அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது... .. பார்த்துக் கொண்டே இருந்தது... அவனால் நன்றாக உணர முடிந்தது... . புரண்டு புரண்டு படுத்தான்.. தூக்கம், கைக்கெட்டும் தூரத்தில் கண்கள் உருட்டிக் கிடந்தது... ... ஒரு விதமான வியர்வை.. சட்டென முதுகை நனைத்தது, யாருமற்ற பாதங்களின்.. தூரமற்ற ஓசைகளின் துகள்களை உன்னிப்பாக சுமக்க முடியும் உத்வேகம் ஒன்றாய். உள்ளுக்குள் போராடும் மிகப் பெரிய வளைவுகளில் வளைந்து கொண்டே இருக்கும் பார்வையில், இல்லாத இருட்டை... பகல் மயக்கி சரியும் வானம், கீழிரங்காமலே கூடாரம் ஆவதை அவன்... கண்கள் பொத்திக் கேட்டான்,... .

girl 273அறையின் அரை வெளிச்ச இருட்டில் உடல் முழுக்க போத்தியது போல... "ஒன்று," அவனின் தலையின் அருகே அமர்ந்து அவனை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை அவனால் உணர்ந்தும், கண்டும்.. கடக்க முடியாத கணத்தில், ஒரு கிணறு வெட்டும் பூதத்தின் விரல்களின் நறுமணத்தோடு நுகரும் வாசனையோடு... மூச்சு வாங்கத் தொடங்கினான்... ... அது பார்க்கும் கூர்மையில் பசுமரத்தாணி ஒன்றை முதுகில் யாரோ அடித்துக் கொண்டிருக்கும் நேரம் முழுவதும் பச்சை ரத்தம் ஒழுகும்... .. சூடு கொண்ட கரு மயக்கங்கள் கரை தாண்டி மூழ்கும்... கண்களைப் போல, உள்ளுக்குள் விழித்துக் கொண்டு கவனித்தான்...

தூரத்து ரயில் எத்தனை தூரத்தில் வருகிறது என்று விரிந்த கண்கள் காண காண.. சட்டென.. வந்து தட தடவென கடந்து போகும் கணத்தை பிடித்தாற்போல.. சட்டென எழுந்து அமர்ந்தான்... எழ எழவே, அவன் முகம் வலது பக்கம் தன்னைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் "அதன்" மீது தான் இருந்தது... "அது" அவனைப் பார்த்தது... கண்கள் கொண்டு ஈட்டியாய்... தீட்டிய வெற்றிட வண்ணத்தில் குழைந்து குழைந்து நழுவிச் செல்லும் காற்றில் வளைவுகளைக் கண்டு மிரண்டான்... .

"கனவென்றால் கண்கள் விழித்தும்... எப்படி அந்த உருவம் காற்றில் அப்படியே இருக்கும்... ... ???"- அவன் மிரண்டு, எவ்வித முன் யோசனையும் இன்றி, ஸ்தம்பித்த பார்வையில் இருக்கும் போதே அந்த உருவம் மெல்ல மறைந்தது... மறையும் நொடியெல்லாம்.. அவன் மீது எதையோ "அது" பூசியது போல நடுங்கினான்... . அந்த அறை வெளிகளால் மிதக்கப் படுகிறதோ என்று, கூட எண்ணிய பதற்றத்தில் அவன் எடை இழந்தது போல பிரமித்தான்... . வெள்ளைத் தாளென ஒரு கிழிந்த பக்கத்தில் பெயர் இல்லாத எழுத்துகள் கொண்ட வட்டங்களுக்குள் புள்ளி ஒன்றை விதைக்க விதைக்க விழிப்பு நிலை வீரியம் ஆகி... தலை வெடித்து விடும் நிலையில் மீண்டும் மீண்டும் யோசித்தான்...

