எப்போதும் போல
ஈ என்றே சிரி
அதென்ன இலக்கிய சிரிப்பு
*
விழும் பூவுக்குத் தெரிந்திருக்கிறது
மரத்தடியே அமர்ந்தவள் மடியில்
கருவறை இருக்கிறது
*
அத்தனை காதல் கவிதைகளை
எழுதி விட்டு எப்படி இப்படி
உர்ரென இருக்க முடிகிறது
*
கடைசி வரை இறுகியே இருந்தவனின்
கண்ணீர் அஞ்சலி பதாகையிலும்
அதே இறுக்க முகம்
*
மயிலிறகு
குட்டி போடுமா தெரியாது
மழையிறகு குட்டி போடுகிறது
*
கூழாங்கற்களுக்கும்
குரல் இருக்கிறது
நீர்ச்சறுக்கில் குனுகுவது கேள்
*
துள்ளுகையில் மீன்
விழுகையில் நட்சத்திரம்
மாய நதி மதியத்தில்
*
ஒரு முறை மரித்தவனை
மறுபடி மறுபடி சாகடிக்கிறது
கண்ணீர் அஞ்சலி பதாகை
*
ஒலிப்பானுக்கு முறைத்தவனைத் தான்
கொண்டை ஊசி வளைவு
சரித்துப் போட்டு முழிக்கச் செய்கிறது
- கவிஜி