ஜன்னல் வழி பொழிந்த இளமஞ்சள் வெயில் வீட்டையும் என்னுள் உன்னையும் உணர்ச்சிமிகு ஓவியமாய் வரைந்து கொண்டிருந்தது. எப்பொழுதும் நீ எழுப்பி எழும் காலைவேளையில்லை இது, சிறிது வித்தியாசமாக தனிமையில் தேங்கிக் கிடக்கும் நான் நானாக எழும் காலை வேளை. நீ நிறைந்த இவ்வீட்டினில் என்னால் எதையுமே செய்ய முடியவில்லை என்பதைச் சுற்றியிருக்கும் வண்ணப்பூச்சுச்சுவர்களுக்குக் கேட்கும்படி அலற வேண்டும் போல் இருக்கிறது, அலற கூட திராணியற்று உள்ளுக்குள் நினைவுகளால் ஒடுங்கிக் கொள்கிறேன்.

lovers kiss"அவ்வளவு பசிக்கிறதா?, ஏதாவது நிகழ்ச்சி பார்க்கும் போது மட்டும் பசிக்கவே பசிக்காதே" என நான் காது திருகும் கணங்களுக்காகவே நீ பின்னிருந்து சத்தமின்றி ஓடி வந்தணைத்து "எனக்குப் பசிக்குதுமா!!" என்று உருகும் தருணங்களை நினைத்துப் பார்க்க சிரிப்புதான் வருகிறது. சிரிக்க முடியுமா என்ற கேள்வியைப் புறந்தள்ளி சிரித்துத்தான் வைக்கிறேன். "வதனா!" - நிலவதனியைச் சுருக்கி நீ நீட்டி அழைக்கும் பொழுது அறை முழுதும் மணக்கும் அன்பை எதைக் கொண்டும் நிரப்ப முடியவில்லை.

"நீ அழாதே!" என வெங்காயம் உரிக்கும் பொழுது நீ என் விழிகளை நோக்கி ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பாயே, அதற்காகவே நான் வெங்காயம் உரிக்கும் பொழுதெல்லாம் சத்தமாக நாசியிழுப்பேன். நினைக்கும் பொழுதே இதமாய் இருக்கிறது உன் விரல்கள் தீண்டும் என் கன்னங்கள். சமையல் திட்டின் மீது சப்பணமிட்டு அமர்ந்து சப்பு கொட்டி சாப்பிட்டு, அடுத்த தோசை என நீ விளித்து விரல் சப்புவாய், தோசை எல்லாம் கிடையாது என நான் சொன்னதும் முகத்தைத் தொங்க போட்டு ஒரு கெஞ்சல் பார்வை விடுவாயே. அதற்கு இணையாய் எதைச் சொல்வது? பிடித்த பதார்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் உனக்கு ஒரு வாய் எனக்கு ஒரு வாய் என குழந்தைமையை நீ மீட்டு வந்ததை நான் இப்பொழுது தனிமையில் தேடித் தேடித் தோற்கிறேன்.

"எத்தனை தடவை சொல்வது? புத்தகத்தை உள்ளெடுத்துச் செல்லாதே!" என நீ கடிந்து கொண்டிருக்க, "எவ்வளவு நேரமானாலும் வெளியில் நின்றுதான் ஆக வேண்டும்" என நான் சிரித்துக் கொண்டே சொல்வதை வெகு இயல்பாய் தாண்ட எத்தனித்து, முடியாமல் போய் சிரிக்க உனக்கு மட்டுமே வரும். "வெளிய வாடா வதனி!" என நீ கெஞ்சியவுடன் சிரித்துக் கொண்டே வரும் என்னை அறைவது போல் பாசாங்கு காட்டி மெல்ல வந்து கன்னம் கிள்ளும் கைகளின் வெதுவெதுப்பு இப்பொழுது தேவை படுகிறது எனக்கு.

குளித்து முடித்து துண்டு கட்டிக் கொண்டு நிற்கும் என்னை வாரி அணைத்து உன் தேகக்கூட்டில் முகம் பதிய ஈரத்துளிகளை நுகரும் மிதமான இளஞ்சூடு நிமிடங்களை யாசிக்கிறது என் மனம். என் கூந்தல் ஒதுக்கி வழியும் நீரை கைகளில் ஏந்தி முகத்தில் தெளிப்பாய், ச்சீ என்று நான் சிணுங்க இழுத்தணைத்து நெற்றிப்பொட்டில் ஒரு முத்தம் வைக்கும் இதம் இனி வருமா? கூந்தல் அள்ளி பூமுடித்து வா என்று நீ செல்லும் பாதையைப் பார்த்துக்கொண்டே நிற்கும் நான் இன்னமும் அங்கேதான் நிற்கிறேன், நீ அங்கில்லை என்பதை மறந்து..

