தூக்கம் அறுபட்டு முழிப்பு தட்டியது. அனிச்சையாகவே அரிசி கழுவின நீர், சோறு வடித்த கஞ்சி தண்ணீர், மீதியான சாதமென அனைத்தும் கலந்து புளித்து கிடந்த கழுநீரைக் குடத்துடன் எடுத்து வந்து கண்ணுசாமி மாட்டுத் தொட்டியில் ஊற்றினார். பொதபொதன்னு ஊறிப் போயிருந்த புண்ணாக்கை குடுவையுடன் அதில் கவிழ்த்தார். எருதுகளை அவிழ்த்ததும் அவைகள் தொட்டியிடம் வேகமாக நடந்தன. புண்ணாக்கைத் தின்பதற்கான ஆசையில் தொட்டிக்குள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு தலைகளை விட்டு தொட்டியை உருட்டி உடைத்து விடும் என்று அவர் பயந்தார். அருகில் அமர்ந்து கரையாமல் இருந்த புண்ணாக்குத் துண்டுகளை கையில் எடுத்து வைத்து எருதுகளுக்கு உண்ணத் தந்தார்.

farmer_450பெரிய நாக்குகளை சுழற்றிச் சுழற்றி அவைகளை சுவைத்து விழுங்கின. சொரசொரப்பான நாக்குகளால் அவன் கைகளை நக்கின. அனிச்சையான செயலில் இருந்தவனின் நினைவில் பொறி தட்டியது.

பெண்ணின் திருமணத்திற்காக, மகனின் விபத்து சிகிச்சைக் கடனுக்காக தன்னிடமிருந்த காணி நிலத்தையும் விற்று விட்டது அவன் நினைவில் வந்து வலித்தது. மிச்சம் இருந்தது அந்த ஜோடி எருதுகள் மட்டும்தான். இரண்டு மாதங்களாக மகளின் திருமணப் பரபரப்பிலும், அலைச்சலிலும் நிலத்தைக் கிரையம் பண்ணிக் கொடுத்ததை மறந்து விட்டிருந்தான்.

கடந்த சில ஆண்டுகளாய் உருவாக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் ஊக வணிகத்திற்கு சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் கிராமங்களில் வளமான விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக வேகமாக உருமாறிக் கொண்டிருந்தன. கண்ணுசாமியின் கிராமமும் இந்த ஊக வணிகத்தின் அலைக்குத் தப்பவில்லை.

முதலில் அவனுடைய ஒரு பங்களி வகையறாக்கள் தங்கள் நிலங்களை அந்த மெட்ராஸ் பார்ட்டிக்கு விற்றனர். அவர்கள் கையில் தராளமாய் பணம் புரண்டது. மாடி வீடுகளையும், மாளிகைகளையும் கட்டினர். சிலர் வட்டிக்கு விட்டு கொழுத்தனர். வேறு தொழில்களில் மூலதனமாக சிலர் போட்டனர். கண்காணாத ஊர்களில் நிலபுலன்களை சிலர் வாங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் செலவு செய்தனர்.

வீட்டிற்கு வீடு நிலத்தரகர்கள் மழையில் பெய்த களான்களாய் முளைத்தனர். ஆசைகளை நிலமெங்கும், ஊர் முழுவதும், வானமளவிற்குப் அளந்து அவர்கள் பரப்பினர். ஆசைகளும் சிறகுகள் முளைத்த பறவைகளாய் இங்கும் அங்கும் அலைந்துத் திரிந்துக் கொண்டிருந்தன. அவன் நிலத்தைத் சுற்றியுள்ள பச்சை வயல்களை அந்த ஆசைகள் அள்ளித் தின்றன. 1 2 3 . . . எண்களைத் தாங்கிய வீட்டுமனைக் கற்கள் வண்ண வண்ண நிறங்களில் நிலத்தில் விளைந்து கிடந்தன. பச்சை வயல்காடுகள் நகர்களாய் போர்டுகளை மாட்டிக் கொண்டு அழுது வடிந்தன.

கண்ணுசாமி  கழனிக்கு சொல்லும் பொழுதும், வரும் பொழுதும், வீட்டிலும் நிலத்தரகர்கள் பல் இளித்து பவ்வியமாக வணக்கம் வைத்தனர். சர்புர்ரென கார்களில் அலையும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் அடிக்கடி அவரை குசலம் விசாரித்தனர். கண்ணுசாமி இதற்தெல்லாம் மசியவில்லை. இப்படியாக நான்கைந்து ஆண்டுகள் சென்று விட்டன.

