படுக்கையறை போர்க்களமாகி
ஓய்ந்து முடிந்திற்று
மெல்லிய புன்னகையோடு
உறங்குகிறாளவள்
எந்தவொரு விடைபெறலுமில்லாத
துளிர்த்த மனதாக
விடியற்காலை வரைக்கும் தான்
பின் எப்போதோ
புகலிட வாழ்வில்
அவளுக்கான ஏக்கங்களைத் தவிர்த்து
வேறென்ன கொடுக்க முடிகிறது
வெறுமையும் தவிப்பும்
ஊடே புகுந்திருக்காதிருக்கும் பொருட்டு
பல நீள வளையங்களை
உருவாக்கி வைத்திருக்கிறோம்
ஒவ்வொரு வளையங்களையும்
கடந்து செல்வது வல்லமைமிக்க
காரியமல்ல
முதலிரவு முடிந்த அடுத்த நாளே
ஒரு பயணம்
பின் பலவருடங்கள் காத்திருந்து கழித்து
ஒரு சந்திப்பு
இப்படி மற்றவரைப் போலல்லாது
போகிறது பிரிதலும் சந்தித்தலும்
எதையும் நினைத்துக்கொள்ளும்
ஞாபகமாவது இருந்திருந்தால்
அதை நினைத்து காலத்தை
கழித்து விடலாம் அந்நிய
தேசத்தில்
ஆனால் சிலவார்த்தைகள்
சில விசாரிப்புகளில்
யதொன்றுக்கும் இடமில்லை தானே.
சமயம் நெருங்குகிறது
இன்னொரு முறை தலை சாய்க்க
இந்த படுக்கை தற்போது இல்லை
விழித்திரையில் கழன்று கனன்று
விழுந்த ஒரு துளி கண்ணீரோடு
விடைச் சொல்லி...

- நட்சத்திரவாசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It