ஒரு நள்ளிரவில்தான் அது நிகழ்ந்தது. எப்போதும்போல பாதி உறக்கத்தில் பசித்து பால் வேண்டுமென்றான் பிள்ளை. உறக்கத்தையும் தவிர்க்க மனமின்றி பிள்ளையின் பசியையும் பொருட்படுத்தும் ஒருவித ஜென்நிலை. அந்த தியான நிலையிலேயே சாரி அரையுறக்க நிலையிலேயே பாலெடுத்துவர கிச்சனுக்குள் நுழைந்தால் உடல் சிலிர்த்துப்போனது.

cat 301கிச்சனில் ஒரு பூனை எதையோ சின்ஸியராக தேடி நின்று கொண்டிருந்தது. வேறென்ன பாலையோ தயிரையோதான். தயிர் பிரிட்ஜிலிருக்கும் விஷயம் அதற்கு தெரிந்திருக்காததில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் மூடிவைத்த பால் பூனைக்கு அருகில்தானிருந்தது.

எனக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. அப்பார்ட்மெண்டின் இரண்டாம் தளத்தில் குடியிருந்தும் எப்படியோ ஏறிவந்துவிட்ட பூனையை எதிரியாக எரிச்சலாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிற யதார்த்தத்தை ஏதும் (எத்தனை எ?) செய்யமுடியவில்லை.

அறிவுகெட்ட பூனைகள் என்று வசைபாடினேன். பூனை மிகுந்த கோபத்துடன் மியாவ் என்றது. கூடவே "யாரைப் பார்த்து அறிவில்லை என்கிறாய்" என்றும் கேட்டது. பூனை வாய்திறந்து பேசுவதில் எனக்கு ஆச்சரியமில்லை. இது பின்நவீனத்துவ பூனையாக இருக்கக்கூடுமென்று புரிந்துகொண்டேன்.

"என்வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னையே முறைக்கும் துணிச்சல் எப்படி வந்தது உனக்கு"? என்றேன்.

"அது என் தலையெழுத்து. எனக்கென்று வீடிருந்தால் நான் ஏன் உன் வீட்டிற்கு வரப்போகிறேன்" என்றது.

ஓ இது கம்யூனிசப்பூனை போலிருக்கிறதென்று நினைத்ததை அதனிடம் சொல்லவில்லை.

"இத்தனை வக்கணையாக பேசுகின்ற நீ, பிள்ளைக்கு வைத்திருக்கும் பாலை திருட வந்திருப்பது தவறென்று உணரவில்லையா"?

என் கேள்வி பூனையை நிரம்ப பாதித்திருக்க வேண்டும். ஒரு அசூசையான மியாவை வெளியிட்டது. பிறகு,

"நியாயமாக கிடைக்காதவற்றை வலியத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்னும் புரிதல்கூடவா இல்லை உனக்கு"? என்று என்னையே எதிர்க்கேள்வி கேட்டது. மேலும்,

"பெட்ரூமில் பசித்தழும் உன் பிள்ளைபோலத்தான் எனக்கும் பசிக்கிறது, என்ன செய்ய"?

நான் அதன் தர்க்கத்திலிருக்கும் நியாயத்தை நினைத்து மவுனமாயிருந்தேன்.

"சரி இப்போது நான் உன்னை தடுத்து தாக்கினால் என்ன செய்வதாக உத்தேசம்"?

"அது உன் தாக்குதலின் வீரியத்தைப் பொருத்தது. சும்மா பயம் காட்டுகின்றாயா, நிஜமாக தாக்குவாயா என்பதற்கு தகுந்தவாறு நானும் உன்னை தாக்க நேரலாம்"

"நீ பெரிய நக்ஸலைட் பூனையாக தெரிகின்றாய். உன்னோடு பேச எனக்கு நேரமில்லை. காயப்படுத்தவோ காயப்படவோ உத்தேசமில்லை நீ கிளம்பலாம்" என்றேன் அதனிடம்.

அது உதட்டை ஒரு மாதிரியாக சுழற்றி அசட்டையாக என்னையே பார்த்தது. பின்பு,

"ஆனால் எனக்கு நிரம்பப் பசிக்கிறதே” என்றது.

இந்த நேரடியான பிரயோகத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு சற்று வருத்தமாகக்கூட இருந்தது. ஆனால் இருக்கும் பாலை பூனைக்கும் பகிர்ந்துகொண்டால், காலைப் பனியில் எழுந்துசென்று நான் பால்வாங்க கடைக்கு செல்ல வேண்டியிருக்குமே என்று கவலைப்பட்டேன். இருந்தும் கண்முன்பு பசியோடிருக்கும் ஒரு பூனையைவிட காலைப் பனியோ என் உறக்கமோ பெரிதென்று தோன்றவில்லை. சரியென்று அதனிடம் ஒப்பந்தம் தொடங்கினேன்.

