சோபாவில் உட்கார்ந்து நொறுக்குத் தீனி கொறித்தபடி தொலைக்காட்சி நெடுந்தொடரை இரசித்துக் கொண்டு இருந்த அவளது கவனத்தை கைப்பிடித்து அழைத்துக் கொண்டுபோய் தண்ணீர் சலசலத்தோடும் எங்கள் ஊர் ஏரி மதகுமேல் உட்கார வைத்தேன். செழுமையாய் நீர்ப்பாய்ந்து அடர் பசும் விரிப்பாய் விளைந்த நெற்பயிர்கள் காற்றில் அலை அலையாய் எழுவதும் தாழ்வதுமாய் கண்களுக்குக் குளிர்மையாய் இருந்தது. வயலிலிருந்து விசுக்கென்று எழுந்து வெண் சிறகை விரித்து தென்னந்தோப்புப் பக்கமாய் பறந்துபோய் மறைந்தது கொக்கு ஒன்று.

அந்த சில்லிப்பான சூழல் என் இளம்பருவத்து காதல் கதையைக் கிளரிவிட சொல்லத் துவங்கினேன் அவளுக்கு. கதை கேட்கும் ஆர்வம் மிகுந்துபோய் இன்னும் நெருக்கமாய் நகர்ந்து அமர்ந்துகொண்டாள், என் தோல்மேல் தலையை சாய்த்தவாறு.

ஒரு நாள் இப்படித்தான் அவளது காமம் கிளர்த்தும் நடைகண்டு சுகிக்கவும் இதழ்க்கடையோரம் நழுவி ஒழுகும் புன்முறுவலில் கிறங்கவும் நெடுநேரமாய் இம்மதகுமீது காத்துக்கிடந்தேன் என்று கதையை சொல்லத் துவங்கினேன்.

தொலைக்காட்சி நெடுந்தொடரின் பரபரப்பான காட்சியை அனிச்சையாய் சோபாவின் முனைக்கு நகர்ந்து அமர்ந்துகொண்டு இரசிப்பவள்போல கதையைக் கேட்கலானாள்.

கதை இப்போது முதன் முதலாய் நான் அவளுக்கு சோளக்கொல்லையில் வைத்து இரகசிய முத்தம் கொடுத்த கட்டத்தை அடைந்தது.

கதை அபாரம், விறுவிறுப்பாய் நகர்கிறது, தொடருங்கள் என்றாள்.

கதை இப்போது காட்டுச் செடியின் மறைவில் அவளை நான் புணர்ந்த அத்தியாயத்தை அடைந்திருந்தது.

கதை முடிந்தபோது நான் சோபாவின் முனையில் அமர்ந்திருக்க அவள் உட்கார்ந்திருந்தாள் ஏரி மதகுமேல்.

- வெ.வெங்கடாசலம்

Pin It