நெஞ்சில் குப்புறப்படுத்துப் பட்டிலும் மெல்லிய பஞ்சுக் கால்களால் உதைத்து என்னோடு விளையாடிக் கொண்டிருப்பவன் என் இளைய மகளின் மூன்றாம் பிரசவத்தில் தரணிக்கு வந்தவன். சாயலில் அவன் என்னைப் போலவே என்பது பலரின் அபிப்பிராயம். ஒளி வீசும் கண்களும், அகன்ற நெற்றியும், மூக்கும் என அவன் என்னை ஒத்திருப்பதை என் மனமும் ஒப்பத்தான் செய்கிறது.

“அவனுக்குப் பசியெடுத்துவிட்டது, பாருங்கள் என்ன செய்கிறான் என்று…”

என் சட்டையின் பொத்தான்களை நக்கிக்கொண்டிருந்த குழந்தையை என் மகள் தாய்மைக்கேயுரிய பொறுப்புடன் வாரியணைத்துச் செல்கிறாள்.

எனது இந்த ஆடம்பர வீட்டில் என் நரைத்த மனைவியுடன் நான் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது எழுபது வயதாகிறது. சாய்வு நாற்காலியும் ஓய்வுமாக நான் அமர்ந்து நாலைந்து வருடங்களாகிற்று. என் மனைவி எப்போதும் மகிழ்ச்சியாகவே வலம் வருகிறாள். நரைத்த தலையும், கூன் தோலுமாக முதுமைக் கோலத்தைக் கொண்டிருந்தபோதும், அவள் பளிச்சென்று அழகுடன் மினுங்குகிறாள். என் இளமைக்காலங்களை விடவும் இப்போது அவள் அதிக சந்தோசமாக இருப்பதாகத் தோன்றுகின்றது.  அதிகாரங்கள், செல்வங்களுக்குப் பின்னால் ஓடி ஓடி நீங்கள் என்னைக் கண்டுகொள்வதேயில்லை, அல்லது குறைவாகவே கண்டுகொள்கிறீர்கள் என இப்போது அவள் முணுமுணுப்பதேயில்லை.

பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட தரையில் விலையுயர்ந்த விரிப்புகள் விரிக்கப்பட்டு தேக்கு மரங்களால் அலங்கரிக்கப்பட்ட எனது அறையிலிருந்து ஜன்னலினூடே பார்க்கிறேன்.

மனைவி, பிள்ளைகள், என் செல்வங்கள் எல்லாவற்றையும் மிஞ்சிய ஒன்றுக்காக என் மனம் தவிக்கிறது. எனக்குள்ளே சேகரமாகிக் கிடக்கும் எண்ணங்களால் என் உணர்வுகள் கீறப்படும்போதெல்லாம் என்னிலிருந்து இரத்தம் சுரப்பதாக உணர்கிறேன்.

சந்தேகத்திற்கிடமின்றி நான் பெருஞ் செல்வந்தனாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது பெருஞ்செல்வத்தின் ஒவ்வொரு காசையும், நானே எனது புத்திசாலித்தனத்தாலும், அதிர்ஷ்டத்தினாலும்;  சம்பாதித்தேன். பணத்தினால் கற்பனைசெய்து பார்க்கக்கூடிய எல்லாவற்றையுமே நான் அனுபவித்துவிட்டேன். இப்போது தனிமையில், எனது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு நான் இன்னும் ஏதாவது ஒரு பொருளை வாங்க இருக்கிறதா என, சிந்தித்துப்பார்க்கிறேன். ஒன்றுமேயில்லை. ஏதாவது ஒரு இடத்திற்குப் போக விரும்புகிறேனா? அல்லது, ஏதாவதொரு சாதனையைச் செய்யவிரும்புகிறேனா? அதுவுமில்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து, எல்லாச் சாதனைகளையும் செய்துமுடித்து இப்போது நான் மிகவும் களைத்துப்போய்விட்டேன்.

