உண்மைக்குப் போகும்
ஒற்றையடிப் பாதை
இப்போது புதர்மண்டிக் கிடக்கிறது...
எல்லோருக்கும்
ஆயிரம் வண்ணங்கள் பூசப்பட்ட
பொய்களின் நெடுஞ்சாலைகளே
பிடித்திருக்கின்றன.
இருவர் சந்திக்கும்போது
அங்கே
ஒரு மூன்றாவது மனிதன்
பலியிடப்படுகிறான்.
யாருடைய ரத்தம் பூசப்பட்ட வாழ்வோ
நமக்கு
மாலை நேரத்துச் சிற்றுண்டியின்
ருசியைக் கூட்டுகின்றன.
உண்மை என்பது
ஒரு பழைய
தபால்காரரைப் போல
யாராலும் கண்டுகொள்ளப்படாமல்
வெயிலில் நிற்கிறது...
சுவாரஸ்யம் பூசப்பட்ட
பொய்கள்
நடுவீட்டிற்குள் நுழைந்து விடுகின்றன.
ஒரு துளிச் செய்தியில்
ஓராயிரம் புனைவுகளாலான
புதிய ரசாயனத்தை
உருவாக்கிக் கொள்கிறோம்...
புதிய நஞ்சு
அடுத்தவர் உண்மையை
எரிக்கிறதோ இல்லையோ..
நம்
நாவுகளின் அறத்தை
அப்போதே
பலியிட்டு விடுகிறது.
அடுத்தவர் பற்றிய
இந்த உரையாடல்கள்
வெறும் தீக்குச்சியின் வெளிச்சம்தான்.
காற்று வீசும் ஒரு கணத்தில்
கற்பனைக் கோபுரங்கள்
சரிந்து விழும்.
அப்போது
நம்மைச் சுற்றி மிஞ்சியிருப்பது
நாம் உதிர்த்த
நச்சுக் கதைகளின்
சாம்பல் மட்டுமே.
- அ.உமர் பாரூக்