சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம்.., “இதோ அழுதுவிடுவேன்..” என்பதைப்போல, வானம் தன் முகம் கறுத்து நின்றிருந்தது. அதனை உறுதிப் படுத்துவது போல, மேற்குத்திசையிலிருந்து ஈரத்தை சுமந்து வந்துகொண்டிருந்தது காற்று. பிரதான சாலையைவிட்டு சற்றே உள்ளொடுங்கி, வாசலில் மயங்கும் வெளிச்சத்துடன் நின்றிருந்த அந்தப் பெரிய வீட்டுக்கு முன்பாக, பல வண்ணங்களில் பூத்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள், இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன.

இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர் களும் கைவிட்ட நிலையில் தனது மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும் பிரபல சிறுகதை எழுத்தாளர் ஞானபாரதியை வைத்த கண் மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா..,

அந்த அறையில், அரைமயக்கத்தில் கிடந்த அவரிடமிருந்து அவ்வப்போது எழும் முனகல்களுக்கு செவி சாய்த்தபடி, அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான் மாரியப்பன். பொங்குகின்ற துக்கத்தை அடக்க முடியாமல், தோளில் கிடந்த துண்டால் வாயைப் பொத்தியபடி சத்தமின்றி அழுதுகொண்டிருந்த அவன்.., ஞானபாரதிக்குசகோதரனாகவும், சமையல்கார னாகவும், வேலைக்காரனாகவும்.., சில சமயம் தாயுமானவனாகவும் இருப்பவன்.

அந்த அறையின் வாசலில் நிழலாடியது.கௌசி திரும்பிப் பார்த்தாள்.மஞ்சுளா உள்ளே வந்து கொண்டிருந்தாள்.ஞானபாரதி கிடந்த கட்டிலின் அருகே சென்று நின்றவளுக்கு, இளைத்துக் கருத்துக் கிடந்த அவரின் கோலம் மனதை மிகவும் துயரப் படுத்தியிருக்க வேண்டும்.., மளுக்கென்று அவள் கண்களில் நீர் திரண்டு, கன்னங்களில் வழிவது தெரிந்தது.

முதுமை தன்னை அண்டிவிடக்கூடாதென இவருக்குத்தான் எவ்வளவு ஆசையிருந்தது. தினமும் முகத்தை மழித்துக் கொண்டு, இளைஞர் களைப் போல உடைகளை அணிந்து கொள்வதும், அதிகாலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி, லேசான உடற்பயிற்சியென நாட்களைக் கடத்தியதும், எப்போதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள பயிற்சிகள் பயன்படுகிறது என்றும் சொல்லிவந்தவர், அவை எதுவுமே பயனளிக்காத நிலையில், இப்போது அசைவற்றுப் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க.., மஞ்சுளாவுக்கு கண்ணீரை அடக்கவே முடியவில்லை. ‘அறுபது வயதில் அகால மரணத்தின் கைகளில், தன்னை ஒப்படைத்துக் கொள்ள அப்படியென்ன அவசரம் இவருக்கு..? மஞ்சுளாவின் மனதிற்குள் ஞானபாரதியின் கடந்த காலங்கள் கோலமிட்டன.

மஞ்சுளாவின் கேள்விகளுக்கான பதில்கள், கௌசியின் மனதிற்குள்ளும் ஓடின. ‘அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாமே அவசர அவசரமாய்த்தான் நடந்தேறியுள்ளது. மணவாழ்க்கை, புகழ், பணம்..அந்த வரிசையில் மரணமும்..?’

