Painterநிமிடத்தில் நூறு கோடு போடுவான்
இயந்திரத்தின் வட்டமும் சதுரமும்
வளைவுகளும் நெளிவுகளும் மட்டும்
வரைவாளன் அவனுக்கு அத்துப்படி

வாழ்க்கையின் கபடமும், வஞ்சமும்
விடாது விரட்டும் கண்ணைக்கட்டி
சுற்றி உள்ளவர் சுகம் பெற்று உயர
செக்கு மாடாய் இவன் சுற்றுகிறான்

பள்ளி முடித்ததும் பணத்தை தேடி
பட்டயம் பெற்று கெட்டவன் இவன்
இவனது ஓவியத்தின் தலையெழுத்து
இன்னொருவன் ஒப்பம்,கையெழுத்து

காகிதத்தில் கோடுகளை வரைந்து
வரைந்து அவன் அழிக்க, வாழ்க்கை
அவன் முகத்தில் பலகோடு வரைந்து
அழிக்கிறது அவனை அணுவணுவாக

இரவும் பகலும், கண்சிமிட்டாமலும்
வரைவான் அவன், உறவும் பகையும்
உணராது அவனது தவ வலிமையும்
கல்லுடைக்கும் கடின உழைப்பினும்

கொடியது,பெரியது கட்டிடத்தின் கீழ்
அடித்தளமாய் நின்று அதன் கற்களை
சுவர்களை,கதவுகளை மனதில் தினம்
சுமப்பது, அவன் தொழில், தர்மம், யோகம்

உலக வரைபடத்தில் இல்லா இடமும்
உடனே பெறும் முகவரி,இவன் கைப்பட
உருவாக்கிய கட்டுமானக்கவிதைகளால்
உண்மையில் இவனுக்கு இல்லை முகவரி

காகிதத்தில் அவன் போடும் புள்ளி, இலை
கோலங்கள் சிறிதளவும் பிசகுவதில்லை
இரத்ததை உறிஞ்சும் முடிவற்ற வேலை
இவன் விதிமென்று துப்பும் கறிவேப்பிலை

இருபதுக்கு முன் இவன் இரு கைகளில்
வருவது சில்லறையாய், இறுதி வரையில்
மிஞ்சுவது கட்டுகட்டாய் பழம்காகிதமும்
கொஞ்சம் பணமும், நிறையவே வலியும்!

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It