இவை அனைத்தையும் விஞ்சிய ஒன்றைத்தான் என் உள்ளம் அவாவுகிறது. என் காதலி அலேஷாவின் வெப்பமான காதலுக்காக என் இதயம் பரப்பரப்புடன் இயங்குகிறது. என்னைவிடவும் இருபத்தியிரண்டு வயது இளையவளாக இருந்த அவளை நான் எனது ஐம்பதாவது வயதில் சந்தித்தேன். கணவனால் கைவிடப்பட்ட அபலையாக அறிமுகமாகி என்னை ஈர்த்தவள்.

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் தேஜஸான தேகத்தோடு மிகக் கம்பீரமாக இருந்தேனென்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். இதோ, என் எழுபதுகளிலும் நான் என் உடல் உருக்குலையவில்லை, பாருங்கள்.

“யார் சொல்வது, உங்களுக்கு ஐம்பது வயதென்று. நிறுத்தாமல் பல மைல்களைக் ஓடிக்கடக்கும் இளங்குதிரையைப் போல இருக்கும் உங்களுக்கு முதுமை வந்துவிட்டதாக கர்ப்பனை செய்யாதீர்கள்”

நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலையில் கூடத்தில் வைத்த அலங்கார விருட்சம்போல எனக்காகவே அவள் காத்துக் கிடந்தாள்; கிடக்கிறாள். என்னை நேசிக்கும் ஒழுக்கமான மரமாக தன்னை உயர்த்திக் கொண்டவள். காற்றுக்கும், பனி, மழைக்கும் தாக்குப்பிடித்து தளிர்களை வளர்த்தவள். அவளது கிளைகளில் நான் இளைப்பாறுவேன் என நம்பிக்கைக் கனவுகளைப் பிரவாகித்தவள்.

பல பெண்களால் காதலிக்கப்பட்டும், பல பெண்களைக் காதலித்தும் என்னைக் கொண்டாடியவன் நான். ஒரு காலத்தில் பெண்களின் நளினங்கள் எனக்குள் பைத்தியத்தை உண்டுபண்ணியதென்றும் கூறலாம். அலேஷாவை அந்த வரிசையிலான ஒருத்தியாகத்தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்  துவக்கத்தில்.

வயது வேறுபாடுகளைக் கடந்து என்னில் அவளுக்கும் காதல் வந்தபோது அது என்னை எந்தவிதத்திலும் ஆச்சரிக்கவில்லை. அப்பேற்பட்ட காதல்களுக்கு நான் பரிச்சயமானவனாக இருந்தேன், சந்தேகமில்லாமல்.

“ஐயா தேத்தண்ணி கொண்டரட்டுமா…”

நீண்ட காலம் விசுவாசமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அஷ்ரப் கேட்கிறான்.

நான் பதிலேதும் கூறவில்லை.

இன்னமும் நான் ஜன்னலுக்கு வெளியேதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மங்கலான கண்ணாடிச் சுவர்களினூடாக வானம் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. நான் பதில் கூறாவிட்டாலும் அஷ்ரப் என்னைப் புரிந்துகொண்டவன். எனக்கு பணிவிடை செய்வதற்கான எல்லாத் தகுதியும் அவனுக்கிருப்பதற்கு இதொன்றைத்தான் நான் அடையாளமாகக் கருதுகிறேன்.

எனக்கு முன்னால் சில்வர் முலாமிட்டதோர் தட்டைக் கொணர்ந்து வைத்தான். சில பிஸ்கட்டுகளும், தேநீரும் எடுத்துவந்திருந்தான்.

நான் பிஸ்கட்டுக்களைத் தேநீரில் தொட்டுச் சுவைக்க ஆரம்பித்தேன்.

எனது அறைக்கு வருவதற்கு என் மனைவிக்கு நேரமில்லை. கீழ்த்தளத்தில் அவள் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பாள். பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் செல்வங்களாகி மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது அவளை.

