கட்டையனின் வீடே பரபரப்பாகிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு கோவிந்தன் கயிற்றுக்கட்டில் ஒன்றைக் கொண்டு வந்து கட்டையன் வீட்டுக் கொட்டாயில் போட்டுவிட்டு அதில் பழுதடைந்த பகுதிகளையெல்லாம் சரி செய்து கொண்டிருந்தான். அவன் மனைவி கருமாரி இரண்டு சட்டிகளைக் கொண்டுவந்து கட்டில் அருகில் வைத்துவிட்டு துடைப்பத்தை எடுத்து கொட்டாயைத் பெருக்கத் தொடங்கினாள். கட்டையனின் இரண்டு பெண்பிள்ளைகளும் அங்கும் இங்கும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அரசாங்க ஊர்தி ஒன்று கட்டையனின் வீட்டுமுன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த கட்டையனின் மனைவி பாவாயி வீட்டின் மூலையில் போய் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். கூட கருமாரியும் பக்கத்து வீட்டுப் பெண்மணிகளும் சேர்ந்து கொண்டனர்.

manவாகனத்தில் வந்த ஊழியர்கள் கட்டையனை ஸ்டெச்சரில் வைத்து தூக்கி வந்து கட்டிலில் போட்டுவிட்டு புறப்பாட்டார்கள். அவர்கள் போட்டவாக்கிலேயே படுத்துக் கிடந்தான் கட்டையன். அப்படியிப்படி திரும்ப முடியவில்லை அவனால். அவன் இடுப்பிற்குக் கீழாக எதுவும் இருப்பதற்கான சொரணையே இல்லாமல் இருந்தது அவனுக்கு. மல்லாக்கப் படுத்திருந்தவன் மிகவும் சிரமப்பட்டு தலையைத் தூக்கி தன் இரண்டு கால்களையும் பார்த்தான். சலனமற்றுக்கிடந்த கால்களின்மீது சில ஈக்கள் அமர்ந்திருந்தன. ஒன்றிரண்டு எறும்புகள்கூட ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன. இதைக் கண்ட அவன் கண்களிலிருந்து சலசலவென நீர்க் கொட்டியது. இனிமேல் தன்னால் நடக்கவே முடியாது என்பதை நினைக்கும்போதே அவனுக்கு ஓவென்று குரலெடுத்து அழத்தோன்றியது. இனி மல்லாக்கப் படுத்துக்கொண்டு இந்த கூரையைத்தான் பார்த்துக்கிடக்க வேண்டுமா! இந்த மண்ணுக்கும் காலுக்குமான உறவு இன்றோடு முடிந்துவிட்டதா! என்று அவன் மனம் கேள்வி கேட்டது. கால்களுக்கான முக்கியத்துவத்தை இப்போதுதான் அவனால் உணரமுடிந்தது. அவற்றைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போல தோன்றியது. இனி அதுகூட நடக்காது என்பதை அவனால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

பாவாயி ஒப்பாரி வைத்து அழும் சத்தம் கட்டையனின் காதுகளைத் துளைத்துக்கொண்டு ஊரின் தெருக்கோடிவரை கேட்டது. ஊரிலிருக்கும் பெண்களும் ஆண்களும் வந்து விசாரித்துவிட்டுப் போனார்கள். வருபவர்கள் எல்லோரும் பாவாயியிடம் விசாரித்துவிட்டு கட்டயனை அனுதாபமாகப் பார்த்துவிட்டுச் சென்றனர். அவர்களின் பார்வை கட்டையனின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தெடுப்பதைப் போல் இருந்தது. யாரையும் அவன் கண்கொண்டு பார்க்கவில்லை. ஒரு சின்ன சண்டையில் அவன் கையால் அடிவாங்கிய கோபால் வந்து கட்டிலில் அவன் பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான். கட்டையனின் கண்கள் என்னை மன்னித்துவிடு என்பதுபோல் அவனைப் பார்த்தன. அவன் இரண்டு கைகளையும் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டு அழுதான் கட்டையன்.

வயிற்றைக் கலக்குவதைப் போல உணர்ந்த கட்டையன், எழுந்திரிக்க எத்தணிக்கும் போதுதான் தன் நிலையை உணர்ந்தான். இதைப் புரிந்துகொண்ட கோவிந்தன் கட்டிலுக்குக் கீழிருக்கும் இரண்டு மண் சட்டிகளையும் காட்டினான். ஒன்று மூத்திரத்துக்கு, ஒன்று ரெண்டுக்கு போறதுக்கு என்றவன், அதில் ஒன்றை எடுத்து அவனுக்குக் கீழாக வைத்து போகச்சொன்னான். அவன் படுத்திருக்கும் இடத்திற்கு மறைப்பாக ஒரு புடவையையும் கட்டிவிட்டான் கோவிந்தன். இனி அவன் கழிவுகளை மனைவியோ பிள்ளைகளோ அப்புறப்படுத்த வேண்டும் என்பதை கட்டையனால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. நான் செய்த பாவத்திற்கு என் பொண்டாட்டியும் புள்ளைகளும் இந்த கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமா என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான் கட்டையன். “எல்லாம் அந்த திருட்டு சிறுக்கி சவகாசத்தால வந்த வென” என்று அவன் வாயிலிருந்து வந்த வாசகம் அவனைச் சுற்றியிருக்கும் யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

