உன் சாம்பல் நிறஅடுக்குகளிலிருந்து
தலை தூக்கலாம் எதிர்பாராமல்
சடசடக்கும் உச்சி மழையில்
ஒரு துளியை பாராசூட்டாக்கி
அதன் வழியேயும்
உன் மீது இறங்கி கரையலாம்
தரையில் புதையும் வரை
நீ வியந்து போகும்
வேலியோரப் பூவிலொன்றிலோ
அல்லது இன்று மொக்கு விட்டிருக்கும்
ஒரு செம்பருத்திச்செடியிலோ
தோன்றி மறையலாம் பிரமையென
கணத்திலொரு பொழுதில்
காட்டு வெள்ளமென
உயர்ந்து வரும் பின்னிரவுகளில்
திசை தொலைத்து
இரவின் சங்கறுக்கும்
ஒரு அக்கா குருவியின்
குக்கூ அலறல்களில்
ஒரு விம்மும் சப்தமென
இறங்கலாம் உனக்குள்
அல்லது நீ தூங்கும் பாவனையில்
கேட்காமலே வழியும்
சூடான ஒரு துளி கண்ணீரின் வழியே
உயிர்த்தெழலாம் இன்று
ஒரு கடக்க இயலாத கனவென
- தங்கேஸ்