மகன் சாலைவிபத்தில் சிக்கிய பொழுது வாங்கிய கடனும், தனது சக்திக்கு மீறிய பெண்ணின் திருமணச் செலவும் இதை முடிவுக்குக் கொண்டு வந்தன. இந்த உழவன் வாழ்க்கைக் கணக்கில் அவனுக்கென எதுவும் மிஞ்சவில்லை. மிஞ்சி இருந்த குடும்பச் சொத்தாக துண்டு நிலத்திற்கு நல்ல விலை தருவதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஆசை காட்டினார். வேறு வழியின்றி இந்த உழவனும் அந்த மாயமான்கள் வலையில் சிக்கிக் கொண்டான்.

நிலம் விக்கிரையப் பத்திரம் கையெழுத்து முடிந்தது. அரை பிளேட் மட்டன் பிரியாணியும், குவாட்டர் பிராந்தியும் நிலத்தரகர்கள் வாங்கித் தந்து நிலத்திற்கும் அவனுக்குமான உறவை முறித்து வைத்தனர்.

சொந்தம் பந்தமென்று ஊர் உறவையெல்லாம் கூட்டி மகள் கல்யாணம் இனிதுடன் முடிந்தது. மகன் மேல் படிப்பிற்காக சென்று விட்டான். மகளை மாப்பிள்ளை வீட்டிற்கு நேற்று கண்ணீருடன் வழி கூட்டி அனுப்பும் படலம் மகிழ்ச்சியும், சோகமுமாய் முடிந்து விட்டது.. எல்லாம் முடிந்ததும் கண்ணுசாமிக்கு வழக்கமான பணிகளுக்கு திரும்ப மனம் விழைந்தது.

பாசத்துடன் வலைத்து வலைத்து நக்கும் எருதுகளின் நாக்குகளின் சொரசொரப்புகள் சாமியை கல்யாணப் பரபரப்பில் இருந்து அன்றாட யதார்த்தத்திற்குக் கொண்டு வந்தன.

நிலம் விற்றப் பணத்தில் பெண்ணின் திருமணம், பிள்ளையின் படிப்பு போக எஞ்சியிருந்ததை இவர்களின் சோற்றுப்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் மனிதன் வெறும் சோற்றால் அடித்த பிண்டமா என்ன என்ற கேள்வி அவனிடம் எழாமல் இல்லை. தனது எதிர்கால வாழ்க்கையை என்ன பண்ணுவது... எப்படி கழிப்பது என்பது அவனுக்கு விளங்கவில்லை.

அவனது உழைப்பு, உணவு, உடை, பழக்கம் வழக்கம், காலை, மாலை, பகல், இரவு, வானம், பூமி, பாதை, உறவு, உணர்வு, உணர்ச்சி இன்னும் வாழ்வின் அனைத்தும் பல நுண்இழைகளால் அந்த துண்டு நிலத்துடன் பிணைக்கப்பட்டு கிடந்தன. அவைகளை ஒருநொடியில் எப்படி விட்டு விலகுவது என்னும் மந்திர வித்தை அவனுக்குப் புரியவில்லை.

எருதுகளை தொழுவத்தில் கட்டி விட்டு நடந்தான். அவன் நடக்கும் பாதை அந்த துண்டு நிலத்தில்தான் சென்று முடியும்  என்று அறிந்தும் அறியாத மாதிரி அவன் நடந்தான்.

இந்த மண் பாதை சில ஆண்டுகள் முன்பு வரை சுறுசுறுப்பும், கலகலகலப்புமாக அதிகாலையில் இருந்தது. எருதுகளின் கழுத்துகளில் தொங்கிக் கொண்டிருந்த மணிகளின் இசையும், நுகத்தடியில் திருப்பி மாட்டப்பட்ட ஏர்கலப்பைகள் மண்தரையில் தொட்டு இழுபடும் ஒசையும், கோடுகளும் அந்த பாதை எங்கும் நிறைந்திருந்தன. தை மாதத்தில் பனி மூட்டம் எதிரில் வருபவர் யார் என்று தெரியாதவாறு எங்கும் இறைந்து கிடந்தது. அந்த வெண்பனியின் திவ்வியமான நறுமணத்தை, குளிரை நுகர்ந்தவாறு சாமி சென்றான்.

