தண்ணெனும்நீர் தாங்கிஎழில் பூக்கள் தாங்கும்
‘தாமரைக்கு ளம்’என்னும் தடாகப் பெண்ணே!
உன்னருகே ஒருநிமிடம் அமர வேண்டும்:
உன்னிடம்நான் சிலகதைகள் பேச வேண்டும்!

ஈராறு ஆண்டின்முன் இஃதே நாஞ்சில்
இலந்தைவிளைப் பேரூரில் உன்கண் வந்து
நீராடிப் போனவன்தான் மீண்டும் வந்து
நிற்கின்றேன்: உனக்(கு)என்னை நினைவி ருக்கா?

தென்னைமரக் காட்டிடையே தென்றல் வீச
செந்‘தாம ரைக்குளமாய்க்’ காட்சி தந்த
உன்னைமறக் காதசிறார் நூறு பேரில்
ஒருவன்தான் நான்: என்னை நினைவி ருக்கா?

ஓடையிலே ஓடியநீர் உன்னை வந்து
ஒட்டியுற வாடியதோர் மழைக்கா லத்தில்
ஆடையிலே மூடியதோர் அழகு மங்கை
அன்றொருநாள் வந்திருந்தாள்: நினைவி ருக்கா?

அத்தைமகள் இல்லைஅவள்: எனினும் அன்னம்!
அந்நியர்தம் கன்னிஅவள்: எனினும் காந்தம்!
கொத்துமலர் மேனிதனை உனது நீரால்
குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்: நினைவி ருக்கா?

‘தாமரை’யென் பதுபெயராய்த் தரித்த தோடு,
தளிருடலே தாமரையாய்த் தரித்த தையல்:
தாமரையில் தாமரையாய் மிதந்து நீந்தித்
தண்ணீரில் தகதகத்தாள்: நினைவி ருக்கா?

நீராடிச் சென்றஅவள் நினைவில் ஆடி
நெஞ்சாரப் படர்காதல் நெறியில் ஆடி
ஏராடி இணையாடி இடுக்கண் ஆடி
எனையிழந்து போயிருந்தேன்: நினைவி ருக்கா?

சாதிக்கு மயங்கியதோர் சமுதா யத்தில்
சாதிக்க முடியாது தோல்வி கண்டு,
நா,திக்க நா,திக்கப் புலம்பிக் கொண்டு
நாதியற்று நான்கிடந்தேன்: நினைவி ருக்கா?

வேறுசாதி என்பதனால் வெறுக்க வேண்டும் -
வெளிசாதிப் பெண்ணென்றால் மறக்க வேண்டும் -
நூறுபேர்க்கு மேல்இவ்வா(று) எனக்குச் சொல்லி
நோகடித்தார்: வேகடித்தார்: நினைவி ருக்கா?

தமிழனுக்குச் சாதிகளைக் கற்றுத் தந்த
சண்டாளர் வரலாறும், சாதிப் பேரால்
தமிழினத்தைத் துண்டாடிக் குளிர்காய்ந் தோர்கள்
சரிதமெல்லாம் தமிழனுக்கு நினைவி ருக்கா?

‘தாமரைக்(கு)’என் ‘உளம்’தந்த தால்தான் உன்பேர்
‘தாமரைக்கு ளம்’என்று வந்த தென்று
‘தாமரை’யென் தலைவிக்(கு)அன் றேநான் சொன்ன
தமிழ்வரிகள் உனக்கிப்போ நினைவி ருக்கா?

என்னினிய தாமரையாள் வடித்த கண்ணீர்
இன்றும்உன்றன் நீர்நிலைக்குள் இருக்கு மன்றோ?
என்னையினி கலங்கடிக்க வேண்டாம் - சொல்! சொல்!
இப்போ(து)என் தாமரையாள் எங்கி ருக்கா?...

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It