பாவாயி கட்டையனுக்கு அத்தை மகள். அவன் அத்தைதான் அவளை இவனுக்கு மல்லுக்கட்டி கல்யாணம் முடித்துவைத்தாள். கட்டையனைக் கண்டாலே பாவாயிக்கு பயம். அவள் கழுத்தில் அவன் தாலிகட்டும்வரை அவன் முகத்தோடு முகம்பார்த்து பேசியதுகூட கிடையாது. பாவாயி ஊருக்கும் கட்டையன் ஊருக்கும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு. சில நாட்களில் பாவாயி ஊர் பக்கமாக மாட்டுவண்டி போகும் போது தன் அத்தை வீட்டுக்குப் போவான். அப்போதெல்லாம் அவளிடம் ஆசையாக பேசவேண்டுமென்று நினைத்து அவளிடம் பேச்சு கொடுப்பான். அவன் பத்துவார்த்தை பேசினால் அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தைதான் வந்து விழும். கட்டையனின் அப்பனும் ஆத்தாளும் நோய்வாய்ப்பட்டு அடுத்தடுத்து இறந்துபோனார்கள். அந்த நேரத்தில் அனுக்கு ஆறுதல் சொல்லி அவன் அத்தை தேற்றினாள். பாவாயியை அவனுக்கு கட்டிக் கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்தாள். இதைக்கேட்ட பாவாயி முரண்டு பிடித்துக்கொண்டு மூன்று நான்கு நாட்காள் சாப்பிடாமல் கிடந்தாள். அவளின் அம்மா பொட்டு, பாவாயியின் காலில் விழுந்து “என் அண்ணன் பையனுக்கு நம்மை விட்டால் யாரும் ஆதரவு இல்லை. நீ அவன கட்டிக்கோ, அவன் உன்னை நன்றாக வைத்துக்கொள்வான்” என்று கெஞ்சினாள். இறுதியாக பொட்டுவின் பிடிவாதம்தான் வென்றது.

கட்டையனுக்குக் கழுத்தை நீட்டி வந்தவள், கடமைக்காகவே வாழ்க்கை நடத்தத் தொடங்கினாள். மூன்றாண்டுகளில் இரண்டு பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்துவிட்டாள். இரண்டாவது பெண் பிறந்து ஒரு ஓராண்டு அவர்களுக்குள் அப்படியும் இப்படியுமாக தாம்பத்திய உறவு இருந்தது. வேண்டாவெறுப்பாகவே தன்னை அவனுக்கு ஒப்புக்கொடுத்த பாவாயி, இரவில் தன் இரண்டு பெண்பிள்ளைகளையும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாகப் படுக்க வைத்துக்கொண்டாள். அவனுக்குத் தோன்றும்போதெல்லாம் அவளை சீண்டிப் பார்ப்பான். சிறிதுகூட அந்த சீண்டலைப் பொருட்படுத்தமாட்டாள் பாவாயி. சில மாதங்களில் அவனும் அவள் பக்கம் செல்வதை நிறுத்திக் கொண்டான்.

இந்த சமயம்தான் பட்டாளத்தானின் மனைவி வைதேகியின் பார்வை இவன்மேல் விழுந்தது. பட்டாளத்தான் ஒன்றும் பட்டாளத்தில் பணியாற்றவில்லை. பார்ப்பதற்கு அவன் நல்ல கட்டுமஸ்தாக இருப்பதால் அந்த ஊரில் அவனுக்கு அந்த பெயர் நிலைத்துவிட்டது. அவனுக்கு சென்னையில் ஒரு உணவகத்தில் பரோட்டா மாஸ்டர் வேலை. மாதம் ஒருமுறைதான் ஊருக்கு வருவான். இரண்டு மூன்று நாள் இருந்துவிட்டு புறப்பட்டுவிடுவான். வைதேகி ஒன்றும் வயதானவள் இல்லை. கணவனோடு எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைப்பவள் அவள். பட்டாளத்தான் அதற்கு விதிவிலக்கு. எப்போதும் சம்பாத்தியம் பற்றித்தான் அவளிடம் பேசுவான். காசு கைநிறைய இருந்தால்தான் கெளரவம் என்று அடிக்கடி சொல்வான் அவளிடம். வந்து அவளுடன் இருக்கும் சில நாட்கள்கூட தன் வேலையைப் பற்றியதாகத்தான் இருக்கும் அவனது பேச்சி. அவளுக்கும் இரண்டு பிள்ளைகள்தான். அவளின் இந்த தனிமைக்கு திருட்டுத்தனமாக ஒரு துணை தேவைப்பட்டது. கட்டையனுக்கு அது வாய்க்கப்பெற்றது. அதிலிருந்து வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கட்டையனின் கயிற்றுக்கட்டிலில் தலையணையும் போர்வையும்தான் தூங்கிக்கொண்டிருக்கும்.