கிராமத்தின் எல்லை முடிவதற்கு முன்பு உள்ள தேநீர் கடையில் நுழைந்தான். இன்னும் சிலரும் வேட்டியையோ லுங்கியையோ இழுத்துக் குளிருக்கு அடக்கமாக உடம்பில் போர்த்திக் கொண்டு என்ன செய்வது என்று அறியாமல் உட்கார்ந்து வெட்டிக்கதைகளைப் பேசிக் கொண்டு இருந்தனர். எப்.எம். ரேடியோ திருப்பள்ளி எழுச்சியை இப்பொழுதுதான் பாடிக் கொண்டு இருந்தது. சூடான தேநீர் தொண்டைக்குழிக்குள் விழுந்ததும் உடம்பில் புத்துணர்ச்சிப் பரவியது.

“தடபுடலா பொண்ணு கல்யாணத்த முடிச்சி விட்டீங்க... ஊட்ல குந்தி கிடக்காம எங்கே கிளம்பிட்டீங்க?” என்றார் தேநீர் கடைக்காரர். பத்து ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை விற்றுவிட்டு தேநீர் கடை வைத்த புண்ணியாத்துமா அவர்.

அமர்ந்து கொண்டிருந்தவர்களும் தலைகளை நிமிர்த்திப் பார்த்தனர். அவர்களின் கண்களிலும் அந்தக் கேள்வி தேங்கி இருந்தை அவன் பார்த்தான்.. தினமும் இந்த வழியாக அதிகாலையில் வருகையில் எருதுகளை விரட்டி விட்டு கண்ணுசாமி இங்கு தேநீர் அருந்தி விட்டுத்தான் செல்வான். தானாகவே நடந்து சென்று காளைகள் கழனி முனையில் நின்று விடும். வழக்கமாக வேலை மும்முர‌த்தில் கண்ணால் பேசக் கூடிய  தேநீர் கடைக்காரர், இன்று இந்தக் கேள்வியை தூக்கி அவன் தலையில் கழட்ட முடியாதவாறு மாட்டி விட்டார். அவன் பதில் எதையும் கூறாமல் மவுனமாக தனக்கும் அதன் அர்த்தம் தெரியவில்லை என்பது போல் நோக்கினான்.

இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தால் அவன் கழனி வந்து விடும். வழக்கமாக இந்த தூரத்தைப் பத்து நிமிடத்திற்குள் அவன் கடந்து விடுவான். யோசனையில் ஆழ்ந்து தயக்கத்துடன் நடந்ததால் இன்று ஒரு மணி நேரமாய் நடக்கிறான்.

விண்மீன்கள் அவன் ஏர்பூட்டி உழுகின்ற அழகை கண்குளிர கண்டு கண்சிமிட்டி ரசித்து விட்டு மறையும். உதிரும் விண்மீன்களின்  கண் சிமிட்டல்களும், காலை செம்பரிதி அடிவானத்தை கிழித்து வீசும் வண்ண வண்ணமாய் ஒளிரும் ஒளிக்கற்றைகளும் அவனது நினைவில் எப்பொழுதும் ஆழமாய்ப் படிந்திருந்தன. ஒவ்வொரு சுற்று உழவின் பொழுதும் அனிச்சையாய் தலை நிமிர்கையில் நேர்படும் அடர்நீலவானத் திரைசீலையில் கதிரவன் தீட்டும் வண்ண நிறமாலைகளின் ஒளி ஒவியங்கள் ஒன்றா...  நூறா... ஆயிரமா...

இருள் மெல்ல வடிந்து இளங்கதிர்கள் பரவுவதற்குள் ஒருசால் உழவு முடிந்து விடும். கிளறப்பட்ட மண்ணின் அறுபட்ட வேர்கள், சிதைக்கப்பட்ட புல் பூண்டுகளின் சுகந்த நறுமணம் அந்த இடம் முழுவதும் விரவிக் கிடக்கும். அதை நுகர்ந்து அனுபவிக்க இந்த ஜன்மம் போதாது என்று கண்ணுசாமி நினைப்பான்.

இன்று அவன் நிலத்தை அடைவதற்குள் பொழுது பொலபொலவென விடிந்து விட்டது. மனச்சோர்வு அந்த அளவிற்கு அவன் நடையைத் தளர்த்தி இருந்தது. அவனுக்கு துணையாக எருதுகளும், எருதுகளுக்கு துணையாக இவனும் நிற்கும் நிலத்தில் அனாதையாய் தன்னந்தனியனாய் நின்று கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் நிலத்தரகனொருவன் வந்து விட்டான். வந்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி

“என்ன அண்ணே இங்கே... நிலத்தை வித்துப்புட்டு”

சாதாரணமாய் தான் அவன் கேட்டான். ஆனால் அந்து கேள்வியின் பாரம் தாங்காமல் அவன் நிலைகுலைந்து குத்துகாலிட்டு நிலத்தில் குந்தினான்.

