போர் -
இறுதிச் சடங்குகளால்
எழுதப்படும்
கருப்பு புத்தகம்
எஞ்சியிருப்பவர்கள்
இறந்த காலத்தை
சுமந்து திரியும்
கல்லறைகளாக
உயிர் வாழ்கிறார்கள்..
இருப்பவர்களின்
இடைவெளியை இட்டு நிரப்புகிறது
கனத்த மெளனம்
அடையாளம் இழந்து
உருக்குலைந்த வீடுகளில்
மனித வாசனையைத்
தேடியலைகிறது காற்று.
கதவுகளும்
பூட்டுகளும் இல்லாத
தனித்த சாவிகள்
இனி யாருடைய
மனதை திறக்கப் போகின்றன?
புகை படிந்திருக்கும்
கிழிந்த சட்டைகள்
தங்களுக்குள் இருந்த
உடல்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன...
மரணத்தை விடவும்
கொடிய நெருக்கடி
அது
எப்போது வரும்
என்ற காத்திருப்புதான்...
வெடிகுண்டுகளாலும்
ஏவுகணைகளாலும்
சிதைந்த பொருட்களை
எப்படியேனும்
மீட்டுக் கொள்ளலாம்...
இழந்த நம்பிக்கையை
எப்படி மீட்பது?
மரணித்தவர்களின்
கடைசி பிரார்த்தனைகளின் மீது
எழுந்து நிற்கிறது..
கடவுளின் கல்லறை.
- அ.உமர் பாரூக்