அதன் பிறகு அவன் ஏதேதோ உணர்வுகளுக்கு ஆட்பட்டான்... .. அறை முழுக்க வெப்ப சலனம்... உள்ளுக்குள் ஏதோ எரிந்தது... ... . மறைக்க மறைக்க முகத்தை முன் கொண்டு வரும்... கண் திறத்தலின் காணாமல் போகும் கண்ணாமூச்சி ஆட்டத்தின் விளிம்பு நிலை பாதரசம் சுரக்கும் கண்ணாடிகளின் நெளிவுகலாகிப் போனது... வளையல் கொண்ட கைகளும்.. கொலுசு கொண்ட கால்களும்... பூனை நடை நடக்கும் சப்தமும்.. அடுத்த அறை முழுக்க நிரம்பிக் கிடத்தலில்... . நொடிக்கு ஒரு திரை அடிக்கொரு முறை விழுந்து கொண்டே இருந்தது... ..உடல் முழுக்க வலி... உயிருக்குள் ஓலமிடும் ஊஞ்சலை வெட்ட வெட்ட அது வளர்ந்து கொண்டே இருப்பதாய் உணர்ந்த போது ஓடத் துவங்கினான்.. எத்தனை தூரம் ஓட முடியும்... ... ?- ஓர் அறை... அதை தாண்டினால்.. ஹால்.. அங்கும் ஓடி முடிந்த பின்னால், சமையல் அறை.. பின் குளியலறை... நடுங்கிக் கொண்டே சிறுநீர் கழித்தான்... .

ஒரு கதையில், நின்று கொண்டு சிறுநீர் போவது.. குறித்து சாரு நிவேதிதா.. சொல்லிய வரிகள் ஞாபகத்துக்கு வர.. சட்டென அமர்ந்து போகத் தொடங்கினான்... அவன் பயம் முழுக்க சிறுநீராய் உருகி ஓடினாற் போல ஒரு பெரு மூச்சு விட்டான்... .. ஏதோ பாரம் இறங்கினாற் போல, வந்து அறையில் அமர்ந்தான்... .

டிவியை ஆன் செய்தான்... ... .

"ராத்திரி நேர பூஜைகள் எல்லாம் இப்போ இனி மேல்தான்... அருகினில் வருவேண்டி.. ஆசையில் தொடுவேண்டி... " என்று நாகார்ஜுன் மிரட்டிக் கொண்டிருந்தார்... ... ..

திக் திக் திக்... . அவனால்.. நன்றாக மீண்டும் உணர முடிந்தது... ... அவனுக்கு பின்னால் "அது" உட்கார்ந்து கொண்டு தலையை ஆட்டியபடியே டிவி பார்ப்பதை பாப்பாவின் கடைசி சுற்றில் நன்றாக கண்டான்... . காண்பவை எல்லாம் கனவாய் போக கூடாதோ... என்று, உணர்வுக்குள் ஓடும் திருப்பத்தில் தத்ரூபமாக, மனதுக்குள் பனி மூட்டம் சூழ... நினைவுக்குள் தீ சுடர், தலை கீழாய் எரிந்துக் கொண்டிருந்தது... . அவன் திரும்பியே பார்க்கவில்லை... செயலற்று தைரியம் வரவழைத்து... . அடித் தொண்டையில் கேட்டான்...

"யார் நீ... ."

தான் கேட்ட சொல் தனக்கே.. எதிரொலிக்கும் தனிமையின் சொல்லில், சொல் எதுவோ.. என்று கடந்து போன ஒலியின் வால் பிடித்து.. ஒளியின் வேகத்தில் முன்னோக்கி சென்று முகம் பார்க்க முயன்ற பொது சொல் ஒலியாகி ஒன்றுமில்லாமல் போயிருந்தது... . ஒன்றுமில்லை என்பதால் தான் யூகிக்க, யோசிக்க வேண்டி இருக்கிறது... இல்லாமை, இல்லாமையா... ?