நிமர்கையில் அவன் காணியை புல்டோசர் வந்து சமன் செய்யக் கண்டான். கண்ணுசாமி கழனியின் ஒருபகுதி மேடாக மற்றொன்று தாழ்வாக இருந்தது. தாழ்வான நிலத்தில் நெற்ப்பயிறும், மேட்டில் கத்திரி, வெண்டை, கீரைகள், பூசணியைப் பருவத்திற்கு தகுந்தவாறு பயிரிடுவான்.

வரம்புகளை, வாய்கால்களை அந்த ஜே.பி.சி புல்டோசர் இழுத்துப் போட்டுச் சமன் செய்தது. இந்த வரப்பிற்காக அவனும், அவனது பங்காளியும் எத்தனை தடவைகள் கட்டிபுரண்டுச் சண்டைப் போட்டு உள்ளனர். ஒவ்வொரு உழவின் பொழுதும் பங்காளியும் அவன் மகன்களும் வரப்பை அண்டை கழிப்பதாக சொல்லி, வரப்பையே கழித்து விடுவார்கள். இப்படியாக பங்காளி தனது கழனியில் இருந்து வரப்பை சாமியின் கழனிக்கு சிறிது சிறிதாக மாற்றி வந்தார். இதை கேட்கப் போய், பெரிய அடிதடி வெட்டுக் குத்தானது. காவல் நிலையம் வரைச் சென்றனர். போலிஸ்காரர்களுக்கும், பஞ்சாயத்தார்களும் செலவு பண்ணினது தான் இந்த பிராதில் மிச்சமானது. பலமாதங்கள் இவனும் பங்காளியும் பேசாமல் வெட்டி பந்தாவில் இருந்தனர். மண்வெட்டி, வெட்டுகத்தி என்று சிறு சிறு தேவைகளுக்கு ஒருவர் மற்றவரை சார்ந்து நிற்க வேண்டிய இந்தத் தொழிலில் இந்த வைராக்கியம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதோடு இவன் கதிர் வயலில் மாடோ, அவரின் கீரைப்பாத்தியில் ஆடோ மேய்வதைப் பார்த்து விட்டு விரட்டாமல் வீம்பாகச் சும்மா செல்ல உழவுத் தொழில் செய்யும் சம்சாரியால் முடியாது.

அவன் வரப்பை புல்டோசர் சிதைத்தது. அதில் குடிகொண்டிருந்த நண்டுகளும், குண்டு குண்டு தவளைகளும், இடம் தேடி இங்கேயும் அங்கேயும் ஒடின. கண்ணுசாமி வரப்பில் கால் வைத்தவுடன் எப்போழுதும் இவர்கள் தான் வரவேற்பார்கள். இவன் தலையைக் கண்டதும் குடுகுடுவென ஒடி வளைக்குள் நண்டுகள் புகுந்து விடும். பளக்கென்று சத்தத்துடன் வாய்க்கால் நீரில் தவளைகள் தாவிக் குதித்து மறைந்து கொள்ளும். அவன் போய்விட்டானா என்று அவைகள் மெல்ல எட்டிப் பார்த்து மீண்டும் வரப்பில் மீண்டும் விளையாடும். உணவு தேடும்.

மழைக்காலத்தில் காய்கறி விளைச்சலும், வரத்தும் குறைந்து போய்விடும். அந்த சமயத்தில் நெற்பயிர்கள் பூத்துக் குலுங்கும் பருவத்தில் நண்டுகள் கொழுத்து சதைப்பற்றுடன் இருக்கும். சாமியும் அவன் மனைவியும் நண்டுகளைப் பிடித்து குழம்பு வைப்பார்கள். தூக்கலான காரமுடைய நண்டு குழம்புக்கு ஒரு கேழ்வரகு களி மொத்தையும், அதன் வாசனைக்கு இன்னொரு மொத்தையும் உள்ளே போகும். எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் சளியும் தும்பலும் அண்டாது!

