பசியற்றுப் போகிறேன் உன்னொரு முத்தத்தில் 

உயிர் உந்தமாய் மாறிக் கொண்டிருக்கையில்

புராதன கற்கோட்டை சுவர்களில்

தொங்கிக்கொண்டிருக்கின்ற அந்த துருவேறிய

இரும்புச் சங்கிலிகள்

நீளும் கரமென உனைப் பற்றி பிடிக்கட்டும்

இறுக்கி வலித்து சுவரோடு சுவராக

ஆணியறைத்தது போல நிற்கவைக்கட்டும்

உனது அதரத்தைக் கடித்து ருசித்து

வழியும் வியர்வையை முகர்ந்து

விட்டில் பூச்சியாகவோ, மின்மினி பூச்சியாகவோ

மாறவே விருப்பம்

எம் வெம்மை குமையும் கார்காலத்தில்

உனது ருசி கொண்ட பூனை அலைந்து

திரிகிறது மணமிக்க இரவுகளில்

அப்போதே நினைத்தது தான்

இனியும் உனை விட்டுவைக்க

கூடாதென

பாரிஜாத பூக்களின் சுகந்தத்தை

கொண்டு வருவதாக வாக்களித்துப் போனாய்

காலம் நகரமறுக்கும் வண்டியின்

சக்கரமென குந்தியிருக்கிறது

இரவுகள் தோறும் இசைக்கப்படும்

வீணையின் சுருதி

என் மேனியை துவம்சம் செய்கிறது

எனது நரம்புகளை இழைத்து

யாழ்பூட்டி நானெழுப்பும் கீதம்

கேட்காதவரையில் உனக்கென இருப்பவையாக

நானும் மாறப்போவதில்லை.

- நட்சத்திரவாசி

 

Pin It