மெல்ல மெல்ல, அறை நிதானத்துக்கு வந்தது... . அவனுக்கும், உள்ளே இருந்த பயம் மெல்ல மறையத் தொடங்கியது... .. எழுந்து போய்... ஜன்னலைத் திறந்தான்... கை வளையல் ஓசை இப்போது நன்றாக கேட்டது.. சட்டென திரும்பினான்... முகத்தில் பட்ட காற்றில், பெண்மை... . மென்மையான சுகந்தத்தில் கீற்றுச் சுவர்கள்.. ஈர மொழிப் பூக்களை காற்றாக்கி அனுப்பும் தென்மேற்கு பருவம்... தெவிட்டாத இதழுடன்.. தித்திக்குதே என்று மெய் மறந்தான்... மனச்சூடு.. மெல்ல ஆற ஆற... அது சொல்லிய பதிலை திரும்ப திரும்ப நினைவு படுத்தினான்... . ஆனால் எதுவும் புரியவில்லை... புரியாத சொல்லில்தானே புரிந்தவைகளின் நிர்வாணம் தலை கவிழ்ந்து கிடக்கிறது... . கொலை செய்யும் கொடுவாளின் கூர்முனைக்குள் குருதி தேடும் நாக்கு ஒளிந்து கிடப்பது போல மானுடப் பசியின் தீர்வுக்குள் நாக்குகளாய் சுழன்று கழன்று கிடப்பது எச்சில் வடியும் வேகத்தின் மூச்சு வாங்கல் தானே... !

அவன் குளிக்கத் தொடங்கினான்... பின்னிரவு வேளையில் குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற இனிமை எதுவும் இல்லை.. என்று உணர்ந்த போது குளியலறையில் ஒரு பெண் குளித்து விட்டு அப்போது தான் வெளியேறிய வாசம் அலை அலையாய் இல்லாத கூந்தலாய் அங்கு மிதந்தது, மிர்தாத்தின் வரிகளென... ... காலம் மறக்கும் சூழலை மிர்தாத்தின் புத்தகம் விதைக்கும்... விதைத்த எல்லாமே... எடை இழக்கச் செய்யும் ஆத்மார்த்தம்.. ஆத்மார்த்தங்களில் தத்துவங்கள் பசி அறியா சிறகுகளை சில்லிட்ட வெளி கொண்டு செதுக்கும்.. செதுக்கிய சூட்சுமங்களுக்குள் இருந்த வாசனை.. நுகர்வதும் அல்லாத, அதற்கும் மேற்பட்ட புரிதலின் சுவாசம்...

சுவற்றுப் பொட்டுக்களில் இன்று மஞ்சள் நிறப் பொட்டு... ... ... . எண்ணினான்... 38 இருந்தது... .பெண் குளிக்கும் குளியலறையிலிருந்து வரும் வாசம் தீரா மோகத்தை விதைக்கிறது.. அது ஆரம்பமும் இல்லாத அந்தியும் இல்லாத இடைவேளையில் காய்ந்தும் காயாமல் கிடக்கும் கோடை ஆடை போல மனதுக்குள் கிடக்கும், மயக்க நிலைக்குள் ஒரு வித பால் மயக்க பூத்தூவல் நீராக்கி விடுகிறது... ... . அவன் குளிக்க குளிக்க அவளின் வாசம்... அவன் மீது ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது..ஒட்டுதலின் உறவுக்குள் உண்மை நிலை.. கருப் பொருள் கொண்ட தத்துவக் கோட்டுக்குள் இலையுதிர் காலக் கனவுச் சித்திரம் போல.. வேக சலனம்... தேக சலனம் ஆனது.. ஆகட்டும் என ஆனது ஆனதும்...

இரவுகள் செல்வதும் இரவுக்குள் செல்வதும் இரவாகவே செல்வதும் கொதி நிலைக்குள் குளிர்ந்த நீரில் குத்துக் காலிட்டு அமர்ந்து கிடந்தது அவளின் நிர்வாணம்.. குளியலறைக்குள் புறமுதுகிட்டு நிற்கும் போது பின்னால் தலை விரி கோலமாய் நிற்கும் நிர்வாணத்தை அவன் பின்னோக்கி பார்க்கும் தைரியம் அற்றவனாக வெளியே வந்தான்... வந்து கொண்டிருந்தான்... வெற்றிடம் அள்ளி பூசத் தோன்றிய மணித் துளியில் மிரண்டு மீண்டும் ஆடை அணிந்தான்... . அணிதலின் அளவு அது மீறும் அடுத்த நொடிக்கு சொந்தமில்லை.. முந்தைய எண்ணத்திலும் ஆடை ஒன்றும் பெரியது அல்ல...

"ஒரு வேளை மோகினி பிசாசாக இருக்குமோ... ?"

நாட்கள் நகர நகர.. இரவுகளுக்கு காத்திருக்கத் தொடங்கினான்.. "அது" வருவதும்.. சமையலில் ருசி சேர்ப்பதும்... . வீடு முழுக்க சுத்தம் செய்வதும்.. அவன் ஆடைகளை துவைத்து வைக்கவும்..என்று ஒரு துணையாகிப் போனது..

