ஊரே திரண்டு ஆக்ரோசமாகக் கத்திக்கொண்டு ஓடிவருவதைப் பார்த்ததும் வெலவெலத்துப் போனான் ஆரோன். என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி மாட்டைப் பார்த்தான். அது இவனைப் பார்த்து "படக் படக்' என காதுகளை அடித்துவிட்டு, திரும்பி, ஓடிவரும் கூட்டத்தை ஒரு கனம் கூர்ந்து பார்த்தது. அதன் கண்களிலும் மிரட்சி.

dalit oldmanமாட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிடலாமா என நினைத்த ஆரோனின் நெஞ்சுக்கூடு ரயில் சக்கரங்களின் அரைபடும் தண்டவாளத்தைப் போல அதிர்ந்தது.

ஓடிவரும் கூட்டத்தை உற்றுப்பார்த்தான். மூங்கில் தடிகளும், சிலாக்கோல்களும், புல் அடிக்கும் கொம்புகளும் தூக்கிக்கொண்டு பெரிசுகளும், இளசுகளும் முன்னால் ஓடிவர, துடைப்பக்கட்டைகளை தூக்கிப் பிடித்தபடி பெண்கள் பின்னால் ஓடி வந்தனர். எல்லாருக்கும் முன்னால் கணேசன் வாத்தியார் ஓடி வந்தார்.

'அவர் கூடவா' என நம்ப முடியாமல் பார்த்தான் ஆரோன். இது இவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என்று அவன் நினைக்கவில்லை. அந்தப் பையனை அடித்திருக்கக் கூடாதோ? வாய் அதட்டலோடு நின்றிருக்கலாமோ என்று இப்போது நினைத்தான்.

அப்படி அதட்டலோடு விட்டிருக்க முடியுமா அவனை? அவனை அப்போதே இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டிருக்க வேண்டும். சோறு தின்கிற மனிதன் செய்கிற காரியத்தையா செய்தான் அவன்?

காட்டுக்கரம்பில் வேயோரமாக வழக்கமாகக் கட்டும் இடத்தில்தான் இன்றும் மாட்டைக் கட்டிவிட்டு போனான். காலையில் கட்டிவிட்டுப் போனால், மதியம் வந்து மாட்டை அவிழ்த்து, குட்டையில் தண்ணீர் காட்டிவிட்டு, மீண்டும் அங்கேயே கட்டி விடுவான். மாலையில் வந்து ஓட்டிக்கொண்டு போய் பால் கறப்பான். இப்போது பால் நின்று போய் நிறைமாத சினையாக இருக்கிறது மாடு.

வழக்கம்போல மாலையில் மாட்டை ஓட்டிப்போக இன்று மாலை தூரத்தில் வரும்போதே மாடு கத்துவது இவனுக்குக் கேட்டது. பத்தடி நடப்பதற்குள் மீண்டும் கத்தியது. ஏன் கத்துகிறது? யோசனையோடு அடியை இழுத்து வைத்து நடந்தான். மீண்டும் அடிவயிற்றிருந்து குரலெடுத்துக் கத்தியது. 'பாம்பு கீம்பு ஏதாவது தீண்டியிருக்குமா?' யோசனையோடு ஓட்டமும் நடையுமாய் மாட்டை நெருங்கினான். மாடு கட்டியிருந்த இடத்தினருகில் யாரோ நிற்பது தெரிந்தது.

'யார் அது? அங்கே என்ன வேலை? மாட்டை ஓட்டிக்கொண்டு போக திருட்டுப்பயல் எவனாவது வந்து விட்டானா?'

குழப்பத்தோடு ஓடத் தொடங்கினான். அருகில் போனதும் அதிர்ந்து போனான். மாடு கால்களை நீட்டிக்கொண்டு ஒரு பக்கமாய் படுத்துக்கிடக்க, லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டிருந்த யாரோ ஒருவன் பின்புறம் அதன்மீது சாய்து கொண்டு, ஒரு கையால் அதன் வாலை தூக்கிப் பிடித்திருப்பதைப் பார்த்ததும் எரிகிற கொள்ளியை உச்சந்தலையில் வைத்து தேய்த்ததைப்போல சுரீரென்று கோபம் பற்றியது.