வேகமாக வந்த புல்டோசர் சக்கரங்களில் ஒட முடியாமல் நண்டுகள் சிக்கி நசுங்கி கூழாகிப் போய் விட்டன. தவளைகள் தாவிக் குதித்து தப்பி ஒடின. அவைகள் தப்பி விட்டதைக் கண்டு கண்ணுசாமி மகிழ்ந்தான். அடுத்த நொடியில் எங்கிருந்தோ வந்த அடப்பான்கள் தவளைகளைத் தங்களின் கூரிய நகங்களால் தூக்கி கொண்டு பறந்தன. மழைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தவளைகள் பாடுவதை கேட்டு பழகியிருந்து சாமிக்கு, சாகும் தருவாயில் அவைகள் எழுப்பிய தீனக்குரல்கள் நெஞ்சைப் பிழிவதாக உணர்ந்தான்.

காக்கைகளும், கரிச்சான் குருவிகளும் கூட்டமாய் கூடி விட்டன. புல்டோசர் மண்ணை கிளற, வெளிவரும் புழு, பூச்சிகளைத் தாவித் தாவி பிடித்து உண்டு மகிழ்ந்த‌ன. உணவிற்கான இந்த போட்டியில் பறவைகளுக்குள் தகராறு ஏற்பட்டன. கருங்குருவிகள் சில ஆக்ரோசத்துடன் அண்டங்காக்கை ஒன்றைத் துரத்திக் கொண்டு சென்றன. அது பயந்து பறந்து ஒடியது. அந்த கருங்குருவிகள் அதை துரத்திக் கொண்டே திரிந்தன.

வாய்க்கால் தூர்ந்தது. வாய்க்கால் நீரில் வட்டமடித்து நடனமாடும் தெள்ளுப் பூச்சிகள் சேற்றில் நடக்கமுடியாமல் தத்தளித்தன. முண்டகண்ணி, குறவை, பண்சொட்டையான், சிறுகெண்டைமீன்களும், தலைபிரட்டைகளும் சோற்றில் சுவாசிக்க முடியாமல் சேற்றைக் குழப்பி குழப்பி தத்தளித்தன. இவைகளைத் பொறுக்கித் தின்பதற்கு நிறைய பறவைகள் குவிந்தன. குருட்டு கொக்குகளும், வெண்கொக்குகளும், வண்ண மீன்கொத்திகளும் கூட்டம் கூட்டமாய் வந்தன. வானத்தில் எங்கிருந்தோ வந்து கழுகுகள் வட்டமடித்தன.

ரியல் எஸ்டேட் அதிபர் பூமிப் பூசைக்காக அடி ஆட்களுடன் வந்து காரில் இறங்கினார். குடுமி வைத்த குண்டு அய்யர்களும் இதில்  அடக்கம். விவசாய நிலத்தை  வீட்டுமனைகளாகப் பிரிப்பதற்கு பூமிப் பூசை நடந்தது. கண்ணுசாமியையும் அந்த அதிபர் வற்புறுத்தி கலந்து கொள்ளச் செய்தார். வீட்டு மனைகள் வாங்க வந்தவர்களிடம் இவனை அறிமுகம் செய்து வாயாறப் புகழ்ந்தார். பூசை முடிந்ததும் வேடிக்கைப் பார்க்க வந்தவர்களுக்கு நூறுரூபாய் கட்டிலிருந்து தாள்களை உருவி உருவி அளித்தார்.

இவனுக்கு இருநூறு ரூபாய்த்தாள்களை அளித்தார். தயங்கித் தயங்கி அவன் பெற்றுக்கொண்டான்.

ஒவ்வொரு ஆண்டும் தனது குலதெய்வமான பூதராஜாவிற்கு கோழி அறுத்து  பொங்கல் வைப்பான். இந்த நிலத்தின் சாலையோரம் எந்நேரமும் தலை விரித்து ஆடிக்கிடந்த வேப்பமரத்தடியில் தான் படையல் போடுவான். சாமியின் அப்பா முதல் முதலில் கோழி பலியிடுவதைப் பார்க்க பயந்த அவனது கண்கனை அவன் அம்மா கைகளால் மென்மையாய் பொத்தியது இன்னும் நினைவில் வந்து மறைகிறது. அதற்குப் பிறகு அவன் பூதராஜாவிற்கு எத்தனைக் கோழிகளை பலியிட்டிருப்பான் என்பது கணக்கில்லை. சடசடவென புல்டோசர் அந்த வேப்பமரத்தை முறித்து சிதைத்து தரையில் கிடத்தியது. அவன் மனைவி வேப்பமரத்தின் அடியில் வட்டமாய் மஞ்சள் தடவி வைத்த குங்குமம், இன்னும் களையாமல் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தது.

