"கோவிந்தன் செத்துப்போயிட்டான் தெரியுமாங்க உங்களுக்கு. நேத்து காலயிலே கூட செம்பகம் எங்கிட்டே காச்சலுக்கு மருந்து வாங்கனம்னு அவசரமா கைமத்தா அம்பது ரூபா வாங்கிட்டு போனா. திடீர்னு அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலே". பூவாயீ நிறுத்தாமல் புலம்பிக்கொண்டடே போக, நாதமுனி சேரில் ரொம்ப நாளாய் துருத்திக்கொண்டிருந்த ஆணியை சுத்தியாலால் அடிப்பதை நிறுத்திவிட்டு "எந்த கோவிந்தன்" என்று கேட்டு மறுபடியும் விட்ட வேலையைத் தொடர்ந்தார். "அதாங்க நம்ம ராஜா ராணி கோவிந்தன். நம்ப பையன் இளங்கோகூட படிக்கிரானே சீனு, அவனோட அப்பாங்க". 

"அடப்பாவமே என்னச்சு. அவனுக்கு என் வயசுதானே இருக்கும். விளங்காத பய. வாழ்க்கையையே விளையாட்ட நினச்சதாலே வந்த கேடு. பாவம் அந்தப்பொண்ணு. அவ நிலமையை நினச்சாத்தான் பாவமாயிருக்கு. ஆத்தா அப்பன்னு யாருமில்லாத அனாதை பொழப்பு. விரைசா சுடு தண்ணி வச்சிடு. கேதத்துக்கு போயிட்டு கடைக்குப் போகனும்" என்று பூவாயியை துரிதப்படுத்தினார் நாதமுனி.  

அது என்ன ராஜா ராணி கோவிந்தன். அவனைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் நிச்சயம் உங்களுக்குத் தெரியவேண்டும். கோவிந்தனின் அம்மா அவனுக்கு அளவுக்கு மீறிய செல்லம் கொடுத்து வளர்த்தாள். யாருக்கும் அடங்காத பிள்ளையாக வளர்ந்தான் கோவிந்தன். அவன் அப்பாவின் ஆயுட்கால உழைப்பில் அவர்களுக்கு கிடைத்தது ஒரு ஓலைக்குடிசை வீடும், அதை ஒட்டிய ஒரு பூவரச மரமும்தான். மற்றபடி கழனி வேலை பார்த்து ஜீவனம் நடத்தும் குடும்பம். இருபத்தைந்து வயதாகியும் கோவிந்தன் விளையாட்டு பிள்ளையாகவே ஊரில் வலம் வந்தான். சந்தை நடக்கும் நாட்களிலும், ஊர்த்திருவிழாக் காலங்களிலும் ஆலமரத்தடிக்கு வந்து விடுவான் எசக்கி ராஜா. கக்கத்தில் நான்காய் மடித்த அட்டையை இடுக்கிக்கொண்டு, கையில் ஒரு சிறிய தகர டப்பாவுடன், பீடிக்கட்டு தீப்பெட்டி சகிதமாக கடை விரித்துவிடுவான். மரத்தினால் செய்த சதுரமான தாயக்கட்டைகளை வேட்டியின் நுனியால் அக்கறையுடன் துடைத்து, கண்களில் ஒரு முறை மிகுந்த பய பக்தியுடன் ஒற்றிக்கொள்வான். பிறகு அதை தகர டப்பாவில் பொட்டு உருட்டி இரண்டு மூன்று தடவை பரிசோதனை ஒட்டமும் நடத்திப்பார்ப்பான். 

