என்ன பேசுவதென்று தெரியவில்லை
என்று ஆரம்பிக்கும்
ஒரு மேடைப்பேச்சு போல
என்ன எழுதுவென்று தெரியவில்லை
என்றே இக்கடிதம் ஆரம்பித்தது
எங்கு நிறுத்துவது என்று தெரியாத
மறுபக்கம் போல
திரும்பி நின்றும் எழுதித் தீர்க்கிறேன்
கடைசி வரியில்
முத்தம் ஒன்று சேர்ந்தாலும்
தொடரும் மூன்று புள்ளிகளில்
ஆரம்பிக்கலாம்
இன்னொரு பக்கம்
இன்னொரு கடிதம்
இன்னொரு முத்தம்
தீரா இடைவெளியில்
ஆளுக்கொரு திசையில் இருப்போருக்கு
இது இயல்பென்றாலும்
நமக்கு இசை அவிழும் இம்சை
மறுகடிதம் எழுதும் வரை
மறுபடியும் நம்மை
சொற்களாக்கும் மாயம்
ஒரு முழு நீள காதல் கதைக்கானது
பாதிக்கதை உன்னிடம் இருக்க
மீதிக் கதையின் மூச்சு முட்டிதான்
இதோ கையெழுத்திடுகிறேன்
- கவிஜி