தன் சகாக்களோடு இருளையும் சேர்த்துக் கவ்விக் கொண்ட தார்ச்சாலையில் நடந்து கொண்டிருந்தான் மாடசாமி. கர்ணாவும், பொன்னுரங்கமும் , மாடசாமியும் காலாற பக்கத்து ஊருக்குச் சென்று டீ குடிப்பது வழக்கம்... அதோடு ஊர் வம்புகளையும் விடுவதில்லை. வெற்றிலை போடும் பழக்கத்தைப் போல பேச்சுவாக்கில் இடையே இடையே காரித் துப்பும் ஏளனம் வேறு... ஐப்பசி மாதம் என்பதால் ஓரிரு மழை பெய்ததில் சாலையோரக் குழிகளில் தண்ணீர் தேங்கி கொசுக்களின் புழக்கம் தொடங்கி விட்டிருந்தது. "மாடசாமி அன்னைக்குக் கொஞ்சம் மிஸ் ஆகிருச்சுப்பா இல்லயனா அவ மேல வண்டி சாஞ்சுருக்கும்" என்றான் கர்ணா.

"அவ குடும்பத்த எதாவது பண்ணிப்புடனும்... அவ இருக்கறதால தான் எம்பொண்ணுக்கு எந்த சலுகையும் கெடைக்க மாட்டேங்குது... எம்புள்ள அப்பவே சொன்னா பொன்னு, என் நாத்தனாரு நிறைய படிச்சுருக்கம்னு யாருகூடவும் பேச மாட்டா, அவ என்ன கேட்டாலும் வீட்ல வாங்கித் தர்றாங்க... அவ சொல்ற மாதிரி தான் எதுவும் முடிவாகும்னு... எம்புள்ளைக்கு என்னய்யா கொறைச்சல் கர்ணா ..? சொந்த வீடு, ரெண்டு கிரவுண்ட் நெலம், பேங்க்ல பணம்னு அந்த வீட்டுக்கு மருமகளா போனவள எதையும் கேக்காம அந்தப் புள்ள படிச்சவன்னு அவ பேச்சத் தான் கேட்டு ஆட்றாகலாம்" என்று கைலியை மடித்து அரையில் கட்டினான் மாடசாமி.

"ஆமாப்பு அந்தப் புள்ள ரோட்டுல போன கூட யாரையும் பாக்கவே மாட்றாய்யா" தொண்டையை கட்டி இருமினான் கர்ணா. "அங்காளி பங்காளி கூட ட்ரிபுள்ஸ்ல ஃபுல் போதைல, அந்தப் புள்ளைக்கு நேரா சரியாத்தான்யா ப்ரேக் போட்டேன்..தப்புச்சுட்டா சின்ன அடி கூட இல்லாம..." சலித்தபடி கொட்டாவி விட்டே வந்தவன் ஒரு சின்ன கல் இடறி நடை மாறி மீண்டும் சகஜ நிலைக்கு மாறினான்.

மாடசாமிக்கும், கர்ணாவுக்கும் சி்.எஸ் காலனி, பொன்னுரங்கம் அப்சரா அப்பார்ட்மெண்ட்ல குடித்தனமாகி இரண்டு வருடங்கள் ஓடியிருந்தன. அடிக்கடி இவர்கள் சந்தித்துக் கொள்வதும் ஊர்க்கதைகள் பேசுவதுமாக பொழுதைக் கழிப்பதுண்டு... எல்லோரின் வீட்டுப் பிள்ளைகளும் திருமணமாகி செட்டிலாகிவிட இவர்களுக்கு வேலையே இல்லாமல் போனது. பொன்னுரங்கம் இவர்களைத் தேடி வருவதும் மூவரும் வெட்டிக் கதைகள் பேசுவதும் சில நேரங்களில் தகட்டூருக்கு டீ குடிக்கச் செல்வதும் வாடிக்கையாகிப் போனது. தகட்டூரில் எல்லா வசதிகளுமுண்டு. இவர்கள் இருக்குமிடத்திலிருந்து கால்நடையாகச் சென்றுவிடும் தூரம் தான். நேற்றுதான் தீபாவளி முடிந்து விருந்து விழாவெனக் கொண்டாடி முடித்திருந்தனர்.

