ஒரு அடர்த்தியான இரவுப்பொழுதுதில் அந்த நகரமே நடு நிசியில் நிசப்தமாய் உறங்கிக்கொண்டிருந்தது. தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் குப்பைக் கூளங்களைக் கிளறி சிந்திக்கிடக்கும் சில கழிவுகளைக் கவ்விக்கொண்டும், முகர்ந்துகொண்டும் இருந்தன. மனித இனங்கள் எதையும் காணவில்லை என்ற தைரியத்தில் பொந்துகளுக்குள் இருக்கும் எலிகள் வெளியேயும் உள்ளேயும் போய் வந்துகொண்டிருந்தன. அந்த வேளையில்தான் அந்த நகரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் குளக்கரைக்கு அவன் வந்து சேர்ந்தான்.

madஒரு கருமைபடிந்த கோணிப்பை, சிட்டம் பிடித்ததுபோன்ற தலைமயிரில் ஓர் ஒழுங்கற்ற நிலை. அங்கங்கு கரையான் அரித்த சுவடுபோன்ற குளிக்காத உடம்பு. மழிக்கப்படாத தாடி மார்புவரை நீண்டுக் கிடக்கும் நிலை, இரண்டு உதட்டுப் பகுதிகளையும் மறைத்திருக்கும் மீசை. பார்ப்பவரைப் பயமுறுத்தக்கூடியதாய் இருக்கும் கண்கள். இவைதான் அவனின் எளிய அடையாளங்கள். குளக்கரையில் அமர்ந்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான். வானத்தை நோக்கி என்னென்னவோ பேசியவன், அதைக் கைக்கூப்பி வணங்கவும் செய்தான். அவன் வாயிலிருந்து வந்த வாசகங்கள் ஒழுங்கற்ற நிலையில் இருந்தன. அது எளிதில் யாருக்கும் புரிந்துவிடக்கூடியதாகவும் இல்லை.

வானத்திலிருக்கும் நிலவு படுத்து உறங்குவதுபோன்ற ஒரு தோற்றத்தைத் தந்துகொண்டிருந்தது அலைகளற்று அமைதியாய் இருந்த குளத்து நீர். அந்த குளத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவன், ஓவென்று அழத்தொடங்கினான். அவன் அழுகையிலிருந்து புறப்பட்ட ஒலிநாதம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளையும், இன்றைக்கோ நாளைக்கோ என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கிழடுகளையும் பீதியடையச் செய்தது. இரவில் கார்பன் டையாக்ஸைடை உமிழ்ந்துகொண்டிருக்கும் மரங்களிலிருந்து இலைகளும் ஈர்க்குகளும் உதிர்ந்துகொண்டிருந்தன. அம்மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த பறவைகள் தூக்கம் கலைத்து தம் கீச் கீச் ஒலியை எழுப்பத் தொடங்கிவிட்டன. அவன் குரலோடு கூகையின் குரலும் சேர்ந்துகொண்டதால் அந்த இரவே ஒரு அச்சுறுத்தல் இரவாக மாறியிருந்தது.

            அந்த நகரவாசிகளுக்கு இந்த குரல் புதிது. அவனுக்கும் அந்த நகரம் புதிது. எத்தனை மணிக்கு எங்கிருந்து புறப்பட்டான் என்று தெரியவில்லை. அவன் இலக்கு வைத்து புறப்பட்ட இடம் எதுவென்றும் தெரியவில்லை. இப்போது அவனுக்கு அதுதான் தற்காலிக இருப்பிடம். அவன் கைகளில் பெரிதாய் உடைமைகள் எதுவும் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை. அவன்தான் அவனுக்கு முகவரி என்பதுபோல் இருந்தது அவன் தோற்றப்பொலிவு. இரவெல்லாம் அழுதுகொண்டும் அரற்றிக்கொண்டும் இருந்தவன் குளக்கரை அருகில் இருக்கும் ஒரு குப்பைத் தொட்டியின் அருகில் போய் படுத்துக்கொண்டான். பொழுது விடிந்ததுகூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தவனை குப்பையை எடுக்க வந்தவர்கள் தங்களின் கால்களால் உதைத்துத் தள்ளியபின்புதான் எழுந்தான். முனகிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவன், தன் இடுப்பில் சுற்றியிருக்கும் வேட்டியை அவிழ்த்து அவர்கள் பக்கம் திரும்பி ஒரு நெளிநெளிந்துவிட்டு குளத்தின் படித்துறையில் போய் அமர்ந்துகொண்டான். சற்றுநேரம் அமைதியாய் இருந்தவன், குளத்துக்குள் இறங்கி தண்ணீரைத் தன் இரண்டு கைகளாலும் அள்ளி மடக் மடக்கென்று குடித்தான். பிறகு வடக்குத்திசையை நோக்கியவாறு சிறுநீர் கழிக்கத் தொடங்கினான். குளக்கரை ஓரமாக நடந்துகொண்டிருந்த ஒருவன் அவனை நோக்கி அங்கு சிறுநீர் கழிக்காதே என்றவாறு கல்லை விட்டெறிந்தான். நல்லவேளையாக கல் அவன்மேல் படாமல் குளத்துநீரில் விழுந்து மூழ்கியது.