""டேய்... அடப்பாவி... அக்குருமத்தில அயிஞ்சி போறவனே... எவன்டா அது... இன்னா வேலடா பண்ணிகினு கீற?'' என்று கத்தினான். அப்போது மெதுவாக எழுந்து நின்றவன் இவனது திடீர் அதட்டல் அதிர்ந்து, இவனை எதிர்பார்க்காததால், பேயைக் கண்டவனைப் போல முகம் மாறி, சட்டென்று சுதாரித்துக்கொண்டு ஓடப் பார்த்தான்.

எட்டி அவன் சட்டையைப் பிடித்தான் ஆரோன்.

"அடப்பாவி... நீயி... ஊரு நாட்டாமக்காரம் புள்ளதானே?"

"ஆமா... என்ன உடு" என்று முறைத்தபடி திமிறினான் அவன்.

அவனை விடாமல் பிடித்துக்கொண்டு மாட்டைப் பார்த்தான் ஆரோன். கூட்டம் அடித்து மாட்டை கட்டி வைத்திருந்த கயிறாலேயே அதன் பின் இரண்டு கால்கள் சேர்த்து கட்டப்பட்டிருக்க, கால்களை உதைத்துக்கொண்டு, தலையைத் தூக்கி ஆரோனைப் பார்த்தது. அதன் கால்கள் உதைத்து உதைத்து குளம்புகளுக்குக்கீழே மண்ணில் ஒரு சாண் ஆழத்திற்கு பள்ளமாகி இருந்தது.

கால்கள் கட்டப்பட்டதால், கீழே விழுந்து, போராடியிருக்கிறது.

"அய்யோ... சென மாடு... இப்டி கீய வீந்துகீதே... வயித்தில் கீற கன்னுக்கு எதுனா ஆயிருக்குமா?"

ஆரோனுக்குள் ஆத்திரம் அளவு கடந்து பொங்கியது.

"பட்ச்ச புள்ள செய்ற வேலயாடா இது... அப்டி அடக்க முடியனா உங்க ஊர்ல கீற பொம்பளங்க கிட்ட போறது? அப்படி எவளும் கெடைக்கலன்னா உன்ன பெத்தவகிட்டயே போறது? இப்டி வாயில்லாத மாட்டு கிட்டியாடா உங் நமச்சில காமிப்ப?" என்று கத்தியவன் பக்கத்தில் இருந்த துண்டுக் கயிறை எடுத்து 'மளேர்... மளேர்' என அவன் முதுகில் விளாசினான்.

"யோவ்... மரியாத கெட்டுடும்... அடிக்கிற வேலயெல்லாங் வெச்சிக்காத" என்று அலறினான் அவன்.

"உனுக்கு மரியாத வேற குடுக்கணுமாடா நாயே... உன்னல்லாம் அடிக்கக் கூடாதுடா... துண்டு துண்டா வெட்டணுன்டா" என்றான்.

"டேய் எதுக்கு என்ன அடிக்கிற... நானு சும்மாதாங் இந்தப்பக்கமா வந்தங்" என்று தடுமாறினான் அவன்.

அதைக் கேட்டதும் திக்கென்றது ஆரோனுக்கு. அவசரப்பட்டு அடித்து விட்டோமா? அய்யோ... ஊர்க்காரனை அடித்தது தெரிந்தால் என்ன ஆகும்? சேரியையே அடித்து துவம்சம் செய்து விடுவார்களே.

ஆரோனின் தயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பையன் தப்பித்தால் போதும் என்று ஊரை நோக்கி நான்கு கால் பாய்ச்சல் ஓடத் தொடங்கினான். அவன் ஓடுவதையே புரியாமல் பார்த்த ஆரோன், திரும்பி மாட்டைப் பார்த்தான். பதைபதைப்போடு அதன் கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். கால்களை உதறி, மடக்கி, உடலை உலுக்கி, எழுந்து நின்றது மாடு. "மா..." என்று ஈனக்குரல் ஒருமுறை கத்திவிட்டு அவனைப் பார்த்தது.