"சரி போகட்டும் விடு பூனையே. விரோதியே ஆனாலும் வீட்டிற்கு வந்தால் விருந்துபசாரம் செய்யும் கலாச்சாரத்தில் வழித்தோன்றல் நான். எனவே நீ நகர்ந்து வழிவிடு. இருக்கும் பாலை உனக்கும் என் பிள்ளைக்குமாக பகிர்ந்தளிக்கிறேன்"

இந்த முறை பூனை வெளியிட்ட மியாவில் அதிருப்தி தெரிந்தது.

"உன் பிள்ளை கடைசியாக எப்போது பாலருந்தினான்?” என்று கேட்டது.

"எதற்கு இப்போது சம்பந்தமின்றி பேசுகிறாய்? வழியை விடு"

"காரணமிருக்கிறது சொல்" என்று சற்று ஆக்ரோஷத்துடன் கேட்டது.

"இரவு ஒரு பதினோரு மணியிருக்கும்"

"நல்லது. ஆனால் நான் சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று தெரியுமா"?

எனக்கு தர்மசங்கடமாக போயிற்று.

"அதற்கு"?

"எனக்கு இருக்கும் பால் முழுவதும் வேண்டும்"

எனக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.

"ஏய் சாத்தன் பூனையே. போனால் போகிறதென்று பார்த்தால் தலைகுமேல் ஏறி உட்கார்ந்து கொள்ளப் பார்க்கிறாயா"?

அது மிக நிதானமாக பார்த்தது. சற்றும் எதிர்பாராத வகையில் தாவி ஜன்னலில் ஏறி என்னை திரும்பிப் பார்த்தது. மிகுந்த வருத்தத்துடன் வெளியிட்ட மியாவ் என்னை என்னவோ செய்தது.

"தொந்திரவிற்கு மன்னித்துக்கொள். நான் கிளம்புகிறேன். நன்றி"

இப்போது என்னை குற்றவுணர்வு தொற்றிக்கொண்டது. நான் சற்று பக்குவமாக அதனிடம் சொன்னேன்.

"சரிவிடு கோபித்துக் கொள்ளாதே. எல்லாப் பாலும் வேண்டுமென்று கேட்டதில் சட்டென்று நான் டென்ஷனாகிவிட்டேன். எனக்கு லோ பிபி இருக்கும் விஷயம் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். சரி வா பால் தருகிறேன். இத்தனைதூரம் வந்துவிட்டு வெறும் வயிற்றுடன் திரும்பிச் செல்லாதே. எனக்குத்தான் பாபம் வந்துசேரும்"

பூனை ஜன்னலிலிருந்து இறங்காமல் என்னைப் பார்த்து சொன்னது.

"இதெல்லாம் எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. பசியென்று கேட்கும் மனிதர்களுக்கே உணவிடாத இனமல்லவா மனித இனம். பக்கத்து வீட்டுக்காரன் பசியுணராமல் பீட்சா ஆர்டர் செய்யும் பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நீங்கள். பரவாயில்லை. நான் கிளம்புகின்றேன். எனக்கென்று ஏதாவது தின்றுதீர்க்கப்பட்ட மீன்வறுவல் குப்பையில் கிடைக்கக்கூடும்"

அதன் குரலிலிருந்த துயரம் பெரிதாகத் தாக்கியது என்னை.

"ச்சேச்சே. நீ தவறாக எண்ணிவிட்டாய். 'காக்கைக்குருவி எங்கள் ஜாதி' என்று பாடியிருக்கிறார் எங்கள் கவிஞர்"

"அட சரிதான் போப்பா. அவர் மனைவிக்கே ஒழுங்காய் சோறு போட வக்கில்லாத கடுப்பில் எதையேனும் கிறுக்கிவிட்டு போயிருப்பார்"

"ஓ உனக்கு பாரதி பற்றியெல்லாம்கூட தெரியுமா"?!!

"அது கொஞ்சகாலம் ஒரு நூலகத்தில் வசிக்க நேர்ந்தபோது கொஞ்சம் வாசித்தேன். பெரிதாக அவர் என்னை ஈர்க்கவில்லை. பிச்சைக்காரனப்போல அதுவேண்டும் இதுவேண்டுமென்று பராசக்தியிடம் எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார்"

பரவாயில்லை. இது நிறைய வாசிப்பனுபவமுள்ள இலக்கியப்பூனை என்று உணர்ந்துகொண்டேன்.