அவர் எழுதிய முதல் சிறுகதையில் அவள்தானே கதாநாயகியாக இருந்தாள்.அவளுடைய வாழ்க்கையில் சுழன்றாடிய சமூகசிக்கல் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்தச் சிறுகதை, பிரபலமான வாரப் பத்திரிகையொன்றில் வெளிவந்தபோது அவருக்கு வயது இருபத்தைந்து.அந்த ஒரே கதையின் மூலம் தமிழகஅளவில் அவருக்கு பரவலான அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பின் பல்வேறு இதழ்களிலும் அவரது சிறுகதைகள் ஏராளமான அளவில் வெளியிடப்பட்டதும், பல பதிப்பகங்கள் அவரது சிறுகதைத் தொகுப்புகளை போட்டி போட்டுக் கொண்டு பதிப்பித்ததும், தமிழகத்தின் பரபரப்பான இலக்கிய வரலாறாகவே அமைந்துவிட்டது.

தொடர்ந்த அவரது எழுத்துக்களில் பாத்திரங்கள் உயிர்பெற்று எழுந்துவந்து சமூகத்தோடும், தனிமனிதர்களோடும் உறவாடின.அந்தப் பாத்திரங்கள், தங்களுக்கிருந்த இயல்புகளை வெளிப்படுத்தியதன் மூலம், ஞானபாரதியையும் பிரபல எழுத்தாளர்களில் ஒருவராக மாற்றின. அவரது முப்பத்தைந்து வயதுக்குள், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா, ஜெயகாந்தன், மேலாண்மை பொன்னுச்சாமி..., என்று இலக்கிய உலகம் கொண்டாடும் கதாசிரியர்களின் வரிசையில் ஞானபாரதியின் பெயரும் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது.அதற்கு சாட்சியாக இதுவரை இரண்டுமுறை சாகித்ய அகாடமி விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன.

இதனிடையே, ஒரு கல்லூரியில் நடைபெற்ற இலக்கியவிழாவில் அவனோடு அறிமுகமாகி, காதலை வளர்த்துக் கொண்டு, கைப்பிடித்து மனைவியான வித்யா.., முதல் பிரசவத்தின்போதே தாயும், பிள்ளையுமாகப் போய்ச்சேர்ந்தாள். தனது சிறுகதைகளில், எத்தனையோ பாத்திரங்களை பிறப்பித்து மக்கள் நடுவே வாழவைத்தவர்..தனது மனைவியையும், பிள்ளையையும் பிழைக்கவைக்க முடியாத சோகம் அவர் நெஞ்சை ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்தது.அதற்குப் பின் அவர் வேறு திருமணமும் செய்து கொள்ளவில்லை. முப்பதாண்டுகள் ஓடிவிட்டன.அவருக்கு வெளியிலிருந்த புகழைப்போலவே, உடலுக்குள்ளும் வளர்ந்துவந்த இரத்தப் புற்று நோய்.. இதோ உச்சத்தை எட்டிவிட்டது. மருந்துகளும், மாத்திரைகளும் இதுவரை மரணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தனவே தவிர, அவரை அதிலிருந்து விடுவிக்கத் தயாராயில்லை. இயற்கையை வெல்ல யாரால் முடியும்..?’ கௌசியின் மனதை ஆயாசமே நிரப்பியது.

ஊர்க்கவுண்டர் ராமசாமியும், பறையடிக்கும் சின்னானும் ஒன்றாக அந்த அறையினுள் நுழைந்தனர்.அவர்களுக்குப் பின்னே.., ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டாலும், பரஸ்பரம் இருவரின் நலனுக்காகவும் அக்கறை கொள்ளும் தம்பதிகள் சுமித்ராவும், ஜெயபாலனும்.., போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் சங்கரய்யா.., பதவியில் இருந்தாலும் இல்லா விட்டாலும், மக்களின் நலனை மட்டுமே சிந்திக்கும் அதிசயமான அரசியல்வாதி கணேசலிங்கம், இப்போது ஒழுங்காகப் பள்ளிக் கூடம் போகும் சிறுமி கல்பனா, ஆசிரியரிடம் ஓயாமல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ரவி, இன்னும்.., பாதிரியார் ஓசேப்பு, கோபக்காரன் மனோகரன், கோடங்கி சிவனான்டி, பாலியல் தொழிலாளி காமாட்சி, வாத்தியார் அப்துல்லா, என தொடர்ந்து நூற்றுக் கணக்கில் வந்து கொண்டேயிருந்தவர்களால் அந்த அறையும் மெதுவே நிரம்பிக் கொண்டிருந்தது.