அவனுக்குள் குழப்பம் கூடு கட்டியது. சும்மா இந்தப்பக்கம் வந்ததாகச் சொல்கிறான் அவன். ஆனால் கால்கள் கட்டப்பட்டிருக்கிறது. மாடு குப்புறக் கவிழ்ந்திருந்ததையும், அதன் மீது அவன் சாய்ந்திருந்ததையும் தூரத்திருந்து ஆரோன் பார்த்தானே.

"பேபர்சி பொய்யி புளுகுறானா... ஒன்னும் பண்ணாதவங் எதுக்கு இப்பிடி ஓட்றாங்...?"

யோசனையோடு கயிற்றை விசிறி எறிந்துவிட்டு, மாட்டின் முதுகைத் தடவிக் கொடுத்தான். அதன் கழுத்துக் கயிற்றைப்பிடித்து பச்சை பச்சையாய் செழித்திருந்த புற்கள் பக்கமாக இழுத்துப் போய்விட்டான். இரண்டு வாய் புல்லை உறிஞ்சிக் கடித்து மெல்வதும் இவனை திரும்பிப் பார்த்துக்கொண்டு நிற்பதுமாய் அது தவித்தது. பச்சைப் புற்களைப் பார்த்தாலே நாக்கை நீட்டிச் சுழற்றி 'சர்ரக் முர்ரக்' என்று அவசர அவசரமாய் கடித்துக் குதப்பி உள்ளே தள்ளும் மாடு, இப்போது இவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறது. கால்களை மாற்றி மாற்றி வைத்து நிலையாய் நிற்க முடியாமல் தவிக்கிறது. அதன் தவிப்பு என்னவோ நடந்திருக்கிறது என அவனுக்கு உணர்த்தியது. 'அவனை வெட்டிப் புதைக்காமல் விட்டோமே' என்று நினைத்ததும் மீண்டும் ஆத்திரம் பொங்கியது.

மீண்டும் மாட்டின் வயிறு, முகம் என அவன் தடவிக் கொடுத்தபோதும், அது மேயாமல் நாக்கை நீட்டி அவன் கைகளை நக்கியது. அதன் முகத்தைத் தள்ளி, புல்லின் மீது திருப்பினான். அது மீண்டும் இவனைப் பார்த்து நாக்கை நீட்டியது. இப்படி அதனுடன் அவன் போராடிக் கொண்டிருந்தபோதுதான் ஊர்ப்பக்கமிருந்து பெரும் இரைச்சலோடு ஊரே திரண்டு வந்தது. அதைப் பார்த்ததும் மின்சாரத்தைப்போல உடலெங்கும் தாக்கிய பயத்துக்கு நடுவிலும் குபீரென கோபம் பற்றியது.

"பண்றதயும் பண்ணிட்டு இப்போ ஊரயும் கூட்டிகினு வரானா? வரட்டுங்... வரட்டுங், தலயே போனாலும் செரி... நாக்கப்புடுங்கிக்கினு சாவற மாதிரி அவனுங்கள நாலு வார்த்தயாவது கேட்டுட்டணும்" என்று நினைத்துக் கொண்டான்.

இப்படி ஊர்க்காரர்கள் உடனே திரண்டு வருவார்கள் என்று தெரிந்திருந்தால் சேரியில் போய்ச்சொல்லி, துணைக்கு இவனும் கொஞ்சம் ஆட்களை சேர்த்திருப்பான். இப்போது தனியாக மாட்டிக்கொண்டோமே, என்ன செய்வது? இத்தனை பேர் ஓடிவருவதைப் பார்த்தால் அவர்களுக்கு நியாயத்தைச் சொல்லி விளக்க முடியுமா?

வந்ததும் உதைக்க ஆரம்பித்தால்...? ஓடி விடலாமா?

அவர்கள் நெருங்கிவிட்டதைப் பார்த்ததும், மாட்டை ஓட்டிக்கொண்டு சேரியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான்.

"டேய்... போறாம் பாரு... நில்டா... டேய்... ஊடு ஊடா கவாங்கித் துன்ற நாயே... உனுக்கு இன்னா ஆங்காரம் இருந்தா ஒரு வயசுப் பையன கவுத்துலயே ஜெவுரி அனுப்பி இர்ப்ப?" என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான் முனிசாமி.