"சரி நீதான் சொல்லேன். எதுதான் நல்ல இலக்கியமென்று சொல்லுவாய்"?

"சொன்னால் ஏற்றுக்கொள்வாயா என்று தெரியவில்லை. செயல்வழியற்ற வெற்றுச்சிந்தனைகள் எதுவுமே இலக்கியமாகாது என்வரையில். குறித்துக்கொள் என்வரையில்தான். நான் தவறாகவும் இருக்கலாம்"

உள்ளிருந்து மறுபடி பிள்ளையின் அழுகுரல் கேட்டது. பூனை என்னைப் பார்த்து ஒரு ஸ்னேகமான மியாவை வெளியிட்டது.

"சரி போ. உன் பிள்ளை அழுகிறான். நானும் கிளம்ப வேண்டும்"

"சரி இந்தா இந்த பாலை குடித்துவிட்டுப்போ" என்று ஒரு தம்ளரில் பால் ஊற்றி அதனருகில் வைத்தேன். அது பாலையும் என்னையும் மாறிமாறி பார்த்துவிட்டு கேட்டது.

"அவ்வையார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா"?

"என்ன"?

"கொடிதினும் கொடிது அன்பிலாப்பெண்டிர் கை உணவுதாமே"

"சாரி. எனக்குப் புரியவில்லை"

"அதாவது அன்பில்லாத பெண்ணின் கையால் இடப்படும் உணவுதான் கொடுமையான விஷயம் என்கிறார் அவ்வையார். நீ முதலிலேயே கொடுத்திருந்தால் பரவாயில்லை. இப்போது பசியைவிட தன்மானம்தான் பெரிதெனக்கு"

நான் மன்னிப்புக் கேட்கும் மனதுடன் அதனிடம் மன்றாடினேன். "நிஜமாகவே என்னை மன்னித்துவிடு. ஆனால் தயவுசெய்து பாலை குடித்துவிட்டு செல் ப்ளீஸ்"

"பார்த்தாயா. இப்போதுகூட உன் மனிதத்தனத்தை காட்டுகின்றாய். வேண்டுமென்று கேட்டால் மாட்டேனென்கிறாய். வேண்டாமென்று சொன்னால் வற்புறுத்துகிறாய். மொத்தத்தில் உன் விருப்பப்படி மற்றவர் நடந்துகொள்ள விரும்புகின்ற மனித ஈகோதான் இது"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

"சரி தவறுதான். மன்னித்துவிடு. ஓப்பனாக சொன்னால், எனக்கு உன்னை ரொம்பவும் பிடித்திருக்கிறது. இத்தனை கம்பீரமான, துணிவுள்ள பூனையை நான் சந்தித்ததேயில்லை. எனக்காக இந்த பாலை கொஞ்சம் குடித்துவிட்டு என்னோடு கொஞ்சம் பேசிவிட்டுப்போ"

என் குரலிலிருந்த நேர்மையும் கெஞ்சலும் அதற்கு புரிந்திருக்க வேண்டும். திரும்பி இறங்கி சமையல் மேடைமீது வந்து உட்கார்ந்து கொண்டது.

"இருந்தும் பிரச்சனை அப்படியேதான் இருக்கிறது. இந்த பால் என் பசிக்கு போதாது. அரைகுறையாய் சாப்பிடுவதைவிட பட்டினி மேலானது"

"பரவாயில்லை. முழுவதும் நீயே அருந்திக்கொள்" என்றேன்.

"பிறகு உன் பிள்ளைக்கு என்ன செய்வாய்"?

"நான் அதை யோசித்துவிட்டேன். அவனுக்கு செர்லாக் இருக்கிறது. வென்னீரில் கரைத்தால் போதுமானது. பால் தேவையில்லை"

"இதை முன்பே செய்திருக்கலாம்" என்று சலித்துக்கொண்டது.

"சரி உன் பிள்ளைக்கு செர்லாக்கை கொடுத்துவிட்டு வா. நான் காத்திருக்கிறேன்"

நான் பூனை சொன்னபடியே பிள்ளைக்கு செர்லாக் கலந்துகொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்தேன். பாலை தொடாமல் அது எனக்காக காத்திருந்தது. நானும் மேடைமேல் அசவுகரியமாக உட்கார்ந்துகொண்டு பாலை அதனருகில் நகர்த்தினேன். ஒருவாய் குடித்துவிட்டு,

"பாக்கெட் பாலா? குழந்தைகளுக்கு அதிகம் ஒத்துக்கொள்ளாது. பார்த்துக்கொள்"

"நகரத்தில் கறந்த பாலிற்கு எங்கு செல்ல"?