தன் கையை விட்டுப்போன நிலம் சிதைக்கப்படுவதை காணச் சகிக்காமல் ஒதுங்கி மண் சாலையில் கால் போன போக்கில் நடந்தான். வீட்டு மனைகளாய்ப் பிரிக்கப்பட்ட நிலங்களில் புல் பூண்டுகள் பசுமையாய் வளர்ந்து மரகத ஆடையை போர்த்திக் கிடந்தன. பிள்ளையார் சதுர்த்திக்கு சிறு சிறு வண்ணக் குடைகளை தூக்கிக்கொண்டு அலையும் சிறுவர்களாக பளபளக்கும் சிலந்தி வலைகளில் நூல் இழைகளை இழுத்தப் பிடித்து குடைகளாய் தக்கைப் பூண்டு செடிகளின் கிளைகள் பிடித்துக் கிடந்தன.

மிக அருகில் நடந்தாலும் நட்புப் பார்வைகளை வீசி தங்கள் பாட்டிற்கு அலட்சியமாக இரைகளையும், பனி நீரையும் தேடும் மைனாக்களும், தவிட்டுக்குருவிகளும் இன்று அந்நியனைக் காண்பது போல பயந்து பறந்தன. அந்த மண்சாலை ஏரி வரை நீண்டு கிடந்தது.

பாதையின் முதலில் அடர்ந்த புதர்களாய் மண்டிக் கிடந்த தர்ப்பைப் புற்களின் நீளநீள வெண் பட்டு பூக்கள் காலை வெயிலில் அழகாய் மின்னின. நீண்ட நேரம் கழித்த பின்பு தான் திரும்பினான்.

மொட்டையடிக்கப்பட்ட தனது நிலத்தின் அருகில் குட்டியானை வண்டியிலிருந்து கருங்கல் மனைக்கற்கள் இறங்கி கொண்டிருந்தன. புல்டோசரால் நசுக்கப்பட்ட தண்ணீர்ப் பாம்புகள் பாதையில் கிடந்தன. அருகில் வளைக்குள்ளிருந்த எலிக்குஞ்சுகளை யாரோ வீசிவிட்டு சென்று இருந்தனர். விரும்பத்துடன் எலிகளை வேட்டையாடும் பாம்புகளின் வாய்கள் நசுக்கப்பட்டு இரத்தச் சக்தியாய் சிதைந்து கிடந்தன. எலிக்குஞ்சுகளையும், பாம்பையும் கழுகுகள் தூக்கிக் கொண்டு சந்தோசமாகப் பறந்தன.

காணியின் நடுவில் இருந்த கிணறு தூர்க்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் புல்டோசர் செய்திருந்தது. கிணற்றில் மலர்ந்து சிரித்துக் கிடந்த அல்லிமலர்கள் வீசியெறியப்பட்டு வெயிலில் சுருங்கி கூம்பத் தொடங்கின. அவனும், அவன் குடும்பமும் சேர்ந்து மாடாய் உழைத்து 75களில் வானம் தொடர்ந்து காய்ந்தபொழுது தோண்டிய கிணறு அது. அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தன. பொதுக்கென அந்த சேற்றைக் கிழித்துக் கொண்டு விரால் ஒன்று துள்ளிக் குதித்தது. நெல்வயலில் திரிந்த சிகப்பாய் கிடந்த விரால் குட்டிகளை சில ஆண்டுகளுக்கு முன் கண்ணுசாமி பிடித்து கிணற்றில் விட்டிருந்தான். அதில் ஒன்றுதான் தொடை அளவு தடிமனாய் துள்ளிக் குதித்தது. குட்டியானை ஒட்டுநர் அதை ஓடிச்சென்று பிடித்தார். சாமி பங்கு கேட்பார் என்பது போல அவன் பார்வை இருந்தது. நிலமே போன பின்பு இதுதானா பெரிது என்பதாக அவன் பார்வையில் வெறுமை இருந்தது.

கண்ணுசாமி வீட்டிற்குப் போய் சேர முற்பகலாகி விட்டது. அவன் மனைவி, மகளைப் பிரிந்த வருத்தத்தில் சமைத்து விட்டு சுருண்டு படுத்துக் கிடந்தாள். தொலைக்காட்சி தானாக பேசிக் கொண்டிருந்தது பைத்தியம் போல.

விவசாயத்தைச் சார்ந்து அறுபது சதவீதம் மேல் மக்கள் உள்ளனர். விவசாயத்திற்கு ஐந்து சதவீதம் மக்கள் மட்டும் போதுமானது.. மற்றவர்களை வெளியேற்ற வேண்டும் என்று மத்திய திட்ட கமிசன் செயலாளர் அறிக்கை சமர்பித்துள்ளதாக தொலைக்காட்சி அறிவிப்பாளர் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். மனைவியை எழுப்ப மனமில்லாமல் சாமி தானே எடுத்துச் சாப்பிட்டு விட்டு சுருண்டு படுத்தான்.