"கடவுளிடம் அப்படி என்ன வேண்டிக் கொள்வாய்?" என நான் கேட்பதற்கு இரு விழிகளையும் ஒரு முறை படக்கென்று இமைத்து சிரிப்பாய், ஒரு மிதமான பச்சையிலையில் நீர்த்துளி வழியும் மென்மையை ஒத்திருக்கும் அச்சிரிப்பு. நான் உன்னைத் தவிர வேறெதையும் இது வரை வேண்டியதில்லை என்பதை உனக்கு நான் எப்படி சொல்வது? சொல்ல முடியும் தொலைவில் நீ இருக்கிறாயா?

"கடவுளுக்கு மலர்களை அவ்வளவு அழகாய் அலங்கரிக்க உனக்கு மட்டும் எப்படி வருகிறது?" என நான் கேட்கையில் எல்லாம், "உன்னை விட அதிகமாய் ஒன்றுமில்லை" என நீ பார்க்கும் ஒற்றை பார்வையில் திடுமென நிலைத்துவிடும் மனது இப்பொழுது அழுது கொண்டிருப்பது உனக்குக் கேட்கிறதா? கற்பூரமும் சாம்பிராணியும் மணக்கும் அறையில் இப்பொழுது ஒரு வித தனிமை மணம் மட்டும் நிறைவதை உணர முடிவதில்லை.

தீண்டித் தீண்டித் திளைக்கும் கணங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் என்னுடலுக்கு வெகு இயல்பாய் உணர்ச்சியிட்டுப் போகும் உன்னை நான் எங்கனம் விடுவிப்பேன் என இறுக்கமாய் அணைத்துக் கொள்வேன். நீ சிரித்துக் கொண்டே இன்னும் இறுக்குவாயே! தீண்டல்கள், வருடல்கள் என எப்பொழுதும் என்னைத் தாங்கியிருந்த விரல்கள் என்னை ஏக்கமென்னும் பாதையில் தனியே விடுத்துச் சென்றதாய் நினைத்துக் கொள்கிறேன்..

நீ கொடுத்த முத்தங்களின் எண்ணிக்கை அறை முழுதும் நிரம்பி வழிவதை உணர்ந்த நான் இப்பொழுது என்ன செய்கிறேன்? வெறும் சத்தத்தால் நிரப்ப முயன்று கொண்டிருக்கிறேன். உச்சி முதல் பாதம் வரை நீ நுகர்ந்த இத்தேகம் இப்பொழுது தீயென சுடுகிறது, உன் அணைப்பின் வெதுவெதுப்பில் தூங்கிய கண்களும் உடலும் தகதகவென கொதிப்பதை படுக்கை உணர்கிறது. நீ உணர நான் எப்படி எடுத்துச் சொல்வேன்? அறை முழுதும் ஒரு வெறுமை வியாபித்திருப்பதை உணர்ந்து முகத்தைக் கால்களுக்குள் புதைத்துக் கொள்கிறேன், கைகளைக் கால்களோடுச் சேர்த்து அணைத்துக் கொள்கிறேன் தனிமை என்னும் ஒரு மாபெரும் மிருகத்தை.

முகம் முழுக்க புன்னகையுடன் தோள் மீதும் இடை மீதும் கையிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் அழகாய் சிரித்துக் கொண்டிருக்கிறோம் நாம். ஒவ்வொன்றும் பறைசாற்றும் தருணங்களை மொத்தமாய் மனதுக்குள் பதிய வைத்திருக்கிறேன், மிக மெலிதான நூலைச் சுற்றி வைக்கும் அழகிய வரிகள் கொண்ட நூல்கண்டென கலையாமல் வைத்திருக்கிறேன்.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் "ப்பா!" என நான் விழுகும் நாற்காலியை மெல்ல இழுத்து "நானும் அமர்கிறேன் என்று மேலேறிக் கொள்ள கொள்ளை விருப்பம் எனக்கு" என அடிக்கடி சொல்லும் உன் வார்த்தைகளை அசை போட ஆசையாய் இருக்கிறது. அந்த நாற்காலியில் இப்பொழுது பறந்து கொண்டிருக்கும் வெள்ளை தாள்களைத்தான் பார்க்க முடிகிறது! அன்று வந்த அந்த மருத்துவ அறிக்கைகளை எத்தனை முறை புரட்டி இருப்பாய் நீ? அழுது கொண்டே இருந்தாய். இருவருக்கும் மனப்போராட்டம் தேவையில்லை என நான் சொல்லவந்ததைக் கேட்டிருக்கலாம் நீ! இழப்போ, வலியோ இருவருக்குமென உனக்குப் புரியவில்லை என உரக்கச் சொல்ல வேண்டும் எனக்கு. பேசித் தீர்ப்போம் என மிருதுவாய் உன் கைகளை வருட வேண்டும் எனக்கு. கனவுகள் காண ஆயிரம் வழியுண்டு, அவற்றை நடத்தவும் பல்லாயிரம் கதவுகள் உண்டு என உன் தலை கோத வேண்டும் எனக்கு. இத்தனைக்கும் வந்து விடுகிறாயா நீ?

உறுத்தும் விழிகளுக்கும் மனதுக்கும் ஆறுதல் சொல்ல முடியாது என நீ விரைந்து சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்!! வெள்ளைத்தாள்கள் அறைமுழுக்க ஒலி எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

Pin It