என் அலேஷா இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவள். பாரம்பரிய உணர்வுகளிலிருந்து விடுபட்டு நிற்கின்றவள். அவளை நான் சந்தித்த காலத்திலும், அவளது வெம்மையான காதலினால் ஈர்க்கப்பட்ட பின்னரும் என் மனதில் அவள் இந்தளவு வேரூன்றுவாள் என நான் எண்ணியும் பார்த்ததில்லை. அப்போதிருந்த எனது வேலைப்பளுவில் எண்ணிப்பார்க்க எனக்கு நேரம் இருந்ததா என்றால் அதுவும் இல்லை.

கணவனால் கைவிடப்பட்டிருந்தால் என்ன? தனித்த நிலையில் கௌரவமாக வாழ்வதில் முழுமூச்சாயிருந்தாள். நம்பிக்கையுடனும் துணிவுடனும் மூடப்பட்ட சாஸ்திரக் கதவுகளைத் தட்டி திறப்பதிலும், லக்ஷ்மணக் கோடுகளைக் கடந்து புதியதும் அவளுக்கேயானதுமான பாதைகளில் நடப்பதிலும் தெளிவாகச் செயற்பட்டாள். எனது கம்பனியில் அவள் பணியில் இணைந்தபோது இத்தனை தூரம் அவள் என்னோடும், எனக்குள்ளாகவும் பயணிப்பாள் என்று நான் நினைத்தேனில்லை. அவளது ஒவ்வொரு செயல்களையும் நான் ரசித்தேன். எல்லாவகையிலும் என்னைக் கவர்ந்திழுத்தாள் அவள். எப்போதேனும் குற்றம் குறை கூறநேரினும் முகம் சுழிக்காது ஏற்றாள்.

என்னை அவள் கோபித்ததுமுண்டு;  உரிமையோடு சண்டையிடுவாள். குழந்தையைப் போல முறைப்பாள். மறுபடியும் அவளே என் மடியில் வந்து விழுவாள். எல்லா வகையிலும் நெகிழ்ந்து கொடுக்கும் காதலை அவள்தான் எனக்குப் போதித்தாள். அலேஷாவின் காதல் அபாரமானது. நான் எப்போது அவளைச் சந்திக்கச் சென்றாலும், என்னோடு அப்பிக் கொள்வாள். கைகளைக் கோர்த்துக் கொண்டு, விரல்களை நீவிக்கொண்டு அன்பு பாராட்டுவாள்.

நான் செல்வந்தன் என்பதாலாகும் இந்தக் காதல் என்று நினைக்கிறீர்களா? ம்ஹ_ம் நிச்சயமாகக் கிடையாது. எனது பெருஞ்செல்வத்தில் ஒரு துளியைத்தானும் அவள் எதிர்பார்த்தாளில்லை, நம்புங்கள். என்னுடன் கௌரவமான வாழ்வை எதிர்பார்த்தாள். தார அங்கீகாரம் பெறும் மிக அடக்கமான வேண்டுகோள் தந்தாள். என்னை ஒருபோதும் கட்டாயப்படுத்தினாளில்லை. குறுக்கு வழிகளில் எண்ணத்தைப் பலிதமாக்கக் காரியமாற்றினாளில்லை. இயல்பாகவே இருந்தாள். இரண்டாம்தார அங்கீகாரத்தைக்கூட சமூகத்தின் தவறான கண்ணோட்டங்களில் விழுந்துவிடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே கோரினாள்.  அங்கீகாரம் ஒப்பம் உறுதியெல்லாம் வெற்றானவை அதனாலெல்லாம் அன்பின் வடிவம் மாறப்போவதில்லையென்றும் சொல்லிக் கொள்வாள். காதலில் முதல் தாரம் இரண்டாம் தாரமென்றெல்லாம் வகைக்கு இடமிருக்க முடியுமா? என் மனைவியை நான் காதலிப்பதுபோல உன்னையும் காதலிக்கிறேன் என்று இரக்கமில்லாது நான் சிரித்ததையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்து புன்னகைத்தவள்.