மாலை நான்கு மணிக்கு எருதுகளைக் காலாற ஒட்டிச் சென்று மேய்த்து வருவதாக மனைவியிட‌ம் கூறி விட்டு கண்ணுசாமி சென்றான். இருட்டி வெகுநேரமாகியும் மாடுகளுடன் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்று சாமியின் மனைவி அலைபாய்ந்தாள். வருவோர் போவோரிடம் விசாரித்து விசாரித்து சோர்ந்து போனாள். இரவு எட்டு மணியாகியும் கண்ணுசாமி வரவில்லை.

உறவினர் மகனை இழுத்துக்கொண்டு டார்ச் விளக்குடன் கணவனைத் தேடிப் புறப்பட்டாள். கழனிப் பக்கமாக சாமி போனதாக விசாரித்தவர்கள் கூறினார்.

கழனிகானப் பாதையில் நடந்தாள். சில்லென்ற குளிர்க்காற்று சிந்தனைகளைக் கிளறியது. நெல் வயல்களிலும், பல்வகை பயிர், செடி வகைகளிலும் மலரும் மலர்களின் நறுமணங்களும், பசும் இலைகள் சுவாசித்த பச்சையம் வாசம் இணைந்த காற்றும் உடலைத் தழுவும் பொழுது புதிய சுகமும், உற்சாகமும் பீறிடும். இன்று அந்த பசுமை வளையத்தில் கடைசி கண்ணியான தங்களது விளைநிலமும் மறைந்ததால், வெட்டவெளிச் சூனியத்திலிருந்து வீசும் உயிரற்ற குளிர் காற்று அவள் மனசின் ஈரப்பசையை உறிஞ்சிக் குடித்தது.

முழுநிலவு அள்ளித் தெளித்த இதமான வெளிச்சம் பழைய காதல் பொழுதுகளை அவளின் நினைவிற்கும் கொண்டு வந்தது. நிலவும் நட்சத்திரங்களும் ஒளியாய் விரித்த பசும் வரப்புகளில் அவள் மடியில் அவனும், அவன் மடியில் அவளும் தலைசாய்த்துப் பேசிய காதல் கதைகளும், கொஞ்சல்களும் இப்பொழுதும் அவள் மயிர்கால்களைச் சிலிர்க்கச் செய்கிறன. திருமணமான புதிதில் எத்தனை மாலை மங்கிய இரவுகள் இப்படியான இனிய நினைவுகளில் கழிந்திருக்கும்.

வெண்டைச் செடிகளின் பசும் மஞ்சள் நிறக் குழல் பூக்களிலும் கத்திரிச்செடிகளின் ஊதா நிறப் பூக்களிலும் தேன் உண்டு, திரிந்த சிறிய, பெரிய, மிகப்பெரிய வானவில்லின் வர்ண ஜாலங்களை, ஒவியர்களின் கற்பனைக்கு எட்டாத கோடுகளை குழைத்து இழைத்தப் பட்டாம் பூச்சிகளை தனது குழந்தைகளுக்கு ஓடிப் பிடித்து விளையாடியதும், அதனால் செடிகள் மிதிபட்டதால் கண்ணுசாமி கோபித்து அதட்டியதும், பின்பு அவனும் குழந்தைகளுடன் சேர்ந்து தும்பிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் பிடிக்கத் திரிந்து செடிகளை துவைத்த நாட்களின் ஆனந்த பதிவுகள் அந்த நிலமெங்கும் கொட்டிக் கிடந்தன.

அவள் நிலத்தை அடைந்தாள். நிலம்தான் அங்கு இல்லை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீட்டு மனைக் கருங்கற்களும், சிமெண்டு கற்களுமாய்க் காட்சி தந்தன. அந்த நிலத்தினை மூச்சடக்கி திருத்தி, செழுமைப்படுத்தி, வளமாக்கிய மனிதர்களின் கல்லறைகளாய் அவளுக்கு அந்தக் காட்சி பயமூட்டியது. கருமேகத்துண்டில் நிலா மறைந்து, கும்மிருட்டானதும் கல்லறைக் காட்சி மறைந்தாலும் அந்த நிலத்தின் மனிதர்கள் நிழல் உருவங்களாய்த் தோன்றி திகிலூட்டினர். அவள் நிலம் எங்குள்ளது என்று அவளால் அடையாளம் காண இயலவில்லை.