வெவ்வேறு இடத்தில் நின்று கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் பார்வையும் ஒட்டு மொத்தமாய் ஞானபாரதியின் மீதே குவிந்திருந்தது. தங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புகுந்து ஞானபாரதி செய்திருந்த மாற்றங்கள்.., முன்னேற்றங்கள்.., அதன் மூலம் தங்களது வாழ்க்கை, நிலைபெற்றது.., தாங்கள் செய்த தவறுக்காக அவர் சில சமயம் தண்டித்தது, மன்னித்தது என..பலவற்றையும் எண்ணி, சிலர் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதும், சிலர் கேவிக் கொண்டு இருப்பதும், அதனைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருப்பதும் தெரிந்தது.

ஆனால்.., எல்லோர் மனதிலும் ஞானபாரதியின் நிலை குறித்த துக்கமும், கவலையும் மேலோங்கி இருந்தாலும், ‘ஒரு அதிசயம் போல திடுமென்று எழுந்து அவர் அமர்ந்து விடக்கூடாதா..? "எனக்கொன்றும் இல்லை..எதற்காகக் கவலைப் படுகிறீர்கள்.., !" என்று அவர் கேட்டுவிட மாட்டாரா.?’ என்ற ஆசையும் ஒருபுறம் இருந்ததை மறுக்கமுடியாது. ஞானபாரதி எழுதும் கதைகளிலும் அப்படித்தான்…வாசகனின் யூகத்தை எப்போதும் பொய்யாக்கும் வகையில்தான் அவரது கதைகள் திடுமென முடியும்.அது திடீர் திருப்பமாக இருக்கலாம்.இன்பக் கிளர்ச்சியாக இருக்கலாம். வாழ்வின் புதிய கோணமாக இருக்கலாம். சிலசமயம் அது அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கலாம்.

நிமிடங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. ஞானபாரதி, தனது வறண்டுபோன குரலில், மெலிதாக முனகுவது கேட்டது, “தண்ணீர்..தண்ணீர்..”. ஞானபாரதியின் நிலை குறித்து பலருக்கும் தனது அலைபேசியில் தகவல் சொல்லிக் கொண்டிருந்த மாரியப்பன், பாய்ந்து அவரருகில் வந்தான். ஞானபாரதியின் இடுப்புக்கும், தோளுக்கும் கைலாகு கொடுத்தபடி மெதுவாய் அவரை சற்று உயர்த்தி தனது மடிமீது கிடத்திக் கொண்டான். அருகில் டீப்பாய் மீது இருந்த ஜாடியிலிருந்து தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாய்ப் புகட்ட.., மடக்..மடக்.., இரண்டு வாய்த் தண்ணீர் உள்ளே இறங்கியது.

அதற்குப்பிறகு.., ஊட்டப்பட்ட தண்ணீர் வாயிலிருந்து வழிந்து, மாரியப்பனின் மடியை நனைத்தது..!.. “அய்யா...” மாரியப்பனின் குரல், அதிர்ச்சியை வெளிப்படுத்தும் பேரோலமாய்.. இடியென அந்தப் பிரதேசத்தையே தாக்கியது.

சூரியன் முழுதாக மறைந்து, கறுத்துப் போன மேற்குத் திசையிலிருந்து மழை வேகமெடுத்தது. அங்கிருந்த மலர்களும் இப்போது உதிர்ந்து விட்டன. அதுவரை அந்த அறையிலிருந்த மற்ற அனைவரும் சட்டெனக் காணாமல் போயினர்.!

இனி அவர்கள் எந்தப் பாத்திரமாக, எந்தக் கதையில் வாழ்ந்து வந்தார்களோ..அங்கேயே மீண்டும் சென்றிருக்கலாம்..!

Pin It