அது பதில் சொல்லாமல் பால் முழுவதும் குடித்துத் தீர்த்தது.

"யானை தன் பலத்தையறியாமல் பாகனின் அங்குசத்திற்கு பயந்து பிச்சையெடுப்பது போலத்தான் மனிதர்களும் தங்கள் உள்ளாற்றலை உணராமல் புலன்களில் சிக்கி நாசமாகின்றனர்"

"பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசுகின்றாய். எனக்குத்தான் விளங்கவில்லை"

"விளங்கிக் கொள்ள விரும்பவில்லையென்று சொல். சுனாமி பற்றி நான் முன்பே எச்சரித்தேன். மனிதர்களால் அதை புரிந்து கொள்ள முடியாமல் போனது துரதிர்ஷ்டம்"

நான் ஆச்சரியமாக கேட்டேன். "ஓ உனக்கு வருங்காலம் பற்றியெல்லாம்கூட தெரியுமா? பெரிய ஜோசியப் பூனையாக இருப்பாய்போல"!

"ஏன் ஏதாவது குறி கேட்க வேண்டுமா உன் எதிர்காலம் பற்றி"?

"எப்படி கரெக்டாக கண்டுபிடித்தாய்"?

"அதுதான் உன் கண்களிலேயே தெரிகிறதே. சரி ஒன்று மட்டும் சொல்கிறேன். ஆக்சுவலாக நான் உன்னுடைய சிறுகதையொன்றின் பாத்திரம்"

நான் சிரித்தேன். “சரியான முட்டாள் பூனை நீ. எனக்கு எழுதவே தெரியாது. அப்படி உத்தேசமும் இல்லை. சும்மா அளந்துவிடாதே"

"இதற்குத்தான் நான் எதையும் சொல்வதில்லை. சரி நேரமாயிற்று. நான் கிளம்பட்டுமா"?

"எது எப்படியோ. உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வேண்டுமென்றால் தினமும் வருகிறாயா? தனியாக உனக்கென்று பாலெடுத்து வைத்துவிடுகிறேன்"

இந்த முறை வெளிப்பட்ட அதன் மியாவில் ஏளனம் தொனித்தது.

"நானென்ன மனிதர்கள்போல நாற்பது வருடங்களுக்கு சேர்த்து யோசிக்கும் ஜாதியென்று நினைத்தாயா? அடுத்த வினாடி என்னவென்று அறியாத அறிவற்ற வாழ்க்கை பேரின்பமானது. முடிந்தால் ஒருநாள் மட்டும், எவ்விதமான இலக்குகளுமற்று தாந்தோன்றியாக சுற்றிப்பார். நான் சொல்வது உனக்குப் புரியும்"

"ஆனால் அது ரிஸ்க் இல்லையா"?

"பயமாக இருந்தால் இப்போதே சென்று சவப்பெட்டியில் படுத்துக்கொள். பாதுகாப்பாக இருக்கும்"

"சரி எல்லாம் போகட்டும். ஏதாவது நல்லதாக சொல்லிவிட்டுப்போ. என் வாழ்வைப் பற்றி"

அது இடியென சிரித்தது. "முட்டாள் மனிதனே. இத்தனை வருடத்தில் உனக்குத் தெரியாத எதை புதிதாக நான் சொல்லிவிடப் போகிறேன். எனக்கு வருங்காலம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. சும்மா திரித்துவிட்டேன். போய் பிழைப்பை பார். நான் வருகிறேன்"

நான் ஏமாற்றத்துடன் நின்றுகொண்டிருக்க, அது சற்றும் தயக்கமின்றி ஜன்னல்வழி வெளியேறியது. பக்கத்து வீட்டின் மாடி கைப்பிடிச்சுவரில் நின்று திரும்பி என்னை பார்த்தபோது அதன் கண்கள் பளபளத்தன.

----------------------------------------------

"என்னங்க.... என்னங்க..." என் மனைவிதான் எழுப்பினாள்.

"என்னம்மா"?

"எங்கங்க புள்ளைக்கி வச்சிருந்த பாலையெல்லாம் காணோம்?”

நான் இரவு நிகழ்ந்ததைப்பற்றி அவளிடம் சொன்னேன். அவள் புலம்பத் தொடங்கினாள்.

"அய்யோ இந்த மனுஷனை வச்சிக்கிட்டு என்னதான் செய்ய? ஏங்க பைத்தியமா உங்களுக்கு ? பூமி பூனை இனமெல்லாம் அழிஞ்சு பலகோடி வருஷங்களாயிருச்சி. எந்தப் பூனை வந்து பாலை குடிச்சிட்டுப் போச்சாம்"?

- ஸ்ரீரங்கம் மாதவன்

Pin It