வயோதிபன் என்னிலான கண்மூடித்தனமான காதலில் இருந்து விடுபட்டு புதிய சாளரத்தின் வழி பிரவேசிப்பாள் என்று நம்பி அலட்சியமாக இருந்துவிட்டேன்.  எனதும், குடும்பத்தினது கௌரவமும், சமூக அந்தஸ்த்தும் பறிபோகக் கூடாதெனக் கவனமாக இருந்ததில் அவளது காதலையும், வேண்டுதலையும் முடியுமானவரைப் புறந்தள்ளியே நடந்தேன். எனது பிள்ளைகளின் எதிர்காலத்தில் எனக்கிருக்கின்ற பொறுப்பையும், அவளை ஏற்றுக்கொள்ளத் தடையாக இருக்கின்ற காரணிகளையும் அவளிடம் விபரிக்கும்போதெல்லாம் அவள் மிகச்சாதாரணமாகப் பதிலளித்தாள்.

“பிள்ளைகள் உங்கள் கரங்களிலிருந்து விடுபட்டு சொந்தச் சிறகுகளை விரிக்கும் வரையும் நான் காத்திருப்பேன். உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு வழியிலும் தடையாக இருக்கமாட்டேன்”

அவள் வார்த்தைகள் எத்தனை உறுதியானவை. உண்மையானவை. எந்தவித சுயநலமும் பாசாங்கும் இல்லாதவை. இதோ, அவளை நான் நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணம் வரையிலும் அவள் எனக்காகக் காத்திருக்கிறாள். இனியும் அவளது காதலை அலட்சியப்படுத்துவது என் ஆத்மாவுக்கு நானிழைக்கின்ற பாவமாகக் கருதுகிறேன். இத்தனை சுயநலமியாகவா வாழ்ந்தொழியவேண்டும் என்ற கேள்வி என்னைச் சில நாட்களாகவே பயங்கரமாக இம்சிக்கிறது.

“உங்கள் இளமையும், அழகும் வேண்டாம். முதுமையும் ஆறுதலும் வேண்டும்” என்று அவள் கூறும்போதெல்லாம் காதல் மயக்கத்தில் உளறுகிறாள் என்றெண்ணினேன்.

“தோளுன்றிக் காலூன்றி உங்களுக்கு சேவகம் செய்யக் காத்திருப்பேன். கரங்களைப் பற்றிக் கொண்டு மாலை உலாக்களுக்கு உடன் வருவேன்…”

அவளது அன்பின் ஆழமும் உறுதியும் அப்போதெல்லாம் என்னைப் பாதிக்கவில்லை. இப்படி  மடியிலும் தோளிலும் உளறிய பல பெண்களைக் கடந்து வந்திருந்தேன் நான்.

இவளை… இந்த அலேஷாவை விட்டுக் கடந்துவர முடியவில்லை.

எனது மனத்தின் ‘தெளிவு’ இப்போது ஒரு பெரும் பிரச்சனையாகியிருக்கிறது.

வெறுமை, தனிமை, விரக்தி சூழ்;ந்த வாழ்வில் பாதியை அவள் வாழ்ந்துவிட்டிருந்தாள். என்ன நம்பிக்கையில் எனக்காக அவள் காத்திருக்கிறாள்; அல்லது நம்பிக்கை இழந்து வெறுப்போடு துரோகி; என் இளமையைத் தின்றவன்; என் வேண்டுகோளைக் கடைசி வரையிலும் ஏற்காமல் ஏமாற்றியவன் என்று திட்டிக் கொண்டிருக்கிறாளா…?