இவர்கள் மூவரும் செல்லும் சாலையில் இரண்டு திருப்பங்களுண்டு. ஊரை நெருங்கி வரும் திருப்பத்தில் ஒரு வேகத் தடையோடு தகட்டூரின் எல்லை ஆரம்பிக்கும். மூவரில் பொன்னுரங்கத்திற்கு குடிப்பழக்கமுண்டு. இப்போதும் குடித்திருந்தான், நிலைதடுமாறாதளவுக்கு....

மாடசாமி மீண்டும் ஆரம்பித்தான், "விடக்கூடாது பொன்னு எம்புள்ளைய வரதட்சனை கேட்டு கொடுமப் படுத்துறாகன்னு கேஸ் போட்ருவமா... குடும்பத்தோட அவமானப்படுத்தனும்..."

"விடு மாடசாமி நம்ம என்ன பண்ணாலும் அது புள்ளப் பூச்சிகூட சண்டைக்கு நிக்குற மாதிரி தான்..... உம்புள்ள மேல கை கீயி வச்சுட்டாகளா..."

"இல்லய்யா எம்மவ கை ஒண்ணும் புளியங்கா புடுங்காது.... எதுக்கும் அஞ்சாத புள்ள...அவளே நாலு குடுகுடுப்பா.... ஊரச் சுத்தி கடன் வச்சுக்கிட்டு, சொத்து பத்துனு எதுவுமே நாதியில்ல... ஆனா கௌரவத்துக்கு ஒண்ணும் கொறச்சலில்ல.... எப்டியாவது குடும்பத்தோட அசிங்கப்படனும்" ஓங்கி கையில் ஒரு தட்டு... கொசு ஒன்று கடைசியாகக் குடித்த மாடசாமியின் இரத்தத்தைக் கக்கியபடி விழுந்தது.

இவர்கள் பேசுவதைக் கேட்டபடி சாலையைச் சற்று தள்ளிய பக்கவாட்டில் தண்டவாளமும் நீண்டுகொண்டே வந்தது. போர் வழிச் சாலை என்பதால் விளக்குகளோ வீடுகளோ இடையில் பெரும்பாலும் தென்படுவதில்லை... மரங்கள் அதனையொட்டிய செடி கொடிகள் கிடைக்கின்ற காற்றுக்கு தலையசைத்துக் கொள்வதுண்டு. லாரியொன்று தூரத்தில் வரவர வெளிச்சம் கண்ணை மறைப்பது போல விழ , ஏதோ ஒரு வண்டி இவர்களில் ஒருவர் மீது பலமாக மோதித் தள்ளியது. விழுந்தவர் மற்றவர் மீது அவர் அடுத்தவர் மேல் விழ அவ்வழியே வந்த பேருந்து இவர்கள் மூவரின் மீதும் விபத்தாக உராய்ந்து சென்றுவிட்டது.

அதிர்ச்சியில் உறைந்தவர்களுக்கு, மருத்துவமனையில் தான் உரைத்தது. ஒருவர் காலை இழக்க நேர்ந்தது, இன்னொருவர் ஒரு கண் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையோடு பலத்த காயங்களோடும், மற்றொருவருக்கும் சரியான அடிகளுமாக உறவினர்கள் கதறக் கிடந்தனர்.

மாடசாமி தான் கண் பாதிக்கப்பட்டவன். ஒரு கண்ணில் எல்லோரையும் பார்த்தவன் ஓரக் கண்ணில் தன் மருமகனைப் பார்த்து அலறியே போனான் வருத்தத்தில்..... எப்டிலாம் இவன அசிங்கப்படுத்துனோம் , நம்ம சொத்து வெளில போயிருமின்னு இவன் தீத்துவிட்ரக் கூட முடிவு பண்ணி மகளக் கூட்டிகிட்டு வீட்டுக்கு வந்தோம்... கண் சிவக்கத் தான் செய்கிறது.. இன்னமும் ஆழமாக நம்ம புள்ள பேச்சக் கேட்டு... நெஞ்சு துடிக்க ஒரு கண்ணை மெல்லமாக இழுத்து மூடியவன் விழியுள்...