கண்ணாடி பார்த்து தலை சீவும் போது அவன் மேல் படரும் கூந்தல் சிலதுகளில் நீட்டமும் நீர்த்துளியும், அவள் ஒரு கூந்தல்காரி என்பதைக் காட்டியது... பெயர் கேட்டான்.. பதில் இல்லை... இறந்தவளா... .? எப்படி இங்கு... ? கேட்டான்.. பதில் இல்லை.. காற்றை வேகமாக்கி பயணிக்கும் வேற்று கிரக பெண்ணா ?... என்றான்... பதில் இல்லை... கேள்வியோடு மௌனம் கொண்டு விசுக்கென .. அணைத்து சென்றது... . மூச்சு முட்டி விழிக்கையில்... விசும்பல் சப்தம்.. வீடெங்கும் சிதறும்... . அடிக்கடி சிதறியது... . அது அமானுஷங்களின் கூடாக... சமதளமற்ற மேடு பள்ளமாக அப்போதைய மனநிலை போலவே வீடும் மாறிப் போவதில்தான்... ஓடி ஓடி ஜன்னல் அடைத்து ஒடுங்கி நிற்பான்... ... நிற்கிறான்... . தொடர்தலைப் போல நிற்பதும் தொடர்கிறது... தொடர்ந்தது... தொடும் தூரத்தில் நின்று தீர்க்கும் "அது... ."

நள்ளிரவு வேளைகளில் மெல்ல மேலே படருவதை முதலில் ஆட்சேபித்தான்... பின் விட்டு விட்டான்... அவனுக்கும் மெல்ல பிடிக்கத் தொடங்கியது... இப்போதெல்லாம்... மஞ்சள் நிற ஆடைகள் வீட்டுக்குள் ஆங்காங்கே தென்படத் தொடங்கியிருந்தன... ... அவளின் உள்ளாடைகள் கொடியில் காய்ந்து கொண்டிருப்பதை கண்டு திகைத்து பின் புன்னகைத்த நாட்களும் உண்டு... ... இருவரும் சேனல் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் போது கூட அவன் முகம் பார்க்கத் திரும்பினால், அவள் காணாமல் போய் விடுகிறாள்... கோபம் கூட வந்தது...

"பெயர் கூட சொல்லாமல் எப்படி உன்னுடன் வாழ்வது... உருவமே இல்லாமல் எப்படி நான் உன்னோடு சயனிப்பது..காதலும் இல்லை... காமமும் இல்லை... கவிதையும் இல்லை.. கற்பனையும் இல்லை.. என்னதான் நீ... . எது தான் நீ... ஏன் இங்கு நீ... .. அல்லது நான்... .! "

நகப் பூச்சுகளில் நெளி நெளியாய் வளைந்து விடுகின்ற புகைந்து கிடக்கும் வானவில்- என்று ஒரு கடிதம், வீட்டுக்குள் காணக் கிடைத்த இடங்களிலெல்லாம்..பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிருந்தது... .. பிடித்து பார்த்தான்... படித்தும் பார்த்தான்

"என்ன பிரமிள் கவிதையைப் போல காற்றெங்கும்... விதைக்கிறதா... உன் முத்தங்களை... "- இதழ் பதிந்த முத்த சுவட்டில் அவன் இதழ் பதித்தான்... அவள் வரும் போதெல்லாம் ஒரு வித மஞ்சள் வண்ணம் வீடெங்கும் நிரம்பத் தொடங்கியதை உணர முடிந்தது... உணருதல் தானே உயிர்ப்பும் கூட ... உயிர்ப்பில் தானே உள்ளம் உருளுகிறது, உண்மையைப் போல... ... . மஞ்சள் வாசம்.. நீர் இறைக்கும் சிவந்த உள்ளங்கைகளில்.. மீசையாகி குத்தும் கயிறின் அழுத்தமாய்.. ஆடி ஆடி தலை தூக்கும் வாளியின் முகப்பில்... அசைந்தாடும்... சிறு எறும்பின் மரணம் போல மனமெல்லாம் தளும்புவதை சுமந்து கொண்ட நிலை... சமநிலை அல்லாத சமன் பாட்டு சித்திரம்... ... ... .

