நெஞ்சுபொறுக்குமோ! நெஞ்சுபொறுக்குமோ!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை
அழிக்கப் பணித்தான் என் சாதி கவிஞன்
சந்ததியே அழியக் கண்டிட எங்கள் நெஞ்சுபொறுக்குமோ!

அணுஅணுவாய் எம்மை கொன்று குவிக்கின்றாய்
அனுதினமும் அதைகண்டு கண்டு ரசிக்கின்றாய்,
அன்னைகளை இழந்து குழந்தைகள் அனாதைகளாய்
கணவனை இழந்த பெண்கள் விதவைகளாய்,

மண்ணிழந்து மனையிழந்து போகிறோம் அகதிகளாய்
பொன்னிழந்து பொருளிழந்து தவிக்கிறோம் அப்பாவிகளாய்,
கையிழந்து காலிழந்து வாழ்கிறோம் முடவர்களாய்
அழகியவாழ்வு அழியக்கண்டிட எம் நெஞ்சுபொறுக்குமோ!

பொறுக்குமோ இனி பொறுக்குமோ எங்கள்
நெஞ்சு இனி பொறுக்குமோ, போதும் போதுமென
புறப்பட்டோம் புயலென, பெயர்வைத்தோம் புலியென
வருகிறோம் படையென உங்கள் தலைகளை கொய்திட.

பாடம் பயிலும் பாலகரை படைக்கு அனுப்பவைத்தாய்
தாலிதொங்கும் கழுத்துகளுக்கு சயனைட்குப்பி அணியவைத்தாய்
மஞ்சள்பூசும் பெண்கள் அழகுமேனிக்கு மருந்துபூசவைத்தாய்
மல்லிசூடும் அவர்தம் கூந்தலுக்கு குருதிவாடைவீசவைத்தாய்,

எங்கள் சுவாசக்காற்றை அக்னியாய் வீசவைத்தாய்
எங்கள் திரு நாட்டை சாக்கடையாய் மாற்றிவைத்தாய்
எங்களின் வீதிகளில் செங்குருதி ஆறாய் ஒடவைத்தாய்
இனி நெஞ்சுபொறுக்குமோ எங்கள் நெஞ்சுஇனிபொறுக்குமோ!

ஒ, இனவெறியனே! எடு உன் துப்பாக்கியை எம்மைவீழ்த்த
எமது பெண்களின் ஒற்றைமார்புகாம்புக்கு ஈடாகுமா ?
உன் தோட்டாக்களும் துப்பாக்கிகளும் - தினவெடுத்த
இளைஞர்களின் தோள்களுக்கு ஈடாகுமா உன் பீரங்கிவண்டிகளும்

வருகிறோம் வருகிறோம்! பூப்பறிக்க அல்ல நாங்கள்
போர்புரிய வருகிறோம் - கூரிய வாளெடுத்து உன்
கொட்டமடக்க வருகிறோம் தருகிறோம் தருகிறோம் தக்க
பதிலடி தருகிறோம் அதுவரை எங்கள் நெஞ்சுபொறுக்குமோ!

ராஜகுமாரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It