"'யோவ் மாமா... ஓடறாம் பாரு... போடு.... மண்டயிலயே போடு.... போடறபோடுல மண்ட ரெண்டா ஒடயணுங்" என்று ரங்கநாதன் கத்த, தடியை ஓங்கினான் முனிசாமி. நடக்கப்போகும் விபரீதத்தை தாமதமாக உணர்ந்தவனாக மாட்டை விட்டு விட்டு வேகமாக ஓடத் தொடங்கினான் ஆரோன்.

நாலாபுறமும் சூழ்ந்து துரத்தும் நாய்களிடமிருந்து உயிர் பிழைக்க காதுகளை விடைத்துக் கொண்டு தாவித்தாவி ஓடும் முயலைப்போல உயிர் பயத்தில் தாவித்தாவி ஓடினான். வேட்டை நாய்களைப் போல மூச்சிறைக்க மூச்சிறைக்க துரத்திவந்த கூட்டத்திருந்து முன்னால் பாய்ந்த ரங்கநாதன் மூங்கில் கழியை விசிறி அடிக்க அது ஆரோனின் குதிகால்களில் மோதி எகிற, கால்கள் பின்ன 'ஏசப்பா' என்று கத்திக்கொண்டே மடிந்து விழுந்தான்.

"விய்ந்தாங் பாரு... போடு... போடு" என்று பல குரல்கள்.

ஆரோன் தடுமாறி, புரண்டு நிமிர்வதற்குள் சூழ்ந்து கொண்டது கும்பல். மிரள மிரள பார்த்தபடி எழ முயன்றவனின் முன் மண்டையில் ஒன்று போட்டான் ரங்கநாதன்.

'அம்மா' தலையில் கை வைத்தபடி குனிந்ததும் சடசடவென்று விழும் கோடை மழைபோல முதுகில் விழுந்தன அடிகள். துடைப்பக் கட்டையால் பெண்கள் சாத்தினர்.

"அய்யோ... சாமி... சாமி உட்ருங்க... தப்புதாங்... சாமி உட்ருங்க" என்று கைகளைக் குவித்துக்கொண்டும், விரித்துக்கொண்டும், தலைமீது பாதுகாப்பாய் மறைத்துக்கொண்டும் கெஞ்சினான்.

"இப்போ அய்யா... சாமின்னு கத்தறியே... அந்தப் பையன கவுத்துல அடிக்கும்போது தெர்யாடா யார அடிக்கிறோம்னு... அந்தப் புள்ள முதுவப்பார்றா நாயே... பட்ட பட்டயா எப்டி எய்ம்பி கீது" என்று கத்தினான் முனிசாமி.

"சாமி... சாமி... அந்தப் பையங் இன்னா பண்ணான்னு தெரிமா...?" என்று பரிதாபமாகக் கேட்டான்.

"இன்னாடா பண்ணான்...? உங்க ஊட்ல பூந்து.. உங்க பொண்ணுங்கள கையப்படிச்சி இஸ்த்தானா?" என்று கிண்டலாகக் கேட்டான் முனிசாமி.

"பொண்ணக்கூட இல்ல சாமி... அந்த வாயில்லா ஜீவனப் போயி... கால கட்டிப்போட்டு அது மாதிரி பண்ணிகினு கீறாங் சாமி" என்று திக்கித்திக்கிச் சொன்னான் ஆரோன்.

இதைக் கேட்டதும் மொத்த சனமும் ஒரு நொடி உறைந்து நின்றது. சோவென கொட்டுகிற மழை, சட்டென்று ஒரு கனத்தில் நின்றுபோனால் நிலவுகிற எதிர்பாராத நிசப்தத்தைப்போல, நிசப்தமானது கூட்டம்.

"டேய்... ஆரோனு... இன்னா சொல்ற நீ...? உனுக்கு புத்தி கித்தி கலங்கிப் போயிட்ச்சா?" என்றார் கணேசன் வாத்தியார்.