பிரித்து வைத்த அட்டையில் ஆறு கட்டங்களில் ஆறு படங்கள் இருக்கும். கருப்பு வெள்ளையில் எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர். ராதா, மற்றபடி இருக்கும் மூன்று கட்டங்களில் கலர் படங்கள்தான் இருக்கும். அன்பேவாவில் கையை கன்னத்தில் வைத்து லவ் பேர்ட்ஸ் பாட்டு பாடும் சரோஜா தேவி, பளபளப்பான நாட்டிய உடையில் பத்மினி, அதற்கடுத்து அழுதபடி சோகமாக இருக்கும் சந்திரகாந்தா. அதைப்போல அதே நடிகர் நடிகைகளின் வேறு சிறிய படங்களை முறையே சதுரமான தாயக்கட்டையின் ஆறு பக்கங்களில் ஒட்டப்பட்டிருக்கும். நடிகைகள் மட்டும் பேசும் படத்தில் வந்த கலர் படமாகத்தானிருக்கவேண்டுமென்பது வியாபார விதி. எசக்கி ராஜா தன் வாய்த்திறமையினாலும், கவர்ச்சியான தொடர் பேச்சினாலும் எல்லா படத்திலும் சிறுவர்களை பணம் கட்டவைத்துவிடுவான். வேகமாக தாயக்கட்டைகளை டப்பாவில் போட்டு உருட்ட, சிறுவர்கள் எல்லோரும் கண் கொட்டாமல் அவன் கைகளின் வேகத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். எசக்கியிடம் அப்படி என்னதான் கண்டானோ தெரியவில்லை, கோவிந்தன் அவன் கூடவே சுற்ற ஆரம்பித்தான். பழியாய் அவனுடனேயே இருந்தான். நெஞ்சு வலியில் எசக்கி இருமிச்செத்த பிறகு தனியாக தொழில் தொடங்கினான். 

பிற்காலத்தில் ராஜா ராணி ஆட்டத்தில் வித்தகனானான். காய்களை லாவகமாக உருட்ட, சிறுவர்களை பேசிக் கவர, குறைந்த இழப்பில் வெளியேற என்று ஏராளமான தொழில் நுணுக்கங்களை எசக்கியிடம் கேட்டுத்தெரிந்து கொண்டிருந்தான். யார் என்ன குறை கூறினாலும் கோவிந்தனுக்கு ராஜாராணியே வாழ்க்கையில் எல்லாமுமானது. எப்போதும் அட்டையும், தகர டப்பாவுமாக அலைந்து கொண்டிருப்பான். வருமானம் அவ்வளவு இல்லை என்றாலும் அதன் மேல் கோவிந்தன் கொண்டிருந்த ஈர்ப்பு அவன் சாகும் வரையிலிருந்தது. அவனுடைய அம்மா எவ்வளவு எடுத்துச்சொல்லியும், ஒருபாடு அழுது புலம்பியும், கோவிந்தனை மாற்றவே முடியவேயில்லை. கல்யாணம் செய்து வைத்தால் பொறுப்பு வரும் என்று ஊரில் சொல்ல, முறைப்பெண் செம்பகத்தை அவனுக்கு கட்டி வைத்தார்கள். அப்படியும் அவன் மாறுவதாகத் தெரியவில்லை. குடி, கூத்தியென்று அவனுக்கு எந்தவிதமான பழக்கமும் இல்லையென்றாலும், ராஜாராணி ஆட்டத்தில் அப்படியொரு தீராத மோகம் இருந்தது.  