வழக்கம்போல் ஊருக்கு வந்திருந்த பட்டாளத்தானின் காதிற்கு எட்டியிருந்தது இவர்களின் இரவுநேர சந்திப்புகள். கட்டயனுக்குப் பாடம்புகட்ட வேண்டுமென்று கணக்குப் போட்டது பட்டாளத்தானின் மனம். அதற்காக காத்துக்கொண்டிருந்தான் அவன். உணவகத்திற்கு ஒருவாரம் விடுப்பு சொல்லியிருந்தான். ஒரு நடு இரவில் நெல்மூட்டைகளை கொண்டுபோய் செஞ்சி விற்பனைக்கிடங்கில் போட்டுவிட்டு திரும்பும்போதுதான் பட்டாளத்தானிடம் சிக்கிக்கொண்டான் கட்டையன். அவன் சுதாரிப்பதற்குள் மளமளவென விழுந்தது அடி. சக்கையாகப் பிழிந்தெடுத்துவிட்டான் பட்டாளத்தான். அந்த நடு இரவில் இவன் போட்ட கூச்சல் யாருக்கும் கேட்கவில்லை. விடியற்காலை வண்டி ஊர்வந்து சேர்ந்தது. அதில் சுயநினைவற்றுக் கிடந்தான் கட்டையன்.

பதறியடித்துக் கொண்டு ஓடிய பாவாயி, அவனைக் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்துச்சென்றாள். அவள் கேட்டதற்கு வண்டியிலிருந்து தூக்கத்தில் விழுந்துவிட்டேன் என்றான். படுக்கையிலேயே சில நாட்கள் கிடந்த கட்டையனின் கால்கள் இரண்டும் மரத்துப்போனது. பயந்துபோன பாவாயி அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். இடுப்பில் நரம்பு எதுவோ அறுந்துவிட்டது என்றார்கள் மருத்துவர்கள். இனிமேல் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறினார்கள். நொடிந்துபோனாள் பாவாயி. அப்போது கூட அவன் மூச்சிவிடவில்லை. தன்னைத் தானே நொந்துகொண்டான் கட்டையன். வைதேகி அவன்முன்னால் பிம்பமாக வந்துபோனாள். பட்டாளத்தான் மீண்டும் மீண்டும் அச்சுறுத்துவதுபோல் தோன்றியது கட்டையனுக்கு.

கட்டையன் படுக்கையில் விழுந்து நான்காண்டுகள் ஆகியிருந்தன. அன்றிலிருந்து பாவாயி ஒருநாள்கூட வீட்டில் தங்குவது இல்லை. தூங்கியெழுந்தவுடன் நாற்று நட, களை எடுக்க, கதிர் அறுக்க என்று ஏதாவது ஒரு வேலைக்கு ஓடிவிடுவாள் பாவாயி. வண்டிமாடுகள் விற்கப்பட்டிருந்தன. பொட்டு எப்போதாவது தன் கையில் கிடைத்ததை கொண்டுவந்து பாவாயிக்குக் கொடுத்துவிட்டு, கட்டையனுக்கு அருகே வந்து ஒப்பாரி வைத்துவிட்டுப் போவாள். இப்போதெல்லாம் கட்டையன் வீட்டிற்கு வருபவர்கள் நீண்ட நேரம் அங்கு இருப்பதில்லை. குறிப்பாக அவன் படுக்கைக்கு அருகில் யாரும் போவதில்லை. அப்படி போகவேண்டிய கட்டாயம் வந்தால் மூக்கைப் பொத்திக்கொண்டுதான் போவார்கள். அவனுக்கு அது பழகிப்போயிருந்தது. வைதேகி இப்போது வேறு ஒருவனுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று கட்டையனின் நண்பன் ஒருத்தன் வந்து அவன் காதில் போட்டுவிட்டுப்போனான். கைகளைப் பிசைந்து கொண்டான் கட்டையன். பற்களைக் கடித்துக்கொண்டே கெட்ட கெட்ட வார்த்தைகளில் தனக்குள் பேசிக்கொண்டான். அதைத் தாண்டி அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

Pin It