யுவதிகளை சுமங்கலிகளாக்க
உவப்பானதொரு திட்டமென
சொல்லித்தான் மில்லுக்குள்
அழைத்துச் சென்றனர்...

girl_370இயந்திரங்களோடு ஒன்றாய்
சுழன்றோம் இரண்டாண்டுகள்.
மூன்றாம் ஆண்டு முதல்
சுவாசப்பைகளில் காற்றுக்கு
இடமின்றி நிறைந்தன
பஞ்சுத் துணுக்குகள்...

அடுத்த வேளைக்கான,
வேலைக்கென மட்டுமே
அளிக்கப்பட்டது உணவு..
அதில் சுவையே இருக்காது
சத்துக்களின் கவலையெதற்கு..?

உறங்க சில மணித்துளிகள்
அனுமதிக்கப் பட்டோம்.
பல மணித்துளிகள் விழித்து
வேலை பார்ப்பதற்கு...

மூன்றுவருட ஒப்பந்தவேலை
மூச்சுதிணறல்,
சுவாசக் கோளாறு
விரல் போனது.
விழிகள் போனதென...
மணம்முடிக்கும் ஆசையில்
மண்விழும் சாத்தியங்கள்...

ஆள்தின்னும் பூதங்கள்
கதைகளிலே கேட்டதுண்டு.
ஆலைகளின் இயந்திரங்களும்
அப்படியே இருப்பதுண்டு.

கூட்டம்சேர மாட்டோம்
கோரிக்கை வைக்கமாட்டோம்
போன° கேட்கமாட்டோம்
மொத்தத்தில் கொத்தடிமையாக
ஒப்பந்தம் போட்டுவிட்டோம்.
 
தோலிருக்க சுளைமுழுங்கும்
எத்தர்களைப் பார்த்ததில்லை
உடலிருக்க..உயிரை,
வாய்ப்பிருந்தால் மானத்தை,
உருவிவிடும் முதலாளியை
அனுதினமும் பார்ப்பதுண்டு.

எண்ணிமுடியாத துன்பங்கள்
எங்கள் மீது... இதற்கு
கன்னியாகவே இருந்தாலென்ன
என்றுகூட நினைப்பதுண்டு.!

 - பொள்ளாச்சி அபி

Pin It