"அய்யோ சாமி... நானு சொல்றது மெய்யி. அந்தப் பையங் எம் பசு மாட்ட காலக்கட்டி... அத..." என்று சொல்ல முடியாமல் திணறினான். கூட்டத்தில் இருந்த பெண்களுக்கு எதிரில் அவனால் அதை சொல்ல முடியவில்லை. ஆனாலும் அது எல்லோருக்கும் புரிந்தது. கூட்டத்தில் கசமுசாவென பேச்சொலிகள்.

"டேய்... வேலு... இவஞ்சொல்றது மெய்யாடா...? காலேஜி படிக்கிறப் பையன் நீ... உண்மய சொல்லுடா" என்று அதட்டினார் கணேசன்.

"இல்ல... இல்ல... அவம் புளுகறாம் மாமா... நானு சொம்மா இந்தப் பக்கமா வந்தங்... மாட்டப் பாத்ததும் அதுக்கு எத்தினி பல்லுனு பாக்கலாம்னு கிட்டப்போனங்... அதுக்குள்ள இவந்தாங் வந்து என்ன அடிச்சிட்டாங்" என்று குழறினான்.

"அதானே... டே ஆரோனு... உங்குளுக்கு ஊர்க்காரங்க மேல கோபங் கீபங் இர்ந்தா நேராச் சொல்லணுங். அடிக்கணும்னு ஆச இர்ந்தா நேரா வந்து மோதிப்பாக்கணுங். இப்டி சம்சாரி ஊட்டுப் பசங்க மேல வீணா பயி சொல்லக்கூடாது" என்று கத்தினார் கணேசன்.

"யோவ் மாமா... இன்னா அவுனுக்குப் பாடம் நடத்திக்கினு கீற... நீ ஒதுங்கு... அவன இப்ப இங்கயே குத்திப் பொதக்கிறம் பாரு" என்று சிலாக்கோலைத் தூக்கினான் மணிமுத்து.

"டேய் ஊரு சோறு துண்ற நாயே... எங்குளுக்கு இன்னா மாட்டுக்குங், மன்சனுக்குங் தராதரம் தெரீல...? போனம்னு நெனச்சா... உங்கூட்டு பொட்டச்சிங்கக்கிட்டயே பப்ளிக்கா போவம்டா... மாட்டுங்ககிட்டாயா போவம்...? படிச்சப் பையம்மேல இப்படி அபாண்டமா சொல்றயே உனுக்கு நாக்கு கூசல...? அவங் வாயிலயே சொருவுடா சிலாக்கோல" என்று கத்தினான் ஏகாம்பரம்.

அதற்குள் சத்தம் கேட்டு சேரிக்காரர்களும் திரண்டு வந்து குறுக்கே நின்றனர். ஆரோன் சொல்வதை நம்புவதா, ஊர்க்காரர்கள் கோபத்துக்கு பதில் சொல்வதா என திணறியது சேரி.

"சாமி... இன்னா நடந்திச்சின்னு அந்த கடவுளுக்குதாங் தெரியுங்... அந்த மாடு மாதிரியே நாங்களுங் வாயில்லாத ஜனங்களாவேதான இர்ந்துர்கினு கீறோம்... உங்கள மீறி நாங்க இன்னா பண்ணி கீறோம்? இப்டியே பேசிகினு போனா பகதாங் வளரும்... வாணாம் சாமி... அவன உட்ருங்க" என்று கெஞ்சினான் ராபர்ட்.

"கொஞ்ச நாளாவே கண்ணு காலு தெரியாமதாங் ஆடறீங்கடா... யார நம்பி யாரு கீறாங்கன்றது வாயில சொன்னா போதாது. மனசுல இர்ந்தாதான பள்ளம் மோடு தெரியுங்?" என்று எகத்தாளமாய் கத்தினார் நடேசன்.

"செரி... செரி... ஆளாளுக்குப் பேசாதீங்க... இனுமே இப்டி பண்ண மாட்டானுங்க... எல்லாம் களம்புங்க" என்றார் கணேசன் வாத்தியார்.

மனசே இல்லாமல் பொறுமிக்கொண்டு கிளம்பியது ஊர் சனம். அப்படியும் போகிற போக்கில் அந்தப் பையனின் அண்ணன் குமரேசன் ஆரோனின் இடுப்பில எட்டி ஒரு உதை விட்டான். "அய்யோ" என்று அலறினான் ஆரோன்.