கோவிந்தன் மகன் சீனுவும் நாதமுனியின் மகன் இளங்கோவும் ஒத்த வயதினர்கள். இருவரும் ஓரே வகுப்பில் படிப்பவர்கள். சில சமயம் இளங்கோ வருத்ததுடன் சீனுவின் அப்பாவை குறை கூறும் போதெல்லாம் கண்கள் கலங்கியபடி அமைதியாக கேட்டுக்கொண்டேயிருப்பான். பதிலொன்றும் பேசமாட்டான். ஒரு நாள் பொறுக்கமுடியாமல் தன் தகப்பன் பக்க நியாயங்களை சொல்கிற கதியில் "அப்பா, ராஜாராணி விளையாடும். கொஞ்சம் அதிகமா பீடி குடிக்கும். மத்தபடி ரொம்ப நல்ல மாதிரி தெரியுமா. தினமும் எனக்குன்னு மறக்காம ஏதாவது திம்பண்டம் வாங்கிட்டு வரும். உங்க அப்ப மாதிரி ஒரு நாள் கூட எங்கிட்டே உரக்கக்கூடப் பேசாது. அம்புட்டு பாசம் எம்மேலே, தெரிஞ்சுக்கோ" என்றவாரு விசுக்கென்று இளங்கோவைக் கடந்து போனான். அன்றிலிருந்து இளங்கோ அவன் அப்பாவைப்பற்றி பேசுவதை அறவே தவிர்த்தான். அப்படியே சீனு அவன் அப்பாவைப்பற்றி ஏதாவது பேசினாலும் சிரித்தபடியே மறுப்பேதும் கூறாமல் கேட்டுக்கொண்டிருப்பான். தன் அப்பா இந்த அளவிற்கு அப்பாவியாக இருப்பது சீனுவுக்கு ஒரு புறம் வருத்தம் என்றாலும், தான் நன்றாகப் படித்து, பெரிய வேலை பார்க்கும் தகுதி வந்ததும், அப்பவை அதட்டி எப்படியாவது திருத்திவிடலாம் என்று முழுமையாக நம்பினான். இது பற்றி ஒரு நாள் செம்பகத்திடம் கூற, சிரித்தபடியே அவள் "அப்பனையே திருத்தப்போறீகளா எங்கப்பன் சாமி" என்று விரல்களை மடித்துத் தலையில் வைத்து சொடக்கு போட்டு திருஷ்டி கழித்தாள். 

கோவிந்தன் வீட்டிற்குக் கொண்டுவரும் காசு ஒரு முழுவேளை உலைக்குக்கூடக்காணாது. அம்மாவும், பொஞ்சாதியும் வயல் வேலை, கதிரறுப்பு என்று கூலி வாங்கி குடும்பத்தை ஓட்டினார்கள். புள்ளைத்தாச்சி வயிரொட செம்பகம் வயல் வேலைக்குப் போவதை பார்த்தும் கூட கோவிந்தனுக்கு எதுவும் உரைக்கவேயில்லை. அவர்களுக்குப் பிறந்த பையனுக்கு சீனுவென்று பேர் வைத்தது கூட பக்கத்துவீட்டு வேண்டாமணிதான்.  

 3 

அப்பனைப்போல புத்தி வரக்க்கூடாதென்று மிகவும் அக்கறையாக சீனுவை வளர்த்தார்கள். ஐந்து வயதுகுள்ளேயே பொய் சொல்லி திண்ணை பள்ளிகூடத்தில் சேர்த்தும் விட்டார்கள். ஒரு நாள் எதேச்சையாக வீட்டில் யாருமில்லாத சமயம் சீனு கதவின் பின்புறம் அப்பா மறைவாகச் சொருகி வைத்திருந்த ராஜாராணி அட்டையை எடுத்து பார்த்ததிற்கே செம்பகம் அவன் கையில் சூடு போட்டதை நினைத்தால் சீனுவிற்கு இப்போதும் உள்ளங்கை நெருப்பாக எரியும்.  

ஒரே ஆளின் வருமானத்தில் குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்க, இப்பொதெல்லாம் செம்பகம் கோவிந்தனிடம் உரிமையாக பணத்தை கேட்டே வாங்கிக்கொள்கிறாள். அறுப்புக்கூலி, முன்பணம், தண்டல், கைமாத்தென்று அவளுக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 

இரண்டே நாள் காய்ச்சலில் முடங்கிப்படுத்தவன் எதிர்பார்க்காமல் போய்ச்சேர்ந்துவிட்டான். என்னதான் தினமும் சண்டை போட்டாலும் செம்பகதிற்கு கோவிந்தன் மேல் நிறையவே அன்பிருந்தது. அவனிடம் அவள் ரசித்ததே அந்த குழந்தைத்தனமான பேச்சும், விளையாட்டான குறும்புச்சிரிப்பும்தான்.  