அவளும், உறவுக்காரப் பையனும் உரக்க கூவி அழைத்தார்கள். ஒலிஅலைகள் இருளில் சென்று ஏரிக்கரையில் மோதி மோதி திரும்ப எதிரொலித்தன. அவள் கணவன் எங்கும் காணவில்லை. அவளை மாதிரி இரண்டு ஆந்தைகள் மின் கம்பியில் கொட்ட, கொட்ட வட்டக் கண்களை உருட்டித் தங்களின் நிலத்தைத் தேடின. கண்ணுசாமி ஆந்தைகளையும், கோட்டான்களையும் மிகவும் நேசித்தான். அவைகள் நிலத்தில் வந்து அமர்வதற்காக‌ டி-வடிவில் கிட்டிகளை வயலில் பல இடங்களில் நட்டு வைத்து இருப்பான். அவைகள் எலிகளை வேட்டையாடி தின்று அவனது விளைச்சலைப் பாதுகாத்தன.

காற்றின் திசை மாறி வீசத் தொடங்கியது. இருளின் அடியாழத்தில் இருந்து கிண்கிணி மணி ஒலிகள் கேட்டன. தங்களது எருதுகளின் கழுத்துகளில் மாட்டுப் பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட புதிய மணிகளின் இசையொலியை அவள் உணர்ந்து கொண்டாள்.  அந்தத் திசையில் டார்ச் ஒளியைப் பீச்சினாள். புல் பூண்டுகள் இல்லாத அந்த வானந்திர பூமியை கண்டு அஞ்சி ஆந்தைகள் வீறிட்டு அலறி விலகி பறந்தோடின.

வீட்டுமனைக் கற்களுக்கு பின்னால் தொலைவில் எருதுகள் தெரிந்தன. வயதாகி விட்டதால் உழவிற்கு உதவாது விற்றுவிடுங்கள் என்று பலர் கூறியும் கண்ணுசாமி எருதுகளை விற்கவில்லை. கைப்பிள்ளையாய் வளர்ந்து, பதினைந்து ஆண்டுகளாய் அவனின் தோளோடு தோளாய் உழைத்த அந்த எருதுகளை அடிமாட்டிற்கு விற்க அவனுக்கு மனம் இடம் தரவில்லை. வயதானாலும் தீனி வைத்து சீராட்டி அந்த எருதுகளைப் பொலிவுடன் கவனமாகப் பராமரித்தான்.

அந்த எருதுகளின் தோழன் நிச்சயம் அங்கு இருப்பான் என்ற நம்பிக்கையுடன் அருகில் ஓடிச் சென்றாள். சாமியை அங்கு காணவில்லை. அப்படியும் இப்படியுமாக அலைந்தாள். அந்த இருளில் எருதுகள் எதையோ உற்றும், ஊடுருவியும் கவனித்துக் கொண்டிருப்பதை ஒளிர்ந்த அதன் கண்கள் காட்டிக் கொடுத்தன. அங்கு அவள் பார்த்தாள்.

புல்டோசரால் கிளறிப் போட்டு மொன்னையாக்கப்பட்ட நிலத்தின் மூலையில் துண்டு வரப்பு மட்டும் எப்படியோ மிஞ்சிக் கிடந்தது. தாய்மடி உறக்கத்தில் அந்த வரப்பில் கண்ணுசாமி தலைசாய்த்துப் படுத்துக் கொண்டிருந்தான்.

“இன்னா பண்றீங்க அங்க” அவள் சத்தமாய்க் கேட்டாள்.

குரல் கேட்டு கனவுத் தூக்கத்திலிருந்து திடுக்கென்று விழித்தது போன்று எழுந்து மலங்க மலங்க விழித்தான்.

“மாடுகளுக்கு புல்லு அறுக்கிறேன்.” என்று கனவு குரலில் சத்தமாய் சொன்னான்.

இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை கைத்தாங்கலாக தாங்கி நடத்திக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். எதையோ தடுக்கி கீழே விழப்பார்த்தான். டார்ச் ஓளியை அங்கு காட்டினாள்.

அலங்கோலமாய் தலையை விரித்து போட்டபடி படர்ந்து விரிந்து தரையில் செத்துக் கிடந்தது வேப்பமரம். வீழ்ந்து கிடந்த அதன் அடிமரத்தின் அருகில் பத்தடி நீளத்தில் மனைப்பாம்பு மல்லாந்தவாறு செத்துக் கிடந்தது.

Pin It