"டேய்... டேய்... போதும் வாடா" என்று கத்தினார் கணேசன்.

காறித் துப்பிக்கொண்டும், மோசமான வசவுகளை நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டும் அவர்கள் நகர, ஆரோனைத் திட்டினார்கள் சேரிக்காரர்கள்.

"ஆரோனு... இன்னாடா ஆய்ச்சி உனுக்கு...? சம்சாரிப் புள்ளமேலே இப்டி ஒரு சந்தேகம் ஏன்டா வந்திச்சி உனுக்கு...? உன்னால ஊருக்கும் சேரிக்கும் தீராத பகயாப் பூடுமேடா" என்று கத்தினான் மேசாக்.

அப்போதுதான் மாரிலடித்துக்கொண்டு, ஓலமிட்டபடி ஓடிவந்த ஆரோனின் மனைவி மேரி, அவனைப் பார்த்துப் பதறினாள். அதற்குப் பிறகுதான் அவர்களும் வலியில் முனகிய அவனை கவனித்தனர். முன் நெற்றியிலும், தோள்பட்டையிலும், கைகளிலும் கொழுக்கட்டைகளைப் போல வீங்கியிருந்தன. வலது கையின் விரல்களில் தோல் பிய்த்துக்கொண்டு ரத்தம் கசிந்தது.

"தூக்குங்க... இப்டியே போலீஸ் ஸ்டேசனுக்குப் போவலாங்" என்று ஆவேசமானான் ஈசாக்.

"டேய்... அங்கப் போயி இன்னான்னு சொல்லுவ...? நமுக்கு யாரு சாட்ச்சி சொல்றது? மாடு சொல்லுமா? அவசரப்பட்டு இவம் பண்ணத கேட்டா நம்மளதாங் காறிதுப்புவானுங்க மாமனுங்க" என்றான் மேசாக்.

"பேசாம கூப்டுகினு ஊட்டுக்குப் போங்க... போயி... மஞ்சாப் பத்துப் போட்டு படுக்க வெய்யிங்க... ஏதோ பெரிய காயம் எதுவும் படல" என்றான் ராபர்ட்.

ஆரோனை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் மேரி. தூரத்தில் மிரண்டுபோய் நின்றிருந்த மாட்டை ஒருவன் ஓட்டிக்கொண்டு வந்தான்.

இரவெல்லாம் தூக்கமே வரவில்லை ஆரோனுக்கு. வின்வின்னென்று தெறிக்கும் வலி ஒருபுறம். அசிங்கப்பட்டுபோய் மனசெல்லாம் கூசிய அசூசை ஒருபுறம்.

'தப்பு பண்ணிட்டமே... அரகொறயாய்ப் பார்த்துட்டு அவசரப்பட்டுட்டமே' என்று புரண்டு புரண்டு படுத்தாலும், அடி மனசில் எதுவோ உறுத்திக்கொண்டே இருந்தது.

இவனை மிரண்டு மிரண்டு பார்த்த மாட்டின் கண்கள் இரவெல்லாம் அவனை இம்சித்தன. பொழுது விடிந்ததும் முனகிக்கொண்டே எழுந்தான் ஆரோன். நேராக மாட்டுத் தொழுவத்துக்குப் போனான். கயிற்றை அவிழ்த்து மாட்டை வெளியில் ஓட்டும்போதுதான் அதை கவனித்தான். உற்றுப் பார்த்தான். புரிந்து போனது அவனுக்கு.

"த்தூ... தாயோளி... சம்சாரியாம் சம்சாரி... போயும் போயும் சாணி போடற வாயிலயா.. த்தூ" என்று காரித்துப்பிவிட்டு மீண்டும் அதைப் பார்த்தான்.

மாடு இரவில் கழித்திருந்த சாணத்தின்மீது ஓரமாய் வெள்ளையாய், சளியைப்போல அது படர்ந்திருந்தது.

அது மனித விந்து.

- கவிப்பித்தன், வசூர், வேலூர் (பேச : 94434 30158, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It