இருக்காது. என்னை அவள் இம்மியும் வெறுக்கமாட்டாள். உலகத்தில் உள்ள எல்லா மானிடர்களினதும் இதயங்களிலிருந்தும் அன்பைப் பிழிந்து சமைந்த இதயம் அவளது. என்னிலான அவளது காதல் என்பது மிக அப+ர்வமானது. நூற்றாண்டுகளில் ஒருமுறை ஒரு பெண்ணினால் மட்டுமே இத்தகைய காதலைச் சுமக்க முடியும். அலேஷா நூற்றாண்டுகளில் ஒருவள். அவள் போன்றே அவள் காதலும் அவளால் காதலிக்கப்படுகின்ற அவளைக் காதலிக்கின்ற உணர்வுகளும் அபூர்வமானது. அற்புதமானது.

அற்புதம் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. அவளை இறுதியாக நேற்றுப் பார்த்தேன். அவளைக் காண்பதுகூட அற்புதமான உணர்வலைகளுக்குள் மனதை மிதக்கச் செய்வதுதான். எனது மகனுடன் நான் காரில் வந்துகொண்டிருந்த வழியில் மறுபக்கமாக அவள் நடந்துகொண்டிருந்தாள். அவளது நடையில் சிறுது தளர்வைக் கவனித்தேன். கலையிழந்த அவளது முகத்தையும், ஒளியிழந்து சோர்ந்த கண்களையும் அவளறியாமலே மிக அருகில் பார்த்தேன். என்னைக் கண்ணுற்றிருந்தாலும் ஓடிவந்து உறவாடியிருப்பாள் என்றா நினைக்கிறீர்கள். கடைக்கண் பார்வையை வீசிக்கொண்டே கடந்துபோயிருப்பாள். என் மனைவியை, பிள்ளைகளை என்னைப்போலவேதான் அவளும் நேசிக்கிறாள். அவர்களது உணர்வுகளை மதிக்கிறாள். காதலின் முழுமையே அங்குதான் இருக்கிறது. குற்றம் குறையோடு முழுதையும் ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்துவதுதானே காதலின் தெய்வீகம்.

ஓய்வுக்கு முந்திய காலப்பகுதியில் எத்தகைய வேலைக்குள்ளும் ஒரு நேரத்தையொதுக்கி அவளைப்பார்க்கச் சென்றுவிடுவேன். கடந்துபோனவற்றில் எந்த அயர்ச்சியுமில்லாமல் அசைபோடத்தக்கதென்றால் உடனே சொல்லக்கூடியது அவளுடன் கழித்த பொழுதுகள்தான். புடவைத் தொட்டிலில் கிடக்கிற குழந்தையினுடையதைப் போலாகிவிடும் என் இதயம் எப்போது அவள் அண்மையில் கிடந்தாலும். ஒரு தசாப்தம் பின்னோக்கிச் சென்றுவிடுவேன் அவளது சுவாசம் என் நெஞ்சில் மோதித் திரும்பும்போது.

ஓய்வு வயோதிகத்துக்கு தேவை என்றா சொல்கிறீர்கள்? அது எனக்குச் சிறைபோலதான். தனிமைச் சிறை. எல்லாரும் என்னைச் சூழ இருந்தும் யாருமில்லாததுபோன்றே உணர்கிறேன். எல்லாம் இருந்தும் எதுவும்  இல்லாததுபோலப் பரிதவிக்கிறேன். இந்த ஓய்வு வந்திருக்கப்படாது.

அவளைப் பார்த்ததிலிருந்து முன்னரை விடவும் அதிகமாக எனது இதயம் கிளறப்பட்டுக் கிடக்கிறது. கத்தியின் கூரிய முனையினால் புண்ணைக் கிழித்தது போல அவஸ்தையாயிருக்கிறது பாருங்கள்.