இருபது நாளைக்கு மேல் சீனு பள்ளிக்கூடம் வராததால், வீரமணி வாத்தியார் இளம்கோவைப் போய் பார்த்து விசாரித்து வரச்சொன்னார். இளங்கோ வருவதை தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்த வேண்டாமணி "என்ன சின்னவரே அப்பாரு எப்படி இருக்காக" என்றவாறு நீட்டி முழக்கினாள். குதப்பிக்கொண்டிருந்த புகையிலைச்சாறு அவளின் உதட்டோரத்தில் வழிய முந்தானையால் துடைத்துகொண்டு, இளங்கோ போகும் அழகையே ரசித்துக்கொண்டிருந்தாள். வேண்டாமணியும் நாதமுனியும் ஒரு காலத்தில் மனமொத்த காதலர்களாக இருந்தார்கள் என்பதும், பின்பு அவருக்கு முறையில் பெண் பார்க்க மனமுடைந்த காதலர்கள் அரளி விதை அரைத்து குடிக்க முயற்சி செய்ததாகவும் ஊருக்குள் இன்றும் ஒரு பேச்சுண்டு.  

சீனுவின் வீட்டின் முன் தேங்கியிருந்த மழை நீரில் வேண்டுமென்றே அழுந்தக்கால் வைத்து குதித்து நடக்க முகத்தில் தெளித்த நீரை கைகளால் துடைத்துக்கொண்டான் இளங்கோ. திண்ணையில் அமர்ந்து கொண்டு முறத்திலிருக்கும் குருணை அரிசியில் கல் பொறுக்கிகொண்டிருந்த செம்பகம், இளங்கோ வருவதைப் பார்த்தவுடன் சீனுவை கூப்பிட்டாள். மழையில் சொத சொதத்த கதவை லேசாகத் திறந்து கொண்டு வெளியே வந்தான் சீனு. அழுது வீங்கிய கண்கள். எண்ணை காணாத பரட்டைதலை. அழுக்கேறிய கால் சிராய். இளங்கோவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. "ஏண்டா இப்படியிருக்கே" என்று கேட்டவுடன், சீனு நண்பனை கட்டிப்பிடித்துக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டான். நண்பனின் கண்ணீரைத்துடைத்து சமாதானம் செய்த இளங்கோ வந்த விஷயத்தைக் கூறினான். "நாளைக்கு வீட்டிலேயே இருடா. நானே வந்து உன்னை ஸ்சூலுக்கு கூட்டிட்டு போறேன். உனக்குஞ் சேத்தே அம்மாகிட்டே சாதம் கட்டிட்டு வந்துடறேன்" என்றவாறு வீட்டைவிட்டு வெளியேறினான் இளங்கோ. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த செம்பகம் எதையும் கண்டு கொள்ளமல் புடைத்தெடுத்த குருணையை முறத்தின் ஓரத்தில் தட்டி ஆழாக்கை நிரப்ப அரை பங்கு கூட தேறவில்லை மொத்தமும்.  

 4 

அடுத்த நாள் சீனுவைப் பள்ளிகூடத்திற்கு கூட்டிக்கொண்டு போக வந்தான் இளங்கோ. வீட்டினுள் யாருமில்லாததால் திண்ணையிலேயே காத்துக்கொண்டிருந்தான். அந்த பக்கம் வந்த வேண்டாமணிதான் அவர்கள் வயல் வேலைக்கு போய்விட்டதாகக் கூறினாள். 

இளங்கோவின் வகுப்பில் வீரமணி வாத்தியார்தான் வாய்ப்பாடு நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களின் வாய்ப்பாடு சத்தத்தை மீறியபடிக்கு கேட்டுகொண்டே இருந்தது ஆலமரத்தடியில் டப்பாவில் காய்களை உருட்டும் தொடர் சப்தம் நீண்ட நாட்கள் கழித்து. 

- பிரேம பிரபா

Pin It