குளத்திலிருந்து மேலெழுந்து வந்த அவன், நகரவீதியை நோக்கி நடக்கத்தொடங்கினான். ஒரு தேநீர் கடையின் பக்கம் அவன் பார்வை திரும்பியது. அந்த கடைக்கு வெளியே போய் நின்றுகொண்டு தேநீர் ஆற்றுபவனையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான் அவன். “இந்த ஊருக்குப் புதிதாக ஒருவன் வந்துவிட்டான் போல இருக்கே” என்று கடை முதலாளி கேட்க, “ஆமாண்ணே இவனுக்கு எந்த ஊரோ தெரியல, இவ்வளவு இளமையா இருக்கான், என்ன பிரச்சினையோ…பாவம். . ” - என்று தன் வேலையைச் செய்யத் தொடங்கினான் தேநீர் ஆற்றுபவன்.

தேநீர் ஆற்றுபவனின் உபகாரத்தால் அவனுக்கு ஒரு தேநீர் கிடைத்தது. வாங்கிக்கொண்ட அவன் பார்வையில் நன்றியுணர்வைப் பார்க்கமுடிந்தது. அதை இரண்டு மடக்காகக் குடித்தவன் கடையின் ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான். சற்றுநேரத்திற்கெல்லாம் எழுந்து நடக்கத் தொடங்கியவன், அருகிலிருந்த குப்பைத்தொட்டியின் அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டான். தொட்டியிலிருக்கும் சில எச்சில் இலை புரட்டிப்போட்டு அதில் இருக்கும் உணவுப்பண்டங்களை எடுத்து சுவைக்கத் தொடங்கினான். அந்த வழியாக நடந்து சென்ற ரங்கநாதன் அவனை எழுப்பித் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய் தன் உணவு விடுதியின் தரையில் அமரவைத்து கொஞ்சம் சோறும் குழம்பும் ஊற்ற, அதை அவன் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டு முடித்தான். அவன் குறித்த தகவல்களைக் கேட்க நினைத்த ரங்கநாதனிடம் ஒன்றையுமே சொல்லாமல் விழித்தவன், உணவகத்தில் இருந்த இரண்டு மூன்று தண்ணீர் குடங்களை எடுத்துக்கொண்டு எதிரில் இருக்கும் குழாயை நோக்கி நடந்தான்.

அன்றையிலிருந்து அந்த உணவகத்திற்குச் சம்பளம் வாங்காத உழைப்பாளி ஆனான் அவன். அவனையும் அவன் உழைப்பையும் பார்த்த பக்கத்திலிருக்கும் தேநீர்க்கடைகாரன், மளிகைக்கடைகாரன், துணிக்கடைகாரன் என்று எல்லோருமாய் சேர்ந்து அவன் பகல் நேரத்தைப் பங்கிட்டுக் கொண்டார்கள். காலையிலிருந்து மாலைவரை உழைப்பைக் கொடுத்து ஒரு ஒழுங்கான நேரக்கணக்கை வகுத்துக்கொண்ட அவனின் இரவு நேரங்கள் மட்டும் குளக்கரையில்தான் கழிந்தன. அதே அழுகை, பிதற்றல், கோபம் என்று நீண்டுகொண்டிருக்கும் அவன் இரவுப்பயணம். விடியற்காலம் தன்னிலைக்குத் திரும்பியவனாய் கடைகளுக்கு வந்துவிடுவான்.

ஒருநாள் ரங்கநாதனின் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் இலையில் அழுக்குபடிந்த அவன் துண்டின் நுனி விழுந்துவிட,அவன் கன்னத்தில் அறைந்தவனை அடியோ அடியென்று அடித்துவிட்டான். அன்று முதல் அந்தக்கடையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டான். அவனும் எந்த கடைக்கும் போகாமல் குளக்கரையின் அருகில் இருக்கும் கோயிலுக்கு வெளியே வாசம்புரியத் தொடங்கினான்.

அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த பிச்சைக்காரன் ஒருத்தன் நல்லபடியாகத்தான் பேச்சுகொடுத்தான். நலம் விசாரித்தான். ஆனால் ஒரு தகவலையும் அவனிடமிருந்து பெறமுடியவில்லை. சில நேரங்களில் அவன் சிரிப்பொலி காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும், சில நேரங்களில் அவன் அழுகை கல் நெஞ்சத்தையும் கரைத்துவிடும். அவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதுகூட தனித்துவமாகத்தான் இருக்கும். கீழே கிடக்கும் கிழிந்துபோன தாள்களை எடுத்து இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு வாசித்துக்கொண்டே இருப்பான். யோக நிலையில் இருப்பதைப்போல் அமர்ந்துகொண்டு முனகிக்கொண்டிருப்பான், திடீரென்று ஓங்காரக்குரலில் கத்துவான். ஏதாவது வாகனம் அவனைக் கடந்து செல்லும்போது ரைட்… ரைட் என்றவாறு சைகையும் செய்வான். சில நேரங்களில் கோயிலுக்கு எதிரே இருக்கும் சாலையில் போய் இரண்டு கைகளையும் தலையணைபோல் வைத்துக்கொண்டு படுத்துக்கொள்வான். அதோடு அவன் ஒருகாலை இன்னொரு கால்மீதுபோட்டுக்கொண்டு ஒருகாலை ஆட்டியவாறு இருப்பான். இரு திசைகளிலும் வாகனத்தில் வருபவர்கள் அப்படியே நின்று வேடிக்கைப் பார்ப்பதுக்கொண்டுதான் நிற்பார்கள். அவனை அப்புறப்படுத்த யாருக்கும் துணிச்சல் வராது. பிச்சைக்காரர்களில் ஒருத்தர்தான் அவனை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வார். பெளர்ணமி, அமாவாசை என்றால் இன்னும் உக்கிரமாக இருக்கும் அவன் செயல்பாடுகள். அதன் விளைவால் உண்டானவைதான் தலைமுதல் பாதம்வரை இருக்கும் காயங்களும் சிராய்ப்புகளும். இரக்கப்பட்டு மருந்துபோட நினைப்பவரைக்கூட அவன் அருகே அனுமதிக்கமாட்டான்.

ஒருநாள் இரவு பிச்சைக்காரர்களுக்கு அருகில்போய் அமர்ந்துகொண்டவன், அவர்களில் சிலர் பேசுவதைப் பார்த்துப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். அவர்கள் கொடுத்த உணவை வாங்கி சிந்தாமல் சாப்பிட்டவன், அவர்களை நன்றியோடு பார்த்தான். அவர்களில் ஒருத்தனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவும் செய்தான். அவனின் இந்த செயல்கள் அவர்களை வியக்க வைத்தன. எப்படியும் குணமாகிவிடுவான் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அவன் பின்புலம் என்னவென்று தெரிந்துகொண்டு அவன் உறவுகளோடு சேர்த்துவிடலாம் என்றும் கணக்குப் போட்டார்கள். ஆனால் அவர்களின் கணக்குக்கு கிடைத்த விடையாக அவனின் மரணம் அமைந்தது.

அன்று நடு இரவில் அவர்களை விட்டுப் பிரிந்துச் சென்ற அவனின் பிதற்றலும் பேச்சும் அதிகமாகிக்கொண்டிருந்தன. கற்களையும் மண்ணையும் வாரி வாரி மரத்தில் அடித்தான். மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் படபடத்து அந்த இரவில் வேறு மரங்களைத் தேடி ஓடின, வேகமாக வீசிய காற்றில் மரங்கள் சலசலத்தன. கிளைகள் கிரீச் கிரீச் என்று ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன. தரையில் பட்ட அவற்றின் நிழலுக்குப் பயந்து கரப்பான் பூச்சிகளும் கட்டெரும்புகளும் அங்குமிங்குமாக ஓடின. ஒரு இடத்திலிருந்து கொஞ்சம் தூரம் ஓடினான் அவன். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே ஓடிவந்தான். தரையில் படுத்துப் புரண்டு புரண்டு அழுதான். நடுங்கும் குளிரில் தன் ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு பிறந்தமேனியனாக துள்ளிக்குதித்தான். சற்றுநேரம் அமைதியாய் இருந்துவிட்டு இடுப்பில் துண்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். நேராக குளத்தில் குதித்தான். அதில் தம்பட்டம் அடிப்பதுபோல் இருந்தது அவன் தத்தளித்தது. சற்றுநேரத்தில் அவனைச் சுற்றிலும் பிரிந்துபோன அலைகள் மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பி வந்து கைகோர்த்துக்கொண்டன.

பொழுதுவிடிந்தது, குளக்கரையின் ஒருபகுதியில் காகங்கள் கூட்டமாக கத்திக்கொண்டிருந்தன. ஓடிவந்து பார்த்த பிச்சைக்காரர்களின் கண்களில் சலனமற்றுக்கிடக்கும் அவன் சடலம் பட்டது. சற்றுநேரத்தில் கூட்டம் கூடிவிட்டது. அந்த நகராட்சி தன் வழக்கமான வேலைகளை செய்யத் தொடங்கியிருந்தது. அந்த சடலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் சொன்னான், இவனை யார் தொலைத்துவிட்டுத் தேடுகிறார்களோ தெரியவில்லை, இவனை இவனே தொலைத்துக்கொண்டு யாரையோ தேடிப்போயிருக்கிறான் என்று!

Pin It