எல்லா சுகங்களுடனும், செல்வங்களுடனும் சௌபாக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்காக அவள் காதலைத் தேக்கி வைத்திருக்கிறாள். அவளது காதலுக்கு எனது செல்வங்களும், சௌபாக்கியங்களும் ஈடாகமுடியுமா? ஆகாதபோதும், செல்வத்திலிருந்தும், கௌரவம் என நான் எண்ணிக் கொண்டிருப்பவைகளிலிருந்தும் இன்னும் நான் விடுபடவில்லை; விடுபடவும் முடியவில்லையே எனப் புலம்புதல் தவிர வேறு மார்க்கம் கிடையாதா?

என் பொய்மைகளை வெல்லும் உண்மையாக அவளது காதல் நிமிர்ந்து நிற்கின்றது.

அன்று என்னைத் தடுத்த காரணங்களைப் போலதான் இன்றும் காரணங்கள் என்னைத் தடுக்கின்றபோதும், காற்று வெளிகளிலும், கடலின் கரையோரங்களிலும் அவளின் கரங்களைக் கோர்த்துக் கொண்டு நடக்க மனம் அவாவுகிறதே.

எனக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தவளுக்காக, என் முதுமையை முதுசமாகக் கேட்டவளுக்காக என்னால் எதுவுமே செய்ய முடியாமல்போன இயலாமை என்னைத் தவிப்பிலும் வேதனையிலும் ஆழ்த்துகின்றன. நான் எனக்குள் சுமந்த மூட்டைகளில் எவை இறக்கப்பட்டன, எவை இன்னும் தன்னுள்ளன என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை எனக்கு.

இனியும் நான் சிந்தித்துக் கொண்டிருக்க எதுவுமில்லை. பொய்மையிலும் வெறுமையிலுமிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கின்ற சித்தத்தை எடுத்துவிட்டேன். நான் என் அலேஷாவை சென்று சேர்ந்துவிடவேண்டும். அவளது நம்பிக்கையை நான் பொய்யாக்கக் கூடாது. “ஆயுள் முழுவதும் ஒரு இளைஞனோடு வாழ்வதும் ஒரு நாள் ஒரு பொழுது உங்களுடன் வாழ்வதும் ஒன்றெனக்கு” என்றவளின் கரங்களுக்குள் நான் சேரவேண்டும். அவள் இதயத்தின் நிழலில் இளைப்பாறவேண்டும்.  அவளது தீட்சண்யமான கண்களை நான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவள் ஸ்பரிசம் அணைப்பு வேண்டும். என் உடலின் தீ இப்போது அணைந்துவிட்டிருந்தாலும் ஒரு வெண்புறாவின் வருடல்போல என அவள் முன்னர் வருணித்த அதே தூய அணைப்பை அவளுக்குத் தருவேன்.

யார் என்னைத் தடுத்தாலும் நான் அவளிடம் சென்றுவிடுவதென்று தீர்மானித்துவிட்டேன். என் சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்துவிட்டேன். யாருக்கு என்ன என்பதெல்லாம் தீர்க்கமாக உயில் எழுதியும் இருக்கிறேன்.

உயிலெழுதப்படாத என் ஒரேயொரு செல்வம் என் அலேஷாதான்… இதோ இன்னும் சில மணி நேரத்திற்குள் நான் அவளிடம் சென்றுவிடப்போகிறேன்.

எனக்கு ஏதோ நிகழ்கிறது. என் கால்கள் தளர்கின்றன. பாரம் குறைந்தது போலவும், தோள்கள் இலகுவானது போலவும், மனம் தெளிவானது போலவும், ஆத்மா குழப்பமில்லாதது போலவும் உணர்கிறேன். என் பிடரியை அழுத்தி யாரோ என்னைத் தள்ளி விடுகிறார்கள். நான் எப்படி சுவாசிப்பேன்… என் சுவாச நாளங்களை அழுத்திப் பிடிக்கிறார்களே…

“என்னை என் அலேஷாவிடம் சேர்த்துவிடுங்கள்….”

Pin It