில்லை. அதனால் அந்த வீட்டின் மீது ஒரே கண்.

அம்மா என் கேள்விக்குப் பதில் சொன்னாள். வாடகைக்கு என்றால் ஒரு வீட்டிற்கு ஆறாயிரமாம். அந்த வீடு இரண்டடுக்கு வீடு.

அந்த வீட்டு ஓனர் பெண் ஒரு முறை அம்மாவை அழைத்துப் போயிருந்தாள் அந்த தேவதை வீட்டிற்கு. அதனால் அம்மாவிற்கு வீட்டின் உள்ளடக்கம் தெரியுமென்பது எனக்குத் தெரியும். ஓனர் பெண் அம்மாவிடம் விவரங்களைச் சொல்லிவிட்டு, யாராவது விலைக்குக் கேட்டால் சொல்லும்படி தகவல் தர அமர்த்தியிருந்தாள்.

அந்த வீட்ட நீதான் பார்த்துருக்கியே... நான் இப்போது அந்த விவரங்களைக் கேட்கிறேன்.

அது... ஒரு ஹாலு இந்த ஹால விடச் சின்னது... ரெண்டு பெட்ரூமு... ஒரு கிச்சன்...

பெட்ரூம் இதவிடப் பெருசா.. இப்போதிருக்கும் எனதறையைக் குறிப்பிட்டுக் கேட்டேன்.

இதேயளவு தான்.... அம்மாவின் பதிலளிக்கும் விதம் தேவையில்லாத பேச்சிது என்பது போலிருந்தது.

நான் அதோடு வடக்குப் பார்த்த வீடு பற்றிய பேச்சை நிறுத்திக் கொண்டேன். பிறகு மீண்டும் வாடகை வீடு, அதிலே அதில் மட்டும் கிடைக்கக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு பேச்சை வேறு திசைக்கு மாற்றினோம். மாற்றினேன்.

சில மாதங்களுக்கு முன்னமே போக நினைத்திருந்தது. நாளக்கி வைரவன்பட்டி கோயிலுக்குக் கூட போய்ட்டு வரலாம்... மெதுவாகப் பேச்சை ஆரம்பித்து முடித்தேன்.

நாளக்கி எப்போ ராகு காலம்...

நாளக்கி சாங்கியாலம் நால்ர ட்டூ ஆறு... அது தேய்பிற அஸ்டமிக்ல போனும் .. அம்மா இப்படிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். பிறகு அப்படியே அமைதியாகக் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்ப வருது தேய்பிறை... எப்ப பௌர்ணமி...

இன்னைக்கு தான் பௌர்ணமி.... இன்னும் ஒரு வாரமிருக்கு அஷ்டமிக்கு....

ம்ம்ம்ம்.... அமைதியாகயிருந்தேன்.

கையில் குடித்து முடித்த தேநீர்க் கோப்பையிருந்தது. எழுந்து சென்று சமையல்கட்டிற்குள் நுழைந்து கோப்பையைக் கழுவி கவிழ்த்துவிட்டு அறைக்கு வந்தேன். காலையில் வாசிக்க ஆரம்பித்திருந்த பிரபஞ்சனின் சிறுகதைகளில் இரண்டாவது கதையை திறந்து வாசித்துக் கொண்டிருந்தேன். தலைப்பு "நாளைக்கும் வரும் கிளிகள்". பசித்தது. எழுந்து சமையலறைக்குச் செல்லும் போது சரியான பசி.

எனது தட்டையெடுத்து சாப்பாட்டை அளவாகப் போட்டுவிட்டு குழம்புப் பாத்திரத்தை திறந்தேன். சாம்பார் வாசனை.

நல்லா சாப்டனும்னு நெனைக்கும் போது... ஒரு நல்ல சாம்பார் சாதம் போதுமானதாகயிருக்கு... உள்ளுக்குள் இப்படி நினைத்துக்கொண்டே சாம்பாரைக் உட்குழிந்த கரண்டியால் விளாவினேன். அடக்.. கத்திரிக்காய்களை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்ருக்கே... இப்டிலாம் இதுவரைக்கும் போட்டதேயில்லயே... ஆச்சரியமாகவும் புதிதாகவும் நினைத்துக் கொண்டே குழம்பைக் குழிந்தெடுத்து பொடிப் பொடித் துண்டுக் கத்திரிக்காய்களை தட்டில் ஊற்றினேன். குழம்பு சோற்றில் படர்ந்தது. கத்திரிக்காய்கள் தான் முதலில் கரண்டியிலிருந்து விழுந்தது. நான் தான் கத்திரிக்காய்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேனே.

தட்டை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்து அமர்ந்து கொண்டேன். தட்டிலிருந்து சோற்றின் மீது இடம் பொருள் தெரியாமல் விழுந்து கிடக்கும் கத்திரிக்காய் துண்டுகளை ஓரமாக அடுக்கினேன்.

அம்மாவிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தேனில்லையா அப்போதே கேட்டேன். என்ன சமையலென்று . அம்மா சாம்பார், சாதம் என்று அளவாகச் சொல்லியிருந்தாள். தொட்டுக்க எதுவும் செய்யலையா என்று கேட்ட போது "கொழம்புல கத்திரிக்கா போட்ருக்கு" என்றிருந்தாள். பேச்சைத் துண்டித்து விட்டு அறைக்குள் சென்று அடைந்துகொள்ள இந்த ஒரு சிறு விரக்தி அப்போது எனக்குப் போதுமாகத் தானிருந்தது.

தட்டில் ஓரமாக அடுக்கி வைத்துக் கொண்ட கத்திரிக்காய்களில் ஒன்றை முதலில் எடுத்தேன். அம்மா அப்பவே சொன்னாள் தொட்டுக்க கத்திரிக்காயென்று. பார்க்கவும் என்றைக்குமல்லாத சிறிய துண்டுகளாயிருக்கிறதே... உவப்பாக நினைத்துக் கொண்டே கத்திரிக்காயை ருசி பார்க்கப் போகிறேன். பார்க்கிறேன்.

ச்ச... இந்தக் கத்திரிக்காயில் உப்புச் சப்பேயில்லை.

- புலமி

Pin It