நித்யா நன்கு படித்தவள் மட்டுமல்ல.. பண்பும் மிகுதியாக வாய்க்கப் பெற்றவள். யாரோடும் அளவாகவே பேசுவாள். தேவையற்ற பேச்சு நேரத்தை வீண்டிக்கும் என்பதில் உறுதி மிக்கவள். தவிர அவள் உண்டு அவள் வேலையுண்டு ரகம். மாடசாமியின் மகளுக்கு நித்யா நாத்தனார் முறை வேண்டும். மாடசாமியின் மகள் கவுரி.அப்படியே நித்யாவிற்கு எதிர்ப்பதம்... சரியாகப் படிக்கவில்லை. படிக்கும் போதே காதல், திருமணம் அதனோடு சேர்ந்து வரும் மெச்சூரிட்டிப் பிரச்சனைகள் வேறு , யாரோடும் மணிக் கணக்கில் பேசக் கூடியவள்... அடுத்தவர் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைப்பது, தன் வீட்டு விசயங்களை பிற வீடுகளில் காதுகுத்தக் கொடுப்பது என அழிச்சாட்டியங்களுக்குக் குறைவேயில்லை...

இந்த முறை சண்டை பிடித்துக் கொண்டு அப்பா வீட்டிற்குச் சென்றவள், அங்கே நிரந்தரமாகத் தங்கிவிட விரும்பினாள்.... அது அவளுக்குச் சௌகரியமாகப்பட்டது... கணவனுக்கும் அப்படியே சௌகரியப்பட வேண்டும் என்றும் எண்ணினாள்.நெடுநாள் திட்டம் என்னவோ மிகவும் விடாப்பிடியாய் நின்றாள் தன் முடிவில். அவள் கணவன் எவ்வளவோ அழைத்தும் மதிப்பேயின்றிப் போனது. தீபாவளியன்று துணிமணிகள் வாங்கிக் கொண்டும் போனான். பெண் வீட்டார் கண்டுகொள்ளாத நிலையில் அவமதிப்போடு திரும்பினான் நித்யாவின் சகோதரன்.

இந்த நிலையில் தான் மாடசாமி பொன்னுரங்கத்தோடு சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான்.நித்யா பேருந்திற்காக காத்திருக்கும் சமயத்தில் பொன்னுரங்கம் தன்னுடைய பைக்கில் இன்னுமிருவரோடு வேகமாக வந்தான். வேகமாக வந்து சரியாக நித்யா நிற்கும் இடத்தில் சரேலென்று ப்ரேக் போட்டு நின்றது. அந்த வண்டி நிதானமாக இல்லை.. தள்ளாடிக் கொண்டே சாய, நித்யா சுதாரித்துக் கொண்டாள்.... இன்னும் சற்று நொடிகளில் விழப் போவது மாதிரியாகத் தெரியவும் ,ஏய்...ஏ...ஏ... பின்வாங்கி நின்று வியர்த்தாள்.

விழுந்தவர்கள் அப்படியே கிடந்தார்கள்... ஒருபக்கமாக விழுந்ததில் ஒருவனுடைய பாக்கெட்டிலிருந்து குபுக்கென்று விழுந்தது டாஸ்மாக் விற்பனை. அருகில் இன்னொரு பெண் நிற்கிறாள். இவர்கள் மூவரும் கிடைமட்டமாக கிடக்க வண்டி அழுந்தியபடியிருந்தது.சற்றுத் தள்ளி கூடி நின்று பேசிக் கொண்டிருந்த ஆண் மக்களில் ஒருவனுக்கு பொன்னுவைத் தெரியும் போல... பொன்னு ...பொன்னு ... என்னய்யா இது வயசான காலத்துல என்று அக்கறையாய் தூக்கினான் வண்டியை. பின் ஒவ்வொருவராக எழுந்துவிட பொன்னுரங்கம் வேறு வழியே நடந்து சென்றான். மற்ற இருவரில் ஒருவன் தூக்கிவிட்டவனின் கூட்டத்தோடு கலந்தான். மற்றொருவன் வண்டியைத் தட்டுத்தடுமாறிக் கிளப்பிவிட்டு மறைந்தான் சாலை வளைவில்.

சிரமத்தோடு கண்ணைத் திறந்த மாடசாமியின் ஒற்றைக் கண்ணில் யாருமறியாதவாறு வலிகள் புரையோடின....

- புலமி

Pin It