ஒரு நாள் பாட்டு போட்டு ஆடத் தொடங்கினான்.. நாணத்துடன் அவளும் ஆடினாள்... ஆட ஆட... ஆட்டங்கள் தன் எல்லை விரிக்க, பாட்டுக்குள் புது சொற்கள் பிறக்க.. வண்ணமற்ற ஓவியங்களுக்குள் புகுந்து வண்ணம் விதைக்கும் உயிர் நிலை மாற்றத்தை வானவில் செய்தே பழக்கப் பட்ட கற்பனை கொண்டு புது பாடல் சமைத்தாள்... . சிறகு முளைத்த கூட்டுக்குள் தூர தேசம் பொத்தி வைக்கப் படுகின்றனவோ!...

கொலுசொலியில்... ஜல் ஜல் ஜல் என்ற இசை.. கண்டிப்பாக அந்த இரவை மிரளத்தான் செய்திருக்க வேண்டும்... ... . எப்படித்தான் நெருங்கிப் பழகினாலும் இல்லாத உருவம்..ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியது..அவன்... கண்கள் சுற்றி தலை சுற்றி.. அவளை அத்தனை அருகினில் தெரிந்தும் தெரியாமல் தேடியபடி... அங்கே ஒரு சித்து விளையாட்டு... தத்தம் வழியினில் பாதம் விதைக்க... நெளிந்த பாதையின் பின்னோக்கிய பயணமாய் அவன்... அறை முழுக்க ஆத்திரம் கொண்டு அமைதியாகி சுற்றினான்... ... சுற்றுதல் ஒன்றும் பெரிதல்ல.. சுற்றிய பின் மயக்க நிலை மகத்துவம் சொல்லும் சிறு மரணம் என்பது போல வீழ்ந்தான்...

"வீழ்வது எதுவாக இருப்பினும் அதுவாக வீழ்வதும் அழகே... " கருத்து சொல்லி முகம் திருப்பிக்கொண்ட சுவரொட்டியை முறைத்துப் பார்க்க ஒரு காலம் விழித்துக் கிடந்தது... ..

எழுகையில் மடி போல ஏதோ தலையில் அழுந்தியது... .. மார்புகளின் கனத்த வாசம், அவன் நெற்றியில் படிந்தது... . தீர்க்க தரிசனம் போல... தீர்க்கும் தரிசனம் போல.. தீர்த்தலே தரிசனம் போல... தவம் கலைந்த போதி மரத்தின் இலைகள் என ஆற்றுப் படுகையில் நீராடி சென்றது அவன் என்ற நிழல்...  மாறுதலே மாறுதல் ஆகிறது... ... . மற்றது எல்லாமே... வேஷங்களின் கரையென மூழ்குவதும் எழுவதும் ஆற்றின் சூட்சம் இல்லை.. அது கடந்து விட்ட காலமாகவேதான் இருக்கிறது... . யார் என்று யோசித்தலின் கைப் பிடி விரலில்... தான் என்று யொசிப்பதுதான் மானுடம்.. தப்பிப் பிழைக்க நீயாக இரு என்பதாக போராடி சொன்னது அவள் என்ற நிஜம்... ...

யாரோ கதவைத் தட்டினார்கள்...

கதவு திறக்கப் பட்டதும்... . எதிரே..தபால்காரர்...

"நிரஞ்சன் இருக்கார்ங்களா ... ரிஜிஸ்தர் போஸ்ட் வந்துருக்கு... "

"நோ..நோ... . இங்க நிரஞ்சன்னு யாரும் இல்ல... நான்தான் இருக்கேன்... பேர் நிரஞ்சனா" என்றாள்... அவள்...

காலையில்தான் மீசை தாடி எடுத்திருக்கும் அச்சு அவளின் முகத்தில் இருப்பதை பார்த்து விட்டு யோசித்துக் கொண்டே சென்றார்... தபால்காரர்.

"போன முறை வரும் போது இதே... ... இதே முகத்தை, நிரஞ்சனாக பார்த்தோமே... ..!!!!!!!!" என்பது அவரின் முணுமுணுப்பு,...

- கவிஜி

Pin It